தாடிபத்ரி கோவில்: ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்– 29 (Post No.13,629)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,629

Date uploaded in London – 4 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 29

தாடிபத்திரி (Tadipatri or Tadpatri),  இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும்.

இத்தலத்திலிருந்து, அனந்தப்பூர் 57 கி.மீ., கடப்பா 127  கி.மீ., அகோபிலம் 110 கி.மீ., கூட்டி  51 கி.மீ,.  குண்டக்கல் 81 கி.மீ., புட்டபர்த்தி 111 கி.மீ., பெங்களூரு 270 கி.மீ. சென்னை 385 கிமீ..

தாடிபத்ரியில்  இருக்கும் விஷ்ணு கோவிலுக்கு சிந்தல வெங்கடரமணர் கோவில் என்று பெயர். இது சுமார் 600 ஆண்டுகள் வரலாறு உடையது திருப்பதி வெங்கடாசலபதி போல வடிவமுள்ள பெருமாளின் பெயர்  வெங்கடரமணர். சிந்தலராயசுவாமி என்றும் அழைப்பர்; பென்னா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்தக் கோவில் அங்குள்ள கருங்கல் சிற்பங்களால் புகழ் பெற்றது

,

சிற்பச்  சிறப்பு

வேறு எங்கும் இல்லாத கல் ரத வடிவிலுள்ள கருட மண்டபம் குறிப்பிடத்தக்கது ; சுவர் முழுவதுமுள்ள  ராமாயண சிற்பங்களும் குறிப்பிடத் தக்கவை இதனால்  இந்தியத் தொல்பொருட்துறை அந்த ஆலயத்தை  தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.

பெயர்க் காரணம்

இங்கு மூலவரான வெங்கடேஸ்வரர் புளிய மரத்தின் கீழ் கோயில் கொண்டுள்ளதால், சிந்தல வெங்கடேஸ்வர் எனப்பெயர் பெற்றார். தெலுங்கு மொழியில் சிந்தா என்பதற்கு புளியமரம் எனப்பொருளாகும். இக்கோயில் 16-ஆம் நூற்றாண்டின் நடுவில் விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. கிருஷ்ணதேவராயரின் அமைச்சர் இரண்டாம் பெம்மசானி திம்மைனயுடு என்பவர் ஆலயத்தைக்  கட்டினார்.

ராமாயண சிற்பங்கள்

இக்கோவிலில் அனுமன் இராமரை வணங்குதல், சீதையிடம் கணையாழி மோதிரம் அளித்தல், நெற்றி சூடாமணி ஆபரணம் பெறுதல், அனுமன் அரக்கருடன் சண்டையிடுதல், இந்திரஜித்தின் பாணத்தால் கட்டுண்டது,  தனக்கு இருக்கை அளிக்க மறுத்த இராவணன் முன் தன் வாலினால் அனுமன் உயர்ந்த ஆசனம் எழுப்பி இராவணிடம் உரையாடுதல் போன்ற இராமாயண சிற்பங கள் அனைத்தும் ஆலயத்தின் வெளிப்புற சுவர்களில்  அழகாக செதுக்கப்பட்டுள்ளன . சீதையுடன் இருக்கும் பொழுது உருவை சிறியதாகவும், அரக்கருடன் இருக்கும் பொழுது உருவைப் பெரியதாகவும் அனுமனை  சித்தரித்துள்ளனர் அனுமனின் விஸ்வரூப உருவத்தைப் பார்த்து சீதை பயப்படவே, அனுமன் தனது வடிவத்தை சிறிதாக ஆக்கினார் என்று ராமாயணம் கூறுகிறது; அதையும் கருத்தில் கொண்டு சிற்பி தனது கைவண்ணத்தைக் காட்டியிருக்கிறார்.

