WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 13.843
Date uploaded in London – –2 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆலயம் அறிவோம்
பட்டீச்சுரம்!
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்
உலகு பேணல் உறுவார்
துறவி எனும் உள்ளம் உடையார்கள்
கொடி வீதி அழகாய தொகுசீர்
இறைவன் உறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள்
வினை ஏதும் இலவாய்
நறவ விரையாலும் மொழியாலும்
வழிபாடு மறவாத அவரே
திருஞான சம்பந்தர் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தென்கரைத் தலங்களில் 23வது தலமாக அமையும் பட்டீசுரர் ஆலயமாகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணம் ரயில் நிலையத்திற்குத் தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது.
இறைவர் பட்டீஸ்வர நாதர்
இறைவி : பல்வளைநாயகி, ஞானாம்பிகை
தலவிருட்சம் வன்னி மரம்
தீர்த்தம் : ஞானதீர்த்தம்
இந்தத் திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு,
இந்தத் தலமானது சக்தி வனத்தில் உள்ளதென்று பட்டீச்சுர மாகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. இது பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட வனமாகும். அம்பிகை இங்கு தவம் செய்ததால் இது சக்தி வனம் என்ற பெயரைப் பெற்றது.
அம்பிகை முன் சிவபிரான் ஜடாமகுடதாரியாக பிரசன்னம் ஆனமையால் அவருக்கு கபர்த்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
அம்பிகைக்குப் பணிவிடை செய்ய காமதேனு தனது மூத்த பெண்ணாகிய பட்டியை அனுப்பினார். பட்டி அம்பிகைக்குப் பணிவிடை செய்து வரும் காலத்தில் சக்தி வனத்தில் தானும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜிக்க விரும்பி, அம்பிகை உயரமான பீடத்தில் மணலால் லிங்கத்தை ஸ்தாபித்து, சுப்ரமண்யர் உள்ளிட்ட பரிவார தேவதைகளையும் ஆவாஹனம் செய்து, பூஜித்தாள்.
சிவபெருமான் எதிரே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் கங்கை முதலிய அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் ஆவாஹனம் செய்து ஞான தீர்த்தம் என்று பெயர் வைத்து மணல் ரூபமாக இருந்த சிவபிரானுக்கு பூஜை செய்து வந்தாள்.
பட்டியின் பக்தியினால் உண்டான லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் இந்தத் தலத்திற்கு பட்டீச்சுரம் என்ற பெயரும் ஏற்பட்டன.
இங்கு தர்மலிங்கம் என்னும் ஒரு லிங்கம் ஒன்றும் உண்டு.
ஒரே காலத்தில் சக்திவனத்தையும். பட்டிலிங்கத்தையும், கபர்த்தீஸ்வரரையும் தரும லிங்கத்தையும் தரிசிப்பவர்கள் முக்தி அடைவர் என்பதில் ஐயமில்லை.
ஞானதீர்த்தத்தால் அபிஷேகம் செய்தவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவான்.
இத்தலம் விராடபுருஷனுக்குச் சுழிமுனைத்தலம் என்று இந்தத் தலத்தின் மான்மியம் கூறுகிறது.
சக்திமுற்றத்திற்கு தெற்கே உள்ள இந்தத் தலத்தில் சிதம்பரம் இரேவண சித்தர் என்பவர் நெடுங்காலம் வசித்து வந்தார்.
இத்தலத்தில் சித்திரசேன மஹாராஜா வன்னி மரத்தின் அடியில் புத்ர காமேஷ்டி யாகம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார்.
விஸ்வாமித்திரர் பிரம்மரிஷியாவதற்கு இங்கு யாகம் செய்தார். அவர் உண்டாக்கிய தீர்த்தத்தின் பெயர் காயத்ரீ தீர்த்தம்.
ஶ்ரீ ராமருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ராமேஸ்வரத்திலும் வீர ஹத்தி தோஷம் வேதாரணியத்திலும் சாயா ஹத்தி தோஷம் இங்கும் போயின.
இங்குள்ள வாணியன் கரம்பை அக்ரஹாரம் என்ற வீதியில் 20 வீட்டிற்கு 20 வேலியைக் கோவிந்த தீக்ஷிதர் தானம் செய்தார்.
பெரும் மகானான கோவிந்த தீக்ஷிதரின் சிலையும் அவரது மனைவியின் சிலையும் இங்குள்ள கோவிலில் அம்மன் சந்நிதியில் உள்ளன.. இவரது சரித்திரம் அனைவரையும் வியக்க வைக்கும் ஒன்றாகும். இவர் இங்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்.
மேதாதிதி என்ற மஹரிஷியின் சொற்படி பசுவைக் காத்திடாமல் இருந்த ஒரு மாணாக்கர் நாயாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். ஞான தீர்த்தத்தில் ஒரு தாசி ஸ்நானம் செய்து கூந்தலை உதற, அதிலிருந்து தெறித்த ஒரு துளி தீர்த்தம் நாய் மேல் பட்டு அந்த நாய் அந்தண ஜென்மத்தை அடைந்தது.
பட்டிச்சுரத்திற்கு மேற்கே மணல் மேடு ஒன்று உள்ளது. இதற்கு நந்தன் மேடு என்று பெயர்.
நந்தன் என்னும் அரசன் இழையாயிரம் பொன் பெற்ற பட்டொன்று கொணர்ந்த செட்டியாரிடமிருந்து அதை வாங்கித் தன் மனைவிக்குக் கொடுத்தான். அதற்கான பணத்தைப் பின்னர் தருவதாகக் கூறினான்.
