
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.677
Date uploaded in London – —17 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாலைமலர் 21-8-4 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
ஒலிம்பிக் தங்க மெடல் நாயகி லரிஸா லடிநினா -2
ச. நாகராஜன்
ஒலிம்பிக் போட்டிகளில் லரிஸாவின் வெற்றி
மிகத் திறனுடன் ஜிம்னாஸ்டிக்ஸில் தேர்ச்சி பெற்ற லரிஸா 1956இல் மெல்போர்ன் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டார். 21 வயதான அவர் ஹங்கேரியைச் சேர்ந்த 35 வயதான அக்னஸ் கேலடியுடன் மோத வேண்டியதாக இருந்தது.
மிகக் கடுமையான போட்டியில் தனது திறமையைக் காண்பித்த அவர் 4 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்று தன் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். ஃப்ளோர் ஜிம்னாஸ்டிக்ஸில் கேலடியுடனான போட்டி வெற்றி தோல்வி இன்றி ‘டை’யில் முடிந்தது.
அடுத்து 1960-ல் ஒலிம்பிக் போட்டி ரோமில் நடந்தது. 3 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அவர் சோவியத் யூனியனைப் பெருமைப் பட வைத்தார்.
அடுத்து 1964ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தது அதில் 2 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளிப் பதக்கங்களையும் வென்றார்.
இந்த மூன்று போட்டிகளிலும் அவர் நான்கு வெங்கலப் பதக்கங்களையும் வென்றார்.
ஆக 1956 மெல்போர்ன், 1960 ரோம், 1964 டோக்கியோ ஆகிய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் (‘டை’யில் முடிந்த தங்கப் பதக்கத்தையும் சேர்த்து அவர் 18 பதக்கங்களை வென்றார்.
\நீண்ட நெடுங்காலம் அதாவது 1964லிருந்து 2012ம் ஆண்டு முடிய இவரே அதிக பதக்கங்களைப் பெற்ற ஒரே பெண்மணி என்ற பெருமை இவருக்கு இருந்தது.
2012-ல் தான் அமெரிக்கரான நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 28 பதக்கங்களை வென்று இவரது சாதனையை முறியடித்தார். என்றாலும் கூட மங்கையரில் அதிக மெடல்களைப் பெற்ற பெண்மணி என்ற இவரது சாதனையை முறியடிக்க இதுவரை பெண்மணிகளில் ஒருவரும் இல்லை. அமெரிக்கப் பெண்மணியான ஷெனான் மில்லர் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் ஏழு மெடல்களை வென்றுள்ளார்.
மைக்கேல் பெல்ப்ஸ் இவரது சாதனையை முறியடித்த போது, “ஒரு பெண்மணி நெடுங்காலத்திற்கு முன்னர் செய்த சாதனையை ஒரு ஆண் முறியடிக்க இப்போதாவது காலம் வந்ததே” என்று அவர் கூறியதை உலகமே ரசித்தது.
அவர் 14 உலக சாம்பியன்ஷிப் மெடல்களையும் 14 யூரோபியன் சாம்பியன்ஷிப் மெடல்களையும் வென்றதால் உலகின் அதிசயமான ஜிம்னாஸ்டிக் பெண்மணி என்ற புகழையும் பெற்றார்.
தான் பெற்ற முதல் தங்கப் பதக்கத்தை தனது பயிற்சியாளரான (கோச்)
சோட்னிசென்கோவிற்குத் தந்தார் லரிஸா. இறக்கும் வரை அவர் தன்னிடம் அதை வைத்திருந்தார். அவரது இறப்பிற்குப் பின் அவரது மனைவி அந்தத் தங்கப் பதக்கத்தை லரிஸாவுக்குத் திருப்பித் தந்தார்.
அனைவரிடமும் அவர் காட்டும் மரியாதைக்கு இது ஒரு சான்றாகும்.
அன்றைய நிலை
பழைய காலத்தைப் பற்றி அவர் கூறுவது இது:
“1964ல் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட எங்களுக்கு ராணுவ கூடாரங்களில் தான் தங்க இடம் தந்தனர்; பொதுக் கழிப்பறைகளையே தான் நாங்கள் உபயோகித்தோம். ஆனால் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் குழுவினரோ சொகுசு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
சோவியத் யூனியன் சார்பில் போட்டியிட்ட எங்களுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஜெயித்தே ஆக வேண்டும் என்ற அழுத்தம் நிறைய இருந்தது. என்றாலும் அதிகாரிகள் எங்களை கண்ணியத்துடன் நடத்தினர். எங்களுக்கு தேசத்தின் கௌரவத்தை உயர்த்த வேண்டும் என்ற அடங்காத ஆசையும் இருந்தது. எங்கள் நாட்டின் கொடி ஏற்றப்படும் போதும் தேசீய கீதம் இசைக்கப்படும்போதும் நாங்கள் ஓவென்று ஆர்ப்பரிப்போம்.” என்கிறார் அவர்.
