
Post No. 13.721
Date uploaded in London – —29 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மாலைமலர் 11-9-24 இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
உலகையே சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகன் சார்லி சாப்ளின்! – 2
ச. நாகராஜன்
அவரது படங்களில் சுமார் 90 படங்கள் குறிப்பிடத் தகுந்தவை. அவற்றில் சில:
தி சர்கஸ் (1928)
சாப்ளினுக்கு முதல் அகாடமி அவார்ட் வாங்கித் தந்த படம் இது. அப்போது ஆஸ்கார் பரிசு என்ற பெயரை இந்த விருது பெறவில்லை.
இந்தப் படத்தை எடுக்கும் போது அவர் பெரிதும் துன்பப்பட்டார். மனைவி லிடா க்ரேயுடன் விவாக ரத்து; சாப்ளினை எல்லா விதத்திலும் மட்டம் தட்ட லிடா க்ரே செய்த செய்கைகள் – இவற்றால் அவர் கஷ்டப்பட்ட போதிலும் படம் வெளியாகி பெரும் வெற்றியைத் தந்தது.
சிடி லைட்ஸ் (1931)
இந்தப் படத்திற்காக சாப்ளின் மிகவும் கடுமையாக உழைத்தார். 32 மாதங்கள் இதற்காக அவர் உழைக்க வேண்டியதாக இருந்தது. 190 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது. இந்தக் காலத்தில் பேசும் படம் உருவாகி விட்டது. ஆனால் சாப்ளினுக்கோ அவரது பாத்திரம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தால் அதை உலகம் வரவேற்குமா என்ற சந்தேகம் எழுந்தது. துணிந்து வழக்கம் போல பேச்சே இல்லாத மௌனப் படமாகவே எடுத்தார். பத்திரிகை உலகம் போற்றியது. பொது மக்கள் படத்தைப் பார்த்து பிரமித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸில் ஐன்ஸ்டீன் இதைப் பார்த்தார் என்றால், லண்டனில் பெர்னார்ட் ஷா சாப்ளின் பக்கத்தில் உட்கார்ந்து இதைப் பார்த்தார்.

தி க்ரேட் டிக்டேடர் (1940)
1939-ல் இதை சாப்ளின் எழுதியபோதே ஹிட்லர் உலக அரங்கில் பெரிதும் பேசப்பட்டவராக ஆகி விட்டார். அவரது பாத்திரம் ஹிட்லரின் அதே மீசையைக் கொண்டிருந்தது. இந்தப் படத்தில் சாப்ளின் இரட்டை வேடத்தில் நடித்தார். ஒரு பாத்திரத்தில் யூத நாவிதராகவும் இன்னொரு பாத்திரத்தில் ஒரு சர்வாதிகாரியாகவும் நடித்தார்.
கதையில் வரும் யூதருக்கு ஒரு விமான விபத்தில் நினைவாற்றல் போய் விடுகிறது. இறுதியில் அவர் வந்து சேரும் நாடு டோமானியா. அதை ஒரு சர்வாதிகாரி ஆள்கிறார்.
இது பெரும் பரபரப்பை உண்டாக்கிய படமாக ஆனது.
அமெரிக்க வாசமும் தங்க அனுமதி மறுப்பும்
இரு முறை அமெரிக்கப் பயணத்தை மேற்கொண்ட அவருக்கு ஹாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகவே அங்கேயே தங்க நிச்சயித்தார். 1914 முதல் 38 ஆண்டுகள் அங்கேயே வசித்தார்.
என்றாலும் இடதுசாரி சிந்தனையாளரான அவருக்கு அமெரிக்க குடியுரிமை மறுக்கப்பட்டதோடு அங்கு தங்கவும் தடை விதிக்கப்பட்டது. 1952 செப்டம்பரில் தனது அமெரிக்க வாசத்தை ஒரேயடியாக முடித்துக் கொண்ட சாப்ளின் ஸ்விட்சர்லாந்து வந்து அங்கேயே தங்க ஆரம்பித்தார்.
