Post No. 13.685
Date uploaded in London – —19 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகெங்கும் ஒலிக்கும் இன்னிசைக் குரல்!
பாரத் ரத்னா லதா மங்கேஷ்கர்! – 2
இசையே தெய்வம்
லதா மங்கேஷ்கருக்கு இசை ஒரு தொழில் அல்ல; அதுவே அவருக்கு தெய்வம்! இசையை கடவுளின் குரல் என்றார் அவர். அவரது அற்புதமான குரலைக் கேட்ட ரசிகர்கள் அவரது பாடல் இடம் பெற்ற படங்களை வெற்றிப் படங்களாக்கினர்.
ஒரு நாளைக்கு பத்துப் பாடல்களை ரிகார்ட் செய்யும் அளவுக்கு அவர் உயர்ந்தார்; அதற்கான கடும் உழைப்பையும் பயிற்சியையும் அவர் விருப்பத்துடன் மேற்கொண்டார்.
பஜனை, கஜல்கள் ஆகியவற்றுடன் சிக்கலான இசை அமைப்புகள் கொண்ட பாடல்களை அவர் அனாயாசமாகப் பாடினார். ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை அவர் தன் குரல்வளத்தால் மெருகேற்றினார்.
தொடர்ந்து பல பிலிம் ஃபேர் விருதுகளைப் பெற்றார்.
மராத்தி, ஹிந்தி மொழிகளில் மட்டுமல்லாது கன்னடம், தமிழ், தெலுங்கு, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி, ஆங்கிலம், ரஷிய மொழி உள்ளிட்ட இருபது மொழிகளில் அவர் பாடியுள்ளார்..
ஆகப் பெரும் இசையமைப்பாளர்களான எஸ்.டி.பர்மன், சலில் சௌத்ரி, ஆர்.டி.பர்மன், சங்கர்-ஜெய்கிஷன், சி. ராமச்சந்திரா உள்ளிட்ட அனைத்து இசை அமைப்பாளர்களும் அவரை விரும்பி வரவேற்றுப் பாட வைத்தனர். அதே போல சிறந்த பாடலாசிரியர்களான குல்ஜர், ஷகீல் பதாயுனி, ஆனந்த் பக்ஷி உள்ளிட்டோரும் அவர் திறமையை உணர்ந்து பாடல் வரிகளை அமைத்துப் புகழ் பெற்றனர்.
புகழ் பெற்ற பாடகர்களான மன்னா டே, முகேஷ், ஹேமந்த் குமார், முகம்மத் ரஃபி, கிஷோர் குமார் உள்ளிட்டோருடன் அவர் பாடிய பாடல்கள் காலத்தை வென்ற பாடல்களாக ஆகி விட்டன!
லதாவே பாடல்களை இயற்றியுள்ளார்; இசைஅமைப்பாளராகவும் திகழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
குடும்பம்
லதா திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். ஆனால் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது அளவிலாப் பாசம் கொண்டிருந்தார்.
ராஜ்ய சபா உறுப்பினர்
1999-ல் அவர் ராஜ்ய சபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கென அவர் சம்பளத்தையோ டெல்லியில் தரப்படும் வீட்டையோ பெறவில்லை.
பாரத் ரத்னா
ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் அவர் பெற்றார். 1969-ல் பத்ம பூஷன் விருதையும் 1999-ல் பத்ம விபூஷன் விருதையும் அவர் பெற்றார்.
2001-ம் ஆண்டு மிக உயரிய விருதான பாரத் ரத்னா விருதை அவருக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்தது.
ஏழைகளுக்கு உதவி
2001-ல் அவர் புனாவில் மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையை நிறுவி ஏழைகளுக்கு உதவி செய்ய ஆரம்பித்தார். காஷ்மீரில் 2005ல் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டொருக்கு அவர் நிதி உதவி அளித்தார்.
எத்தனை பாடல்களை அவர் பாடினார்?
