WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.670
Date uploaded in London – —15 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஐன்ஸ்டீனின் மூளை! – 2
ச. நாகராஜன்
உலகின் தலை சிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளில் பத்துப் பேரை இன்றைய இயற்பியல் விஞ்ஞானிகள் நூறு பேர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அந்தப் பட்டியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதலிடம் பெறுகிறார்.
இதுவரை சர் ஐஸக் நியூட்டன் மட்டுமே இயற்பியல் விஞ்ஞானிகளுள் முதல்வராகக் கருதப்பட்டு வந்தார். அவரை இரண்டாம் இடத்திற்கு இறக்கி, முதலிடத்திற்கு ஐன்ஸ்டீனை முன்னேற்றி விட்டது இந்த விஞ்ஞானிகளின் புதிய தேர்வு!
ஐன்ஸ்டீன் (தோற்றம் 14-3-1879 மறைவு 18-4-1955) இன்றைய உலகின் சிந்தனைப் போக்கையே காலம் மற்றும் வெளி பற்றிய (Space and Time)
தனது ஒப்புமை தத்துவத்தால் (தியரி ஆஃப் ரிலேடிவிடி) மாற்றி விட்டவர். மாபெரும் நோபல் பரிசைப் பெற்றவர்.
பட்டியலில் இடம் பெற்ற பத்துப் பேர் யார், யார்?
1) ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
2) ஐஸக் நியூட்டன்
3) ஜேம்ஸ் க்ளர்க் மாக்ஸ்வெல்
4) நீல்ஸ் பொர்
5) வார்னர் ஹெய்ஸன்பர்க்
6) கலிலியோ
7) ரிச்சர்ட் பெய்ன்மேன்
8) பால் டிரக்
9) எர்வின் ஷ்ரோடிங்கர்
10) எர்னஸ்ட் ருதர்போர்ட்
பிஸிக்ஸ் வோர்ல்ட் என்ற பத்திரிக்கை இந்த தேர்வை நடத்தியது.
ஐன்ஸ்டீனும் ஐஸக் நியூட்டனும் என்றும் முதல் இரண்டு இடங்களிலேயே இருப்பர்; இவர்களை மாற்றவோ இறக்கவோ முடியாது என்று பிரையான் க்ரீன் என்ற கொலம்பியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கூறுகிறார்.
நியூடன், ஜேம்ஸ் க்ளர்க் மாக்ஸ்வெல், பால் டிரக் ஆகிய மூவரும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள். நியூஜிலாந்தைச் சேர்ந்த எர்னஸ்ட் ருதர்போர்டும் பட்டியலில் இடம் பெற்று விட்டார். இவர் தன் ஆராய்ச்சியைப் பெரும்பாலும் பிரிட்டனில் செய்தவர்.
இந்தப் பத்துப் பேரில் ஏழு பேர் கொள்கைகளைக் கண்டுபிடித்த தியரிஸ்ட் என்னும் தத்துவம் தந்த விஞ்ஞானிகள் ஆவர்.
இதே போன்று தேர்வு நடத்திய பிஸிக்ஸ் வெப் தேர்வில் ஐஸக் நியூட்டன் முதலிடம் பெற்றார். மைக்கேல் பாரடேயும் பட்டியலில் இடம் பெற்று விட்டார். ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கும் மிகப் பெரிய விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு பட்டியலிலும் இடம் பெறாதது மிக்க ஆச்சரியத்தைத் தருகிறது!
ஐன்ஸ்டீன் இறந்தவுடன் அவரது மருத்துவரான ஜான் ஹார்வி அவரது மூளையை எடுத்து ரகசியமாகத் தனது வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டார்.
பின்னால் இது தெரிய வந்த போது விஞ்ஞானிகள் பலரும் அவரது மூளையை ஆராய விருப்பம் தெரிவித்ததால் அதைப் பல துண்டுகளாக்கி ஹார்வி அனைவருக்கும் தந்தார்.
மூளையை முழுதுமாக ஆராய்ந்ததில் கனடாவில் ஒண்டாரியோவில் உள்ள மக்மாஸ்டர் பல்கலைக் கழகம் முன்னணி வகித்தது. அங்குள்ள மூளையியல் பெண் விஞ்ஞானியான சாண்ட்ரா விடல்ஸன் பல அதிசயங்களைக் கண்டு பிடித்தார்.
பகுத்தறியும் கணிதப் பகுதியான மூளையின் Inferior Parietal Region
எனப்படும் இன்ஃபீரியர் பரீடல் பகுதி மற்ற சாதாரண மூளைகளை விட பதினைந்து சதவிகிதம் இருபுறமும் அகலமாக இருப்பதை அவர் கண்டார். அத்தோடு மூளையின் முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் வரை செல்லும் குழைவு (Groove) ஐன்ஸ்டீன் மூளையில் அப்படி மறுபுறம் வரை செல்லாமல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னலான ‘தி லான்சட்’ பத்திரிக்கையில் அவர் இவற்றை வெளிப்படுத்தியுள்ளார்.
சூழ்நிலை, மூளையின் வளர்ச்சிக்கு முக்கியமான ஒன்று என்று குறிப்பிடும் அவர், ஆனால் சூழ்நிலை மட்டுமே இதற்குக் காரணம் இல்லை என்பதை ஐன்ஸ்டீனின் மூளை நிரூபிக்கிறது என்கிறார்.
எந்தச் சூழ்நிலையானாலும் முன்னேறலாம் என்பது சுவையான செய்தி!
இன்ஃபீரியர் பரீடல் பகுதி இப்போது மிகவும் ஆராயப்பட வேண்டிய முக்கிய பகுதியாகி விட்டது.
35 ஆண்கள், 56 பெண்கள் ஆகியோரது மூளைகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டதில் தெரிய வந்துள்ள செய்திகள் ஒவ்வொன்றாக வெளிவரும் போது வியப்படைகிறோம்.
ஐன்ஸ்டீனின் மூளையின் மர்மம் விளக்க இருக்கும் செய்திகள் ஏராளம் என்பதால் உலகமே அதில் ஆர்வம் காட்டுவதில் வியப்பில்லை.
ஏனெனில் உலகின் முதல் மூளை எப்படி இருக்கிறது என்பதை அறிவதில் ஆர்வம் ஏற்படுவது இயல்பு தானே!
**
‘நிலாச்சாரல்’ இணைய தள இதழில் 250வது சிறப்பிதழில் வெளியான கட்டுரை.