பென்னா ஆற்றின் கரையில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த ஆலயம் சில்ப சாஸ்திரப்படி விஜயநகரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டுள்ளது

சூரிய ஒளி விழும் அதிசயம்

கருவறையில் உள்ள முக்கிய தெய்வம் 10 அடி உயரம் கொண்டது. முக்கோடி ஏகாதசி நாளில்சூரியக் கதிர்கள் வெங்கடராம சுவாமியின் பாதங்களை 3 நாட்கள் (ஏகாதசி, துவாதசி, த்ரயோதசி) தொடும். இந்த சூரியக் கதிர்கள் தெய்வத்திலிருந்து சுமார் 70 மீட்டர் தொலைவில் உள்ள ஒற்றைக்கல் தேரின் துளைகள் வழியாகச் செல்கின்றன.

ராமாயணம், மகாபாரதம் மற்றும் பாகவதத்தின் காட்சிகள்  கர்ப கிருஹம் , ரங்க மண்டபம், முக மண்டபம், பிரதான கோபுரம்  மற்றும் பிரகாரத்தைச் சுற்றி காணப்படுகின்றன.

மஹாபாரதத்திலிருந்து காளிய மர்தன கிருஷ்ண ரூபத்தின் சிற்பங்களையும், ராமாயணத்தின் காட்சிகளையும் தாழ்வாரத்தின் சுவர்களில் (மண்டபம்) காணலாம்  தாழ்வாரத்தின் கூரையில் எண்கோண வடிவ மலர் உள்ளது.

முகமண்டபத்தில் விஜயநகர பாணியில் நாற்பது தூண்கள் உள்ளன. முகமண்டபத்திற்கு அப்பால் ஒரு ரங்கமண்டபம் உள்ளது, இதில் ராமாயணக் காட்சிகள் மற்றும் விஷ்ணு அவதாரங்களின் அரிய சிற்பங்கள் உள்ளன.  இந்த வளாகத்திற்குள் மேலும் இரண்டு சந்நிதிகள்  உள்ளன, ஒன்று லட்சுமி தேவி கோவில்; மற்றொன்று ஆஞ்சநேயர் கோவில் . சீதா ராமர் மற்றும் ஸ்ரீ பத்மாவதி அம்மாவருக்கு உபகோயில்கள் உள்ளன. 

இராஜ கோபுரம் கிழக்கு நோக்கியவாறு கல் மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட திடமான அமைப்பாகும். கல் பகுதியில் வித்யாதர, அப்சரஸ் மற்றும் அவதாரங்களின் உருவங்கள், யானைகள், குதிரைகள் பல்வேறு நிலைகளில் உள்ளன.

கூடி கோட்டைக்கு செல்வதாக நம்பப்படும் ஒரு ரகசிய நிலத்தடி பாதை உள்ளது. தற்போது, சுரங்கப்பாதையை தொல்பொருட் துறை மூடிவிட்டது விஜயநகர கலாச்சாரத்தின் பொதுவான வர்த்தக முத்திரையான துலாபாரம் தூண் ஒன்றும் உள்ளது. காலம்- 16 ஆம் நூற்றாண்டு.

வருடாந்திர பிரம்மோத்ஸவம் (திருவிழா ஆகும்;) அஸ்வயுஜ சுத்த அஷ்டமியில் (துர்காஷ்டமி) தொடங்கி பஹுல தாதியா வரை செல்கிறது. தீபாவளி, ராமநவமி மற்றும் பிரம்மோற்சவம் ஆகியவை முக்கியமான திருவிழாக்கள்.

கோவிலை நேரில் பார்க்க முடியாதவர்கள் யூ ட்யூபிலுள்ள 15 நிமிட ஒளிபரப்பைக் காணலாம்.

—subham—

Tags- ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 29, தாடி பத்ரி கோவில், வெங்கடரமணர்., கல் ரத வடிவ கருட மண்டபம் , புளியமரம் ,ராமாயண சிற்பங்கள் சூரிய ஒளி விழும் அதிசயம்

Leave a comment

Leave a comment