ஆசிரியரை நிந்தித்தால் நீ கழுதையாகப் பிறப்பாய் –மனு -11 (Post No.13,747)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,747

Date uploaded in London – 4 October 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-11 

ஆசிரியரை நிந்தித்தால் நீ கழுதையாகப் பிறப்பாய் –மனு -11 (Post No.13,747)

Part 3/ last part

ஆசிரியரை நிந்தித்தால் நீ கழுதையாகப் பிறப்பாய் –மனு ஸ்ம்ருதியில் கழுதை

தமிழ்ப் பழமொழிகளைப் போலவே மனு நீதி நூலும் கழுதைகளை மட்டம் தட்டுகின்றது. கழுதையைக் கொன்றால் எவ்வளவு அபராதம் எப்போது கழுதை மீது ஊர்வலம் நடத்தி அவமானப்படுத்துவது என்பதை பதினைந்து ஸ்லோகங்களில் சொல்கிறார் மனு!

மனு – Manu 2-201.

ஆசிரியரை இகழ்ந்தால், குருவைப் பரிகாசித்தால் அடுத்த ஜென்மத்தில் கழுதையாகப் பிறப்பாய்; குற்றம் சாட்டினாலோ நாயாகப் பிறப்பாய்; அவரது சோற்றை உண்டு வாழ்ந்தாலோ புழுவாகப் பிறப்பாய்; பொறாமை கொண்டாலோ பெரிய பூச்சியாகப் பிறப்பாய்.

திருமூலரும் பன்றியாகப் பிறப்பாய் என்று எச்சரித்ததை நினைவிற் கொள்க

****

மனு 4-115.

நாய் குலைக்கும்போதும், கழுத்தை கத்தும்போதும், நரிகள் ஊளையிடும்போதும், ஒட்டகக்கங்கள் உருமும்போதும் பிராமணன் வேதம் ஓதக்கூடாது.

****

4-120. கழுதை, ஒட்டகம், குதிரை, யானை , வண்டிகளில் சவாரி செய்யும்போது வேதம் சொல்லக் கூடாது 

****

 8-298. கழுதை, ஆடு, செம்மறி ஆடுகளைக் கொன்றால் அபராதம் ஐந்து காசுகள் /பணம். நாயையோ பன்றியையோ கொன்றால் ஒரு பணம்தான் அபராதம்.

****

8-370. ஒரு பெண் இன்னும் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தினால் அவள் தலையை மொட்டை அடித்தோ அல்லது இரண்டு விரல்களை வெட்டியோ கழுததை மீது சவாரி விடுக.

****

8-384. தவறான புணர்ச்சியில் ஈடுபட்டால் கழுதையின் மூத்திரத்தை விட்டு தலையை மொட்டை அடிக்கவும்.

****

10-51. சண்டாளர்களும் புலையன்களும் ஊருக்கு வெளியே வசிக்கவேண்டும் அவர்களுடைய  செல்வம் நாயும் கழுதையும்தான்.

***

11-69.  கீழ்கண்ட பிராணிகளைக் கொன்றால் அவன் கீழ்ஜாதிக்குப் போய்விடுவான் – கழுதை, குதிரை, எருமை, யானை, ஆடு, ஒட்டகம் மான். பாம்பு

****

11-137. எதைக் கொன்றால் என்ன தானம் செய்யவேண்டும் ?

குதிரை- துணி தானம் ; யானை- ஐந்து காளைகள்; ஆடு- எருது;  கழுதை – கன்றுக்குட்டி தானம்

****

11-155. கழுதை முதலிய மிருகங்களின் மல ஜலம் வாயில் பட்டால் ஒரு பிராமணன் சந்திராயன விரதம் இருக்க வேண்டும்; அதாவது 15 நாள் ஒரு பிடி ஒரு பிடியாக உணவைக் குறைத்து அடுத்த 15 நாள் ஒவ்வொரு கவளமாக 15 நாள் உணவை அதிகரிக்க வேண்டும்.

