உப்பு முதல் உயரப் பறக்கும் விமானம் வரை ரத்தன் டாட்டா செய்த சாதனை! – 1
Post No. 13.799
Date uploaded in London – —21 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ச .நாகராஜன்
ரத்தன் டாட்டா
இந்திய தொழில் துறையை உலக அரங்கில் உயரத்தில் ஏற்றிய தொழிலதிபரும், ஆகச் சிறந்த மனிதப் பண்புகளைக் கொண்டிருந்தவரும், அனைத்துயிர்களையும் நேசித்தவரும், சமூக சேவையில் உளமார ஈடுபட்டவருமான ஒரு உத்தமர் ரத்தன் டாட்டா அவர்கள்.
நாட்டையே சோகத்தில் ஆழ்த்தி விட்டு 2024 அக்டோபர் 9-ம் நாள் நம்மிடையே இருந்து இவர் பிரிந்து விட்டார்.
இவரது வாழ்க்கை அனைவராலும் ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய அற்புதமான ஒரு வாழ்க்கையாகும்.
பிறப்பும் இளமையும்
டாட்டா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாட்டாவின் மகனான ரத்தன்ஜி டாட்டா அவர்களால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாட்டாவின் மகனான ரத்தன் டாட்டா 1937-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி மும்பையில் பிறந்தார்.
இளமையில் கடுமையான துன்பங்களை இவர் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இவரது பத்தாவது வயதில் பெற்றோர்கள் பிரியவே, இவர் பாட்டி நவஜ்பாய் டாட்டாவின் அரவணைப்பில் வளர்ந்தார்..
தொழிலில் முனைப்பு
1962-ல் கட்டிடடக் கலையில் பட்டத்தைப் பெற்ற இவர் டாட்டா ஸ்டீலில் வேலை பார்க்க ஆரம்பித்தார். கார்னெல் பல்கலைக் கழகத்தில் படிப்பை முடித்த அவருக்கு ஐபிஎம் நிறுவனத்தில் வேலை தயாராகக் காத்திருந்தது. அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு டாட்டா ஸ்டீலில் வேலை பார்க்க விண்ணப்பித்தார். அதற்கு தன்னைப் பற்றிய விவரங்களை தானே ஒரு டைப்ரைட்டரில் அடித்து விண்ணப்பித்து வேலையைப் பெற்றார்!
அடித்தளத்து தொழிலாளர்களுடன் இணைந்து அவர்களுடன் வேலை பார்க்க ஆரம்பித்த இவருக்கு தொழிலாளர்களின் கஷ்டங்களும் புரிந்தன; பணியில் உள்ள நுட்பங்களும் தெரிந்தன.
ஒரு முறை நிறுவனத்தின் மேலாளர்களுடன் மும்பையிலிருந்து நாசிக்கிற்குக் காரில் பயணப்பட்ட போது காரின் ஒரு டயர் பஞ்சரானது. கார் நிறுத்தப்பட்டது. டயரை சரிபார்த்துப் பொருத்தும் அந்த இடை நேரத்தில் மேலாளர்கள் ஓய்வாக அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் தங்கள் கூட இருந்த சேர்மனைக் காணோமே என்று திடுக்கிட்டுத் தேட ஆரம்பித்தனர். ரத்தன் டாட்டா டயரைப் பொருத்திக் கொண்டிருந்த டிரைவர் பக்கத்தில் இருந்து அவருக்கு உதவி செய்து கொண்டிருந்ததைப் பார்த்து நெகிழ்ந்தனர்.
படிப்படியாக தொழிலகத்தில் உயர்ந்த ரத்தன் டாட்டா குழுமத்தின் தலைமைப் பொறுப்பை 1991-ம் ஆண்டில் ஏற்றார்.2012 முடிய அந்தப் பொறுப்பைத் திறம்பட வகித்தார்.
உலகளாவிய விதத்தில் உயர்வு
இவரது தலைமைப் பொறுப்பில் டாட்டா குழுமம் உலகம் போற்றும் விதத்தில் உயர்ந்தது. இதற்கான காரணம் இவரது அயராத உழைப்பும், தீர்க்கதரிசனப் பார்வையும், தீவிர நாட்டுப் பற்றும், மேதைத் தன்மையுமே காரணங்களாக அமைந்தன.
