Post No. 13,868
Date uploaded in London – 9 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மஹாத்மா காந்தி உணவு விஷயத்தில் பல வினோத, மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்தினார். தனக்கு இந்துமத நூல்கள் சொல்வது போல நீண்ட ஆண்டுகள் வாழ ஆசை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அவர் ஏகாதசி உண்ணாவிரதமும் அவ்வப்போது மெளன விரதமும் கடைப்பிடித்தார். திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றபோதும் பிற்காலத்தில் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால் அதற்கு ஏற்ப சில மாறுதல்களையும் செய்ததாக அறிவித்தார். பசும்பாலை விட்டு ஆட்டுப் பாலை அருந்தினார். நிறைய பழங்களையும் நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்தார் இது பற்றிய விளக்கங்களை YOUNG INDIA யங் இந்தியா பத்திரிகையில் அவ்வப்போது எழுதியும் வந்தார். சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கே காண்போம்.
ஜன்மாஷ்டமி போன்ற இந்துமத பண்டிகை நாட்களிலும் அவர் சாப்பிடாமல் உபவாசம் இருந்தார்; பொதுவாக அவர் ஒரு உண்ணாவிரதப் பிரியர். தனது வாழ்நாளில் சில அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி 18 முறைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரது நீண்ட விரதம் 21 நாட்கள் நீடித்தது; .இதன் மூலம் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு உடலினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்றும் எண்ணினார்.
பசும் பால் பற்றி அவரது பொன்மொழி
குழந்தையாக இருக்கும்போது தாய்ப்பாலை அருந்திய, பின்னர் மனிதர்கள் பால் சாப்பிடத் தேவையே இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்
“It is my firm conviction that man need take no milk at all, beyond the mother’s milk that he takes as a baby.”
பால் சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தபோது அதை நியாயப்படுத்தக்கூடிய செய்திகளையும் உதாரணமாகக் காட்டினார். பசு மாடுகளையும் எருமை மாடுகளையும், அவைகளை வளர்ப்பவர்கள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்ற செய்திகள் அப்போது கல்கத்தாவிலிருந்து வந்தன
காந்திஜியுடன் ஹெர்மன் காலன்பாக் என்ற யூத மத கட்டிடக் கலைஞர் ஓருருவரும் தங்கி இருந்தார் தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வழக்கறிஞராகப் பணியாற்றியபோது அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் சொன்னார்: “நாம் எப்போதுபார்த்தாலும் பசும்பால் அவசியமில்லை என்று விவாதித்து வருகிறோம்; அதை விட்டுவிடலாமே” . உடனே காந்திஜி அதை ஏற்றார்
[Herman Kallenbach (March 1, 1871 – March 25, 1945) was a Lithuanian-born, Jewish South African architect whom Gandhiji met when he was working in South Africa and they became very close friends.]
அவர் நீண்ட காலம் பால் சாப்பிடாமல் இருந்தபோது உடல் மிகவும் பலவீனம் அடைந்தது. டாக்டர்கள் எச்சரித்த பின்னர் பசும் பாலுக்குப் பதிலாக ஆட்டின் பாலினை அருந்தி வந்தார்.
****
காந்திஜியின் உணவுக் கொள்கைகள் அவர் ஒரு யோகி போல வாழ ஆசைப்படத்தைக் காட்டுகின்றன; உணவினைக் குறைத்தால்தான் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதும் அவரது நம்பிக்கை.
யங் இந்தியா பத்திரிகையில் உணவு விஷயங்கள் பற்றி எழுதியபோது பித்துப்பிடித்த, விசித்திர எண்ணம் கொண்ட பைத்தியக்காரன் என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டார்
“I have been known as a crank, faddist, madman,” wrote Mahatma Gandhi in his weekly journal, Young India, in 1929.
மரக்கறி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்;
உப்பினைக் குறைக்க வேண்டும்;
சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட்டக்கூடாது ;
பசும் பால் மனிதர்களுக்குத் தேவை இல்லை.
****
மாமிசம் சாப்பிடாத ஒரு குஜராத்தி குடும்பத்தில் காந்திஜி பிறந்தார். ஆயினும் மாணவனாக இருந்த போது ரகசியமாக மாமிச உணவினை ருசித்தார்; வெள்ளைக்காரர்கள் மாமிசம் சாப்பிட்டதால்தான் இந்த நாட்டினை ஆள முடிந்தது என்று அவரது நண்பர்கள் கூறியதை நம்பிக்கொண்டு இதைச் செய்ததாக அவரே தனது சுய சரிதையில் சொல்லியுள்ளார். இங்கிலாந்துக்கு கல்வி கற்கச் சென்ற போது மதுவையும் மாமிசத்தையும் தொட மாட்டேன் என்று அம்மாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தார்.
****
காந்திஜிக்குத் தடை போட்ட குடும்பம் !
லண்டனில் அவர் வெஜிட்டேரியன் சொசைட்டியில் சேர்ந்தார் ; இதன் மூலம் அவருக்கு நிறைய ஆங்கில நண்பர்கள் கிடைத்தனர் . தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோதும் அவர் மாமிசத்தைத் தவிர்த்தார். இவருடன் நண்பனாக இருந்த ஒருவர் மாமிசத்தை வெறுத்தார்; அவரது வீட்டுக்கு காந்திஜி சென்றபோது நீ இனிமேல் இந்த வீட்டுக்குள் வரக்கூடாது; என் மகனை நீ கெடுத்துவிட்டாய்; உன்னால் என் மகன் மாமிசத்தைச் சாப்பிட மறுக்கிறான் என்று கண்டித்தனர்
காந்திஜி மாமிசத்தை வெறுத்ததற்கு இரண்டு காரணங்கள் :_
1.மிருகங்களின் மாமிசம் அந்த மிருக குணத்தையும் கொண்டு வரும்.
