
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,650
Date uploaded in London – 10 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
கார்ல் கிரவுல்- தமிழனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்! (Post No.13,650)
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கார்ல் கிரவுல் 1814-1864. ஐம்பது ஆண்டுகளே வாழ்ந்த இந்த ஜெர்மானியர் தமிழுக்கு பெரிய சேவை செய்தார். இந்து மத நூல்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தொல்காப்பியரும் நன்னூல் பவணந்தி முனிவரும் சொல்லாத இலக்கணத்தை நமக்கு சொல்லிக்கொடுத்தார் திருக்குறளை ஜெர்மானிய மொழியில் ஆக்கினார்.
தமிழனுக்கு தமிழ் தெரியாது !
கல் – கற்றான் ; வில்- விற்றான் ; சொல் …………….. சொற்றான் ?????? தப்பு தப்பு !
தா – தந்தான் , வா- வந்தான் ; போ …………………… போந்தான் ???????????? தப்பு தப்பு !
சா — சாத்தான் ………………………..???????????? தப்பு தப்பு !
ஆடு- ஆடினான் ; பாடு -பாடினான் ; கொடு — கொடினான் ???????????? தப்பு தப்பு !
*****
அப்பா , ஏம்பா இப்படிச் சொல்றோம் ? என்று பையன் அப்பாவிடம் கேட்டால் ,
போடா நாயே ! வீட்டுப்பாடத்தை எழுதினாயா ? வாத்தியார் சொல்லும்போது நல்லா கவனி என்று விரட்டி விடுவார் .
தமிழ் வாத்தியாரிடம் போய்க்கேட்டால் அவருக்கும் தெரியாது கல்தோன்றி , மண் தோன்றாக் காலத்தே வாளுடன் முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி ; நாம்தான் உலகம் முழுதும் இருந்தோம் ; உனக்கு போகப் போக தமிழ் புரியும் ; போ –என்று சொல்லி தமிழ் வாந்தி எடுப்பார் ; உண்மையில் அவருக்கும் பதில் தெரியாது! பாவம் அவர் படித்த தொல்காப்பியத்திலோ நன்னூலிலோ இது இல்லை ;
அங்குதான் வருகிறார் உதவிக்கு — நமது கதா நாயகர் — லுத்தரன் பிரிவு கிறிஸ்தவ பிரசாரகர் கார்ல் கிரவுல் .
தமிழ் வினைச் சொற்களை (VERBS) ஆராய்ந்து வகைப் படுத்தினார் ; குறிப்பாக கடந்த காலத்தைச் (PAST TENSE) சொல்லும்போது வினைச் சொற்கள் ஏழு விதமாக நடந்து கொள்கின்றன; அந்த ஏழு வகைகளிலும் அடங்காத– அடங்காபிடாரிகள்– உண்டு; அந்த முறை தவறிய வினைச் சொற்களை ஒழுங்கற்ற — அதாவது விதிகளைப் பின்பற்றாத – IRREGULAR VERBS இர்ரெகுலர் வெர்ப்ஸ் — என்போம்.
நிகழ்கால PRESENT TENSE தமிழ் வினைச் சொற்கள் மிக எளிது ; வரு:+ கிறான் அல்லது கின்றான்
இரண்டே வகைகள் !
எதிர்கால அல்லது வருங்கால FUTURE TENSE வினைச் சொற்கள் மிக எளியவை :
இரண்டே வகைகள் ! அவன் வருவான் ; அவன் பார்ப்பான் .
வ் + ஆன் அல்லது ப் +ஆன்
ஆனால் கடந்த காலம் PAST TENSE பற்றிச் சொல்வதானால் பல வகை (CLASSIFICATION OF TAMIL VERBS)
(எனது யூ ட்யூப் தமிழ் பாடங்களிலும் , இதே பிளாக்கில் வெளியான தமிழ் பாடங்களிலும் முழு விளக்கங்கள் உள ; அது மட்டுமல்ல 20 ஆண்டுகளுக்கு வினைச் சொற்களை பட்டியலிட்டு சார்ட்/ அட்டவணை போட்டு மாணவர்களுக்கு விநியோகித்தேன் ; 750 தமிழ் வினைச் சொற்களை ஆராய்ந்து மூன்றாவது வகை THIRD CLASS TAMIL VERBS வினைச் சொற்கள்தான் தமிழில் அதிகம் என்றும் கண்டுபிடித்தேன் ( இந்த வகையில் ஆடு, பாடு , தேடு, விளையாடு ஆகியன வரும். இதையெல்லாம் வேறு எங்கும் யாரும் அப்போது—1992 களில்— செய்யவில்லை.
