திருப்பதி கோவில் அதிசயங்கள்!  ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 32 (Post No.13,64)

PICTURES ARE TAKEN FROM TTD WEBSITE;THANKS.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,674

Date uploaded in London – 16 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

திருப்பதி சென்று திருமலையில் ஏறினால் அதிசய வெங்கடாசலபதி நமக்கு தரிசனம் தருவார். இந்த மலையப்ப சுவாமி, ஏழு மலை வாசன் பற்றி புஸ்தகம் புஸ்தகமாக எழுதலாம். அவ்வளவு அற்புதங்களை பகதர்கள் வாழ்வில் செய்துள்ளார். ஆயினும் எல்லா  விஷயங்களையும் புல்லட் பாயிண்டில் பார்ப்போம்.

உலகின் பணக்கார வழிபாட்டுத்தலங்களில் திருப்பதி,  முன்னிலையில் நிற்கிறது தினமும் 4 முதல் 6 கோடி ரூபாய் வரை உண்டியலில் விழுகிறது!

பாலாஜி என்றும் வெங்கடேஸ்வரன் என்றும் அழைக்கப்படும் பெருமாள்  உலகில் அதிகமான பக்தர்களைக் கவர்ந்து இழுக்கிறார்.

பெருமாளே ஒரு அதிசயம்தான். வைஷ்ணவ, சைவ சின்னங்களுடன் காட்சிதருகிறார். இதனால் அருணகிரிநாதர் 500 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதிய திருப்புகழில் இவர் முருகப் பெருமானே என்று பாடிவிட்டார்.

மக்கள் நாட் கணக்கில் நின்று தரிசிக்கும் ஒரே கடவுள் இவர்தான்.

இந்தியாவில் அதிகமான கல்வெட்டுகள் உள்ள கோவிலும் இதுதான்.

பக்தர்களால் அதிகம் பாடப்பட்ட துதிக்கப்பட்ட கடவுளும் இவர்தான் அன்னமாசார்யா  மட்டுமே ஆயிரக்கணக்கில் கிருதிகளை செய்துவிட்டார்.

சுமார் 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில் இது.

தமிழின் மிகப்பழைய நூலான தொல்காப்பியமே வட வேங்கடத்தைக் குறிக்கிறது.

இன்றுவரை பாலாஜி, வெங்கடேஸ்வரன், வெங்கடாசலபதி,  சீனிவாசன், வெங்கட் என்ற பெயர்களை இந்துக்கள் குழந்தைகளுக்குச் சூட்டி வருகிறார்கள்.

தமிழ் இலக்கியம் குறிப்பிடும் பழைய கோவிலும் இதுதான்.

இது 108 வைஷ்ணவ தலங்களில் ஒன்று

****

எங்கே இருக்கிறது ?

சென்னையிலிருந்து 108 கி.மீ. ரயில், விமானம், சாலை வழியாகச் செல்லலாம் சாலை வழியாகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகில் போகலாம். இயற்கை வனப்புமிக்க 7 மலைகளையும்  காணலாம்..பத்தொன்பது கி.மீ தூரம். சுமார் நாற்பது நிமிடங்கள் பிடிக்கும். சென்னை பம்பாய் ரயில்பாதையில் ரேணிகுண்டா சந்திப்பிலிருந்து 12 கி.மீ தூரத்தில் திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது அங்கிருந்து பஸ்களில் மலைக்குச் செல்லலாம்

நடந்து போனால் 11 கிமீ. மூன்று மணி முதல் ஆறுமணிநேரம் பிடிக்கும். எல்லோரும் போகும்பாதை அலிபிரி பாதை எனப்படும்; 3500 படிகளுக்கு மேல் உள்ளது.

தமிழில் திருவேங்கடம் என்றும் சம்ஸ்க்ருதத்தில் ஆதிவராஹ க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள்

செப்டம்பர் 15, 2024 ல் அவரைத் தரிசித்த பக்தர் எண்ணிக்கை 85,626. இவ்வாறு தினமும் பக்தர்கள் வருகிறார்கள். ஆண்டு முழுதும் விழா தான். ஆயினும் பிரம்மோற்சவம் மிகவும் சிறப்பானது

பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது

பாலாஜியைப் பாடிய ஆழ்வார்கள்

மங்களாசாசனம் — பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்; பாசுரங்கள் 202–க்கும் மேல்

மூலவர்: திருமலையில், திருவேங்கடமுடையான். ஸ்ரீநிவாசன் வெங்கடாசலபதி. பாலாஜி, ஏழுமலையான் திருவேங்கடத்தான்.

