மஹாநந்தி சிவன் கோவில்: ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 31 (Post.13,666)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,666

Date uploaded in London – 14 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

மஹாநந்தி சிவன் கோவில் ஆந்திர மாநிலத்தில் நந்தியால் அருகில் உள்ளது. நந்தியால் மாவட்டத்திலுள்ள நந்தியால் நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இந்த சிவன் கோவில் இயற்கை வனப்புமிக்க சூழ்நிலையில் இருக்கிறது. நல்ல மலை வட்டாரத்தில் மலை அடிவாரத்தில் கோவில் இருப்பது  இயற்கையை ரசிப்போருக்கு விருந்தாக அமைகிறது . நவ நந்துலு என்று ஓன்பது நந்தி ஆலயங்கள் சூழ்ந்த மாவட்டம் என்பதால் நந்தி ஆலயம் = நந்தியால் என்று அழைக்கப்படுகிறது.

சுவாமியின் பெயர் மஹாநந்தீஸ்வரர்.

கோவிலுக்குள் ருத்ர குண்டம் என்ற குளம் இருக்கிறது . ஐந்து நிலத்தடி நீரூற்றுகள் இந்தக் குளத்தை நிரப்புகின்றன. ஸ்படிகம் போல தெளிவாக இருக்கும் தீர்த்தம் ஒரு நந்தியின் வாய் வழியாக தொடர்ந்து வருகிறது. கோவிலைச் சுற்றி விஷ்ணு குண்டம், பிரம்ம குண்டம் என்ற மேலும் இரண்டு இயற்கை நீரூற்றுகள் இருக்கின்றன.

கோவிலுக்குள் உள்ள லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இது லிங்க வடிவில் செதுக்கப்படாத சாளக்கிராமம் ஆகும். இயற்கையில் கிடைத்த இந்த லிங்கத்துக்கு அருகில் உள்ள சந்நிதியில் அன்னை காமேஸ்வரி தரிசனம் தருகிறாள். அவளது திருப்   பத கமலத்திலுள்ள ஸ்ரீ சக்ரத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம்.

கோவிலில் உயர்ந்த கோபுரம் ,கல்யாண மண்டபம் மற்றும் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. 1500 ஆண்டுகளுக்கு முன்னால்  எழுந்த கோவில் இது. ஊத்துங்க போஜன் என்ற மன்னனின் மகன் நந்த இந்தக் கோவிலை எழுப்பிய பின்னர் அவனது வம்சத்தினர் பல அறப்பணிகளைச் செய்தனர். துளுவ வம்சத்தின் முதல் மன்னனான வீர நரசிம்ம ராயன் இந்தக் கோவிலுக்கு பல தானங்களை செய்ததை ஒரு தாமிர சாசனம் செப்புகிறது. முக மண்டபத்தை 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஒருவர் எழுப்பியதை கோவிலில் உள்ள இரும்புத்தூணில் இருக்கும் கல்வெட்டு மூலம் அறிகிறோம். தென்புற வாயிலை1480-ஆம் ஆண்டில் பின்னப்ப செட்டி என்பவர் எழுப்பினார்.

சிற்பச்  சிறப்புகள் – பல்லியும்  பன்றியும்

வராஹ மற்றும் பல்லி சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன . வராஹம் என்னும் பன்றி விஜய நகர மன்னர்களின் சின்னம். கோவிலை ஏழாம் நூற்றாண்டில் நிர்வகித்த சமணர்களின் சின்னம் பல்லி . சாளுக்கிய வம்ச காலை அம்சங்கள் நிறைந்த இடம்.

கோவிலின் 16 கிலோமீட்டர் சுற்றளவில் 9 நந்தி ஆலயங்கள் உள்ளன; பத்ம, நாக, விநாயக, கருட, பிரம்ம, சூர்ய, விஷ்ணு, சோம , சிவ நந்தி ஆலயங்கள்; நந்தியால் என்ற நகரின் பெயரே நந்தி ஆலயம் என்பதன் சுருக்கம் ஆகும். கோவில் ஊற்றுகளிலிருந்து  வரும் நீர் சுமார் 2000 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்ய உதவுகிறது  இங்கு வடநாட்டு போல சிவலிங்கத்தைத்  தொட்டு வழிபட அனுமதி உண்டு; இதுவும் ஒரு சிறப்பு .

மஹா சிவராத்திரி ,சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது  ஸ்ரீ சைலம் செல்லும் பக்தர்கள் இந்தக் கோவிலையும் தரிசனம் செய்வது வழக்கம்.

கோவில் இயற்கையான சூழ் நிலையில் அமைந்திருப்பதால், பக்தர்களைத் தவிர சுற்றுலாப்பயணிகளும் இங்கே வருவது மற்றோர் சிறப்பு .

–SUBHAM—

TAGS- மஹாநந்தி சிவன் கோவில், ஆந்திரத்தின், 108 புகழ்பெற்ற, கோவில்கள்—Part 31, நந்தியால், 9 நந்தி ஆலயங்கள்

Leave a comment

Leave a comment