WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.699
Date uploaded in London – —23 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வாழ்வியல் கதை!
ச. நாகராஜன்
ஒரு காகம் மிக திருப்தியாக வாழ்ந்து வந்தது.
ஆனால் ஒரு நாள் அது அன்னத்தைப் பார்த்தது.
“இந்த அன்னம் எவ்வளவு வெண்மையாக இருக்கிறது! நானோ கறுப்பாக இருக்கிறேன், என்று எண்ணிய அது. “இந்த அன்னம் தான் உலகிலேயே மகிழ்ச்சிகரமான பறவை” என்ற முடிவுக்கு வந்தது.
நேராக அன்னத்திடம் சென்ற அது தனது எண்ணத்தைக் கூறியது.
“உண்மை என்னவென்றால்”, என்று பேச ஆரம்பித்த அன்னம், “நானும் அப்படியே தான் எண்ணிக் கொண்டிருந்தேன் – ஒரு கிளியைப் பார்க்கும் வரை. அந்தக் கிளி அழகான இரண்டு வண்ணங்களைக் கொண்டிருக்கிறது. ஆகவே படைப்பில் அந்தக் கிளியே சந்தோஷமான பறவை” என்று கூறி முடித்தது.
காகம் உடனே கிளியிடம் சென்றது.
“இப்போது நான் படைப்பில் கிளியே சந்தோஷமான பறவை என்ற முடிவுக்கு வந்து விட்டேன்” என்றது.
கிளி, “நானும் அப்படித்தான் எண்ணி இருந்தேன் – ஒரு மயிலைப் பார்க்கும் வரை! மயிலின் தோகையில் தான் எத்தனை வண்ணங்கள்! எனக்கோ இரண்டே இரண்டு வண்ணங்கள் தாம்” என்றது.
காகம் நேராக மயில் இருந்த மிருகக்காட்சி சாலைக்குச் சென்றது.
அங்கே மயிலைப் பார்க்க ஏராளமான கூட்டம்.
அனைவரும் சென்ற பிறகு மயிலை அணுகியது காகம்.
“அன்பு மயிலே! நீ மிக அழகாக இருக்கிறாய்! ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் மக்கள் உன்னைப் பார்க்க இங்கு வருகிறார்கள்! ஆனால் என்னைப் பார்க்கும் போதோ ஒவ்வொருவரும், “சீ, கறுப்பு” என்று கூறி வெறுத்து என்னை ஒதுக்குகிறார்கள். நீ தான உலகிலேயே சந்தோஷமான பறவை என்று நினைக்கிறேன்” என்று கூறியது காகம்.
மயில் பதில் கூற ஆரம்பித்தது.
“நானும் உலகிலேயே அழகான சந்தோஷமான பறவை நான் தான் என்று எண்ணத்தைக் கொண்டிருந்தேன். ஆனால் எனது அழகினால் என்னைப் பிடித்து இந்த மிருகக்காட்சி சாலைக்குள் அடைத்து விட்டார்கள். நான் இந்த மிருகக்காட்சி சாலை முழுவதும் கவனமாக அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். இங்கு அடைக்கப்படாத ஒரே ஒரு பறவை காகம் தான்! ஆகவே சமீப காலமாகவே ஒரு காக்கையாக நான் பிறந்திருக்கக் கூடாதா! என் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் பறந்து திரிய முடியுமே! என்று எண்ணுகிறேன்” என்று மயில் கூறியது.
இது தான் நம் ஒவ்வொருவருக்கும் உள்ள பிரச்சினை!
நாம் அடுத்தவரை அனாவசியமாக நம்முடம் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்! வருத்தமடைகிறோம்.
கடவுள் நமக்குக் கொடுத்தவற்றை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!
நிஜமாக சந்தோஷமாக இருப்பதைக் கற்றுக் கொள்வோம்.
மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்து வருத்தமடையச் செய்யும் அந்த வழக்கத்தை விட்டு விடுவோம். மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!
***