உத்சவர்   _ திருமலையில் கல்யாண வெங்கடேஸ்வரன், மலையப்ப சுவாமி

திருமலையில், கிழக்கு நோக்கி திருமுகமண்டலம்.

தீர்த்தம்– 1. ஸ்வாமி புஷ்கரிணி, 2. பாபவிநாசம், 3. ஆகாசகங்கை, 4. கோனேரி,  5. வைகுண்ட தீர்த்தம், 6. சக்ரதீர்த்தம், 7. ஜபாலி தீர்த்தம், 8. வகுள தீர்த்தம், 9. பாண்டவ தீர்த்தம், 10. இராமகிருஷ்ண தீர்த்தம், 11. தும்புரு தீர்த்தம், 12. சேஷ தீர்த்தம், 13. சுகஸந்தன தீர்த்தம்  14. மொர தீர்த்தம்.

கோவிலுக்கு அருகிலுள்ள புஷ்கரிணி/ குளம்  மிகவும் பெரியது;  அழகானது.

ஸ்தல வ்ருக்ஷம்- புளியமரம்

****

கோவிந்தா கோவிந்தா

நைமிசாரண்ய ரிஷிகள், கோவிந்தா என்ற திருநாமத்தை மட்டுமே ஒலித்துக்கொண்டு, திருமலை ஏறினார்கள் என்று வராஹ புராணத்தில் உள்ளது; இன்றும் பக்தர்கள் கோவிந்தா என்ற கோஷத்தை மட்டுமே சொல்கிறார்கள்.

திருப்பதி லட்டு

இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கமுடியாது ; 1931 ஆம் ஆண்டு திருப்பதியில் லட்டுப் பிரசாதத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் கல்யாணம் ஐயங்கார் எனும் பெரியவர்.

****

நான்  24 AUGUST 2019  ல் எழுதிய கட்டுரையிலிருந்து  முக்கியத் தகவல்கள்

திருப்பதியில் அதிசயம்- உலகிலேயே அதிகமான கல்வெட்டுகள் (Post No.6925)

திருப்பதி என்றவுடன் வெங்கடாசலபதியும் அவருடைய உண்டியலும், லட்டு-ம் தான் நம் கண்ணுக்கு முன்னே வரும். அங்கு மிகப்பெரிய வரலாற்றுப் புதையல் , தமிழ் வரலாற்றுப் புதையல்- இருப்பது பலருக்கும் தெரியாது. அதுவும் தமிழ் வரலாற்றுப் புதையல்.

2000 ஆண்டுக்கும் மேலாக வேங்கட மலை உச்சியில் நின்றுகொண்டு, போகும் வருவோரின் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு, உலக அரசியல்வாதிகளைத் தன் கோவிலுக்கு வரவழைக்கும், காலடியில் விழ வைக்கும் வேங்கட நாயகனுக்கு பல சிறப்புகள் உண்டு. அருணகிரிநாதர் அவரை முருகா என்று பாடுகிறார்; பேயாழ்வரோ அவரை சிவனே என்று பாடுகிறார்; குல சேகர ஆழ்வாரோ உனது மலையில் எனக்குப்

பறவையாகவோ, புதராகவோ, சுனையாகவோ இருக்க அருள் புரி; அதுவும் முடியாவிட்டால், Please, At least ப்ளீஸ், அட் லீஸ்ட் என்னை வெற்றிலை எச்சில் துப்பும் தட்டாகவாது செய்து விடு என்று இறைஞ்சுகிறார்.

சிலப்பதிகார இளங்கோவோ பாடிப்பரவுகிறார். புரந்தரதாசரோ 600 ஆண்டுக்கு முன்னரே அவரை கிண்டல் செய்கிறார்; நீ ஒரு சரியான செட்டிப்பயல்; காசிலே கறாரான கெட்டிப் பயல் என்று கன்னடத்தில் பாடி சந்தோஷப்படுகிறார்.

kAsu tappidare paTTi baTTi kAsu biDade kaNDu kaTTi

dAsanendare biDa gaTTi namma kEsakki timmappasetti

இதில் எல்லாம் மயங்கிப் போன நமக்கு அங்குள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. எனக்கும் தெரியாது . நேற்று லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று ஆறு தடித் தடிப் புஸ்தகங்களைத் தூக்கி வந்து படித்தபோது நிறைய அதிசயச் செய்திகள் கிடைத்தன. சில செய்திகளைக் காண்போம்.