2007-ல் டாட்டா நிறுவனம் பிரிட்டனின் ஸ்டீல் நிறுவனமான கோரஸை வாங்கியது.
1999-ல் அவர் போர்டு நிறுவனத்தைப் பெற முயற்சி எடுத்த போது போர்டின் தலைவரான பில் போர்டு, “உங்களுக்கு எதுவுமே தெரியாதே! எதற்காக பயணிகளின் காரைச் செய்யும் பிரிவை ஆரம்பித்தீர்கள்?” என்று அவரிடம் கூறினார். இதை மனதில் உள்வாங்கிக் கொண்ட டாட்டா 2008, ஜூன் மாதம் பொருளாதார நெருக்கடியால் போர்டு திவாலாகும் நிலைமையில் இருந்த போது போர்டின் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவரை வாங்க முன் வந்தார். அப்போது பில் போர்டு மனதார நன்றி தெரிவித்து “நீங்கள் எனக்கு ஒரு பேருதவியைச் செய்து விட்டீர்கள்” என்று நெகிழ்ந்து கூறினார். “ஒன்றுமே தெரியாதவர்’, ‘எல்லாம் தெரிந்தவரைக்’ காப்பாற்றிய இந்த சம்பவம் அவரது பெருந்தன்மையைக் காட்டியது!
டாட்டா குழுமம்
உப்பிலிருந்து உயரப்பறக்கும் விமானம் வரை டாட்டா குழுமம் தொடாத துறைகளே இல்லை எனலாம். ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு அங்கத்தில் டாட்டாவின் தயாரிப்பு இருக்கிறது என்பது வெளிப்படை உண்மையாகும். டாட்டா ஸ்டீல், டாட்டா கெமிக்கல்ஸ், டாட்டா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் (கணினித் துறை), டாட்டா மோட்டார்ஸ், டைடான் கம்பெனி, இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, டாட்டா பவர், ஏர் இந்தியா, டாட்டா காபிடல், டாட்டா கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் முதலீடு சுமார் 29 டிரில்லியன் ரூபாய் ஆகும். (ஒரு டிரில்லியன் என்பது ஒன்றுக்குப் பின்னால் 12 சைபர்களைப் போட்டு வரும் எண்ணாகும்) இந்த நிறுவனங்களில் சுமார் பத்து லட்சத்து இருபத்தியெட்டாயிரம் பேர்கள் வேலை பார்க்கின்றனர்.
21 வருடங்களில் தன் உழைப்பாலும் திறமையாலும் டாட்டா நிறுவனங்களை உலக தரத்திற்கு நிகராக உலகில் பேசப்படும் குழுமமாக ஆக்கினார் ரத்தன் டாட்டா. குழுமங்களின் வருமானத்தை தனது 21 வருட காலப் பணியில் நாற்பது மடங்கு உயர்த்திக் காட்டினார் அவர்.
அவர் தலைமையில் நூறு நாடுகளில் தனது கிளைகளை அமைத்தது டாட்டா குழுமம்.
‘எதையும் இந்தியாவில் தயாரித்துக் காட்டு” என்பது அவரது தேசபக்தியின் அடிப்படையில் எழுந்த ஒரு லட்சியமாகும்!
அவர் ஒரு திறமையான பைலட்டும் கூட. 2007-ல் F 16 பால்கன் விமானத்தில் பறந்த முதல் இந்தியராக அவர் திகழ்ந்தார்.
மும்பை தீவிரவாதிகளின் தாக்குதல்
2008 நவம்பர் 26ம்தேதி மும்பை தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. 166 பேர்கள் கொல்லப்பட்டனர். டாட்டா குழுமத்தில் ஒன்றான தாஜ்மஹால் பாலஸ் ஹோட்டலில் 33 பேர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர், இறந்தனர்.
நேரடியாக தனது காரில் பாதுகாவலர் யாருமின்றி துணிச்சலுடன் ரத்தன் டாட்டா ஹோட்டலுக்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளானவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் வாழ்நாள் முழுவதற்குமான உதவியை அவர் தந்தார்.
to be continued…..–