
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.725
Date uploaded in London – —30 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
18-9-24 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.
உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேடம் க்யூரி! – 1
ச. நாகராஜன்
உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி யார் தெரியுமா? முதலாம் உலகப் போரின் போது போர்க்களத்திற்குச் சென்று காயம்பட்ட போர்வீரர்களை தனது காரில் ஏற்றி சிகிச்சை அளிக்க உதவிய பெண்மணி யார் தெரியுமா? ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்த பெண்மணி யார்? கதிரியக்கத்தைக் கண்டுபிடித்து அணு யுகத்தை ஆரம்பித்து வைத்த பெண்மணி யார் தெரியுமா?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஒரே பதில் மேடம் க்யூரி என்பதே!
பிறப்பும் இளமையும்
1867ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி அப்போது ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த போலந்தில் உள்ள வார்ஸாவில் மரியா சலோமியா ஸ்க்லோடோவ்ஸ்கா (Marya Salomea Sklodowska) ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார்.
தந்தை பிரோநிஸ்லாவா ஒரு ஆசிரியர். தாய் வ்லேடிஸ்லாவா ஸ்க்லட்வ்ஸ்கியும் ஆசிரியை தான்.
போலந்தின் சுதந்திரத்திற்கான போராட்டங்களில் குடும்பம் ஈடுபட்டதால் ஏழ்மையை அனுபவிக்க நேர்ந்தது. துரதிர்ஷ்டவசமாக இவரது தாயார் மரியாவுக்கு 12 வயதாகும் போது காச நோயால் இறந்தார்.
சிறிய வயதிலேயே ஒரு விஷயத்தில் மனதைக் குவித்து கவனம்
செலுத்துவதில் அவரது திறமை அபாரமாய் இருந்தது. ஒரு நாள்
அவர் படித்துக் கொண்டிருக்கும் போது அவரது சகோதரி
அவரைச் சுற்றி நாற்காலிகளை வரிசையாகச் சுற்றி
அடுக்கலானார் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே
தெரியாமல் க்யூரி படித்துக் கொண்டிருந்தார்.
படித்து முடித்த பின்னர் அவர் ஒரு நாற்காலியைத் தொட
அனைத்து நாற்காலிகளும் சரிந்து விழுந்தன. ‘என்ன
முட்டாள்தனமான காரியம் செய்திருக்கிறாய்’ என்பது தான்
அவரது ஒரே கமெண்ட்..
பிரான்ஸின் முதல் பெண் பேராசிரியை
பள்ளிப் படிப்பை முடித்தபின் மேல் படிப்பிற்காக 1891-ம் ஆண்டு மரியா போலந்தை விட்டு பிரான்ஸில் குடியேறினார்.
மிகுந்த ஏழ்மையின் காரணமாகவே மிகுந்த தாமதத்துடன் கல்லூரிப் படிப்பை அவர் ஆரம்பிக்க வேண்டி இருந்தது.
அதே ஆண்டில் அவர் சார்போன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். கணிதத்திலும் இயற்பியலிலும் மூன்றே ஆண்டுகளில் பட்டங்களைப் பெற்றார்.
பிரான்ஸில் முதலாவதாக பிஹெச்.டி பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே. அத்துடன் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படாத அந்தக் காலத்தில் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் முதலாவது பெண் பேராசிரியராகவும் இவர் ஆனார். அறிவியலில் மேற்படிப்பை மேற்கொண்டதற்காகவும் ஆராய்ச்சி செய்ய முடிந்ததற்காகவும் அவர் பெருமகிழ்ச்சி கொண்டார்
திருமணம்
1894ம் ஆண்டு பியரி க்யூரியைச் சந்தித்த இவர் அவரது சோதனைச்சாலையில் பணியாற்றத் தொடங்கினார். வெவ்வேறு வகையான இரும்பு வகைகளின் இரசாயன கூறுகளைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டார் இவர். அப்போது இருவருக்குமிடையே காதல் அரும்பவே 1895-ம் ஆண்டு பியரியை இவர் மணந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1906ம் ஆண்டு பாரிஸ் சாலை ஒன்றில் நடந்த விபத்தில் பியரி மரணமடைந்தார்.
கணவர் மீது பேரன்பு
தனது கணவரின் மீது பேரன்பு கொண்டவர் மேடம் க்யூரி
அம்மையாரின் கணவர் பியரி திடீரென இறந்து போனதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த இயற்பியல் துறையின் தலைமையை ஏற்குமாறு க்யூரி அம்மையாரை சார்போன் பல்கலைக் கழகத்தினர் கேட்டுக் கொண்டனர். க்யூரியும் ஒத்துக் கொண்டார்.