பல்லவர் காலம் முதல் அண்மைக்காலம் வரை கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாறு கிடைக்கிறது இவ்வளவு நீண்ட வரலாறு ஒரு கோவிலில் உலகில் வேறு எங்கும் கிடைக்காது!

திருப்பதி கோவிலிலும் புனித மலை வளாகத்திலும் 1150 கல்வெட்டுகள் உள்ளன. இது 1930ம் ஆண்டு கணக்கு! அவைகள் பெரும்பாலும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன. ஏன் தெரியுமா?

சிவன் உடுக்கை அடித்தபோது ஒரு புறம் தமிழ் ஒலியும் மறுபுறம் ஸம்ஸ்க்ருதமும் வந்ததாம். இதற்குச் சான்று தமிழ் இலக்கியத்தில் உள்ளது பரஞ்சோதி முனிவர் பாடிய திருவிளையாடல் புராணம் அகஸ்தியரும், பாணினியும் எப்படி இரண்டு மொழிகளை சிவ பெருமானிடமிருந்து பெற்றனர் என்று பாடி இருக்கிறார்.

ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுகளோடு கவிஞர்கள் பாடிய பாடல்கள் அடங்கிய 3000 தாமிர சாசனங்கள் இருக்கின்றன. இதில் அன்னமாச்சார்யா பாடிய கீர்த்தனைகளை அறியாத சங்கீத வித்துவான் கிடையாது.

ஆக உலகிலேயே அதிக கல்வெட்டுகள் நிறைந்த ஒரு வழிபாட்டுத் தலம், உலகிலேயே கல்வெட்டு மூலமே 800 ஆண்டு வரலாற்றைச் சொல்லும் ஒரு இடம், உலகிலேயே அதிகமான தமிழ்க் கல்வெட்டுகள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான தாமிர சாசனங்கள் உள்ள இடம், உலகிலேயே அதிகமான பக்தர்கள் வரும் இடம், உலகிலேயே அதிகமான வசூல் செய்யும் சாமி என்று எல்லா வகையிலும் வேங்கட +அசல+  பதி சாதனைப் புத்தகத்தில் நுழைந்து விடுகிறார்.

1150 கல்வெட்டுகளையும் படியெடுத்து வெளியிட்ட பெருமை சாது சுப்ரமண்ய சாஸ்திரியைச் சாரும். அவர், சிறப்புக் கல்வெட்டு பயிற்சி பெற்ற திருப்பதி கோவில் தொல்பொருட் துறை அறிஞர்; அவரை முன்னின்று நடத்திய பெருமை தேவஸ்தான விசாரண கர்த்தா சுவாமி  மஹந்த் பிரயாகதாஸ்ஜியைச் சாரும். 1930ம் ஆண்டிலேயே இவைகளை வெளியிட்ட பெருமை கோவிலைச் சாரும். இவைகளை சேர்த்துவைத்து இலவசமாகப் படிக்க அனுமதிக்கும் பெருமை லண்டன் பிரிட்டிஷ் லைப்ரரியைச் சாரும்.

1150 கல்வெட்டு பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இவைகளை ஆராய்ந்து பத்து டாக்டர் பட்டம் பெறலாம் ; அவ்வளவு விஷயம்.

பல்லவன் தந்திவர்மன் அவனது 51ஆவது ஆட்சியாண்டில் ஒரு கல்வெட்டு வழங்கியுள்ளான்.

51 ஆண்டுக்காலம் ஆண்ட மன்னன் தந்திவர்மன்!

ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் முதலியோர் கல்வெட்டுகளும் உள.

பழங்கால பல்லவ, பாண்டிய, சோழ , விஜய நகர மன்னர்களின் 236 கல்வெட்டுகள் ஆங்கில மொழிபெயர்ப்புடன் முதல் தொகுதியில் உளது.

ஏனைய 5 தொகுதிகளில் உள்ள கல்வெட்டுகள் :-

சாளுவ நரசிம்மன் -169 கல்வெட்டுகள்,

கிருஷ்ணதேவராயர்- 229 கல்வெட்டுகள்,

அச்யுதராயர்- 251 கல்வெட்டுகள்

சதாசிவராயர்-147 கல்வெட்டுகள்

ஆரவீடு வம்சாவளி- 135 கல்வெட்டுகள்

இவர்களில் வண்னமிகு மன்னன் – மாமன்னன், சக்ரவர்த்தி– கிருஷ்ண தேவராயர் ஆவார்; 35 முறை வெங்கடாசலாதி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தவர். ஆமுக்த மால்யதா எழுதி ஆண்டாள் புகழ்

 பாடியவர் அவருக்கு நான்கு மனைவிகள். இது போன்ற ஏராளமான வரலாற்றுத் தகவல்கள், கலெட்டுகளுக்குப் பின்னணியாக தரப்பட்டுள்ளன. 