அவருக்குப் பிடித்த இடம் ஸ்காட்லாந்தில் உள்ள நார்ன் என்ற இடம். அங்கேயே அடிக்கடி சென்று தங்குவார். இதில் விசித்திரம் என்னவென்றால் பிரபல நகைச்சுவை நடிகரான அவரைப் பற்றி நார்னில் உள்ளோர் அறியவில்லை. என்றாலும் கூட அவர்களுடன் பழகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அங்கேயும் உருவாக்கினார் சாப்ளின்.
நிதி உதவி
முதல் உலகப் போருக்குப் பின்னர் ஒட்டோமான் அரசில் (துருக்கியர்களால் ஆளப்பட்டது) ஆர்மீனியர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். லட்சக்கணக்கில் அவர்கள் கொல்லப்பட்டனர். உடனே சார்லி சாப்ளின் 150 லட்சம் அமெரிக்க டாலருக்குச் சமமான அளவில் பெரும் நிதியைத் திரட்டி ஆர்மீனியக் குழந்தைகள் வாழ வழி வகை செய்தார். அவரே நேரில் சென்று குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் அளித்தார். இதே காலத்தில் தான் அவரது ‘தி கிட்’ என்ற பிரபலமான படம் வெளியிடப்பட்டது.
பிரபல டைம் பத்திரிகையில் அட்டைப் படம்
பிரபலமான டைம் பத்திரிகையில் வெளியான முதல் நடிகர் படம் அவருடையதே. 1925, ஜூலை 6ம்தேதியிட்ட இதழில் அவரது படம் வெளியாகவே உலகமே வியந்தது. இது அவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
1972-ல் அவர் விசேஷ அகாடமி விருதைப் பெற்றார். 20 வருடங்கள் அமெரிக்காவிற்கே செல்லாமல் இருந்த சாப்ளின் இந்த விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா சென்றார்.

சாப்ளின் மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் 1981 அக்டோபர் நான்காம் தேதி உக்ரேன் நாட்டு விண்வெளி வீராங்கனையான லியூட்மிலா கரக்கினா ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்த போது அதற்கு 3623 சாப்ளின் என்று சாப்ளினை கௌரவப்படுத்தும் விதமாக பெயர் சூட்டினார். அவர் அவரது ரசிகை.
மறைவு
1977-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் மறைந்தார். 1978, மார்ச் மாதத்தில் அவரது சடலத்தை ஒரு கும்பல் திருடிக் கொண்டு போனது. ஆனால் அவர்கள் அடுத்த பதினோரு வாரங்களில் பிடிக்கப்பட்டனர். சடலம் மீட்கப்பட்டது.
புத்தகங்கள்
அவர் தனது வாழ்நாளில் ‘மை ட்ரிப் அப்ராட்’, ‘எ காமடியன் சீஸ் தி வோர்ல்ட்’, ‘மை ஆடோபயாகிராபி’, ‘மை லைஃப் இன் பிக்ஸர்ஸ்” ஆகிய நான்கு புத்தகங்களை எழுதினார்.. எல்லா இசைக்கருவிகளிலும் தேர்ந்தவரான அவர் பல பாடல்களையும் புனைந்ததுண்டு.
தனது படங்களுக்குத் தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும், திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராகவும் அவர் திகழ்ந்தார்.
அனுபவ மொழிகள்
தனது அனுபவ மொழிகளாக அவர் அவ்வப்பொழுது உதிர்த்த பொன்மொழிகள் ஏராளம். அவற்றில் சில:
நீங்கள் பயப்படவில்லை என்றால் வாழ்க்கை என்பது அருமையான ஒன்று தான். வேண்டுவதெல்லாம் கொஞ்சம் தைரியம், கற்பனை அப்புறம் கொஞ்சம் பணம்!
சிரிப்பு என்பது வலியை நிறுத்தி ஆறுதலைத் தரும் ஒரு டானிக்.
கீழேயே பார்த்துக் கொண்டிருந்தால் ஒரு நாளும் உங்களால் வானவில்லைப் பார்க்க முடியாது!
***