
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.673
Date uploaded in London – —16 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாலைமலர் 21-8-4 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா -1
ச. நாகராஜன்
ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா
ஒலிம்பிக் நாயகி
ஒரு பெண் நினைத்தால் எந்த சூழ்நிலையையும் சாதகமாக்கி கடுமையாக உழைத்து இமாலய வெற்றி பெறலாம் என்பதை நிருபித்தவர் ரஷியப் பெண்மணியான லரிஸா லடிநினா. மங்கையர் அனைவருக்கும் உத்வேகமும் ஊக்கமும் ஊட்டும் இவர் 18 ஒலிம்பிக் மெடல்களைப் பெற்று ஒலிம்பிக் நாயகியாக விளங்குகிறார். 90 வயதிலும் சுறுசுறுப்பாக அனைவருக்கும் வழிகாட்டும் இவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டாமா?
பிறப்பும் இளமையும்
ரஷியப் பெண்மணியான லரிஸா செமியோனோவ்னா டிரியி உக்ரேனில் கெர்ஸன் என்ற இடத்தில் 1934-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி பிறந்தார். அவர் பதினோரு மாதக் குழந்தையாக இருக்கும் போது அவரை விட்டுத் தந்தையார் பிரிந்து சென்றார். அவரை வளர்த்தவர் படிப்பறிவில்லாத அவரது தாயார் தான். அவர் பகல் நேரத்தில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். இரவில் வாட்ச்மேன் வேலையைப் பார்த்தார்; குழந்தையை வளர்த்தார்.
ஸ்டாலின்கிராட் போரில் லரிஸாவின் தந்தை மெஷின் கன் ஆபரேட்டராக இருந்த போது கொல்லப்பட்டார்.
இளமையில் ‘பாலட்’ டான்ஸை பயிற்சி செய்த லரிஸா பின்னர் அவரது நடனப் பயிற்சியாளர் கெர்ஸனை விட்டுச் சென்று விடவே சீருடற்பயிற்சி என்னும் ஜிம்னாஸ்டிக்ஸில் தீவிரமாக ஈடுபட்டார்.
1953-ல் உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்த அவர் கியிவ் என்ற இடத்தில் பாலிடெக்னிக்கில் சேர்ந்தார். 19 வயதே ஆன போது 1954-ல் ரோமில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு அவர் ஒரு தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஒலிம்பிக் போட்டி பற்றிய சுவையான செய்திகள்
கிரேக்க நாட்டில் 3200 ஆண்டுகளுக்கு முன்னர் கிரீஸில் நடந்த போட்டிகளால் உத்வேகம் பெறப்பட்டு ஒலிம்பிக் போட்டி துவங்கப்பட்டது.
1894ல் இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது.
1896ல் முதன் முதலாக ஏதன்ஸ் நகரில் இந்தப் போட்டி ஆரம்பிக்கப்பட்டது.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. 1994 முதல் சம்மர் ஒலிம்பிக், விண்டர் ஒலிம்பிக் என்று இது இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.
உடல் ஊனமுற்றோருக்காக பாராலிம்பிக் என்னும் போட்டிகள் தனியே தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது.
முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1916, 1940, 1944 ஆகிய வருடங்களில் போட்டி நடத்தப்படவில்லை.
ஒலிம்பிக் போட்டிகளில் 200 குழுக்கள் கலந்து கொள்கின்றன.
2020 சம்மர் ஒலிம்பிக்கிலும் 2022 விண்டர் ஒலிம்பிக்கிலும் 14000 பேர் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
40 வெவ்வேறு விளையாட்டுகளில் 448 நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
போட்டியில் வென்ற முதல் மூவருக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கம் வழங்கப்படுகிறது.
இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் அதிகப் பதக்கங்கள் பெற்ற முதல் மூன்று நாடுகள் பின் வருமாறு:
அமெரிக்கா 2259 மெடல்கள்
ரஷியா 2011 மெடல்கள்
ஜெர்மனி 1821 மெடல்கள்
சம்மர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 520 கோடி அமெரிக்க டாலர் ஆகும். விண்டர் ஒலிம்பிக் போட்டி நடத்துவதற்கான செலவு 310 கோடி அமெரிக்க டாலர் ஆகும்.
ஒலிம்பிக் கொடி வெள்ளை நிறத்தில் ஐந்து ஒன்றுடன் ஒன்று கோர்க்கப்பட்ட வளையங்களைக் கொண்டிருக்கிறது. ஐந்து வளையங்கள் ஐந்து கண்டங்களைக் குறிக்கிறது.
இந்த வளையங்களின் வண்ணங்கள் நீலம், மஞ்சள், கறுப்பு, பச்சை, சிவப்பு.
இப்படிப்பட்ட வண்ணங்களின் தேர்வு ஏனெனில், உலகில் உள்ள அனைத்து தேசங்களின் கொடிகளிலும் இந்த ஐந்து வண்ணங்களில் ஏதோ ஒரு வண்ணம் இடம் பெறுகிறது, அதனால் தான்.
ஒலிம்பிக் உத்வேகமூட்டும் வாசகம் : சிடியஸ், ஆல்டியஸ், ஃபார்டியஸ்
(வேகமாக, உயரமாக, வலிமையாக) என்பதாகும்.
ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களின் பங்கேற்பு
ஏதென்ஸில் 1896-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டதென்றாலும், 1900ல் தான் பெண்கள் அதில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். 2012ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் தான் முதன்முறையாக எல்லாப் போட்டிகளிலும் பெண்கள் பங்கேற்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள 1928 முதல் அனுமதிக்கப்பட்டனர்.
**