கிரவுல் செய்த பணிகள்
வெளிநாடுகளில் நான்கு ஆண்டுகள் சுற்றிய பின்னர் எகிப்து பாலஸ்தீனம் வழியாக கிழக்கிந்தியா தேச பயணம் என்று ஐந்து தொகுதி புஸ்தகத்தை ஜெர்மன் மொழியில் எழுதினார். 1854-1856ல் வெளியான இந்த 5 தொகுதிகளில் நிறைய பூகோள, மானுடவியல், சமூகவியல், வரலாற்று, கிறிஸ்தவ மதச் செய்திகள் உள்ளன.
முதல் வால்யம் – பாலஸ்தீனம், இரண்டாவது- எகிப்து, சினாய், மூன்றாவது இந்தியாவின் மேற்குப்பகுதி, நாலாவது-தென் கிழக்கு இந்தியா, ஐந்தாவது- இலங்கை பற்றியவை
இதே காலத்தில் பிப்லோதீகா டமுலிகா /தமிழிகா / என்ற நான்கு தொகுதி புஸ்தகத்தையும் எழுதி முடித்தார்.
முதல் தொகுதியில் கைவல்ய நவநீதம், பஞ்சதஸ ப்ரகரணம் , ஆத்ம போத பிரகாசிகா ஆகிய மூன்று நூல்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து, இந்து சமய வேதாந்தத்தை விளக்கினார்.
இடண்டாவது தொகுதியில் கைவல்ய நவநீதத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்தார். அத்தோடு இணைப்பில் வேதாந்த சொற்களுக்கு விளக்கம் தந்தார். 100 சம்ஸ்க்ருத வேதாந்த சொற்களுக்கு பொருள் கொடுத்தார்.
மூன்றாவது, நான்காவது வால்யம்களில் திருக்குறளை மொழிபெயர்த்து வழங்கினார். திருக்குறளை தமிழ் மொழியின் ரத்தினம் என்று புகழ்மாலை சூட்டினார். அகப்பொருள் விளக்கம் மற்றும் அருள் நந்தி (அருணந்தி) சிவாசுசார்யாரின் சிவஞான சித்தியார் நூலின் பகுதிகளும் இவரது மொழிபெயர்ப்பில் அடக்கம்.
*****
லைப்சிக் நகரில் தமிழ் நூலகம்
ஜெர்மனியில் லைப்சிக் நகரில் தமிழ் நூலகம் ஒன்றை அமைத்ததும் இவரது பாராட்டத்தக்க செயல் ஆகும். இரண்டு எழுத்தர்களை வேலைக்கு அமர்த்தி எல்லாவற்றையும் நகல் எடுத்து எழுத வைத்தார்.150 நூல்களை எடுத்து கேட்டலாக் தயாரித்தார். அந்த நகரில் இதற்காக ஒரு தமிழ் அச்சகத்தை நிறுவினார்.. பிரபல பத்திரிகைகளில் இந்து மத கடவுளர், ஜாதிகள், இந்தியப் பழமொழிகள், கிழக்கிந்தியாவில் உள்ள (THUGS) கொள்ளைக்காரர்கள் ஆகியன பற்றி கட்டுரைகள் எழுதினார்.
1855ஆம் ஆண்டில் தமிழ் இலக்கணம் என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார் இதில் மொழியின் நுணுக்கங்கள், வினைச் சொற்களின் வேறுபாடுகளை விளக்கினார். அவைகளை அட்டவணை போட்டுக்காட்டினார். இந்தியாவுக்கு கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வருவோருக்கு லைப்சிக் நகரில் தமிழ் மொழியைக் கற்பித்தார்.
அவர் செய்த பணிகளுக்காக எர்லங்கன் பல்கலைக்கழகம் 1854ம் ஆண்டில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.. அதே ஊருக்கு குடியேறி சொற்பொழிவுகள் ஆற்றினார். பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்து அதில் சமயத்துடன் பிற மத ஒப்பீடு, மொழியியல் ஆகியவற்றையும் சொல்லிக்கொடுக்க வைத்தார். அவர் சொன்னபடி துறை ஒன்று பல்கலைக்கழகத்தில் உருவானது. 10-11-1864 ம் ஆண்டில் இறக்கும் வரை அவர் சமயப் பணியையும் கல்விப் பணியையும் செய்துவந்தார்
தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பற்ற பற்று வியப்புக்குரியது
(கால்டு வெல் , மாக்ஸ்முல்லர் போன்றோர் இரண்டு மொழிகளையும் கற்காமல் ஒரே மொழி மட்டும் கற்றதால் , அவர்களது படைப்புகளில் நிறைய உளறல்களளைக் காணமுடிகிறது.)