*****

திருப்பதி மலைமேல் முருகன் !

(எனது பழைய அக்கட்டுரையில் ஒரு பகுதி)

திருப்புகழ் ஆராய்ச்சிக் கட்டுரை– 9

அருணகிரிநாதரால் பாடப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள அற்புதமான 1300+ திருப்புகழ் பாடல்களில் பல அழகான சொல்லாக்கமும், சொல்லாட்சியும், சொற்சிலம்பமும் இருப்பதை  கண்டோம். அவர் போடும் பல புதிர்களுக்கு விடை கிடைக்காமல் அறிஞர்கள் திண்டாடுகிறார்கள் ஒரு மூன்று புதிர்களை மட்டும் இங்கே காண்போம்.

1.            திருவேங்கட மலையில் முருகன் கோவில் இருப்பதாகப் பாடுகிறார். நமக்குத் தெரிந்து வேங்கடாசலபதி (பாலாஜி ) கோவில் இருக்கிறது. அப்படியானால் முருகன் கோவில் ஒன்று இருந்து அழிந்துவிட்டதா? அல்லது இப்போதைய பாலாஜி கோவில் ஒருகாலத்தில் முருகன் கோவிலாக இருந்ததா? இது அவர் போடும் முதல் புதிர்.

1.            சரஸ்வதி நதிக்கரையில் வயிரவி வனம் என்று ஒரு இடம் இருப்பதாகவும் அங்கே முருகன் கோவில் இருப்பதாகவும் பாடுகிறார். சரஸ்வதி நதி வேத காலத்தில் ஓடி மகாபாரத காலத்தில் மறையத் துவங்கிவிட்டது. அருணகிரி காலத்தில் சரஸ்வதி நதி இல்லையே! நமக்குத் தெரிந்து வயிரவி வனம் என்று ஊரும் இல்லையே. வயிரவி வனம் எது? முருகன் கோவில் எங்கே? இது அவர் போடும் இரண்டாவது புதிர்.

1.            பிள்ளையார் கையில் ஒரு மாதுளம் கனியை பார்வதி தேவி கொடுத்ததாகப் பாடுகிறார். அது என்ன புதிய கதை? நமக்குத் தெரிந்ததெல்லாம் பழனியில் மாங்கனி கொடுக்கப்பட்டது. முருகன் கோபித்துக் கொண்டு ஓடிப் போய் தண்டாயுதபாணியாக நின்றார். இந்த மாதுளம் பழக் கதை என்ன?

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

திருப்பதி கடவுள் பற்றி நிறைய புதிர்கள் உள்ளன. வேறு எந்த வைணவ தலங்களிலும் இல்லாத உருவ அமைப்பும், பல நடைமுறைகளும் பூஜைகளும் திருவேங்கடநாதருக்கு இருக்கின்றன. ஆனால் சிலப்பதிகார காலம் முதல் ஆழ்வார்கள் காலம் வரை அங்குள்ள விஷ்ணுவையும் பாடி இருக்கிறார்கள் அப்படியானால் முருகன் கோவில் எங்கே? இதுவரை ஏழு மலைகளில் முருகன் கோவில் கண்டுபிடிக்கப்படவில்லை

வேங்கடேசன் என்று சிவனைப் போல ‘ஈஸ்வரன்’ என்று பெயர் வைக்கிறோம். பொதுவாக ‘ஈசன், ஈஸ்வரன்’ என்பது சிவனையே குறிக்கும். எதற்காக ஈசன் பெயரைச் சேர்க்கிறார்கள்? ‘வேங்கட சுப்ரமணி’யனென்றும் பெயர் வைக்கிறோம். வேங்கடத்தில் (திருப்பதி-திருமலை) சுப்பிரமணியன் எங்கே இருக்கிறார்? குன்று தோராடும் குமரன் தமிழக வட எல்லையான வேங்கடத்தில் கட்டாயம் கோவில் கொண்டிருப்பாரே? அது எங்கே? சிலர் விஷ்ணு கோவில் (பாலாஜி),  முதலில் முருகன் கோவிலாக இருந்திருக்க வேண்டும் என்றும் சொல்லுகிறார்கள். அதற்கும் ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

