WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.642
Date uploaded in London – —8 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆகஸ்ட் 2024 ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளியாகும் இந்த பத்திரிகையில் ஆரோக்கியம் சம்பந்தமான நல்ல கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆசிரியர் திரு ஆர்.சி.ராஜா. தொடர்புக்கான தொலைபேசி எண் 98431 57363. வருட சந்தா ரூ 180/
மௌனம் தரும் உடல் ஆரோக்கியமும், உள்ள ஆரோக்கியமும்!
ச.நாகராஜன்
மௌனத்தினால் ஏற்படும் நன்மைகள்
மௌனமாக இருப்பதன் மூலம் பல நன்மைகளை நாம் பெற முடிகிறது. அவையாவன:
1) தெளிந்த மனநிலையை எப்போதும் தருகிறது
2) தன்னை உணர வழி காட்டுகிறது
3) மூளையை ஊக்குவித்துச் செயலாற்ற உதவுகிறது. மூளையில் நல்ல செல்களை வளர்ச்சி அடையச் செய்வதோடு நினைவாற்றலைக் கூட்டுகிறது.
4) மனஇறுக்கத்தைப் போக்குகிறது.
5) முன்னேறவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் நம்பிக்கையுடன் செயலாற்றச் செய்கிறது
6) படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது
7) சிந்தனை ஆற்றலை மேம்படுத்தி ஒருமுனைப்புடன் எதையும் கவனிக்குமாறு செய்கிறது.
ஆய்வுகள் தரும் முடிவுகள்
அறிவியல் தரும் ஆய்வு முடிவுகள் சில இதோ:
உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது
ரத்த அழுத்தம் சீராகிறது
இரண்டு நிமிட ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு நல்ல இசையைக் கேட்டவுடன் ஒருவரின் இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகிறது.
வேகமாகப் பறக்கும் எண்ணங்களை நிறுத்தி ஆக்கபூர்வமாக சிந்தனை செய்ய வழி வகுக்கிறது.
Stress Harmone -ஆன கார்டிஸாலைக் குறைக்கிறது.
தூக்கமின்மை என்ற வியாதியை வராமல் தடுத்து அமைதியாக உறங்க வழி வகுக்கிறது.
மௌனத்தை ஊக்குவிக்க வழிகள்
எப்போதும் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்படுதல்.
வீட்டில் டி.வி., ரேடியோ ஆகியவற்றை மிதமான ஒலியில் கேட்டல். தேவை என்றால் மட்டுமே கேட்டல்.
அனைவரும் எழுந்திருக்கும் முன்னர் சற்று முன்னதாக வீட்டில் எழுந்திருத்தல்.
காதில் இயர் போனை மாட்டிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்தல்.
கொஞ்சம் கொஞ்சமாக மௌனமாக இருக்கும் நேரத்தைக் கூட்டுதல்’
மௌன விரதம்
மௌனமாக இருப்பதை எல்லா மதங்களும் ஊக்குவிக்கின்றன. இந்து மதத்தில் மௌன விரதம் ஒரு ஆன்மீக நெறியாகவே சொல்லப்படுகிறது.
தக்ஷிணாமூர்த்தி மௌனத்தினாலேயே அனைத்தையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு விரித்து விளக்கினார் என்பதை அறிகிறோம். (குரோஸ்து மௌனம் வியாக்யானம்)
மௌனம் சக்தி வாய்ந்த விளக்கமாகும்.
கீதையில் மௌனம் வலியுறுத்தப்படுகிறது (அத் 17 ஸ்லோகம் 16)
மந: ப்ரஸாத: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ: பாவஸம்ஸு²த்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே ||
மன மகிழ்ச்சி, அமைதி,மௌனம்,தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை ஆகிய இவை மனத் தவமெனப்படும்
சாணக்கியர் தனது சாணக்ய நீதியில் எந்த ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் மௌனத்தை அனுஷ்டிக்கிறானோ எவன் ஒருவன் இப்படி ஒரு வருடம் தொடர்ந்து செய்கிறானோ அவன் ஆயிரம் வருட காலம் சொர்க்கத்தில் போற்றப்படுவான் என்கிறார்.
