பாரதக் குடும்பத்தைப் போற்றும் மேலை உலகம்! (Post No.13,692)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.692

Date uploaded in London – 21 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பாரதக் குடும்பத்தைப் போற்றும் மேலை உலகம்! 

ச. நாகராஜன் 

“இந்தியாவில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகிறது. உளுத்துப் போன கூட்டுக் குடும்ப வாழ்வின் சுமையில் நசுங்கி இருக்கும் அவர்கள் அந்தக் கூட்டை உடைத்து வெளியே வர வேண்டும்” என்று பெண்ணியம்  பேசுவோருக்கு ஒரு அதிர்ச்சியை பிரிட்டனைச் சேர்ந்த நேச்சர் குரூப் ஆஃப் பப்ளிகேஷன் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கை முடிவு தருகிறது.

தனித்தனிக் குடும்பங்களாக மாறி வரும் சூழ்நிலை அதிகரிக்குமானால், அது இந்தியாவில் ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த் ஆய்வை மேற்கொண்டவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியாங்கோ லியூ.

அவர் கூறியதாவது:-

“கூட்டுக் குடும்ப வாழ்க்கையை விட்டுத் தனியே போனால் இயற்கை வளம் அதிகமாகச் சுரண்டப்படும். தேவைகள் அதிகப்படும். இதனால் பொருளாதாரமே பாதிக்கப்படும். உதாரணமாக ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஒரு குளிர்சாதனப் பெட்டி இன்று இருக்கும்போது தனியே செல்லும் குடும்பங்களுக்குத் தனித்தனியே இதன் தேவை ஏற்படும். இதைப் போலவே தண்ணீர், மின்சாரம் என்று அனைத்து விஷயங்களிலும் தேவை ஏற்படும். வீட்டில் அளவு விகிதாசாரம் 5.5 என்ற அளவிலிருந்து 4.8 என்ற ஆபத்தான அளவை எட்டி விடும்” என்கிறார்.

சென்ற நூற்றாண்டில் வங்காளத்தில் சென்ஸஸ் சூபரிண்டெண்டென்டாக இருந்த ஏ.ஈ.போர்ட்டர் மேலை நாடுகளைக் காப்பி அடித்து, இந்தியக் குடும்பங்கள் கூட்டுக் குடும்ப வாழ்வைச் சிதைக்கும் போக்கை ஆரம்பிப்பது கண்டு மன வருத்தம் அடைந்து, “ கூட்டுக் குடும்பமாக வாழ்வது ஹிந்து வாழ்க்கை முறையின் தனித்தன்மை! அதிலே வாழும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் சாகும் வரை பாதுகாப்பு உண்டு.” என்று கூறியதோடு கூட்டுக் குடும்பம் தியாகம், தன்னல மறுப்பு, தூய்மை ஆகியவற்றை ஊட்டுகிறது என்றார். இந்தக் கூட்டுக் குடும்பத்தின் அச்சாணி பெண்ணே என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

லக்னோவில் டாக்டர் பி.பி.சேதி என்னும் சைக்கியாட்ரிஸ்ட், “மன நலம் சிதைத்து இருப்போரின் தொகை, அவர் கூட்டுக் குடும்பத்தில் இருப்பவரா அல்லது தனித்து வாழ்பவரா என்பதைப் பொறுத்து இருக்கிறது” என்கிறார். தனிக் குடித்தனம் போகும் இளம் தம்பதியினரால் பொறுப்புகளைத் தாங்க முடியவில்லை என்றும், மனநிலை தடுமாறி அதிகம் பேர் பாதிக்கப்படுவதாகவும் அவர் ஆய்வில் கண்டறிந்துள்ளார். கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை என்ற புதிய தெராபியை உலகிற்கே இந்தியா அளிக்கிறது என்றும், இது மனநலம் சீராக இருக்க காலம் வென்ற உத்தி என்றும் அவர் உறுதிபடக் கூறுகிறார்.

பாரத வாழ்க்கை முறை சஹதர்மிணி (தர்மத்தை உடனிருந்து அனுசரிப்பவள்) என்றும், அர்த்த நாரி (ஆண் பாதி, பெண் பாதி என்ற சமநிலை) என்றும், கிரஹலக்ஷ்மி (வீட்டிற்கு ஒளி தருபவள்) என்றும் பெண்மையைப் போற்றுகிறது.

“ஆயிரம் இராமர்கள் உருவாகக் கூடும். ஆனால் ஒரு சீதை உருவாவது கஷ்டம்” என்று கூறிய ஸ்வாமி விவேகானந்தரின் கூற்றிலே ஆழ்ந்த பொருள் பதிந்துள்ளது. அது பாரதப் பெண்மையின் சிகரத்தைச் சுட்டிக் காட்டுவதோடு இருபத்தியோராம் நூற்றாண்டில் நவீன அறிவியல் சூழ்நிலையில், பெண்கள் எந்த லட்சியத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை தெளிவாக விளக்குகிறது. பெண், புறத்திலே விஞ்ஞானமயமாகத் திகழ மைத்ரேயி, கார்க்கி, சீதை, அருந்ததி வடிவாக அகத்திலே ஜொலித்தால் மீண்டும் வேத காலம் மலரும்! 

**

சினேகிதி மாத இதழில் 2003, செப்டம்பர் மாத இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை.

Leave a comment

Leave a comment