கிரவுல் ஸம்ஸ்க்ருதத்தையும் தமிழையும் கற்றார். சமயம் தொடர்பான கல்வியைக் கற்று இத்தாலியில் தனிப்பட்ட முறையில் பாடம் சொல்லிக்கொடுத்தார். அவர் பிறந்ததோ ஜெர்மனியில் . பின்னர் ஜெர்மனியில் டெஸ்சாவ் என்னுமிடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறந்தது வொர்லிட்ஸ் 6-2-1814.
அவர் லைப்சிக் மிஷன் சொசைட்டியின் டைரக்டராகவும் இருந்தார். சர்ச்சுகள் சுய ஆதிக்கம் பெற்ற, சுதேசி அமைப்புகளாக இருக்கவேண்டும் என்பது அவரது குறிக்கோள்; ரோமன் கத்தோலிக்கர் போல ஒரே போப்பாண்டவர் ஆதிக்கத்தில் லுத்தரன் சர்ச்சுகள் இருக்கக்கூடாது என்பது அவரது அவா.
*****
பழைய கதை!
எனக்கு தமிழ் தெரியாது என்பது 1992–ம் ஆண்டில்தான் தெரிந்தது. அப்போது பிபிசி தமிழோசையில் ஆறு ஆண்டுக்கால ஒலிபரப்புப் பணியை முடித்து உட்கார்ந்திருந்தேன். லண்டன் பல்கலைக்கழக த்தில் தமிழ் ஆசியராக இருந்த Dr STUART BLACKBURN டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னைப் போய்ப்பாருங்கள் ; செந்தமிழ் பேசும் ஒரு தமிழர் வேண்டும் என்றார் ; உங்கள் பெயரைச் சொல்லியிருக்கிறோம் என்று பிபிசியிலுருந்து போன் வந்தது . டாக்டர் பிளாக்பர்ன் நாட்டுப்புறவியலில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அமெரிக்கர். பாஸ்டன் நகரைச் சேர்த்தவர். நன்றாகத் தமிழ் பேசுபவர் மதுரைக்கு அருகிலிலுள்ள மேலூர் முதலிய இடங்களில் தங்கி கோடாங்கி அடிப்பது, கேரளத்தில் நடக்கும் தோல் பாவைக்கூத்து ராமாயணம் முதலியவற்றை ஆராய்ந்து நூல்கள் இயற்றியவர். நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்க்கையில் சில புரியாத இடங்கள் வந்தால் என்னைக் கேட்பார். நான் எனது விளக்கத்தைத் தருவேன் . கமலாம்பாள் சத்திர நாவலை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் சந்தேகம் வரும் இடங்களை அவர் என்னிடம் கேட்பார்; அதில் உதவி செய்ததை புஸ்தக முன்னுரையில் என் பெயரை எழுதி நன்றி தெரிவித்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக நானும் அவரும் சேர்ந்து லண்டனில் SOAS பல்கலைக்கழக வளாகத்தில் (MAY 13, 1996) திருவள்ளுவர் சிலையை நிறுவும் பணியைச் செய்தோம். அந்த போட்டோ SOAS பல்கலைக்கழக மாதப் பத்திரிக்கையில் வெளியானது . சுவாமிநாதன், இதோ உன் போட்டோ என்று அந்தப் பத்திரிகையை 1996-ம் ஆண்டில் கொடுத்தார். அந்த சிலையின் 25-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகையில் யாரிடமும் சிலைத்திறப்பு பற்றி ஒரு தகவலும் இல்லை. என்னிடம் இருந் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தந்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொன்ன இந்திய ஹை கமிஷன் , லண்டன் பல்கலைக்கழகம், ஜெயலலிதா அரசு ஆகியவற்றிடமும் தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை!
