Post No. 13.864
Date uploaded in London – –8 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
6-11-24 மாலைமலர் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது
பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1
ச. நாகராஜன்
பிரார்த்தனை மகிமை வாய்ந்தது என்று உலகில் உள்ள பெரியோர்கள் எல்லாம் கூறியதை நாம் நன்கு அறிவோம். அனைத்து மதங்களும் வற்புறுத்தும் ஒரு வாழ்வியல் முறை பிரார்த்தனை.
அறிவியல் உலகில் இதை வலியுறுத்திச் சொன்னவர் பிரான்ஸை சேர்ந்த சர்ஜனும், பிரபல உயிரியல் நிபுணருமான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரல்!
பிரார்த்தனையின் மகிமை
வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும்
– திருமங்கை ஆழ்வார்– நெடுமாலவன் எனத் தொடங்கும் பாடல்
அறியாமையிலிருந்து அறிவுக்கு இட்டுச் செல்க!
இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க!
இறப்பிலிருந்து சாகா அம்ருதத்தன்மைக்கு அழைத்துச் செல்க
– உபநிடதம்
பிரார்த்தனையின் போது எதை வேண்டுகிறீர்களோ அதைப் பெறுவீர்கள்; வேண்டியது கிடைத்துவிட்டதாகவே நம்புங்கள். அதைப் பெறுவீர்கள்.
– இயேசுபிரான்
சொர்க்கத்திற்கு திறவுகோல் பிரார்த்தனை. ஆண்டவனிடம் அவனுடைய அருளன்பைக் கேளுங்கள். அவனிடம் கேட்கப்படவேண்டுமென்று அவன் பிரியப்படுகிறான். கேட்டவை கிடைக்கும் வரை பொறுமையுடன் முயற்சித்தலே மேலான பிரார்த்தனை!
– நபிகள் நாயகம்
இந்த உலகில் கற்பனைக் கனவுகளில் பெறுவதை விட அதிகமானவற்றை பிரார்த்தனை மூலம் பெறலாம்.
– கவிஞர் டென்னிஸன்
பிறப்பும் இளமையும்
அலெக்ஸிஸ் காரெல் 1873-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி பிரான்ஸில் லியான் என்னும் நகரில் பிறந்தார். இறை வழிபாட்டில் ஈடுபட்ட குடும்பம் அவருடையது. அவர் லியான் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் சேர்ந்து படிக்கலானார்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் கொலை
1894-ம் ஆண்டு பிரான்ஸின் ஜனாதிபதியான ஃப்ராங்கோயில் கார்னாட் என்பவர் லியானில் ஒரு அரசியல் மேடையில் பேசும்போது கொல்லப்பட்டார். அவரை அடிவயிற்றில் கத்தியால் குத்தி விட்டான் ஒருவன். இரத்த வெள்ளம் பெருகி ஓட அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்களால் முடியவில்லை. இரு நாட்கள் கழித்து அவர் ஆபரேஷன் டேபிளில் மரணமடைந்தார். ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டவர்களுள் ஒருவராக இருந்தார் மருத்துவ மாணவரான காரெல். இந்தச் சம்பவத்தால் திடுக்கிட்ட காரெல் இதற்கு ஒரு மருத்துவத் தீர்வைக் கண்டுபிடிக்க உறுதி பூண்டார். புரட்சிகரமான ஒரு அறுவைச் சிகிச்சை முறையை அவர் ஏற்படுத்தினார்.
காரெலின் தாயார் லேஸ் தொழிலில் பக்குவமானவர். சிறு சிறு ஊசிகளைக் கையாண்டு அருமையான பட்டு வேலைகளை அவர் செய்வார். காரெலும் இந்த உத்தியைத் தாயரிடமிருந்து கற்று அதில் நிபுணரானார்.