இருதரப்பு வாதங்களையும் படித்த பின்னர் எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் ஒருவேளை இரண்டு கோவில்களும் இருந்து ஒன்று மறைந்திருக்கலாம். தமிழ் நாட்டில் கூட சிதம்பரம் போன்ற இடங்களில் சிவனும் விஷ்ணுவும் அடுத்தடுத்து இருப்பதைப் பார்க்கிறோம். “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு” என்ற பொன்மொழியை அறிந்தவர்களுக்கு இது வியப்பு தராது. காலப் போக்கில் ஒன்று மறைந்திருக்க வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டில் பலகோவில்களில் பலராமன் வழிபாடும் இருந்தது. ஆனால் இன்று அறவே இல்லை. புறநானூற்றிலும் சிலப்பதிகாரத்திலும் பலராமன் வழிபாடு உள்ளது. பழமுதிர்ச்சோலை காணாமற்போகவே நமது காலத்தில் நாமாக புதிய பழமுதிர்ச்சோலையை உருவாக்கினோம்.

நமது ரெகுலர் வாசகரும் பேரரறிஞருமான காலஞ்சென்ற நஞ்சப்பா அவர்கள்    தரும் தகவல்

R.Nanjappa

  /  August 24, 2019

Tirupathi- the abode of Balaji,the most famous and wealthy of our Hindu temples- is it a wonder or mystery?

If we follow the ancient Tamil tradition of the five-fold division of the land with a Deity for each, then the hilly region of Tirumala-Tirupati qualifies as Kurinji land, of which the presiding Deity is Subrahmanya, the eternal Kumara ie Balaji! So claims are made that this was originally a Subrahmanya temple.

On the other hand, ancient Tamil literature gives the extant of the land of the Tamil speaking people as “lying between Venkatam in the North and Kumari in the South”. The interesting inference here is that as Kumari is the famous seat of Devi, which is the southern border, the northern border could as well have been a seat of Devi!. In fact we see the image of lion on the four corners of the Gopuram in Tirupati, and lion is the va-hana of Devi!

When Swami Brahmananda [ Rakhal Maharaj] the spiritual son and direct disciple of Sri Ramakrishna and the first President of the RK Math and Mission visited Tirupati around 1911/12, he had a mystic experience there. He felt the presence of Devi there. He asked the priests there about the Deity. And the priests confirmed that it had been a De-vi temple. This is clearly stated in the book ‘Swami Brahmananda As We Knew Him’, published by RK Math, Chennai.

So there is enough mystery surrounding this temple. Wish someone will unravel it with-out bigotry and prejudice.

நாமக்கல் மலைமீது பெரிய நாமம் இருந்தது உண்மை. நான் 60களில் சேலத்திலிருந்து திருச்சி செல்லும் போது அதைப் பார்த்திருக்கிறேன்.