அவன் திரும்பி வரும் போது தோலால் செய்த காசை அடித்து வழங்கி அவனிடம் தரவே அந்த வணிகர் நந்தனைச் சபிக்க மண்மாரி பெய்து மணல் மேடு ஆயிற்று. இந்த மணல் மேடை இப்போதும் காணலாம்.
இன்னொரு அதிசயமான நம்ப முடியாத ஆனால் உண்மையான ஒரு விஷயம் உள்ளது.
பிரமிக்க வைக்கும் இந்த அதிசயச் செய்தி என்ன தெரியுமா?
“எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்ததாக” ஒரு கல்வெட்டில் இருக்கிறது.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா சோழன் மாளிகையில் அந்த இடத்தை வெட்ட முயற்சி செய்கையில் கதண்டுகள் வெளிப்படவே பயந்த அந்த மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டான்.
கதண்டு என்றால் கருவண்டு என்று பொருள்.
எழுவான் என்பது சப்த கன்னிகைகள் இருக்குமிடம்
தொழுவான் என்பது மேற்கே முகமதியர் தொழும் இடமாகும்.
பக்தர்களும் ஆசாரியர்களும் அரசின் உதவியுடன் தீர ஆலோசித்துத் திட்டமிட்டு இந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும்.
இப்படிப்பட்ட அரிய செய்திகளை மகாமகோபாத்யாய ஶ்ரீ உ.வே.சாமிநாதையர் ஆராய்ந்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தலத்தில் ஆச்சரியங்களுக்கு எல்லையே இல்லை. திருஞான சம்பந்தர் இங்கு ஒரு தேவாரப் பதிகத்தை அருளியுள்ளார். அவருக்கு வெயில் படாமல் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபிரான் ஒரு பூதத்தைக் கொண்டு முத்துப்பந்தல் நிறுவச்செய்தார்.
இங்குள்ள கோயிலில் நந்திகள் சற்று விலகி இருக்கின்றன. திருஞானசம்பந்தர் வெளியிலிருந்து நன்கு தரிசனம் செய்தவதன் பொருட்டு இந்த நந்திகள் விலகி இருக்கின்றன.
முதலில் இருக்கும் நந்தி மிகப் பெரியது. நல்ல வேலைப்பாடுள்ளது.
இங்குள்ள துர்க்கையம்மன் சந்நிதி மிகுந்த சக்தி வாய்ந்தது, பிரபலமானது.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறவிப் பிணியை நீக்கி இளமையோடு ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் பட்டீஸ்வரரும் பல்வளை நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
–subham—
tags-ஆலயம் அறிவோம் ,பட்டீச்சுரம்!
e mail comment received
| Ayathuray Rajathilagam | 4 Nov 2024, 21:44 (8 hours ago) | ![]() ![]() ![]() | |
to me![]() | |||
கனம் சுவாமிநாதன் அவர்கட்கு அனேக வணக்கம்,
ஐயா, உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் நான். கடைசியில் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் – WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 13.843
Date uploaded in London – –2 November 2024 .
Contact – swami_48@yahoo.com
இன்னொரு அதிசயமான நம்ப முடியாத ஆனால் உண்மையான ஒரு விஷயம் உள்ளது. பிரமிக்க வைக்கும் இந்த அதிசயச் செய்தி என்ன தெரியுமா?
எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்ததாக ஒரு கல்வெட்டில் இருக்கிறது.
இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா சோழன் மாளிகையில் அந்த இடத்தை வெட்ட முயற்சி செய்கையில் கதண்டுகள் வெளிப்படவே பயந்த அந்த மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டான்.
கதண்டு என்றால் கருவண்டு என்று பொருள்.
எழுவான் என்பது சப்த கன்னிகைகள் இருக்குமிடம்.
தொழுவான் என்பது மேற்கே முகமதியர் தொழும் இடமாகும்.
பக்தர்களும் ஆசாரியர்களும் அரசின் உதவியுடன் தீர ஆலோசித்துத் திட்டமிட்டு இந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும்.
என்று பதிவு இட்டு இருக்கிறீர்கள். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.
அதே நேரத்தில் அதை நான் இன்னொரு பதிவில் படித்து இருக்கிறேன் – அதில்
–
எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே
காக்கை மூக்கின் நிழலிலே
கள்வர் போகும் வழியிலே
கண்டாலும் கம்மாளன் கண்ணிலே
எழுபது கோடி பசும்பொன்.
அதில் எழுவான் என்றால் சூரியன் என்றும தொழுவான் என்றால் வணங்குபவன் என்றும், காக்கை மூக்கு என்றால் மலை உச்சியின் நிழலாகவும், கம்மாளன் என்றால் பொற் கொல்லன் என்றும், எழுதி உள்ளனர். இது தவறா சரியா என்பது எனக்குத் தெரியாது. இதை உங்கள் வலைத் தளத்தில் பதி விடும் படி தாழ்மையுடன் மற்ற அன்பர்களின் அறிவுக்கும் ஏற்ப தந்து உதவுங்கள.
அடுத்து இரண்டாவதாக, காலஞானம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதை விரிவு படுத்தி தமிழில் எழுதினால் பலரும் பயன் பெறுவார்கள் என நினைக்கிறேன். அல்லது அமன் தமிழ் பிரதி கிடைக்கும் இடத்தை வாசகர்களுக்கு அறியக் கொடுங்கள்.
வணக்கம்.
அன்புடன்,
ராஜதிலகம்
05- 11 -2024
