ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ்வது எப்படி?! (Post No.13,656)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.656

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ்வது எப்படி?! 

ச. நாகராஜன்

1907-ம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் How to live 24 Hours a Day!

எழுதி நூறாண்டுகள் ஆன பின்னரும் பயன் தரக் கூடிய விதத்திலே அமைந்திருக்கும் இந்தப் புத்தகத்தை ஆங்கிலம் அறிந்தோர் நிச்சயம் படிக்காமல் இருக்கக் கூடாது.

இதை எழுதியவர் ஆர்னால்ட் பென்னட்.

80 புத்தகங்களுக்கு மேல் எழுதியவர் பென்னட். அவரது ‘The Old Wive’s Tale ‘ என்ற நாவல் மிகவும் பிரசித்தமானது.

மிக்க நட்புடன் நம்முடன் உரையாட ஆரம்பிப்பது போல ஆரம்பித்து வாழ்வாங்கு வாழ வழி காண்பிக்கிறார் பென்னட்.

அவர் இதோ உங்களுடன் உரையாட விழைகிறார்:-

காலை எழுந்தவுடன் உங்கள் பர்ஸில் 24 மணி நேரங்கள் போடப்படுகிறது. கூடவும் இருக்காது; குறையவும் குறையாது! அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்கவும் முடியாது. உங்களுக்கே சொந்தமானது! உலகில் உள்ள மற்ற யாருக்கும் கூட இதை விட அதிகமாகவோ அல்லது குறைத்தோ இது தரப்படுவது இல்லை!!

இதை வீணாக ஆக்கி விட்டால் உங்களுக்குத் தண்டனையும் இல்லை; வீணாக்கினாலும் கூட மறு நாள் அதே அளவு தரப்படுகிறது.

இந்த 24 ,மணி நேரத்தால் அழிவற்ற உங்கள் ஆத்மாவை பரிணமிக்க வைக்கவும், ஆரோக்கியத்தை மேம்பட்ட நிலையில் அடையவும், இன்பம் துய்க்கவும், பணம் பெறவும், திருப்தி அடையவும் செய்ய முடியும்!

ஒரு நாளைக்கு உள்ள 24 மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற கடினமான காரியத்தில் உள்ள சிரமங்களை முதலில் நீங்கள் உணர வேண்டும். இதில் நீங்கள் செய்ய வேண்டிய தியாகங்களையும், முடிவற்ற முயற்சியையும் முதலில் அறிய வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம். 24  மணி நேரத்தின் செலவுத் திட்டம் என்ன?

எட்டு மணி நேரத் தூக்கம்! எட்டு மணி நேர வேலை! ஓய்வு பெற்று புத்துணர்ச்சி பெற தூக்கம்! வயிற்றுப்பாடுக்கு வேலை!!

மீதி இருக்கும் மூன்றில் ஒரு பங்கான எட்டு மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் ஒரு வெறி உங்களுக்கு இல்லை என்றால் உங்களால் எப்படி முன்னேற முடியும்?

சைனா பெட்டிகளில் ஒரு பெட்டிக்குள் இன்னொரு பெட்டியைப் போடுவது போல ஒரு நாளைக்குள் இன்னொரு நாளை அடைக்க உங்களுக்குத் தெரிய வேண்டும்!

போகட்டும். காலையில் எழுந்து அலுவலகம் செல்ல புகைவண்டியில் அமர்ந்து நீங்கள் செய்தித்தாளை ஒரு நாளைக்கு 124 மணி நேரம் இருக்கும் இன்னொரு கிரகவாசி போல மிக மெதுவாக ஓய்வாகப் படிக்க முனைகிறீர்கள். இந்தக் காலை நேரத்தில் இவ்வளவு நேரம் செலவிட என்னால் முடியாது! ஒரு அரை மணி நேரத்தை இதில் ஒதுக்கி விடுங்கள். அப்படி என்றால் எப்போது பேப்பர் படிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். மதியம் உணவு இடைவேளையின் போது அதை வைத்துக் கொள்ளலாமே!

சரி, மாலை வீடு திரும்பியவுடன் களைத்துப் போய் நீங்கள் வீடு திரும்பும் போது உங்கள் மனைவி, ‘என்ன வெளுத்துப் போய் வந்திருக்கிறீர்கள்’ என்று சொல்லி உங்களுக்குக் கொறிக்க ஏதேனும் தருவதை வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்.

நீங்கள் நிஜமாகவே வெளுத்துப் போய் வரவில்லையென்றாலும் அவள் அப்படிச் சொல்வது இதமாகத் தான் இருக்கும்!

அப்புறம் கொஞ்ச நேரம் ஓய்வான அரட்டை, நண்பர்களுடன் பேச்சு!

அட, கனவு போல நேரம் கரைந்து விட்டதே! இதில் என்ன தப்பு என்கிறீர்களா? தப்பே இல்லை.

ஆனால் இந்த மாலை நேரத்தில் இப்படிப்பட்ட மணிகளில் ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் உங்களால் ஒதுக்க முடியாதா என்ன?

வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஏழாம் நாள் முற்றிலும் உங்கள் கேளிக்கைக்காக ஒதுக்கி விடுவோம்.

ஆக, காலை வேளைகளில் ஆறு நாட்களில் ஒரு அரை மணி நேரம் வீதம் மூன்று மணி நேரமும் மாலை நேரங்களில் மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் வீதம் நான்கரை மணி நேரமும் கொஞ்சம் ஒதுக்கி விடுங்களேன்!