****

11-157. கழுத்தை முதலியவற்றின் மாமிசங்களை உண்டவன்  தப்பித்த கிரிகிற சர  விரதம் இருக்கவேண்டும் அதாவது மூன்று நாட்களுக்கு வெந்நீர், பாலா, ணெய் மட்டும் சாப்பிட்டு சூடான காற்றை சுவாசிக்க வேண்டும் Taptakṛcchra (तप्तकृच्छ्र).—a kind of penance consisting in drinking hot water, milk and ghee for three days each, and inhaling hot air for three days; Manusmṛti 11.214; Y.3.318.

*****

11-200. நாய் கழுத்தை முதலியன கடித்தால் பிராணாயாமம் செய்யவேண்டும்

****

11-202. கழுதை ஒட்டகம் இழுக்கும் வண்டிகளில் போனால் பிராணாயாமம் செய்யவேண்டும்;

****

12-55. பிராமணனைக் கொன்றவன் கீழ்கண்ட மிருக்கங்கால்கப் பிறப்பான் – நாய் பன்றி கழுதை  ஒட்டகம் ஆடு மாட்டு  மான், பறை சண்டாளன் புலையன்

******

கழுதை ஏர் கொண்டு உழுதான் பாண்டிய மன்னன்!

மன்னர்களின் விநோதப் பெயர் -கழுதை!

காரவேலன் என்ற கலிங்க மன்னன் மிகவும் புகழ்பெற்றவன். அவன் கலிங்க நாட்டை ஆண்டவன்; இப்பொழுதும் அவனுடைய ஹத்திகும்பா (யானைக் குகை) கல்வெட்டைக் காணலாம். இது ஒரிஸ்ஸாவில் உதயகிரி- கண்டகிரி மலையில் உளது. புவனேஸ்வரத்துக்கு அருகில் பிராக்ருத மொழியில், பிராஹ்மி லிபியில் எழுதப்பட்ட இக்கல்வெட்டு 2200 ஆண்டுப் பழமை உடைத்து. தமிழர்களின் கூட்டணியை உடைத்ததாகவும் பாண்டிய மன்னரிடமிருந்து ரத்தினக் கற்களைக் கப்பமாகப் பெற்றதாகவும் இவன் பெருமை பேசுவதால், தமிழ் வரலாற்றுக்கும் இவன் கல்வெட்டு துணைபோகிறது. இவனிடம் தோற்றுப்போன தமிழ் மன்னர்கள் யார் என்று தெரியவில்லை.இது ஒரு புறம் இருக்க இவனுடைய பெயர் கழுதையா என்ற ஒரு ஆராய்ச்சியும் 1940-ஆம் ஆண்டு வூல்நர் நினைவு மலரில் (Woolner Commemoration Volume, year 1940) வந்துள்ளது. அதை ஆராய்ந்து எனது கருத்தையும் முன்வைப்பேன்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜே.பிரஸிலுஸ்கி (J.Prezyluski) எழுதிய  கட்டுரையில் சொல்லும் விஷயம் பின்வருமாறு:

கார+ வேல= கருப்பு வேல் என்று இருக்கலாம் (தமிழ்ப் பெயர் என்று கொண்டால்)

காரவேல = கர+வெல்லக= பாகற்காய் (ஸம்ஸ்க்ருத பெயர் என்று கொண்டால்)

அக்காலத்தில் முண்டா மொழிகள் அப்பகுதியில் இருந்ததால் அதன் செல்வாக்கும் இருக்கக்கூடும்.

‘கர’ என்றால் கழுதை என்ற பொருள் உண்டு (கர்த்தப). ஸம்ஸ்க்ருதத்தில் மிருகங்களின் பெயர்கள் ‘ப’ அல்லது ‘வ’ என்னும் எழுத்தில் முடிவடைவதால் கழுதை (கரவ) என்று கொள்ளலாம்.

சமணர்களின் நூலான ‘கால்க கதா’வில் கர்த்தபில்லா பற்றிய கதை வருகிறது அவன் காலகாசார்யா என்னும் சமண முனிவரை அவமானப் படுத்தியதால், அவர் கோபித்துக் கொண்டு போய் சக வம்ச மன்னர்களத் தூண்டிவிட்டு, உஜ்ஜையினி நகர கர்த்தபில்லா ஆட்சியை விழுத்தாட்டியதாக விஷ்ணு புராணம் விளம்பும். இவனுடைய பெயரும் கழுதையின் (கர்த்தப) பெயரே.