நந்தி உருவம் போல் வேறு பல தெய்வ உருவங்களும் பிற இடங்களிலும் இருக்கலாம். இத்தகைய ஆஞ்சனேயர் உருவம் ஒன்றை நான் அறிவேன். 60களில் சேலம்-பங்களூர் ரயில் பாதை (மீட்டர் கேஜ்) புதிதாக அமைக்கப்பட்டு வந்தது. அதில் தர்மபுரியிலிருந்து சுமார் 12 மைல் தொலைவில் முத்தம்பட்டி என்ற இடத்தில் ரயில் தண்டவாளம் உயரத்தில் இருக்கும். இருபக்கமும் உயர்ந்த குன்று/மலை. கன்ட்ராக்டர் தினமும் அங்கு ஜல்லிக்கல்லைக் கொட்டி தளத்தை உயரச்செய்வார்;மறுநாள் காலையில் அது கலைந்திருக்கும்! இப்படி பலமுறை நடந்தபின் அங்கு வேலை செய்பவர்களுக்கு ஏதோ பயம் தோன்றியது. அப்போது ரயில் தடத்தின் இருபுறமும் வளர்ந்திருந்த செடிகொடி புதர்களை நீக்கி மலையைத் தேடிப்பார்த்தார்கள். ஒருபுறம் மலையில் ஒரு ஆஞ்சனேயர் உருவம் செதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே கன்ட்ராக்டர் தன் செலவில் அதற்குமுன் ஒரு மேடை அமைத்து, கோபுரம்போல் ஏதோ சிறிதாகக் கட்டுவதாகவும் , பூஜைக்கு ஏற்பாடு செய்வதாகவும், ஆஞ்சனேயர்தான் தடங்கல் இல்லாமல் ரயில் பாதை சரியாக அமைய அருள்புரியவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதன்பிறகு வேலைகள் துரிதமாக நடந்தன. கன்ட்ராக்டரும் தன் வேண்டுகோள்படி ஆஞ்சனேயர் திருமுன் மேடை அமைத்து, கோபுரம் போல் சிறிய அமைப்பையும் மலையையொட்டியே எழுப்பி, 1967ல் பெரிய விழாவாக பூஜை செய்தார். இந்த உருவம் எப்போது யார் செதுக்கியது என்று தெரியவில்லை. இது வியாசராயர் நிறுவிய 732 விக்ரஹங்கள் போல் இல்லை. சேலம்-பெங்களூர் புதிய இருப்புப்பாதையில் 1968 ஜனவரி பொங்கலன்று ரயில் போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு ஒவ்வொரு வருடமும் தை அமாவாசையன்று அந்த ஆஞ்சனேயருக்கு விழா எடுத்தார்கள். அப்போது முத்தம்பட்டிக்குச் செல்ல யாரும் டிக்கட் வாங்கவேண்டியதில்லை! முத்தம்பட்டி ஸ்டேஷன் சிறிது தள்ளி இருந்தாலும் பாசஞ்சர் ரயிலை கோவிலுக்கு நேரெதிரிலேயே நிறுத்துவார்கள். எக்ஸ்பிரஸ் வண்டி அங்கு வரும்போதெல்லாம் இஞ்சினில் விசில் அடித்து தங்கள் மரியாதையைத் தெரிவிப்பார்கள். இப்படிப் பல வருஷங்கள் நடந்தன. தற்போது நிலை தெரியவில்லை!

****

திருப்பதி கோவில் அறிவிப்பு

திருமலையில் பிறந்தார் அனுமன்!

’திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள, சேஷாசல மலைத்தொடரில் உள்ள அஞ்சனாத்ரி என்ற மலை தான், அனுமனின் பிறப்பிடம்’ என, திருப்பதி தேவஸ்தானம் அதிகாரப்பூர்வமான ஆதாரங்களுடன் அறிவித்தது.

ராம பக்தரான அனுமன் பிறந்த இடம் குறித்து, புராணங்களிலும், இதிகாசங்களிலும் பல்வேறு குறிப்புகள் உள்ளன. வெங்கடாசல மகாத்மியம் உள்ளிட்ட சில புராணங்களில் அனுமன் பிறந்த இடம், திருமலையில் அமைந்துள்ள அஞ்சனாத்ரி மலை என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வு செய்ய, தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் முரளி தர சர்மா தலைமையில், பல்வேறு துறை சார்ந்த வல்லுனர்கள் அடங்கிய குழுவை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சமீபத்தில் நியமித்தது. இக்குழுவினர், நான்கு மாதங்களாக ஆய்வு நடத்தி, தங்கள் அறிக்கையை நேற்று வெளியிட்டனர். அதில், ‘திருமலை திருப்பதி திருக்கோவில் அமைந்துள்ள சோஷாசல மலைத் தொடரில் ஒன்றான, அஞ்சனாத்ரி மலையில் தான், அனுமன் பிறந்தார்’ என, குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான விளக்க உரை மற்றும் ஆதாரங்கள் அடங்கிய, 20 பக்க கையேடும் வெளியிடப்பட்டது.

இந்தப் பணிக்காக ஆய்வு செய்யப்பட்ட, 12 புராணங்களிலும் அனுமன் திருமலையில் பிறந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், 12 மற்றும் 13ம் நுாற்றாண்டுகளில் எழுதப்பட்ட பல புராணங்களில் அஞ்சனாத்ரி பற்றிய குறிப்புகள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

****

QUIZ திருப்பதி பத்து QUIZ (Post No.12,291)

Post No. 12,291

Date uploaded in London –   18 July , 2023                  

1.திருப்பதியில் இருப்பது முருகனே என்று பாடியவர் யார் ?

****

2.திருப்பதியில் எத்தனை கல்வெட்டுகள்  இருக்கின்றன ?

****

3.திருமலையில் உள்ள புதராகவோ பறவையாகவோ , சுனையாகவோ பிறந்தாலும் போதும் என்று பாடியவர் யார்?

