Post No. 13.681
Date uploaded in London – —18 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாலைமலர் 21-8-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.
உலகெங்கும் ஒலிக்கும் இன்னிசைக் குரல்!
பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 1
எப்போதும் ஒலிக்கும் ஒரு குரல்!
உலகின் ஏதோ ஒரு பகுதியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வருடத்திற்கு 365 நாட்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு இந்தியக் குரல் யாருடையது தெரியுமா? நைட்டிங்கேல் என்று பாராட்டப்படும் பாரத் ரத்னா லதா மங்கேஷ்கரின் குரல் தான் அது!
இவரது வாழ்க்கை கடும் உழைப்பால் உயர்ந்து பாரத் ரத்னா பட்டத்தைப் பெற்ற ஒருவரின் வாழ்க்கை!
பிறப்பும் இளமையும்
லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ம் தேதியன்று இந்தூரில் ஒரு அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் தீனநாத் மங்கேஷ்கர் மராத்திய மொழியிலும் கொங்கணி மொழியிலும் சிறந்த பாடகர். ஒரு நாடக நடிகரும் கூட. கோவாவில் உள்ள மங்கேஷ் என்ற தனது புராதன கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு மங்கேஷ்கர் என்பதைத் தன் பெயரில் அவர் வைத்துக் கொண்டார் தாயார் செவந்தி என்ற சுதாமணி குஜராத்தைச் சேர்ந்தவர். குஜராத்திய நாட்டுப்புறப் பாடல்களில் வல்லவர்.
லதாவிற்கு சூட்டப்பட்ட பெயர் ஹேமா. ஆனால் பின்னால் அவரது தந்தை தனது நாடகத்தில் வரும் பாத்திரமான லதிகா என்பதை ஒட்டி அவருக்கு லதா என்று பெயரை மாற்றினார்.
குடும்பத்தில் லதாவே மூத்த குழந்தை. அவருக்கு மூன்று தங்கைகளும் ஒரு தம்பியும் உண்டு.
வறுமையில் வாட்டம்
தந்தையாரிடமிருந்து இசையைக் கற்ற லதா ஐந்தாம் வயதிலிருந்தே தந்தையாருடன் கூட இருந்து அருமையாகப் பாட ஆரம்பித்தார். லதாவிற்கு 13 வயதே ஆகும் போது அவர் தந்தை மரணமடைந்தார். குடும்பம் வறுமையில் வாட ஆரம்பித்தது. லதாவே குடும்பப் பொறுப்பைச் சுமக்க வேண்டியதாயிற்று.
1942-ல் ஒரு மராத்தியத் திரைப்படத்தில் (கிதி ஹஸால் என்ற படம்) அவர் ஒரு பாடலைப் பாடினார். ஆனால் இறுதியில் அது ‘வெட்டப்பட்டது; படத்தில் இடம் பெறவில்லை.
தொடர்ந்து ஆறு வருடங்கள் கடும் போராட்ட வருடங்களாக அமைந்தன. ஏராளமான எதிர்மறை விமரிசனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஆனால் தன் திறமையிலும் உழைப்பிலும் நம்பிக்கை கொண்டிருந்த லதா விடவில்லை; வெற்றியே பெற ஆரம்பித்தார்.
1945ல் லதா மும்பைக்குக் குடி பெயர்ந்தார்.
ஹிந்தி திரையுலகத்தில் நுழைவு
லதாவிற்கு இசை அமைப்பாளர் குலாம் ஹைதர், ‘மஜ்பூர்’ (1948) என்ற படத்தில் ஒரு வாய்ப்பை அளித்தார். ஹிந்தி திரையுலகில் நுழையும் வாய்ப்பு கிடைக்கவே கெம்சந்த் ப்ரகாஷ் இசை அமைத்த மஹால் (1949) உள்ளிட்ட படங்களில் அவர் பாடிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. லதாவின் குரல் மிகவும் சன்னமாக இருக்கிறது என்ற ஒரு இசையமைப்பாளரின் ஆக்ஷேபணைக்கு குலாம் ஹைதர் கூறிய பதில்: “ஒரு நாள் லதாவின் காலில் விழுந்து என் படத்தில் பாடுங்கள் என்று எல்லோரும் சொல்லப் போகிறார்கள்’ என்பதே. பின்னால் தனது 84வது பிறந்த நாள் விழாவில்
லதா கூறியது: “உண்மையில் என்னை ஆதரித்து உருவாக்கியவர் குலாம் ஹைதரே”!