காரவேலனும் ஒரு சமண மன்னன். கர்த்தபில்லா பெயரின் பொருள்= கழுதைக்குப் பிறந்தவன். அது போல காரவேல என்பதும் கழுதைப் பயல்- கழுதை மகன் என்று இருக்க வாய்ப்பு உண்டு. அதாவது ஒரு தெய்வீக கழுதைக்கும் சாதாரண ராஜாவுக்கும் பிறந்தவனாக இருக்கலாம் — என்று சொல்லி பிரெஞ்சு கட்டுரையாளர் கட்டுரையை முடிக்கிறார் (வூல்நர் கம்மமொரேஷன் வால்யூம், 1940).

எனது கருத்து:

கழுதை போல உதடு இருப்பதால் இப்படிப்பட்ட பெயர் வந்து பின்னர் நிலைத்து இருக்கலாம்; கரோஷ்டி என்ற வடமேற்கு இந்திய லிபிக்கும் ‘கழுதை உதடு’ என்றே பொருள்- அதன் எழுத்துக்கள் அப்படித் தோன்றுவதால் பட்டப்பெயர் நிலைத்துவிட்டது.

காரவேலன் பெயரைத் தமிழ் பெயர் என்று கொண்டால் ‘கூர் வேல்’ என்று திருப்பாவையில் வரும் சொல்லையும் பொருத்தலாம். ‘கூர்வேல்  நெடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்’

காரவேலன், தான் வென்ற பகைவர் நாட்டில் கழுதை பூட்டி ஏர் உழுதான் என்று அவனுடைய கல்வெட்டு கூறுகிறது. இதனாலும் ‘கழுதை பூட்டி ஏருழுதவன்’ என்பது காரவேலன் என்று மருவி இருக்கலாம். இது ஸம்ஸ்க்ருதம், தமிழ் இரண்டுக்கும் பொருந்தும் வியாக்கியானம்!

சங்க இலக்கியத்தில் கழுதை

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை புலவர் நெட்டிமையார் பாடிய பாடலில் கழுதையைப் பூட்டி ஏர் உழுதல் பற்றிப் பாடுகிறார். இதையே காரவேலன் ( 193 BC to 170 BC) கல்வெட்டும் கூறுகிறது.

கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

பாழ் செய்தனைஅவர் நனந்தலை நல் எயில்;

(புறம் பாடல் 15, நெட்டிமையார்)

முது குடுமிப் பெருவழுதி தன் பகைவர் நாடுகளை வென்று, தேரோடிய தெருக்கள் வழியாக ஏர்பூட்டிய கழுதைகளை நடத்திச் சென்று உழுதான் என்று புலவர் பாடுகிறார்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினியின் புகழ் பாடிய அவ்வையாரும் இதையே கூறுகிறார்:

அணங்குடை மரபின் இருங்களந்தோறும்,

வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்

வைகல் உழவ!  (புறம் 392அவ்வையார் )

இதன் பொருள்: திறை கொடாத மன்னரின் மதில்களை வஞ்சனையின்றிப் பொருது அழித்துப், போர்க்களத்திலே கடும் போர் இயற்றிக், கழுதை பூட்டி உழுது, கவடியும் வேலும் விதைக்கும் இடையறாத போர் வெற்றி நிறைந்த வேந்தனே!

இதிலிருந்து ஒரு மன்னனை அவமானப்படுத்த, அவன் ஊரைப் பாழ்படுத்துவதோடு, அங்கே கழுதைகளை அனுப்பி ஏர்பூட்டி உழுதல் வழக்கம் என்றும் அதிலும் வெள்ளை வரகும், கொள்ளும் பயிரிடுதல் வழக்கம் என்றும் தெரிகிறது. இது நாடு முழுதும் இருந்த பாரதீய பண்பாட்டின் ஒரு அம்சம்.

***

எல்லோரும் வெறுக்கும் மூதேவியின் வாஹனம் கழுதை!