முதல் நாள் தனது உரையை ஆற்ற அவர் வருகை தந்த போது அரசியல்வாதிகள், பத்திரிகை நிருபர்கள், பிரபலங்கள் என ஹால் நிரம்பி வழிந்தது. க்யூரி அம்மையார் தொடக்க உரையில் முதலில் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
சம்பிரதாயமான பதவியேற்பு வைபவத்தின் முடிவில் பெருத்த கரவொலி எழுந்தது. க்யூரி அம்மையார் பேச்சைத் தொடங்க எழுந்தார். அனைவரும் ஆவலுடன் அவரைப் பார்க்கையில் அவர் தன் கணவர் சில மாதங்களுக்கு முன்னால் எந்த இடத்தில் விட்டாரோ அந்த இடத்திலிருந்து தன் உரையை ஆரம்பித்தார்!
பொறி தெறிக்கும் அறிவுடையவர் என விஞ்ஞானி ஐன்ஸ்டீனாலேயே பாராட்டப்பட்டவர் உரையைத் தொடங்கினால் எப்படி இருக்குமோ அப்படி அந்த உரை இருந்தது!
நோபல் பரிசுகள்
வில்ஹெல்ம் ராங்டன் என்பவரே எக்ஸ்-ரேக்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானி.
இந்த எக்ஸ்-ரே மற்றும் கதிரியக்கம் சம்பந்தமாக தீவிர ஆய்வை பியரி கியூரியுடன் மேடம் கியூரி மேற்கொண்டார். இதன் விளைவாக
இயற்பியலில் கணவருடன் இணைந்து 1903-ல் நோபல் பரிசைப் பெற்றார். இரசாயன இயலில் ஈடுபாடு கொண்ட மேடம் கியூரி, பின்னர் மீண்டும் 1911ல் நோபல் பரிசைப் பெற்றார்.
இரு வேறு இயல்களில் (இயற்பியல் மற்றும் இரசாயன இயல்) நோபல் பரிசைப் பெற்ற பெண்மணி இவரே. முதன் முதலில் நோபல் பரிசைப் பெற்ற பெண்மணியும் இவரே.
ரேடியம் மற்றும் பொலோனியம் என்ற இரு கதிர்வீச்சு மூலகங்களை இவர் கண்டுபிடித்தார். தனது தேசமான போலந்தை கௌரவிக்கும் விதமாகத் தான் கண்டுபிடித்த மூலகத்திற்கு பொலோனியம் என்று பெயர் சூட்டினார்.
இவரது புகழ் நாடெங்கும் பரவ ஆரம்பித்தது.
க்யூரிக்கும் அவரது கணவருக்கும் விருதுகள் வந்து குவிந்தன.
ஆனால் அவற்றை அவர்கள் பெரிதாக மதிக்கவே இல்லை.
லண்டன் ராயல் சொஸைடியால் வழங்கப்பட்ட டேவி மெடலை
தங்களின் குட்டிப் பெண்ணான ஐரீனுக்கு அவர்கள்
விளையாடுவதற்காகத் தந்தனர். அதை ஐரீன் – பிக் கோல்ட் பென்னி – பெரிய தங்கத்தினால் ஆன பென்னி நாணயம்- என்று சொல்லி விளையாடிக் கொண்டிருப்பாராம்.
அரசரை சந்திக்க விரும்பாத அம்மையார்
1903இல் நோபல் பரிசு பெற்றவுடன் ஏராளமான பேர்கள்
அவர்களை விருந்துக்கு அழைத்தனர். ஒரு நாள் மாலை
பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் அதிகார பூர்வ இல்லமான
எல்ஸி அரண்மணையில் நடந்த ஒரு விருந்துக்கு அவர்
அழைக்கப்பட்டார். அவரை விருந்துக்கு அழைத்தவர் க்யூரியிடம்,
‘கிரீஸ் தேசத்து அரசர் வந்திருக்கிறார். அவரைப் பார்க்க
விருப்பமா’ என்று கேட்டார். “அவரைப் பார்த்து எனக்கு என்ன
ஆகப் போகிறது” என்று கூறிய க்யூரி அரசரைச் சந்திக்க
விரும்பவில்லை.
தனது விஞ்ஞான ஆராய்ச்சியிலேயே கவனம் செலுத்தி
உழைப்பால் உயர்ந்தார் எளிய குடும்பத்தில் பிறந்த மேதை!
**