திலிப்குமாரின் சந்தேகம்
ஹைதர் எடுத்த படத்தில் லதாவின் இசையை இசையமைப்பாளர் நௌஷத் கேட்டார். உடனே தனது அடுத்த படத்தில் அவரைப் பாட வைக்கலாம் என்று யோசனை கூறினார். அப்போது ஹிந்தி திரையுலகில் சூப்பர்ஸ்டாராக இருந்த திலிப்குமார் இதற்கு ஆக்ஷேபணை தெரிவித்தார். ஒரு மராத்தியப் பெண்ணுக்கு உருது உச்சரிப்பு எப்படி சரியாக வரும் என்பதே அவரது கேள்வி. இந்த கடுமையான விமரினத்தைக் கேட்ட லதா மனம் தளரவில்லை. கடும் உழைப்பை மேற்கொண்டார். உருது உச்சரிப்பை தக்க ஒருவரிடம் கேட்டு முறையாகப் பயின்றார்.
1949-ல் அந்தாஸ் படம் வெளியானது. அதில் ஹிட்டான பாடலைப் பாடியவர் லதா தான்! அந்தப் பாடலில் உருது மொழி உச்சரிப்பைக் கேட்ட திலிப்குமார் அசந்து போனார். பாடியவர் யார் என்றால் அவர் விமரிசித்த அதே லதா தான்! உடனே தான் கூறிய வார்த்தைகளைத் திரும்பப் பெறுவதாகக் கூறினார் அவர்.
அந்த வருடம் வெளியான அவர் பாடல் இடம் பெற்ற ஐந்து படங்களும் ஹிந்தித் திரையுலகில் வெற்றிக் கொடி நாட்டின. திரைக்கதையுடன் திரைப்படப் பாடலும் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. மஹால் படத்தில் வந்த ஆயகா ஆனேவாலா என்ற பாடல் எங்கும் ஒலித்தது!
பாடகர்களுக்கு லதாவின் பேருதவி
அந்தக் காலத்தில் கிராமபோன் இசைத்தட்டில் பாடியவர் பெயர் இடம் பெறாது. ஒன்று திரைப்படத்தில் அந்தப் பாடலைப் பாடிய கதாபாத்திரத்தின் பெயர் இடம் பெறும் அல்லது அதைப் பாடிய நடிகையின் பெயர் இடம் பெறும்.
இது லதாவிற்குப் பெரும் வருத்தத்தை அளித்தது. பாடியவர் பெயரைப் போடுமாறு அவர் வேண்டினார்.
ஆனால் தயாரிப்பாளர்கள் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
ஆனால் மஹால் படத்தில் இடம் பெற்ற பாடலைக் கேட்ட ரசிகர்கள் சும்மா இருக்கவில்லை.
ஆல் இந்தியா ரேடியோவில் ‘ஆயகா’ பாடலைக் கேட்ட ரசிகர்கள் அனைவரும் இதைப் பாடியது யார் என்று திரும்பத் திரும்பக் கேட்க வானொலி நிலையம் படத்தின் தயாரிப்பாளரை நாடி லதாவின் பெயரைக் கேட்டு ஒலிபரப்ப ஆரம்பித்தது. காமினி என்ற கதாபாத்திரத்தின் பெயரைக் கொண்டிருந்த இசைத்தட்டுகள் இனி அப்படி பெயரைப் போடாமல் பாடியவரின் பெயரைப் போட ஆரம்பித்தன.
லதாவிற்கு கிடைத்த பெரும் வெற்றி இது. பாடியவருக்கு உரிய மதிப்பைக் கொடுத்து பாடகர்களின் பெயரை இசைத்தட்டுகளில் போட வைத்தவர் அவரே!
**