Post No. 13,804
Date uploaded in London – 22 October 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சீனப் பழமொழிக்கு தமிழில் நான்கு கதைகள்! (Post No.13,804)
ஷூ ஜூ டாய் யு –என்பது சீனாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கும் பழமொழி.
மரத்தின் அடிக்கட்டை பக்கத்தில் முயலைப் பிடிக்க காத்திருந்த ஆள் போல என்பது இதன் பொருள்.
இதற்குப் பின்னுள்ள கதை என்ன வென்றால்,
ஒரு விவசாயி மண்வெட்டியுடன் நிலத்தில் வேலை செய்யப் புறப்பட்டான். அப்போது வேகமாக ஓடிவந்த ஒரு முயல், பாதி வெட்டப்பட்ட மரத்தின் அடிக்கட்டையில் மோதி செத்து விழுந்தது. இதைப் பார்த்தவுடன் அவனுக்கு ஒரு ஐடியா உதித்தது. இப்படியே இங்கே நிற்போம். மேலும் பல முயல்கள் சாகட்டும்; நமக்கு அது நல்ல வேட்டை. நில வேலைக்குப் போக வேண்டாம் என்று அங்கேயே நின்றானாம்.இதற்குப் பின்னுள்ள கதையைச் சொல்லத் தேவை இல்லை. எல்லோரும் அவனைப் பார்த்து சிரித்து இருப்பார்கள்.
இது ஜப்பானிய மொழியிலும் உள்ளது; ஓனாஜி கிரிகாபு மெமோரிட்டே உசாஜி ஓ மாட்டே இரு என்று அவர்கள் சொல்லுவார்கள்; அதே பொருள்தான்
மொத்தக் கருத்து என்றால் வீணாக ஆசைப்பட்டு காத்திருத்தல்.
Kabu wo mamorite usagi o matte iru
同じ切り株を守って別のウサギを待っている
Onaji kirikabu o mamotte betsu no usagi o matte iru
தமிழில்
இதற்கு இணையான தமிழ்ப் பழமொழிகள்:
1.கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து அது உருகிக் கண்ணில் வழியும் போது பிடித்துக் கொள்வேன் .
2.இலவு காத்த கிளி போல என்பது இன்னும் ஒரு பழமொழி
3.அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானமா?
4.குளம் வற்றிய பின் கருவாடு தின்னலாம் என்று காத்திருந்ததாம் கொக்கு
****
இலவு காத்த கிளி போல
இலவம் பஞ்சு மரம் மிக அழகான சிவப்பு நிறக் காய்களை உடையது. அது பழம் போலவே இருக்கும்; கிளிகள் அதைக் கண்டு பழம் முற்றும் வரை காத்திருப்போம் என்று மரத்தில் நகராமல் உடகார்ந்து இருக்கும். பழம் முற்றிய பின்னர் அதுவே வெடித்துத் திறந்து விடும்; அப்போது பஞ்சு மட்டுமே வெளிவரும்; கிளி நினைத்தது போல சுவையான பழம் உள்ளே இராது; இதைத்தான் இலவு காத்த கிளி போல என்பார்கள்.
சிலர் குறிப்பிட்ட பெண்ணையோ ஆணையோ விரும்பித் திருமணம் செய்யக் காத்திருப்பார்கள். அந்தப் பெண்ணோ ஆணோ வேறு ஒருவருடன் ஓடிப்போனால், இலவுகாத்த கிளிபோல காத்திருந்தான் என்று சொல்லுவார்கள் ; எதிர்பார்த்த மாதிரி குணம் , படிப்பு, சீதனம் இல்லாவிடில் இப்படி நிகழலாம்.
****
இன்னும் ஒரு கதையும் தமிழில் உண்டு ; ஒரு முட்டாளுக்குத் திடீரென்று ஒரு யோஜனை உதித்தது. கொக்கும் வெள்ளை; வெண்ணெயும் வெள்ளை. நைசாகப் பின்புறம் சென்று அதன் தலையில் வெண்ணையை வைத்து விடுவோம். அது மீன் பிடிக்க வெய்யிலில் நிற்கும்போது வெண்ணை உருகி கண்களில் விழுந்து அது பார்வையை இழக்கும்; அப்போது எளிதில் பிடித்துவிடலாம் என்று எண்ணினான். அ தைக் கேட்ட பலரும் நகைத்து , முட்டாளே நீ வெண்ணையை வைத்திருக்கும் வரை அது சும்மா இருந்தால் அப்போதே பிடித்துவிடலாமே என்றார்கள்.