***

கரும் புள்ளி செம்புள்ளியுடன் ஊர்வலம்

பழைய காலத்தில் குற்றவாளிகளையும், பெண்களுக்கு எதிராக தவறிழைத்தோரையும் கழுதை மீது உட்கார வைத்து, அவன் முகத்தில் கருப்பு, வெள்ளை வர்ணங்களால் புள்ளிகளை வைத்து நகர் வழியாகக் கூட்டிச் செல்வர். இப்போதும் வட இந்தியாவில் இது நடக்கிறது. கழுதைகளை பாரம் சுமக்கப் பயன்படுத்தியதும் நீண்ட காலமாக வழக்கத்தில் உள்ளது. அக நானூறு (89) இது பற்றிப் பாடுகிறது பதிற்றுப்பத்து, பெரும்பாணாற்றுபடையிலும் கழுதையின் ‘’புகழ்’’ உள்ளது. மிளகு பொதி சுமக்கும் கழுதை பற்றியும் கழுதை பூட்டிய ஏர் (ப.பத்து 25) உழுதல் பற்றியும் பாடுகின்றனர்.

கல்வெட்டுச் சாபங்களில் கழுதை

பல கல்வெட்டுகளில் கழுதைச் சாபமும் காணப்படுகிறது. கல்வெட்டுகளில் சொன்ன விஷயங்களை மீறினாலோ, பின்பற்றாவிடிலோ அவர்கள் கழுதைகளைப் புணர்ந்த பாபத்தை அடைவார்கள் என்றும் கல்வெட்டுகளில் எழுதப்பட்டுள்ளன.

****

வேத காலத்தில் கழுதை

வேத காலத்தில் கழுதைக்கு மதிப்பு இருந்ததாகத் தோன்றுகிறது. அதர்வ வேதமும் (9-6-4), ஐதரேய பிராமணமும் (4-9-1) முறையே இந்திரனும் அக்னியும் கழுதை வாகனத்தில் சென்றதகக் கூறும். கிரேக்க நாட்டில் ஒலிம்பிய தெய்வமன ஹெபைஸ்டோஸ், டயோனிசிஸ் இந்திய கிராம தேவதையான சீதளா தேவி ஆகியோருக்கும் கழுதையே வாகனம்.

இனிமேலாவது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கூப்பிடும்போது ‘’அடச் சீ, கழுதை, இங்கே வா, புத்தகத்தை எடுத்துப் படி ’’ என்று சொல்லாமல் இருப்பார்களாக!!

*****

வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்- பழமொழிக் கதை (Post No.4588)

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் — என்ற தமிழ்ப் பழமொழியைப் பலரும் அறிவார்கள்; ஆனால் இதன் பின்னாலுள்ள சுவையான கதையை அறிந்தோர் சிலரே. இதோ கதை:-

அம்மாஞ்சி என்ற பிராஹ்மணன் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி வல்லாள கண்டி மற்றும் அவனுடைய அம்மா, மற்றும் மாமியார் ஆகியோருடன் கூட்டுக் குடும்பம்.

வல்லாள கண்டியின் பெயரைக் கேட்டாலேயே அவள் எப்படிப்பட்டவள் என்பதைக் கண்டுகொள்ளலாம்;  சரியான சிடுமூஞ்சி; அடங்காப்பிடாரி.

வீட்டில் தினமும் ரணகளம்தான்;  த்வஜம் கட்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் மோதல்; சண்டை சச்சரவு அன் றாடக் காட்சிகள்! குறிப்பாகச் சொல்லப் போனால் அதிகம் பாதிக்கப்பட்டது அம்மாஞ்சி பிராஹ்மணனின் அம்மாதான்

அசட்டு அம்மாஞ்சியால் ஒன்றும் சமாளிக்க முடியவில்லை. அவனுடைய அம்மாவும் பார்த்தாள்; இனி வீட்டை விட்டு ஓடுவதே ஒரே வழி என்று சிந்தித்தாள்; செயல் பட்டாள்;

ஆந்தைகள் அலறும், நாய்கள் ஓலமிடும் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடினாள்.

‘ஓடினாள், ஓடினாள், கிராமத்தின் எல்லைக்கே ஓடினாள்’

அங்கே ஒரு காளி கோவில். அதில் ஓய்வு எடுத்தாள்.