அவர் வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு மாணவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க என்னையும் அழைத்தார். அந்தப் பகுதி நேர வேலை சிறிது சிறிதாக பெரிதாகி மாலைக் கல்லூரியிலும் தமிழ் சொல்லிக்கொடுத்தேன். 20 ஆண்டுக் காலத்துக்குப் பின்னர் 2014-ல் ஓய்வு எடுத்தேன். நாங்கள் பயன்படுத்திய தமிழ் பாடப் புஸ்தகம் அமெரிக்காவில் ஆறு பல்கலைக்கழகங்களில் பயன்படுத்திய TAMIL FOR BEGINNERS BY KAUSALYA HART கெளசல்யா ஹார்ட்டின் தமிழ் பார் பிகின்னர்ஸ் புஸ்தகம் ஆகும். வெளிநாட்டுக்காரர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க, தொல்காப்பியமும் நன்னூலும் உதவாது; கிரவுல் கண்டுபிடித்த வினைச்சொல் வகைகள் தேவை என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது ! தமிழன், தமிழ்க் குழந் தைகளுக்கு தமிழ் கற்பிப்பது எளிது; தமிழ் தெரியாத வெளிநாட்டுக்காரர்களுக்கு சொல்லிக்கொடுக்க கிரவுல் கண்டு பிடித்த பிரிவுகளை அறிய வேண்டும் ; அவருக்கு முன்னதாக சில மிஷனரிகள் — கிறிஸ்தவ பிரசாரகர்கள் — முயன்ற போதும் கிரவுல் தான் வெற்றி பெற்றார்.

EXAMPLES
CLASS ONE VERBS
1 A SEY- SEYTHEN செய்- செய்தேன்
1 B KOL – KONDEN கொள் – கொண்டேன்
1C VEL – VENDREN வெல் – வென்றேன்
CLASS TWO
UTKAR – UTKARNTHEN
உட்கார் – உட்கார்ந்தேன்
CLASS THREE
VANGU – VANGINEN
VANGU – VANGINEN
வாங்கு- வாங்கினேன் தமிழிலுள்ள ஏழுவகை வினைச் சொற்களில் மூன்றாவது வகை வினைச் சொற்கள்தான் அதிகம்
ஆடு, பாடு, விளையாடு போல பல சொற்கள் இதில் அடக்கம்.
AND IN THE NEUTER GENDER WE HAVE THREE FORMS
VANGIYATHU, VANGITRU, VANGINA
அஃறிணையில் வாங்கியது, வாங்கிற்று , வாங்கின என்றெல்லாம் வரும்
CLASS FOUR
SAAPPIDU – SAPPITTEN
சாப்பிடு – சாப்பிட்டேன்
PERU – PETREN
பெறு – பெற்றேன்
CLASS FIVE
5 A. UN – UNDEN உண் – உண்டேன்
5 B.THIN – THINDREN தின் – தின்றேன்
5 C.KEL – KETTEN கேள் – கேட்டேன்
5.D. VIL- VITREN வில் – விற்றேன்
CLASS 6
PAR- PARTHTHEN
பார்- பார்த்தேன்
CLASS 7
NADA – NADANTHEN
நடந்தேன்
APART FROM THESE SEVEN CLASSES RARE VERBS LIKE
SAA – SETHTHEN ARE ALSO THERE IN
IF YOU CONJUGATE
SAA – SARTHTHEN
SAA – SAATHTHEN
SAA- SAANTHEN FOLLOWING ONE OF THE SEVEN CLASSES IT WOULD BE WRONG.
‘சா’ என்னும் வினைச் சொல்லை, இறந்த காலத்தில் ‘செத்தேன்’ என்போம்.
முன்னர் சொன்ன எவ்வகையிலும் இது அடங்காது .
‘கா’ என்றால் காத்தேன் என்று சொல்லி விடலாம்
சா- சாதேன் ,சார்த்தேன், சாத்தேன் , சாந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.
ஆக, மொத்தத்தில் எல்லா வினைச் சொற்களையும் பட்டியலிட்டால் இப்படி ஏழு முறையில் இறந்தகாலச் சொற்கள் வரும். தமிழைத் தாய் மொழியாகக்கொண்டோர் இயல்பாகவே பேசிப் பழகி விடுவதால் இப்படி பலவகைகளில் நாம் இறந்த காலச் சொல்லை உருவாக்குகிறோம் என்று அறியாமலேயே இயல்பாகப் பேசிவிடுகிறோம். வெளிநாட்டினர் தவறில்லாமல் பேச வேண்டுமானால் நாம் அவர்களுக்கு இதைக் கற்பித்தே ஆக வேண்டும்.
வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!
–சுபம்—
TAGS- கார்ல் கிரவுல், தமிழ் வினைச் சொற்கள், ஜெர்மானியர், தமிழ் இலக்கணம், லண்டன் பல்கலைக்கழகம், திருக்குறள் , ஜெர்மன் மொழிபெயர்ப்பு, திருவள்ளுவர் சிலை, கைவல்ய நவநீதம், பஞ்சதஸ ப்ரகரணம் , ஆத்ம போத பிரகாசிகா