உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்! – 1 (Post No.13,718)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.718

Date uploaded in London – 28 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மாலைமலர் 11-9-24 இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்! – 1 

ச. நாகராஜன்

சிரிஉலகமே உன்னுடம் சிரிக்கும்!

“சிரி; உலகமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். அழு; நீ மட்டும் தனியே அழுவாய்” என்பது உலகப் பழமொழி. உலகையே பல வருட காலம் தன்னுடைய நடிப்பால் சிரிக்க வைத்த நடிகர் சார்லி சாப்ளின்.

அனாதை விடுதியில் சேர்க்கப்பட்டு. பூங்காக்களில் தூங்கி சோகமான இளமைப் பருவத்தைக் கழித்தவர், உலகையே சிரிக்க வைத்து மகிழ்ச்சியால் ஆட்டுவித்தார் என்றால் அது பிரமிப்பூட்டும் ஒரு விஷயம் தானே! அவரைப் பற்றிப் பார்ப்போம்.

பிறப்பும் இளமையும்

சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் இங்கிலாந்தில் லண்டனில் 1889-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி பிறந்தார். அவரது தந்தை நல்ல மேடைப் பாடகர், நடிகரும் கூட. தாயார் லிலி ஹார்லியோ நல்ல நடிகை, பாடகியும் கூட.  குடிப்பழக்கத்தால் சாப்ளினின் தந்தை அவர் பத்தாம் வயதை எட்டும் முன்னமேயே மறைந்தார். தாயாருக்கோ மனோவியாதி ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சகோதரர் சிட்னியுடன் சாப்ளின் படாதபாடு பட்டார். சோகமான இளமைக் காலத்தில் பல நாட்கள் அவர் இரவில் பூங்காக்களில் படுக்க வேண்டியதாயிற்று. 1896-ம் ஆண்டு சாப்ளினும் அவரது சகோதரரும்  பப்ளிக் போர்டிங் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். அதாவது அந்தப் பள்ளி அனாதைகளுக்கும் கைவிடப்பட்ட குழந்தைகளுக்குமான பள்ளியாகும். 18 மாதங்கள் அங்கே கழித்தார் சாப்ளின்.

ஐந்து வயதில் மேடையில் பாட்டு

சார்லினுக்கு ஐந்து வயதாகும் போது அவரது தாயார் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்தார். திடீரென்று பாதியில் அவரது தொண்டை அடைத்து விட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் அவர் திகைத்தார். உடனே நிகழ்ச்சி அமைப்பாளர் சாப்ளினை மேடைக்கு இழுத்துச் சென்று, “பாடு” என்றார். அவரும் தனக்குத் தெரிந்த “ஜாக் ஜோன்ஸ்” என்ற பாட்டைப் பாடினார். ரசிகர்கள் அதை ரசித்து ஆரவாரம் செய்து நாணயங்களை வீசினர். உடனே சாப்ளின், “இந்தக் காசுகளை எடுத்துக் கொண்டபின் தொடர்கிறேன்” என்றார். இன்னும் ஆரவாரம் அதிகமாகி அதிகமான நாணயங்கள் மேடையில் வந்து விழுந்தன. பின்னால் அவர் மேடை நிகழ்ச்சிகளில் தைரியமாகப் பங்கேற்க இது உதவியது.

குடும்பம்

29 வயதான சார்லி சாப்ளின் 1918ல் 17 வயது இளம்பெண்ணான நடிகை மில்ட்ரெட் ஹாரிஸை மணம் புரிந்தார். சரியான பொருத்தம் இல்லை என்று விவாகரத்து செய்த அவர் தனது 35-ம் வயதில் 16 வயதுப் பெண்ணான லிடா க்ரேயை மணந்தார். அதுவும் ‘ப்ரேக்-அப்’பில் முடிந்தது. அடுத்து 1943-ல் 54 வயதான அவர் 18 வயதான ஓனா ஓநீல் என்ற மங்கையை மணந்தார். ஆனால் இந்த மணம் அவர் இறக்கும் வரை நீடித்தது. ஓனாவுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தன. சாப்ளினுக்கு மொத்தக் குழந்தைகள் 11.

படங்களில் நடிக்கவும் தயாரிக்கவும் அனைத்திற்கும் தனக்கு ஊக்கம் கொடுத்தது தன் அன்னையே என்று பின்னால் பாசத்துடன் குறிப்பிட்டார் சாப்ளின்.

ட்ராம்ப் என்ற பாத்திரம் உருவான விதம்

சார்லி சாப்ளினை அடையாளம் காட்டும் பாத்திரமாக ஆனது ட்ராம்ப் என்ற பாத்திரம். தான் ட்ராம்ப் ஆன விதத்தைப் பற்றி அவரே இப்படி சொல்லி இருக்கிறார்.

“இது தற்செயலாக உருவான ஒரு பாத்திரம். கீஸ்டோன் ஸ்டுடியோவில் ஒரு நாள் ஹோட்டலுக்கான செட் ஒன்று போடப்பட்டது. சீக்கிரமாக காமடியன் டிரெஸ் ஒன்றைப் போட்டு வருமாறு என்னை அனைவரும் வற்புறுத்தினர்.”