****

4.திருமலையில் உள்ள பெருமாள் மீது அதிக துதிகளை இயற்றியவர் யார்?

 ****

5.வெங்கடேச சுப்ரபாதத்தை  இயற்றியவர் யார் ? ஸுப்ரபாதத்தின் முதல் வரி எங்கிருந்து எடுக்கப்பட்டது ?

****

6.திருப்பதி மலையை தமிழ் பாட்டுக்கள் எப்படிக் குறிப்பிடுகின்றன?

****

7.திருப்பதியில் உள்ள அருவியின் பெயர் என்ன?

XXXXXX

8.ஏழு மலையான் என்று ஏன் பெருமாளை அழைக்கின்றனர்?

****

9.பெருமாள் எப்படி  உலகிலேயே பணக்கார கடவுள் ஆனார்?

****

10.வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் பக்தர்கள் உடனே வழிபடும்  திருமலைக்குக் கீழேயுள்ள கோவில் எது ?

****

விடைகள்

1.முருகனே என்று பாடியவர் அருணகிரி நாதர் (திருப்புகழில் ); சிவனே என்று பாடியவர் பேயாழ்வார்.

திருப்பதி (திருவேங்கடம்) பற்றி அருணகிரி நாதர் பாடியது இதுதான்:

வேந்த குமார குகசேந்த மயூர வட

வேங்கட மாமலையில் உறைவோனே

வேண்டிய போது அடியர் வேண்டிய போகம் அது

வேண்டவெறாது உதவு பெருமாளே

திருவேங்கடத்தில் பாடிய இன்னும் ஒரு திருப்புகழில்

ராவணார் முடி பொடியாகச்

சிலை வாங்கிய நாரணார் மரு

மகனாம் குகனே பொழில் சூழ்தரு

திருவேங்கடமாமலை மேவிய பெருமாளே

என்று பாடுகிறார்.

கச்சியப்ப சிவாசாரியார் திருவேங்கடத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஒரு வரலாற்றைச் சொல்கிறார்………. … தாமரைமலர் போன்ற வடிவுடைய சிவந்த திருக்கத்தில் வேலாயுதத்தை ஏந்திய குமரக் கடவுளே குகையின் வழியாக வந்து வெளிவந்த மலையாகிய சிகரத்தையுடைய திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள பெருமாளே…என்கிறார்

****

2.திருமலை-திருமலை கோவிலிலும்  அதன் கீழ் வரும் பகுதியிலும் 1150-க்கு மேலான கல்வெட்டுகள் உள்ளன. உலகிலேயே அதிக கல்வெட்டுகள் உள்ள  வழி பாட்டுத் தலம் இதுதான். பல்லவர்  காலம் முதல் 800 ஆண்டு வரலாற்றைக்  கல்வெட்டுகள் மூலம் அறியலாம் .

****

3. குலசேகர ஆழ்வார் 

****

4.திருப்பதி பெருமாள் குறித்து அதிகமான பாடல்களை இயற்றியவர் அன்னமாச்சார்யா

****

5.பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியாரால்  ஸம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்டது.

இதன் முதல் வரி கெளசல்யா ஸுப்ரஜா சந்த்யா பிரவர்த்ததே — என்பது வால்மீகி ராமாயணத்தில் உள்ள வரி .

कौसल्यासुप्रजा राम पूर्वा संध्या प्रवर्तते ।
उत्तिष्ठ नरशार्दूल कर्त्तव्यं दैवमाह्निकम् ॥- Valmiki Ramayana

kausalyāsuprajā rāma pūrvā sandhyā pravartate ।
uttiṣṭha naraśārdūla karttavyaṃ daivamāhnikam ॥

Valmiki Ramayna Translation, 1.23.2

O Rāma, the noble son of Kausalyā! The Sandhyā of the East commences. O! best of men (Purushottama)! Wake up, the daily duties have to be performed.

The Veṅkaṭeśasuprabhātam begins with this very verse.

****

6.வடவேங்கடம் முதல் தென்குமரி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சொல்கிறார்

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து—(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:1-3)

****

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு

(சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2)

****

பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்

மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்…..(அகநானூறு, 211:7-மாமூ லனார் )

XXXX

7.ஆகாய கங்கா.

