Post No. 13,855
Date uploaded in London – 5 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்-43
Picture from Rayalaseema Book;thanks.
ஆந்திர மாநிலத்தின் ராயலசீமை பகுதியில் மூன்று கோவில்கள் சிற்பச் சிறப்புகள் காரணமாக புகழ் பெற்று விளங்குகின்றன.
தாடிபத்ரியில் உள்ள சென்ன கேசவர் கோவில், புக்க ராமலிங்கேஸ்வரரர் கோவில் மற்றும் சோமபாலம் என்ற ஊரில் உள்ள சென்ன கேசவர் கோவில் ஆகியன ஆகும்
சோமபாலம் / சோம பால்யம் கோவில் Chennakesava Swamy Temple , Sompalle .
மதனப்பள்ளியிலிருந்து 47 கி.மீ தொலைவிலும் கதிரியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும் உள்ள சோமபாலம் சென்னகேசவர் கோவிலின் தனிச் சிறப்பு சிற்பங்கள் மட்டுமல்ல; அங்கு லெபாக்ஷி போலவே ஓவியங்களும் உள்ளன. இந்த மூன்று கோவில்களும் விஜயநகர கால கலைகளின் உன்னத எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன.
ornate mandapa, chennakesava temple
இந்தக் கோவில் தொல்பொருட்துறையின் பாதுகாப்பில் உள்ளது
கோவிலின் தனிச் சிறப்புகள்
52 அடி உயரமான ஒரே கல்லிலான துவஜஸ்தம்பம்! இதை தீபஸ்தம்பம் என்றும் குறிப்பிடுகின்றனர் இதன் அடிப்பகுதி ஒரு இரண்டு அடுக்கு மேடையில் நிற்கிறது. அந்த மேடை முழுதும் சிற்பங்கள்தான்! .
கோலாட்டம் ஆடும் பெண்கள், நாட்டியம் இசைக்கலைஞர்களின் சிற்பங்கள், ரதியும் மன்மதனும் ஊடல் காரணமாக சண்டையிடும் காட்சி, சற்று உயரத்தில் யானைகள், சிங்கங்கள் முதலியனவற்றைச் செதுக்கியுள்ளனர். இதே போன்ற சிறிய தீப ஸ்தம்பம் ஒன்றுமுளது
கோவிலில் கல்வெட்டுகள் இல்லாததால் காலத்தைச் சரியாகச் சொல்லமுடியாது சுமார் 500 ஆண்டு பழமையானவை.
பாழடைந்த கோபுரத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் சாமரம் வீசும் பெண்கள், பூரணகும்பக் குடங்கள் , அழகிய பெண்கள், விஜயநகர கால தொப்பியும் மடிப்புகள் மிக்க அலங்கார ஆடைகளை அணிந்த ஆண்களையும் காணலாம்.
எல்லோரும் பக்தியுடன் கைகூப்பியவண்ணம் உள்ளனர்
சற்று தூரத்தில் ரதம் போல செதுக்கப்பட்ட கருடர் சந்நிதியும் இருக்கிறது .ஒரு மண்டபத்தின் கூரையில் மங்கிய நிலையில் இராமாயண ஓவியங்களும் காணப்படுகின்றன.
chintala venkata ramana temple
பன்னிரெண்டு தூண்கள் உடைய ஒரு மண்டபம் முழுக்க முழுக்க சிற்ப வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது. இந்த வட்டாரத்தில் கிடைக்கும் பச்சை வண்ண கருங்கற்களை ஆலயம் முழுதும் பயன்படுத்தி இருக்கிறார்கள். வேணுகோபாலன், பாலகிருஷ்ணன், தாமரை மலர், பெண்கள் அன்னப்பறவைகள், மலர்கள் முதலியவற்றைச் செதுக்கியுள்ளனர்
லெட்சுமிநாராயணர் சந்நிதியும் இருக்கிறது; ராமர் பட்டாபிஷேக கோலத்தில் இருக்கும் சிற்பமும் காணவேண்டிய சிற்பம் ஆகும்.
****
தாடிபத்ரி புக்கராமலிங்கேஸ்வரர் கோவில்
வீர நரசிம்மன் என்ற துளுவ வம்ச அரசனின் வட்டார ஆளுநர் இந்தக் கோவிலை ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுப்பினார். பெண்ணையாற்றின் கரையில் இது இருக்கிறது .