நள்ளிரவுக்குப் பின்னர் ‘’கிலிங் கிலிங்’’ என்ற சப்தம். கிழட்டு அம்மணி நிமிர்      ந்து பார்த்தாள். அங்கே ஸ்வரூப சுந்தரியாக காளி தேவி காட்சி தந்தாள்.

‘அம்மணி! ஏது வெகுதூரம் வந்துவிட்டீர்? என்ன சமாச்சாரம்?’ என்று வினவ, கிழட்டு அம்மணியும் செப்பினாள் தன் துயரக் கதைகளை.

காளி மொழிந்தாள்:

கவலைப் படாதே! ஒரு மாம்பழம் தருகிறேன் அதைச் சாப்பிடு; ‘’பெரிய மாற்றம்’’ ஏற்படும் என்றாள்.

அவளும் கவலையை மறந்து விடிவு காலத்தை (பொழுது விடியும் காலத்தை) எதிர் பார்த்துக் காத்திருந்தாள்.

இதற்குள்  அம்மாஞ்சி வீட்டில் ஒரே களேபரம்;அம்மாவைக் காணாது அம்மாஞ்சி- அசட்டு அம்மாஞ்சி–துடியாய்த் துடித்தான்.

இதென்னடா கலிகாலம்! ‘பெத்த மனசு கல்லு, பிள்ளை மனசு பித்து’ என்று பழமொழி மாறிவிட்டதே.

ஓடினான் ஓடினான் ஊரின் எல்லைக்கே ஓடினான். அங்கே பராசக்தி அமர்ந்திருந்தாள்- அதான் அவனுடைய கிழட்டு அம்மா!

‘அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே. அன் புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே’,  என்று பாடி அவளை நமஸ்கரித்தான்.

வீட்டிற்குத் திரும்பி வருமாறு இறைஞ்சினான்.

அவளும் ‘நான் பெற்ற செல்வம்; நலமான செல்வம்’ என்று பாடி மாம்பழத்தைக் காட்டி சாப்பிடு என்றாள்.

அம்மா, அது அரிய பெரிய கனி; நீயே உண்ணு என்று சொல்லி அவளைத் தோளின் மீது போட்டுக்கொண்டான். அவளும் மாம்பழத்தைச் சாப்பிட்டாள்.

அம்மாஞ்சிக்கு கொஞ்சம் ஆச்சர்யம்; அம்மாவின் சொர சொர தோல் வழு வழு என்பது போல ஒரு உணர்வு; ஓஹோ! களைப்பின் மிகுதியால் வந்தது என்று எண்ணினான். மேலும் மேலும் குமரிப் பெண்ணின் கைகள் போட்ட உணர்வு தோன்,,,ரவே திரும்பி அம்மாவின் முகத்டைப் பார்த்தான; அவள் சொர்ண சுந்தரியாக மாறி ஸ்வர்ணம் போல ஜொலித்தாள்; வீட்டில் போய் இறக்கும் போது அவனுடைய கிழட்டு அம்மா  இளம் குமரி  ஆக மாறி இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் மகிழ்ச்சி. எல்லாக் கதைகளையும் வல்லாள கண்டி கேட்டாள்; பொறாமைத் தீயில் சதித்திட்டம் தீட்டினாள்.

இரவு நேரத்தில் தனது அம்மாவை- அதாவது அசட்டு அம்மாஞ்சியின் மாமியாரை- வீட்டை வீட்டு ஓடும்படி துர் புத்திமதி சொன்னாள்; அவளும் இசைந்தாள் காளி கோவிலில் தஞ்சம் புகுந்தாள்; காளியும் தோன்றினள்; ஏன் அம்மா இங்கு வந்தாய் என்று கேட்க, அவளும் உரைத்தாள்– வீட்டில் துக்கம் தாளவில்லை என்று.

எதிர்பார்த்தது போலவே காளியும் மாம்பழம் தந்து உரைத்தாள்: இதைச் சாப்பிடு ‘’பெரிய மாற்றம்’’ வரும் என்று.

அந்தக் கள்ளியும் அவசரம் அவசரமாக மாம்பழத்தை உண்டாள். இதற்குள் வல்லாள கண்டி தனது அம்மாவைத் தேடிக் கண்டு பிடிக்கும்படி அம்மாஞ்சியை எஃகினாள். அவனும் விரைந்தான்.