திருமலையில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் ஒன்று ஆகாச கங்கை. இங்கிருந்து தான் தினமும் திருமலை ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்ய நீர் கொண்டுவரப்படுகிறது. இந்த நீரில் பக்தர்களும் பொது மக்களும் குளித்து மகிழ அனுமதி உண்டு. இந்த இடம் ஸ்ரீ வாரி திருக்கோயிலில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

****

8.திருமலை வெங்கடாசலபதி, ஏழு குன்றுகள் இடையே காட்சி தருகிறார். அவையாவன:

Vrushabhadri – விருஷபாத்ரி

Anjanadri – அஞ்சனாத்ரி (ஹனுமான் பிறந்த இடம்)

Neeladri – நீலாத்ரி

Garudadri or Garudachalam – கருடாத்ரி

Seshadri or Seshachalam – சேஷாத்ரி

Naraynadri–நாரதாத்ரி அல்லது நாராயணாத்ரி

Venkatadri – வேங்கடாத்ரி

****

9.திருப்பதி பாலாஜி தன் திருமணத்துக்காக குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், கடனை  அடைப்பதற்காக பக்தர்களிடம் காணிக்கை வாங்குகிறார் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள். 600 ஆண்டுகளுக்கு முன்னர் கீர்த்தனை பாடிய புரந்தரதாசரோ நீ சரியான செட்டிப்பயல் என்று பெருமாளை கிண்டல் செய்கிறார்..

****

10.திருப்பதியிலி ருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள திருச்சானூர் என்றும் அலமேல் மங்காபுரம் என்றும் அழைக்கப்படும் புனிதத் தலத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோவில் உள்ளது.

****

தொல்காப்பியர் காலத்தில் திருப்பதி

தொல்காப்பியத்துக்கு பாயிரம் (முன்னுரை) எழுதிய பனம்பாரனார் பாடுகிறார்:-

வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ் கூறு நல்லுலகத்து

வழக்கும் செய்யுளும் ஆ இரு முதலின்

எழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்

செந்தமிழ் இயற்கைச் சிவணிய நிலத்தொடு

முந்துநூல் கண்டு

…………………

பொருள்:-

வடக்கே வேங்கட மலையும் தெற்கே குமரி முனையும் ஆகிய இந்நிலத்திற்கு இடைப்பட்ட செந்தமிழ் பேசும் தமிழகத்தில் உலக வழக்கு, செய்யுள் வழக்கு என்ற இரு வழக்குகளில் உள்ள எழுத்து, சொற்கள், பொருள்களை நன்கு ஆராய்ந்து (தொல்காப்பியர் நூல் இயற்றினார்).

புராணங்களில் வரும் 56 தேசங்களில் திராவிட தேசத்துக்கும் தெற்கில்தான் பாண்டிய சோழ தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆக திராவிட என்ற சொல்லையும் தமிழ்நாட்டுக்குப் பயன்படுத்த வில்லை.

கம்பன் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்;

வடசொற்கும் தென்சொற்கும் வரம்பு ஆகி

நான் மறையும் மற்றை நூலும்

இடைசொற்ற பொருட்கு எல்லாம் எல்லை ஆய்

நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறு

புடை சுற்றும் துணை இன்றிப் புகழ் பொதிந்த

மெய்யேபோல் பூத்துநின்ற

அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய

வேங்கடத்தில் சென்று அடைதீர் மாதோ

பொருள்:-

வடமொழிக்கும் தென்மொழியாகிய தமிழ் மொழிக்கும் எல்லையாகியும், நான்கு வேதங்களுக்கும், ஆறு அங்கங்களுக்கும் மற்றுமுள்ள நூல்களுக்கும் முடிவான பொருளைக் காட்டுவதாகவும் நல்லறங்களின் மேன்மையாகவும்,  ஈடு இணை இல்லாததும் புகழ்மிக்கதும், எல்லோரும் வணங்கக்கூடியதுமான, குளிர்ந்த மலைப்பகுதியான வேங்கட மலையில் போய்த் தேடுங்கள்.–கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம்- கம்ப ராமாயணம்

சீதையைத் தேடச் செல்லும் வானரப் படைகளுக்கு கட்டளையிட்டபோது இச்செய்யுள் கூற்று வருகிறது

–SUBHAM–

TAGS- ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள், Part 32, திருப்பதி கோவில் , அதிசயங்கள், முருகன் கோவில், அருணகிரிநாதர் , அதிகமான கல்வெட்டுகள் , லட்டு, பக்தர் எண்ணிக்கை , அனுமன் பிறந்த இடம், தொல்காப்பியத்தில் , திருமலை

Leave a comment

Leave a comment