2.மிருகங்களை வதைப்பது பாவம்; அதாவது அஹிம்சைக் கொள்கை.
****
மனைவி விட்ட சவால்
காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் மனைவி கஸ்தூரி பாய் உடல் நலம் குன்றினார்; நீ உப்பினையும் பருப்பு , பயறு வகைகளையும் விட்டுவிட்டால் உன் நோய் நீங்கும் என்றார். உடனே மனைவி கஸ்தூரி பாய் , காந்திஜிக்குச் சவால் விட்டார்; ஊருக்குத்தான் உபதேசம்; உங்களால் இப்படி உப்பில்லாமல் பருப்பில்லாமல் இருக்க முடியுமா? என்று சவால் விட்டார் அப்போதே அவர் பருப்பு, பயறு வகைகளையும் துறக்க முடிவு செய்தார்.
கல்கத்தாவில் ஒரு வீட்டில் விருந்தாளியாகத் தங்கி இருந்தார்; அந்த வீட்டுப் பெண்கள் காந்திஜிக்காக பல பருப்பு வகைகளை வரவழைத்து இரவு முழுதும் அவற்றின் தோலியை உரித்து தயார் செய்தனர்; இந்தச் செய்தியும் காந்திஜியின் காதுகளை எட்டின. அதற்குப் பின்னர் கும்ப மேளாவுக்காக ஹரித்துவார் சென்ற பொழுது ஒரு பிரதிக்கினை செய்தார் இனிமேல் நான் ஒவ்வொரு நாளும் ஐந்து பண்டங்களை மட்டுமே சாப்பிடுவேன்; அதுவும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னரே சாப்பிடுவேன்.
வாழ்நாள் முழுதும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்
****
சமண மத செல்வாக்கு
காந்திஜிக்கு ராய்சந் என்ற சமண சமய நண்பர் ஒருவர் இருந்தார். பாலும் பிரம்மசர்யத்துக்கு எதிரி; ஏனெனில் அது பாலுணர்வினைத் தூண்டும் என்று சொல்லிவிட்டார். மேலும் சமணர்கள் சூரியன் மறைந்த பின்னர் சாப்பிட மாட்டார்கள்; அதில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் விழுந்துவிடக்கூடும் என்று சமணர்கள் கருதினர். இந்த இரண்டு விஷயங்களும் காந்திஜியின் மனதில் வேரூன்றின.
மேலும் மிருகத்திலிருந்து வரும் எந்தப்பொருளும் மிருக குணத்தைக் கொடுக்கும் என்றும் நம்பினார்
*****
மேலும் ஒரு புதிய சோதனை ; சமைக்காதே
உணவுப் பொருட்களை எதற்காக சமைக்க வேண்டும்? அப்படியே சமைக்காமல் சாப்பிடலாமே என்பதும் காந்திஜியின் கொள்கை. 1929 மே மாதம் இந்த சோதனையைத் துவங்கினார் பின்னர் யங் இந்தியா பத்திரிகையில் எழுதினார்; நான் பல ஆண்டுகளாக பழங்கள் பருப்பு வகைகளை சாப்பிட்டுவருகிறேன்; அவைகளை சமைக்கத் தேவையே இல்லை; பயறுவகைகளையும் இப்படிச் சமைக்காமல் சாப்பிடலாமே.; அவைகளை தண்ணீரில் ஊறவைத்தால் முளைவிட்டு மென்மையாகி விடும்.
(இப்போதும் லண்டனிலுள்ள குஜராத்தி கடைகளில் முளைவிட்ட பயறுவகைகளை உணவுப் பக்கத்தில் வைத்து விற்கிறார்கள்)
இதனால் பெண்களுக்கும் சமையல் அறைத் தொல்லைகள் இராதே என்றார்.
காந்திஜி தினமும் சாப்பிட்டது
முளைவிட்ட கோதுமை
தூளாக்கப்பட்ட வாதாம் பருப்பு
முழு வாதாம் பருப்பு
வெள்ளரிக்காய், சுரைக்காய்
கிஸ்மிஸ்
எலுமிச்சம் பழம்
தேன்
இவை அனைத்தையும் அவர் தினமும் பயன்படுத்தவில்லை; சிற்சில வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டார் .
ஆயினும் நான்கே மாதங்களில் அவர் வயிற்றுப்போக்கினால் உடல் வலு இழந்து எடை குறைந்தவுடன் இந்த சமைக்காத உணவு திட்டத்தினைக் கைவிட்டார் .
குழந்தைகளை மேலும் பெற்றுக்கொண்டால் அது பொது வாழ்வுப் பணிகளை , சேவைகளைப் பாதிக்கும் என்று சொல்லி பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க மனைவி அனுமதியுடன் முடிவு செய்தார்.
கடைசிவரை பழங்களும் பருப்பு வகைகளுமே பிரம்மசர்யத்துக்கு உகந்தவை என்று எழுதிவந்தார்
–subham—
Tags– மஹாத்மா காந்தி, உணவு, பிரம்மசர்யம், ஏகாதசி, உண்ணாவிரதம், சமண மத, செல்வாக்கு , பசும் பால், மது, மாமிசம், வேண்டாம்