இந்த 450 நிமிடங்கள் தான் உங்களின் வாராந்திரக் கோட்டாவாகத் தரப்படும் 10080 நிமிடங்களில் முக்கியமானவை!

உங்கள் நேரக் காட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க முனைவதே ஒரு பெரிய விஷயம் தான்!

இதை வைத்து என்ன செய்வது என்கிறீர்களா? சொல்கிறேன், பொறுங்கள்.

காலை அரை மணி நேரம் இருக்கிறதே, அதை  முதலில் பார்ப்போம். வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது எதையேனும் பற்றி ஒருமுகப்பட்ட மனதுடன் நினையுங்கள். பத்தடி தூரம் நடக்கும் முன்னரே உங்கள் மனம் இன்னொரு பொருளுக்குத் தாவி விடும். கவலை வேண்டாம். அதை மீட்டுக் கொண்டு வந்து முதலில் நினைத்த பொருளுக்குத் திருப்புங்கள். எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், தீர்மானித்ததைப் பற்றி ஒருமுகப்பட்டு சிந்தியுங்கள். இந்த மனப்பழக்கம் எங்கே நீங்கள் இருந்தாலும் சரி, மனதின் மீது உங்கள் ஆதிக்கத்தை நாள் முழுவதும் செய்ய வைத்து விடும். மனம் தளரவே தளர வேண்டாம்!

மனதை ஒருமுகப்படுத்துவது என்ற இந்த வித்தை பியானோவின் கீ போர்ட் மீது கை வைப்பது போலத் தான். நாள் செல்லச் செல்ல அதன் விஸ்தீர்ணம் எங்கெங்கோ நீங்கள் சஞ்சாரம் செய்யும் போது தான் புரியும்!

இனி மாலை நேரத்திற்கு வருவோம். இருக்கும் நான்கரை மணி நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது.

இலக்கியம் பிடிக்கவில்லை என்பதனால் அதனுடைய சிறந்த மாற்று, சோம்பேறித்தனமாக சும்மா இருப்பது தான் என்று நினைத்து விடாதீர்கள்!

கலைகளில் எவ்வளவோ இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் கச்சேரிப் பிரியர் என்று வைத்துக் கொள்வோம். கச்சேரியில் பீத்தோவனின் சிம்பனியை ஒருவர் இசைப்பதை நீங்கள் பெரிதும் விரும்புகிறீர்கள்! ஒருவேளை ‘நன்கு கச்சேரியை ரசிப்பது எப்படி’ என்ற நூலை மட்டும் நீங்கள் படித்துக் கற்றுக் கொண்டால் சங்கித ஞானத்தை மேம்படுத்திக் கொண்டால் – உங்களின் அடுத்த கசேரி விஜயம் எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்! உங்கள் ரசனையே மாறி விடும். இதே போலத் தான் நீங்கள் ஓவியப் பிரியர் என்றால் நல்ல ஓவியத்தைப் பார்ப்பது எப்படி என்பதையும் அல்லது நீங்கள் கட்டிடப் பிரியர் என்றால் கட்டிடக் கலை நுட்பங்களை எப்படிப் பார்ப்பது என்பதையும் கற்கலாமே!

கலை பெரிது தான்; ஆனால் அத்தோடு காரண- காரிய விளைவு அதை விடப் பெரியது! அதை நீங்கள் சற்று ஆழ்ந்து படிக்க முயல வேண்டும்.

நீங்கள் வங்கியில் ஒரு க்ளார்க் தான்! அதனால் இலக்கியமோ அல்லது இசையோ பிடிக்காமல் இருக்கலாம்! ஆனால் முழு வாழ்க்கை என்னும் நிலைக்களம் தனது ஏராளமான சீன்களில் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. அதை உற்றுப் பார்த்து அனுபவிக்கலாமே!

நீங்கள் இலக்கியப்பிரியரா? நல்ல கவிதையை அனுபவிக்கலாமே!

கவிதை வேண்டாம் என்றால் சரித்திரமும் தத்துவமும் இருக்கவே இருக்கின்றன!

ஆனால் எவ்வளவோ பேர் எத்தனையோ மணி நேரங்களில் எவ்வளவோ பக்கங்களைப் படித்துக் குவிக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டுவது படித்ததைப் பற்றி ஒரு 45 நிமிடங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! படிப்பது மெதுவாக ஆகி விடுமே என்று பயப்படாதீர்கள்!

இலட்சியத்தை விட்டு என்னவோ செய்கிறோமே என்று நீங்கள் எண்ணும் போதே திடீரென்று ஒரு நாள் அழகிய மலை உச்சி நகரத்தில் இருப்பதைக் காண்பீர்கள்!

இப்படி அற்புதமான நேரங்களிலே அதில் கவனம் கொள்ள வேண்டிய இன்னும் சில இருக்கின்றன!

சற்று நகைச்சுவை உணர்வு, சேணை பூட்டிய குதிரை போல ஒரே பக்கமே பார்க்காமல் பரந்து விரிந்த பார்வை, அதிக வேகமாக போகாமல் இருப்பது இவற்றையும் நீங்கள் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

கடைசியாக ஒன்றே ஒன்று! எல்லாம் சரி என்று ஆரம்ப சூரத்தனமாக இவற்றை வெறியோடு ஆரம்பித்து அப்புறம் பாதியில் விடாதீர்கள்! மெதுவாக ஆரம்பித்தாலும் தளர் நடை பயின்றேனும் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.

உங்கள் லட்சியம் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ வேண்டும் என்பது தானே!

**

நிலாச்சாரல்’ இணைய தள இதழில் வெளியான கட்டுரை.

Leave a comment

Leave a comment