Post No. 13.729
Date uploaded in London – —1 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
உலகில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேடம் க்யூரி! – 2
ச. நாகராஜன்
போர்க்களத்தில் எக்ஸ்-ரே மெஷின்
கதிரியக்கம் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட அவர் ஒரு எக்ஸ்-ரே மெஷினை உருவாக்கினார். அதை அவர் முதலாம் உலகப் போரில் போர்க்களத்தில் பயன்படுத்தியது ஒரு சுவையான செய்தி. போர் மூண்ட போது அந்தக் கால கட்டத்தில் எக்ஸ் ரே எடுப்பது
மருத்துவ மனைகளில் மட்டுமே முடியும்!
ஆகவே அவர் ஒரு “ரேடியாலஜிகல் காரை” உருவாக்கினார்.
அதில் எக்ஸ்ரே மெஷினை நிறுவினார். அதை இயக்க மின்சக்தி
வேண்டுமே! அதற்காக ஒரு டைனமோவையும் காரில்
நிறுவினார்.
பிரெஞ்சு ராணுவத்திடமிருந்து இதற்கென எந்த உதவியும்
கிடைக்கவில்லை.
மிகவும் ஏமாற்றமடைந்த கியூரி பிரான்ஸில் இருந்த பெண்கள்
சங்கத்தை நாடினார். அந்தச் சங்கமும் தேவையான பணத்தைக்
கொடுத்தது.அதை வைத்து முதல் காரை உருவாக்கினார்.
அதற்கு லிட்டில் க்யூரி என்று பெயரிட்டார். அது 1914ஆம்
ஆண்டு முதன் முதலாக போர்க்களத்தில் செயல்பட ஆரம்பித்தது.
அவரே இதை ஓட்டினார். இதற்காக வண்டியை ஓட்டவும் அவர்
கற்றுக் கொண்டார்.
ஒரு முறை அந்தக் காரின் டிரைவர் அதை ஒரு குழியில்
விடவே கார் கவிழ்ந்தது. க்யூரி சளைக்கவில்லை. காரை
நிமிர்த்தி சேதமான காரின் பாகங்களை சரி செய்து காரை ஓட்டிச்
சென்றார்.
போர்க்களத்தில் காயமடைந்த வீரர்கள் எக்ஸ் ரேயின்
உதவியினால் அறுவைச் சிகிச்சையை உரிய விதத்தில்
மேற்கொண்டு உயிர் பிழைத்தனர்.
போர்க்களத்தில் 200 எக்ஸ்ரே மெஷின்களை நிலையான
இடங்களிலும் அவர் நிறுவினார்.
செயல் திறம் மிக்க அபூர்வமான பெண்மணியாக அவர்
திகழ்ந்தார்.
நோபல் குடும்பம்
1921-ல் மேரி தனது இரு பெண்களுடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு வரலாறு காணாத அளவில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல பல்கலைக்கழங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்தன. ஒவ்வொரு முறை அமெரிக்கா சென்ற போதும் ஊடகங்களின் மூலம் அவர் பெற்ற புகழை அவரது பெண்கள் கண்ட போது தான் தனது தாயார் எப்படிப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்திருக்கிறார் என்று உணர்ந்தனர்.
ஐரீன் தனது தாயாருக்கு ரேடியம் நிறுவனத்தில் உதவி புரிய ஆரம்பித்தார். அங்கு ப்ரெடெரிக் ஜோலியட் என்பவரைச் சந்தித்து அவரையே 1926-ல் மணந்தார். 1935-ல் ரேடியோஆக்டிவ் அணுக்களைச் செயற்கையாகச் செய்யும் வழியைக் கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஈவ் ஐரீன் பிறந்ததற்கு ஏழு வருடங்களுக்குப் பின்னர் பிறந்தார். ஈவ் சிறந்த எழுத்தாளரானார். மேடம் க்யூரி என்று தனது தாயின் சரிதத்தை அவர் எழுதினார். இந்தப் புத்தகம் பிரபலமாகி ஏராளமாக விற்பனை ஆனது. 1965ல் யூனிசெப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டபோது ஈவின் கணவர் ஹென்றி லபாய்ஸ் அதன் சார்பில் நோபல் பரிசைப் பெற்றார். ஆக க்யூரி குடும்பத்தில் நோபல் பரிசைப் பெற்ற ஐந்தாவது நபராக இவர் ஆனார். 2007-ம் ஆண்டு 102-ம் வயதில் ஈவ் மரணமடைந்தார்.