வடக்கிலும் தெற்கிலும் கோபுரங்கள் உள்ளன. பாழடைந்த நிலையில் கோவில் வளாகம் இருந்தாலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த கோவில் இது ; சிவ கணங்கள், செடி கொடிகள் கங்கை போன்ற நதி தேவதை செதுக்கப்பட்டுள்ளன. .தூண்களில் யாளி களைக் காணலாம். தேவிக்கு தனியான சந்நிதி உள்ளது
சிவலிங்கம் உடைய கற்பக கிரகத்தைத்தவிர ராம பிரானுக்கும் பார்வதிக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன அடிப்பகுதி முழுதும் அலங்கார சிற்பவேலைகளைக் காணலாம்.
இவைதவிர சிற்பங்கள் நிறைந்த பதினாறு கால் மண்டபமும் உளது
*****
150 ராமாயண சிற்பங்கள், 100 பாகவத சிற்பங்கள்
தாடிபத்ரி சிந்தல வெங்கட்ரமணா கோவில் பற்றி 29-ஆவது அத்தியாயத்தில் கண்டோம். அங்குள்ள 150, இராமாயண சிற்பங்களின், 100 பாகவத கிருஷ்ண லீலா சிற்பங்களின் மேல் விவரம் இதோ –
சிந்தல வெங்கட்ரமணா கோவிலில் உள்ள சிற்பங்கள் –
வட்டார ஆளுநர் திம்ம நாயுடு கல்வெட்டுதான் கோவிலில் உள்ள பழைய கல்வெட்டு; அதன் காலம் 1531 CE. விஷ்ணு கோவிலில் இராமாயண, மஹாபாரத பாகவத புராண சிற்பங்கள் இருக்கின்றன.
தசரதன் செய்த புத்ர காமேஷ்டி யக்ஞம் முதல் ராமர் பட்டாபிஷேகம் வரை வரிசைக் கிரமத்தில் சிற்பங்களை அமைத்துள்ளனர். சீதையின் அக்கினிப் பரீட்சை தனியாக வேறு ஒரு இடத்தில் இருக்கிறது. கோவிலில் உள்ள ராமாயணக் காட்சிகளின் எண்ணிக்கை 150 ஆகும் சில படங்களுக்கு தெலுங்கில் தலைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
ராமபிரான் ஏழு மரங்களை ஒரே அம்பினால் துளைக்கும் காட்சி,
ராவணன் சபையில் அனுமன், தனது வாலினைச் சுருட்டி ஆசனம் அமைத்து உட்கார்ந்து இருக்கும் காட்சி ஆகியன குறிப்பிடத்தக்கன.
பாகவதப் புராணக் காட்சிகள் 27 வரிசைகளில் காணப்படுகின்றன. குழந்தைப் பருவ கிருஷ்ணன் முதல் ருக்மிணி கடத்தல் வரை உள்ளன .
தொட்டிலில் கிருஷ்ணனைப் போட்டு யசோதா ஆட்டும் காட்சி, பூதனா கிருஷ்ணனுடன் இருக்கும் காட்சி பின்னர் அவளைக் கிருஷ்ணன் கொல்லும் காட்சி குறிப்பிடத்தக்கன .
Bugga Ramalingeswara Temple
வெண்ணை திருடுதல், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தல், யமுனையில் கோபிகளின் ஆடைகளை ஒளித்து வைத்தல், ரதத்தில் பலராமனுடன் செல்லும் காட்சி, குவலயாபீடம் என்னும் யானையை வெல்லுதல், கம்சன், சாணூரன், முஷ்டிகன் ஆகியோரை வெல்லுதல் முதலிய எல்லாவற்றையும் செதுக்கியுள்ளனர். இவைகளைப் பார்த்து முடித்த பின்னர், இராமாயண, பாகவத புராணங்களைப் படித்து முடித்த உணர்வு ஏற்படும்.
–SUBHAM—
TAGS- சோமபாலம் சோமபால்யம்,கோவில், PART-43, தாடிபத்ரி, புக்க ராமலிங்கேஸ்வரர் , இராமாயண, மஹாபாரத, பாகவத புராண சிற்பங்கள்