மௌனத்தை விட அதிகப் பயன் தருமானால் மட்டுமே நீ பேசலாம் என்பது அருமையான ஒரு பழமொழி.
ஜைனம் போற்றும் மௌனம்
ஜைன மதத்தில் பெரியோர்கள் ஐந்து மஹாவிரதங்களையும் சாமான்யர்கள் ஐந்து அணுவிரதங்களையும் அனுஷ்டிக்கின்றனர். இதில் உபவாசமும் மௌனவிரதமும் வலியுறுத்தப்படுகிறது. மார்கழி மாதம் மௌன ஏகாதசி என்ற நாளில் முழு நாளையும் மௌன விரத நாளாக அனைத்து ஜைனர்களும் அனுஷ்டிக்கின்றனர்.
மௌனத்தினால் வார்த்தைகள் அளந்து பேசப்படும் பழக்கம் ஏற்படுகிறது. ஆகவே நாளடைவில் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒருவருக்கும் தீங்கு ஏற்படாதபடி நலனுக்காகவே வெளிப்படுவதாக ஆகிறது.
ஜென் குட்டிக் கதை
ஒரு ஜென் குட்டிக்கதை உண்டு.
ஜப்பானில் கியோஷி என்ற ஒரு சீடர் மலை ஒன்றின் உச்சியில் வசித்து வந்த ஹோஷின் என்ற ஒரு ஜென் மாஸ்டரை அணுகினார். தனக்கு உபதேசம் செய்யுமாறு அவர் மாஸ்டரைக் கேட்க மாஸ்டர் அவர் கண்களையே உற்று நோக்கினார். பின்னர் தரையில் இருந்த ஒரு கல்லை ஒரு தட்டு தட்டினார். இது எழுப்பும் ஒலியைக் கேட்டாயா? என்றார் அவர். ஆம் கேட்டேன் என்றார் கியோஷி.
இப்போது மௌனத்தின் மொழியைக் கேள் என்றார் அவர். நாட்கள் ஓடின. மாதங்கள் ஆயின. மௌனம் எழுப்பும் ஒலி பற்றி அவர் சிந்தித்தார். நாளடைவில் நுட்பமான மாறுதல்கள் அவர் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட ஆரம்பித்தது. ஒருநாள் அருகிலிருந்த ஆறு ஒன்றில் ஓடும் நீரின் சலசலவென்ற ஓசையை அவர் கேட்டார்.
இயற்கையின் அந்த ஒலியில் அவர் மௌனத்த்தின் மொழியை உணர்ந்தார். அவர் உள்ளத்தில் ஏற்பட்ட அந்த மாறுதல் அவருக்கு ஒரு தெளிவைத் தரவே அனைவரும் அவரை நாடலாயினர்.
ஒரு நாள் கெஞ்சி என்ற ஒரு செல்வந்தர் அவரிடம் வந்து தன் இரு மகன்களும் போடும் சண்டைக்கு ஒரு தீர்வு தருமாறு கேட்டுக் கொண்டார்.
இருவரையும் தன்னிடம் வருமாறு அழைத்த கியோஷி ஒரு ஆற்றங்கரையில் இருவரையும் அமர்த்தினார். அங்கு மௌனமாக அமருமாறு அவர் சொல்ல முதலில் தயங்கிய இருவரும் பிறகு அப்படியே அமர்ந்தனர். தெள்ளிய ஆற்று நீர் ஓடிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழிந்தது.
\
பின்னர் இருவரையும் ஒருவரோடு ஒருவர் பேசுமாறு கியோஷி பணித்தார். இப்போது அவர்கள் இருவரும் மற்றவர் கூற்றில் உள்ள உண்மையைத் தெளிவாகக் கண்டனர். உணர்ச்சிகள் தந்த கோபம் போய் உண்மையை அவர்கள் தெளிவாகக் கண்டவுடன் இருவரும் சமாதானமாகப் பேசி சண்டையை முடித்தனர். இந்த அதிசயமான மாறுதலைக் கண்ட செல்வந்தர் கெஞ்சி, தான் என்ன கைம்மாறை மாஸ்டருக்குச் செய்ய வேண்டுமென்று கேட்டார்.