இப்படி வற்புறுத்தப்பட்ட சாப்ளீன் மேக் -அப் அறைக்குச் சென்று  தொளதொள பேண்ட் ஒன்றை எடுத்துப் போட்டுக் கொண்டார். அதற்கு மாறுபாடாக இருக்கும் படி இறுக்கமான கோட் ஒன்றை அணிந்தார். முகபாவங்களை மறைத்து விடாமல் இருக்கும் படி சின்ன மீசை ஒன்றை ஒட்ட வைத்துக் கொண்டார். விசித்திரமான தொப்பி ஒன்றையும் அணிந்தார். பெரிய ஷூக்கள் இரண்டையும் போட்டுக் கொண்ட போது காமடி பாத்திரமான ட்ராம்ப் பாத்திரம் கச்சிதமாக உருவாகி விட்டது. செட்டில் அவரைப் பார்த்த அனைவரும் வியந்து பாராட்டினர். பொதுமக்களும் இந்த பாத்திரத்தை விரும்பி வரவேற்று ஏற்றுக் கொண்டனர்.

7-2-1914-ல் வெளியானது ‘தி ட்ராம்ப்’ என்ற படம்.

கீஸ்டோனில் உருவான அவரது 35 நகைச்சுவை ட்ராம்ப் படங்கள் அவருக்கு உலகில் தனி ஒரு இடத்தைப் பெற்றுத் தந்து விட்டது.

ஏறிக் கொண்டே போன சம்பளம்

முதலில் வாரம் 150 டாலருக்கு ஒப்பந்தமான அவரது சம்பளம் சில வாரங்களில் 1250 டாலராக ஆனது. சில ஆண்டுகளிலேயே பல்லாயிரம் டாலராக உயர்ந்து விட்டது.

அமெரிக்க ஜனாதிபதியை விட அதிகமாக ஆனது அவர் சம்பளம். அமெரிக்க ஜனாதிபதி வருடத்திற்கு 75000 டாலர் வாங்கிய போது 1916-ல் அவர் நியூயார்க்கில் ம்யூட்சுவல். ஃபிலிம் கார்பொரேஷனுடன் ஆறு லட்சத்தி எழுபதாயிரம் டாலருக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடார்.

இதனால் அவரே ஒரு ஸ்டுடியோவை உருவாக்கினார். சொந்தமாக படங்களை எடுக்க ஆரம்பித்தார்.

ஐன்ஸ்டீனுடன் சார்லி சாப்ளின்

பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1931ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விஜயம் செய்தார்.

சார்லி சாப்ளின் அவரைத் தான் நடித்த படமான ‘சிடி லைட்ஸ்’ என்ற படத்தை பிரத்யேகமாக  திரையிட்டுக் காண்பிக்க ஆசைப்பட்டு அதைப் பார்க்க வருமாறு அவரை வேண்டிக்கொண்டார்.

இருவரும் காரில் செல்கையில் அங்கு குழுமியிருந்த மக்கள் கையை அசைத்து உற்சாகமாக தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐன்ஸ்டீனை நோக்கிய சார்லி சாப்ளின், “இந்த ஜனங்கள்  ஏன் தெரியுமா உங்களை உற்சாகமாக வரவேற்கிறார்கள், அவர்களில் ஒருவருக்கும் உங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை! அதனால் தான்! என்னை ஏன் தெரியுமா வரவேற்கிறார்கள்! என்னை எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள், அதனால் தான்!”என்றார்.

ஐன்ஸ்டீன் சிரித்தார்!

காந்திஜியுடன் சாப்ளின்

1931-ம் ஆண்டு வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் வந்த காந்திஜியை சந்திக்க பெரிதும் விரும்பினார் சாப்ளின். சரோஜினி நாயுடு காந்திஜியிடம் சாப்ளின் ஒரு பெரும் நகைச்சுவை நடிகர் என்பதை விளக்கினார். டாக்டர் கத்தியால் என்பவரின் வீட்டில் தங்கி இருந்த காந்திஜி அவரைச் சந்திக்க மாலை ஆறரை மணிக்கு நேரம் ஒதுக்கினார். சாப்ளின் காந்திஜியிடம் இயந்திரப் பயன்பாட்டைப் பற்றிப் பேசினார். காந்திஜி இயந்திரங்களைத் தான் எதிர்க்கவில்லை என்றும் அதற்கு அடிமையாவதையே தான் எதிர்ப்பதாகவும் விளக்கினார். தொடர்ந்து ஏழு மணிக்கு நடந்த பிரார்த்தனைக் கூட்டத்திலும் சாப்ளின் கலந்து கொண்டார். காந்திஜியின் இயந்திரம் பற்றிய கருத்தைப் பின்னால் பூடகமாகத் தன் திரைப்படங்களிலும் அவர் புகுத்தினார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

to be continued……………………………….

**

Leave a comment

Leave a comment