
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.635
Date uploaded in London – —6 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (4)
ராமாயணத்தில் வரங்கள் (4) ஜயா மற்றும் சுப்ரபை அஸ்திர சஸ்திரங்களைப் பெற்றது!
ச. நாகராஜன்
பாலகாண்டத்தின் இருபத்தியோராவது ஸர்க்கமாக அமைவது ‘வசிஷ்டர் வசனத்தால் ஶ்ரீ ராமரை அனுப்புவது’ என்ற ஸர்க்கம்.
விஸ்வாமித்திர மஹரிஷி தசரதனைச் சந்திக்க வரும் போது அவரை தக்க மரியாதையுடன் வரவேற்ற தசரதர் அவருக்கு வேண்டியதைச் செய்வதாகக் கூறுகிறார்.
விஸ்வாமித்திரர் தான் யாகம் புரிய இருப்பதையும் அதைக் காக்க ராமரை அனுப்புமாறும் வேண்ட தசரதர் திகைக்கிறார்.
ராமரை அனுப்ப பல்வேறு காரணங்களைக் கூறி மறுக்கிறார்.
இதனால் விஸ்வாமித்திரர் மிகுந்த கோபம் கொள்கிறார்.
உடனே வசிஷ்டர் தசரதனைப் பார்த்து, “ இன்னபடி செய்கிறேன் என்று பிரதிக்கினை செய்து விட்டுப் பின்னர் பின் வாங்கக் கூடாது. இவருடன் ராமன் போக ராமனுக்கு விடை கொடும்” என்கிறார்.
மேலும் வசிஷ்டர் விஸ்வாமித்திரருடைய மஹிமையை விரிவாக விளக்குகிறார்.
தக்ஷ பிரஜாபதியின் குமாரிகளான ஜயை மற்றும் சுப்பிரபை பற்றி வசிஷ்டர் கூறுகிறார் இப்படி:
ஜயா ச சுப்ரபா சைச தக்ஷகன்யே சுமத்யமே |
தே சுவாதேஸ்த்ரசஸ்த்ராணி சதம் பரமபாஸ்வரம் ||
ஜயா ச – ஜயையும்
சுப்ரமா ச – சுப்பிரபையும்
தக்ஷ கன்யே – தக்ஷருடைய கன்னிகைகள்.
சுமத்யமே – நல்ல இடையை உடையவர்கள்
தே ஏவ – அவ்விருவர்களும்
பரமபாஸ்வரம் – மிக்க ஒளியமைந்த
சதம் – அநேக
அஸ்த்ரசஸ்த்ராணி – அஸ்திர சஸ்திரங்களை
சுவாதே – பெற்றார்கள்
பஞ்சசதம் சுதாம்ல்லபே லப்தவரா புரா |
வதாயாஸுரஸைன்யானாமக்ஷயான் காமரூபிண: ||
புரா – பூர்வத்தில்
ஜயா – ஜயை என்பவள்
லப்தவரா – வரம் பெற்றவளாய்
அசுரசைன்யானாம் – அசுரப்படைகளின்
வதாய – வதையின் பொருட்டு
காமரூபிண: – நினைத்தபடி உருவமெடுக்கவல்ல
அக்ஷயான் – பழுதாகாத
பஞ்ச சதம் – ஐநூறு
சுதான் – பிள்ளைகளை
லேபே – பெற்றாள்
சுப்ரபாஜனயச்சாபி புத்ரான் பஞ்ச சதம் புன: |
ஸம்ஹாரான்னாம துர்தர்ஷான்துராக்ரமான் பலீயஸ: ||
அபி ச – மேலும்
சுப்ரபா புன: – சுப்பிரபையோவென்றால்
துர்தர்ஷான் – தகையமுடியாதவர்களான
துராக்ரமான் – பழுதுபடாதவர்களான
பலீயஸ: – பலசாலிகளான
ஸம்ஹாரான் – ஸம்ஹாரர்கள்
நாம் – என்ற பெயரையுடைய
பஞ்சசம் – ஐநூறு
புத்ரான் – பிள்ளைகளை
அஜனயத் – பெற்றாள்
இந்த அஸ்திரங்களை குசிகரின் புதல்வர் முழுமையுமாக உள்ளபடி அறிந்திருக்கிறார் என்று கூறிய வசிஷ்டர் விஸ்வாமித்திரர் தாமே யாகத்திற்கு இடையூறு செய்பவர்களை அழிக்கும் வல்லமை உடையவர் என்றாலும் தங்களின் புத்திரர்களின் நலனுக்காகவே அவர்களை அழைத்துச் செல்கிறேன் என்கிறார் என்று கூறவே தசரதன் மனம் இசைந்து ராம லக்ஷ்மணர்களை விஸ்வாமித்திரருடன் அனுப்புகிறார்.
ஜயா மற்றும் சுப்ரபாவிற்கு அஸ்திர சஸ்திரங்களை யார் எதற்காக அளித்தனர் என்பது இங்கு கூறப்படவில்லை. ஆனால் அவர்கள் அஸ்திர சஸ்திரங்களைப் பெற்றதை இங்கு காண்கிறோம்.
**