பயிற்சியாளர்
1966ம் ஆண்டு அவர் போட்டிகளில் ஈடுபடுவதிலிருந்து ஓய்வு பெற்றார்.
சோவியத் யூனியன் ஜிம்னாஸ்டிக்ஸ் குழுவிற்கு பயிற்சியாளராக ஆனார்.
இவரது நேரடிப் பயிற்சியால் சோவியத் யூனியன் விளையாட்டு வீராங்கனைகள் பல பதக்கங்களைப் பெற்றனர்.
தினமும் ஏராளமான கடிதங்கள் ரஷியாவின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவருக்கு வரும். அனைத்தையும் இரவு நேரத்தில் ஒவ்வோன்றாகப் படிப்பார். “எனக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகம். என்ன செய்வது?, இப்படி ஒரு கடிதம்; எனக்கு திறமையே இல்லையோ என்று ஒரு கடிதம் – அனைத்திற்கும் ஊக்கமூட்டும் பதிலை அனுபி உற்சாகத்தை அளிப்பது இவரது பழக்கம்.
குடும்பம்
லரிஸா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் டாட்யானா இவாநோவா லாடிநினா நாட்டுப்புற நடனத்தில் நிபுணர். அவருக்கு ஒரு மகனும் உண்டு.
மாஸ்கோவில் இப்போது வாழ்ந்து வரும் அவர் ரஷிய- உக்ரேன் போரினால் ரஷிய விளையாட்டு வீரர்கள் நடுநிலைமைக் கொடியைப் பிடித்துக் கொண்டு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டதை தேசப்பற்று இல்லாத செய்கை என்று விமரிசித்தார்.
சமூக சேவை
கியவ் நகரில் சமூக சேவைக் குழுவைச் சேர்ந்த வயதான ஒருவர் அவரைப் பார்த்து உங்களை அடிக்கடி பார்த்த மாதிரி இருக்கிறது, எனக்கு இந்த சமூக சேவையில் உதவி புரிய வர முடியுமா என்றார்.
புன்னகை புரிந்த லாரிஸா, “ஓகே” என்றார்.
தினமும் அவரிடம் உதவி நாடி ஏராளமானோர் வருவர். உடல் பிரச்சினை ஒருவருக்கு இருக்கும், இன்னொரு வயதானவருக்கு தரை அடுக்கில் இல்லாமல் நான்காம் மாடியில் குடியிருப்பு வீடு ஒதுக்கப்பட்ட குறை இருக்கும் – ஒவ்வொன்றாக அவர் தீர்த்து வைப்பார்.
ஒரு நாளைக்கு ஒரு பெண்மணி வேகமாக அவரிடம் வந்து ஒரு பேப்பரை ஆட்டி ஆட்டிப் பேசினார். “இடம் இல்லையாம். இடமே இல்லையாம்” என்று அவர் கோபத்துடன் கத்தினார். லாரிஸா பொறுமையுடன் உங்கள் வீட்டிற்குப் போகலாமா? என்றார்.
அவர் வீட்டிற்குச் சென்று டீயை அருந்தியவாறே அவரது குறையைக் கேட்டார். தனிப் பெண்மணியாக குழந்தையை வளர்க்கும் சிங்கிள் மதரான அவரது குழந்தைக்கு நர்ஸரியில் இடம் இல்லை என்று சொல்லி விட்டார்கள். அவர் என்ன செய்வார், பாவம்! உடனே நர்ஸரி மானேஜருடன் லரிஸா பேசினார்: உங்களுக்குக் குழந்தை இருக்கிறதல்லவா என்ற அவரது மென்மையான குரலைக் கேட்ட மானேஜர் உடனடியாக அந்தக் குழந்தைக்கு நர்ஸரியில் இடம் கொடுத்தார். இப்படி நாளைக்கு விதம் விதமாக ஒரு பிரச்சனை வரும்.
89 வயதான இவர் இன்னும் இந்த சேவையில் ஈடுபடுவது அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.
உற்சாகமூட்டும் பெண்மணி
அனைத்துப் பெண்மணிகளையும் உற்சாகத்துடன் விளையாட்டுக்களில் பங்கேற்குமாறு அறைகூவல் விடும் லரிஸா தன்னைப் பற்றிக் கூறுவது இது:
“ஒரு சாதனையை 48 ஆண்டுகள் முறியடிக்காமல் தக்க வைத்திருப்பது போதுமான காலம் தானே!”
***