லதா எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் என்பது பற்றிய தொடர் விவாதம் கின்னஸ் ரிகார்ட் 25000 பாடல்களை அவர் பாடியுள்ளார் என்று தெரிவித்ததை ஒட்டி எழ ஆரம்பித்தது.
லதாவோ தான் பாடிய பாடல்களுக்கான எண்ணிக்கை குறிப்பைத் தான் குறித்து வைத்துக் கொள்ளவில்லை என்று குறிப்பிட்டார்.
சிலர் 20000 பாடல்கள் என்று சொல்ல இன்னும் சிலரோ 30000 பாடல்கள் என்று சொல்ல இந்த விவாதம் தொடர் விவாதமாக ஆகி விட்டது!
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்; ஏராளமான நாடுகளில் அவர் குரல் இசைத்துக் கொண்டே இருக்கிறது.
அவரது பாடல்களைக் கேட்டு தங்களின் அபிப்ராயத்தைத் தெரிவிப்போர் மிகுந்த மன நெகிழ்வுடன், “இது சிறு வயதில் நான் கேட்ட பாடல்; இன்னும் இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்”, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்து விட்ட எனது தாயாரின் நினைவு வருகிறது” “இந்தப் பாடல் என் தந்தையாருக்குப் பிடித்தமானது; இதைப் கேட்காமல் அவர் உறங்க மாட்டார்”, ‘எனக்கு பாடப்படும் பாடலின் மொழி தெரியாது, ஆனால் இந்த இனிய குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்’ என்பன போன்ற ஆயிரக்கணக்கான விமரிசனங்களைப் பதிவிடுகின்றனர் – இன்றும் கூட! (யூ டியூபில் காணலாம்)
பல்லாயிரக் கணக்கான ரசிகர்களின் வாழ்வில் நல்ல விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய இசை ராணி அவர் என்பதில் ஐயமே இல்லை!
மறைவு
2022-ல் ஜனவரி மாதம் 8-ம் தேதி அவருக்கு கோவிட் -19 நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகத் தெரிய வந்தது. வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு அவர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
2022 பிப்ரவரி 6-ம் தேதி அவர் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 92.
பல நாடுகளின் பிரதம மந்திரிகள்,மற்றும் தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர்.
மும்பையில் அவரது இறுதிச் சடங்கை அவரது சகோதரர் செய்ய, அரசு மரியாதையுடன் உடல். எரியூட்டப்பட்டது. அவரது அஸ்தி கோதாவரி நதியில் கரைக்கப்பட்டது.
அனுபவ மொழிகள்
தனது அனுபவத்தின் அடிப்படையில் அவர் கூறிய பொன்மொழிகள் பல:
அவற்றில் சிலவற்றைக் காணலாம்:
ஒவ்வொரு பாடலிலும் எனது ஒரு துளி உள்ளது. எனது உணர்வுகள், அனுபவங்கள், கனவுகள் ஆகியவற்றின் ஒரு சிறிய பகுதி உள்ளது.,
பாடுவது என்பது எனது தொழில் மட்டுமல்ல; அது எனது உயிர்; அது எனது வாழ்க்கை முறை!
இசைக்கு எல்லைகளே இல்லை; அது ஆன்மாவின் மொழி!
சூரியனுக்கு முன் அகல் விளக்கு பிடிப்பது போல!
ஹிந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும் பாடகரும் தயாரிப்பாளருமான கிஷோர் குமார் லதாவைப் பற்றி மிகச் சரியாக இப்படிக் கூறினார்:
“லதா மங்கேஷ்கரைப் புகழ்வது என்பது சூரியனுக்கு முன் அகல் விளக்கைக் காட்டுவதைப் போலத் தான்!”
இந்த அவரது கூற்று பாரத் ரத்னா லதா மங்கேஷ்கரைப் பற்றிய சரியான விளக்கம் தான், இல்லையா!
**