அமெரிக்க மக்களின் விசேஷ பரிசு
நூறு விஞ்ஞானிகள் முன்னிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதியான வாரன் ஹார்டிங்கைச் சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் சென்றார் மேடம் க்யூரி. அவருக்கென அமெரிக்க மக்களின் விசேஷ பரிசு ஒன்றை அளித்தார் ஜனாதிபதி. ஒரு சின்னப் பெட்டி. ஈயம் பூசிய எஃகினால் ஆன அந்தப் பெட்டி நீலம் மற்றும் வெள்ளை ரிப்பன்களால் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. உள்ளே திறந்து பார்த்தால் ஒன்றும் இல்லை!
ஆம், வெள்ளை மாளிகைக்குள் பாதுகாப்பு காரணமாக உள்ளே வைத்திருக்க வேண்டிய பொருளைக் கொண்டு வர முடியவில்லை. அந்தப் பொருள் மேடம் க்யூரி வசிக்கும் பிரான்ஸுக்கு அனுப்பப்படும் முன்பாக அந்தப் பெட்டியில் வைக்கப்படும். அது என்ன? ஒரே ஒரு கிராம் ரேடியம் தான் அது! ரேடியத்தைக் கண்டுபிடித்தவருக்கு ஒரு கிராம் ரேடியம் பரிசாகத் தரப்பட்டது. அதன் அன்றைய விலை ஒரு லட்சம் டாலர்!
மறைவு
1934-ம் ஆண்டு தனது 66ம் வயதில் பிரான்ஸில் பாஸி என்ற இடத்தில் சான்ஸில்லெமா சானிடோரியத்தில் அதிக கதிர்வீச்சு உடலை பாதித்ததன் காரணமாக அவர் மரணமடைந்தார்.
மேடம் க்யூரியின் அனுபவ மொழிகள்
தன் வாழ்நாள் முழுவதும் ஊக்கமூட்டும் உரைகளை அவர் அளித்து வந்தார். குறிப்பாக அவர் பெண்கள் பெரிதும் முன்னேறுவதற்கான வழிகளைக் காட்டி வந்தார். அவரது பொன்மொழிகளில் சில:
“என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. இன்னும் என்ன செய்ய வேண்டியிருக்கிறது என்பதை மட்டுமே பார்க்கிறேன்.”
“வாழ்க்கையில் எதற்காகவும் பயப்படத் தேவையில்லை. அதைப் புரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்.”
“மனிதர்களைப் பற்றி அறிவதில் குறைவாகவே ஆர்வத்தைக் காட்டுங்கள்; கருத்துக்கள் பற்றி அறிவதில் மட்டுமே அதிக ஆர்வத்தைக் கொண்டிருங்கள்.”
“எதையும் மிக மிக நேர்த்தியாகச் செய்ய வேண்டுமே என்று பயப்படாதீர்கள்; அதை ஒரு போதும் உங்களால் அடைய முடியாது.”
“முன்னேற்றத்திற்கான வழி விரைவானதும் அல்ல; சுலபமானதும் அல்ல என்பது எனக்குக் கற்பிக்கப்பட்டிருக்கிறது.”
“எனது வாழ்க்கை நெடுக இயற்கையின் புதிய காட்சிகள் என்னை ஒரு குழந்தை போல மகிழ வைத்திருக்கிறது.”
NOBLE நோபல் பெண்மணி
பல்லாயிரக் கணக்கானோர் இன்று எக்ஸ்-ரே மூலம் நல்ல மருத்துவ சிகிச்சை பெற காரணமாக அமைந்தவர், கதிரியக்கத்தின் நன்மை தீமைகளை உலகிற்கு உணர்த்தியவர் என்ற வகையில் உலக மக்கள் அனைவரும் நினவு கூர்ந்து போற்றும் ஒரு ‘நோபிள்’ (நோபல்) பெண்மணி மேடம் க்யூரி என்றால் அது மிகையாகாது.
**