கியோஷியோ இந்த மௌனத்தின் மஹிமையை உலகெங்கும் பரப்புவதே அவர்கள் தனக்குச் செய்யும் கைம்மாறு என்றார்.
அவர்களும் அப்படியே செய்ய ஆரம்பித்தனர். கியோஷியின் இறுதி நாளில் அவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரது இறுதி உபதேசத்தை அருளுமாறு அனைவரும் கேட்க அவர், “மௌனம் தரும் ஒலியைக் கேளுங்கள்; பிரபஞ்சத்தின் அறிவை அறிவீர்கள்” என்றார்.
புத்தரின் அருளுரை
புத்தர் ஒரு பௌர்ணமி அன்று பூரண ஞானம் பெற்ற நிலையில் அவர் மௌன நிலையை அடைந்தார். அனைத்து தேவதைகளும் அவரை அணுகி அருளுரை தருமாறு வேண்டின.
“அறிந்தவர்கள் ஏற்கனவே அறிந்து விட்டார்கள். அறியாதவர்கள் என் வார்த்தையினால் பயனடைய மாட்டார்கள். எங்கு சொற்கள் முடிகின்றனவோ அங்கு ஞானம் பிறக்கிறது” என்றார் அவர்.
உடனே தேவதைகள், “அது சரிதான். ஆனால் அறிந்தும் அறியாமலும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உபதேச உரைகளை அருளுங்கள். அதுவே மௌனத்தின் பெருமையை அவர்களை உணரவைக்கும்“ என்றன. உடனே புத்தர் பேச ஆரம்பித்தார். அவர் பேசிய சொற்கள் மௌன நிலையை அடைவதற்கான உரைகளாக அமைந்தன.
அருளாளர்கள் போற்றும் மொழி
ஸ்வாமி விவேகானந்தர், மஹரிஷி அரவிந்தர் ஆகியோர் நீண்ட மௌன விரதத்தை அனுஷ்டித்து பெரும் ஆற்றலைப் பெற்று உலகத்திற்கு நல்கினர்.
ரமணரின் ஆற்றல்
மௌனத்தின் எல்லையற்ற ஆற்றலை உணர்த்தியவர் பகவான் ரமண மஹரிஷி. மௌனத்திற்குள் பிரபஞ்சமே அடங்கி இருக்கிறது என்றார் அவர். இதை அவர் நிரூபித்தும் வந்தார். அவரிடம் சந்தேக விளக்கம் பெற விரும்பி வருவோர் அவர் முன் அமர்ந்து தான் கேட்க விரும்பிய கேள்விகளை நினைத்தவுடனேயே, அதற்கான சரியான பதில்களை அவர்கள் உள்ளத்தில் உடனடியாகப் பெறுவது வழக்கம். இந்த அனுபவத்தைப் பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.
காந்திஜியின் மௌன விரதம்
மகாத்மா காந்திஜியும் கூட மௌன விரதத்தை அடிக்கடி மேற்கொண்டார்.
தனக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகள் மௌன விரதத்தினாலேயே தனக்குக் கிடைக்கின்றன என்றார் அவர். தனது சுயசரிதத்தில் அவர் மௌனம் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்.
மௌனம் என்பது வாழ்க்கை முறை
மௌனம் சர்வார்த்த சாதகம் (மௌனம் அனைத்தையும் சாதகமாக்க வல்லது) என்று பஞ்சதந்திரம் கூறுவது சத்தியமான மொழியாகும்.
வெறும் சொல்லடுக்குகளுக்கும் ஓசைக்கும் அப்பாற்பட்டது மௌனம். அது ஒரு வாழ்க்கை முறை. அதை நடைமுறைப்படுத்தும் போது நாம் அடையும் பேறை சொல்லாலும் ஓசையாலும் விளக்க முடியாது!
***