ஆக, இந்த உத்தியை அறுவை சிகிச்சையில் கையாளலாமே என்று அவர் நினைத்தார்; அதற்கென ஒரு உத்தியைக் கண்டு பிடித்தார். ரத்த நாளங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்த அவர் 1900-ம் ஆண்டிம் லியானில் உடல் கூறியல் பிரிவில் சேர்ந்து மிருகங்கள் மீதான சோதனைகளை மேற்கொண்டார். அங்கு தனது உத்தியைக் கையாண்டு ரத்த நாளங்களை ‘ரிப்பேர்’ செய்யும் முறையை உருவாக்கினார். ஒரு ஆய்வுப் பேப்பரையும் எழுதினார்.
இது மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1904-ம் ஆண்டு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலையில் சேர்ந்தார் அவர்.
டாக்டர் சார்லஸ் குத்ரி என்பவருடன் இணைந்து அவர் வேலை பார்த்தார். டாக்டர் சார்லஸ், காரெலின் திறமையைக் கண்டு வியந்தார். சிறுநீரகத்தைப் பதியம் செய்யும் உத்தி இதனாலேயே பின்னால் விளைந்தது. 1906-ல் காரல் நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் நிறுவனத்திற்கு மாறினார். அவரது பதியங்களும் அறுவை சிகிச்சை முறைகளும் அனைவரையும் பிரமிக்க வைத்தன.
1912-ல் அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
லூர்துஸ் பயணம்
1902-ம் ஆண்டு அலெக்ஸிஸ் காரெலின் ஒரு நண்பர் அவரை லியானிலிருந்து லூர்தூஸுக்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வருமாறு வேண்டுகோள் விடுத்தார். காரெல் ஒரு பகுத்தறிவுவாதி. லூர்துஸில் நடக்கும் அற்புதங்களை அவர் நம்பவில்லை. என்றாலும் கூட நண்பருக்காக ரயிலில் வர ஒப்புக் கொண்டார். மே மாதம் 28-ம் தேதி அன்று அவர் நோயாளிகளுடன் பயணப்பட்டார்.
ரயிலில் மேரி பெய்லி என்ற ஒரு பெண்மணி மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவளுக்கு இருந்த நோய் ட்யூபர்குலாஸ் பெரிடோனிஸ் என்னும் வியாதி. அவளைச் சோதித்த காரெல் அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டினார். லூர்துஸிற்குக் கொண்டு செல்லப்பட்ட அவள் கோமா நிலையில் அங்குள்ள மருத்துவமனையை அடைந்தாள். அவள் வயிற்றின் மீது லூர்துஸின் புனித தீர்த்தம் மூன்று முறை தெளிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம், அவள் நாடித்துடிப்பு சீராக ஆரம்பித்தது. அவள் வயிறில் இருந்த வீக்கம் வற்ற ஆரம்பித்தது. இன்னொரு முறை தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் அவள் முற்றிலும் குணமாகி விட்டாள். தனது படுக்கையிலிருந்து எழுந்த அவள் மறுநாள் தனியாக ரயிலில் ஏறி லியான் திரும்பினாள்.
இதைப் பார்த்த காரெலுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. 1937-ம் ஆண்டு அவளது 58-ம் வயதில் இறக்கும் வரை ஆரோக்கியத்துடன் அவள் இருந்தாள்.
எந்த வித மருந்தும் இல்லாமல் ஒரு தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண் எப்படி சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்? அந்த அற்புத சம்பவம் அவரை முற்றிலுமாக மாற்றியது.
இதற்குப் பின்னர் லூர்துஸிற்கு இன்னொரு முறை வந்த போது 18 மாத கண்பார்வையற்ற ஒரு குழந்தை கண்பார்வை பெற்ற சம்பவத்தையும் அவர் நேரில் கண்டார்.
பெரும் ஆத்திகராக மாறிய அவர் பிரார்த்தனையின் பலனைப் பற்றி அற்புதமாக ஒரு பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இன்று வரை அது போற்றப்படுகிறது!
to be continued……………………….