WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.665
Date uploaded in London – —14 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச. நாகராஜன்
உலகின் சிந்தனைப் போக்கையே மாற்றிய சிறந்த விஞ்ஞானி ஐன்ஸ்டீன்.
அவரது மூளை பற்றிய மர்மம் அவர் இறந்த பிறகு ஆரம்பித்தது. அவரது மூளையை அவரது டாக்டர் ரகசியமாக எடுத்து ஒளித்து வைத்திருந்தார். பின்னால் அது தெரிய வர அதைப் பல துண்டுகளாக்கி பல விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு அதைத் தந்தார்.
இந்த ஆய்வின மூலம் ஐன்ஸ்டீனின் மேதை பற்றிய மர்மம் விளங்கியது ஒரு புறம் இருக்க, மூளை பற்றிய மர்மத்தின் ஒரு பகுதியும் விளங்கியது! பெர்க்லியில் உள்ள கலிபோர்னியோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மூளையியல் நிபுணர் (Neuro Anatomist) மரியன் டயமண்ட் என்னும் பெண் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் மூளையின் பகுதியைத் தன் ஆராய்ச்சிக்காக விரும்பிப் பெற்றார்.
அதை ஆராய்ந்ததில் முக்கிய உண்மை ஒன்று அவரால் அறிய முடிந்தது. தூண்டுதலுக்கு உட்படும்போதெல்லாம் மூளை அதை ஏற்றுச் செயல்படுகிறது என்றும் புதிய சவால்களை ஏற்றுச் செயல்படுகிறது என்றும் புதிய சவால்களை எதிர்கொண்டு தனது ஆற்றலை அதிகப் படுத்திக் கொள்ளும் வலிமை வாய்ந்தது மூளை என்றும் அவர் கண்டுபிடித்தார்.
அறுபதுகளில் மார்க் ரோஸன்வ்ச் என்ற பெர்க்லியைச் சேர்ந்த விஞ்ஞானி, ஏணிகள், சக்கரங்கள் போன்ற பொம்மைகளை எலிகளின் சுற்றுப்புறத்தில் வைப்பதன் மூலம் அவற்றின் மூளையில் நிறைய மாறுதல் ஏற்படுகிறது என்று கண்டறிந்தார்.
இப்படி விசேஷமான சுற்றுப்புற சூழ்நிலை இல்லாத இடங்களில் வாழும் எலிகளை விட நல்ல சுற்றுப்புறத்தில் வாழும் எலிகள் நல்ல மூளை வளர்ச்சியை அடைவதை அவர் கண்டார்.
மூளையைத் தூண்டும் சுற்றுப்புறச் சூழ்நிலை மூளைக்கு அதிக செயல் திறனை அளிக்கிறது!
இந்த வகையில் ஆராய்ச்சியைத் தொடர்ந்த டயமண்ட் 600 நாள் வயதான எலியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். மனிதனுடன் ஒப்பிடுகையில் இது 60 வயதுக்குச் சமமானது. 766 நாள் வாழும் எலியைக் கூட அவர் சோதனைக்கு உட்படுத்தினார். எலிகள் இருக்குமிடத்தில் ஏராளமான பொருள்களை அவர் வைத்தார். இந்தப் பொருள்களால் தூண்டப்பட்ட எலிகளின் மூளை அவை மிக்க வயதானதாக இருந்த போதிலும் கூட அதிக திறனைக் கொண்டதாக மாறியதை அவர் கண்டறிந்தார்.
எலிகள் ஒருபுறம் இருக்க, மனித மூளை பற்றிய ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
ஐன்ஸ்டீனின் மூளை பற்றி 1985-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி செய்தி வெளியிட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை அது கான்ஸாஸில் ஒரு குளிர்பதனப்பெட்டியில் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்தது.
டாக்டர் டயமண்டும் அவரது சகாக்களும் இயற்பியலில் ஐன்ஸ்டீன் பிரபலமாவதற்குக் காரணமான மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியைத் தங்கள் ஆராய்ச்சிக்காகக் கேட்டுப் பெற்றனர்.
நெர்வ் செல்களுக்கு கை கொடுத்து ஆதரிக்கும் க்ளியர் செல்கள் (ClearCells) ஐன்ஸ்டீனின் மூளையில் அதிகம் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.
இந்த ஆராய்ச்சி தான் மூளை அமைப்புக்கும் அதன் திறமைக்கும் உள்ள சம்பந்தத்தை எடுத்துக் காட்டும் முதல் ஆராய்ச்சியாகும்.
வயதானாலும் கூட மூளைக்கு ஆற்றல் குறைவு இல்லை என்பது மரியன் டயமண்ட் கண்ட உண்மை.
எலிகளின் மூளைக்கும் ஐன்ஸ்டீனின் மூளைக்கும் முடிச்சுப் போடுவது சற்று அதிகப்படியான செயல் என்று யேல் விரிவுரையாளர் வால்டர் ரிச் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதினாலும் கூட டாக்டர் டயமண்ட் வயதுக்கும் மூளையின் ஆற்றல் குறைவுக்கும் சம்பந்தமில்லை என்று அடித்துக் கூறுகிறார்.
எந்த வயதிலும் முனைப்போடு கற்க ஆரம்பித்தால் மூளை அதற்கு ஈடு கொடுக்கும்.
ஆனால் பண்பாடு மற்றும் சமுதாய பழக்க வழக்கங்கள் காரணமாக நம்மை நாமே கிழவன் என்று எண்ணி அதன்படி நடக்க ஆரம்பித்தால் மூளையும் கிழடாகவே ஆகி விடுகிறது!
ஆகவே இருபது வயதானாலும் சரி, எழுபது வயதானாலும் சரி மூளை என்று இளமை வாய்ந்தது தான்!
நாம் அதைப் பயன்படுத்தும் விதத்தில் அது திறனைக் காட்டுகிறது!
இளமையின் ஓரத்தில் இருந்து முதுமை வயதைத் தொட்டுப் பார்ப்பவர்கள் இனி கவலை இன்றி மூளைப் பயிற்சியை மேற்கொண்டு அதிக செயல் திறனைப் பெற்று புதியன பயிலலாம்; செயல் திறனைக் கூட்டலாம்!
அது அவர்களுக்கும் நன்மை; சமுதாயத்திற்கும் நன்மை!
இது இறந்த பின்னும் ஐன்ஸ்டீன் தனது மூளை மூலம் உலகிற்குத் தரும் நல்ல செய்தி!
**
‘நிலாச்சாரல்’ இணைய தள இதழில் 250வது சிறப்பிதழில் வெளியான கட்டுரை.
to be continued………………………….