****
இன்னும் ஒரு கதை !
ஒரு குளத்தில் நிறைய மீன்கள் இருப்பதை ஒரு கொக்கு பார்த்தது. நாம் ஏன் கஷ்டப்பட்டு மீனைக் கொத்தப் போக வேண்டும் இங்கேயே பேசாமல் இருப்போம். கோடைகாலத்தில் குளம் வற்றிய பின்னர் அவ்வளவு மீன்களும் அங்கே இறந்து கருவாடு ஆகட்டும் நாம் சாப்பிடுவோம் என்று காத்திருந்தது அவ்வளவு சோம்பேறி (அதற்குள் செம்படவர்கள் வந்து எல்லா மீன்களையும் வலை வீசிப் பிடித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.)
****
இன்னும் ஒரு சுவையான கதை !
ஒரு முட்டாளுக்குப் பெரும் புதையல் கிடைத்தது; அதை எங்கே ஒளித்து வைக்கலாம் என்று யோசித்தான். மனைவிக்குத் தெரிந்தால் கூட ரஹஸ்யம் அம்பலம் ஆகிவிடும் என்று எண்ணி காட்டிற்குள் சென்று ஒரு மரத்துக்கு அடியில் அதைப் புதைத்தான்; எப்படி அந்த இடத்தை நினைவு வைத்துக் கொள்ளுவது என்று எண்ணிய போது தலைக்கு மேலே யானை வடிவில் ஒரு மேகம் வந்தது. ஆஹா, இனி கவலை இல்லை என்று வீட்டுக்குப் போய் மணலில் யானை என்று எழுதி வைத்துக் கொண்டான். அருகில் யாரும் இல்லையா என்று சுற்று முற்றும் பார்த்துவிட்டு வீட்டுக்குப் போனான்.
ஒரு வாரத்துக்குப் பின்னர் புதையலை எடுக்க காட்டுக்குப் போனான் ; எல்லா மரங்களும் ஒரே மாதிரியாக இருந்தன; வீணாகத் தோண்ட வேண்டாம் என்று ஆகாயத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான். இதை ஒரு வழிப்போக்கன் பார்த்தவுடன் அவனும் அமர்ந்து நின்று பார்த்தான். இந்தப் புதையல் விவசாயியோ கண்ணைச் சிமிட்டாமல் மேலே பார்த்துக் கொண்டே இருந்தான். வழிப்போக்கன் அவனை அணுகி “ஓ மனிதா” பல மணி நேரம் இப்படி ஆகாயத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாயே; நடுக்காட்டில் சூரியன் அஸ்தமித்துவிட்டால் விலங்குகள் அல்லவோ வரும்; ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டான்; அப்போது அவன் சொன்னான்: “போன வாரம் பார்த்த யானை வடிவ மேகம் வருவதற்காகக் காத்திருக்கிறேன்” என்றான். இதை கேட்டவுடன் வழிப்போக்கனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
ஓ முட்டாளே , யானை வடிவ மேகம் வராது; மேகமானது ஒரு மணி நேரத்துக்குள் காற்றினால் வெவ்வேறு உருவில் தோன்றும். மழை வந்துவிட்டாலோ அவ்வளவும் கரைந்து போகும் இனியும் நீ காட்டில் தங்கினால் புலி அல்லது யானை வந்து உன்னைத் தாக்கி விடும் என்று சொன்னவுடன் அந்த முட்டாள் ஏமாற்றத்துடன் வீட்டுக்குப் போனான் .
—subham—
Tags- கொக்கின் தலையில் வெண்ணெய் ,இலவு காத்த கிளி போல
அலை ஓய்ந்து ,குளம் வற்றிய பின் கருவாடு , முயல், சீனப் பழமொழி