மாமியாரைக் காளி கோவிலில் கண்டான்

கண்டேண் மாமியாரை! என்று ஆனந்தித்தான். தோளின் மீது சவாரியும் கொடுத்தான். அவள் தோல் சொர சொர என்று மாறிக்கொண்டு வந்து எடையும் கூடியது.

திரும்பிப் பார்த்தான்; சிரிப்பை அடக்க முடியவில்லை; மாமியார் அரைக் கழுதையாக மாறி இருந்தாள்; வீட்டிற்குள் ஓடிப் போய் அவளை தொப் என்று போட்டான்; அவள் முழுக் கழுதையாகக் காட்சி தந்தாள்

‘’கண்டேன் கண்டேன் கண்டேன்

கண்ணுக்கினியன கண்டேன்

ஊர் மக்கள் அனைவரும் வாரீர்

அரிய காட்சியைப்  பாரீர்’’ —

என்று ‘மனதுக்குள்’ பாடிக்கொண்டான்.

அம்மாஞ்சிக்கு சந்தோஷம்; அவன் அம்மாவுக்கும் சந்தோஷம்! ஆனால் மாமியாருக்கு துக்கம்; வல்லால கண்டிக்கு பெரும் துயரம்.

ஊர் முழுதும்– குறிப்பாக குழாய் அடியில் பெண்களிடையே ஒரே பேச்சு– வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்- என்று.

****

ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதை: பதவிக்காக அலையும் கழுதைகள் (Post No.2630)

ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் மந்திரியுடன் சேர்ந்து வேட்டைக்குப் போனார்.

“மந்திரியாரே! இன்று மழை வருமா?”

“மன்னனே! இன்று கட்டாயம் மழை வராது.

இந்த உரையாடலுக்குப் பின்னர், ராஜா, ஒரு விவசாயியைப் பார்த்தார். அவன் ஒரு கழுதை மீது சவாரி செய்து கொண்டிருந்தான். “என்ன, வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறாய்?” என்று ராஜா கேட்டார்.

“ஐயோ, ராஜா, மழை கொட்டப்போகிறதே! அதனால்தான் வேகமாகப் போகிறேன்” – என்றான்.

“அது எப்படி உனக்குத் தெரியும்?” என்று ராஜா கேட்டார்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது. என் கழுதையின் காதுகளைப் பார்த்துத்தான் நான் கண்டு பிடித்தேன். இதோ பருங்கள்! காதுகளை நன்றாக நீட்டி வைத்துக்கொண்டுள்ளன. இப்படியிருந்தால் மழை கொட்டப்போகிறது என்று அர்த்தம்” – என்றான்.

ராஜாவும் , மந்திரியும் காட்டுக்குள் வேட்டையாடப் போனார்கள். மழை கொட்டித் தள்ளிவிட்டது. ராஜாவுக்குப் பயங்கர கோபம். மந்திரியைப் பதவி நீக்கம் செய்தார். அந்த விவசாயியைக் கண்டுபிடித்து, அவன் கழுதையை விலைக்கு வாங்கி, அதற்கு மந்திரி பதவி கொடுத்தார்.

எல்லோரும், ஆப்ரஹாம் லிங்கன் சொன்ன கதையைச் சுவையாகக் கேட்டனர்.

“அந்த ராஜா பெரிய தப்புச் செய்துவிட்டார்” ….. என்று லிங்கன் கதையைத் தொடர்ந்தார். எல்லோருக்கும் சந்தேகம். ராஜா என்ன தப்பு செய்தார்? கூட்டத்தில் ஒருவன் எழுந்து “ராஜா, என்ன தப்பு செய்தார்?” – என்று கேட்டான்.

“அவர் ஒரு கழுதைக்கு மந்திரி பதவி கொடுத்ததிலிருந்து, இப்பொழுது எல்லா கழுதைகளும் மந்திரி பதவிக்காக அலைந்து கொண்டிருக்கின்றன” – என்று போட்டாரே ஒரு போடு!

-சுபம்-

TAGS- ஆசிரியரை நிந்தித்தால், கழுதையாகப் பிறப்பாய்,  மனு ஸ்ம்ருதியில் கழுதை தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-11

Leave a comment

Leave a comment