பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! — 2 (Post.13,867)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.867

Date uploaded in London – –9 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-11-24 மாலைமலர் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 2 (Post.13,867)

ச. நாகராஜன்

பிரார்த்தனை பற்றிய காரெலின் கட்டுரை!

காரெலின் கட்டுரையின் முக்கியப் பகுதி இது தான்:- 

“பிரார்த்தனை என்பது வெறும் வழிபாடு மட்டுமில்லை. மனிதனின் வழிபடும் சக்தியின் கண்ணுக்குத் தெரியாத வெளிப்பாடு அது. மனிதன் உருவாக்கக் கூடிய வலிமை வாய்ந்த சக்தி அது. மனித உடலில் உள்ள சுரப்பிகளைப் போலவே பிரார்த்தனையின் சக்தியும் சுலபமாக நிரூபிக்கக் கூடியது தான். அதனுடைய நல்விளைவுகளை உடலில் ஏற்படும் அதிகமான நிதானம் மற்றும் அதிக மேதைத்தனத்துடன் பிரகாசிக்கும் புத்தி, ஆன்மீக பலம், மனித உறவில் அடிப்படையாக அமைந்துள்ள உண்மைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுதல் இவற்றால் அளந்து விட முடியும். 

“நீங்கள் உண்மையான பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டு விட்டீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை தீர்க்கமாகவும் வெளிப்படையாகத் தெரியும் அளவிலும் மாறிவிடும். பிரார்த்தனை

 நமது செயல்பாடுகளில் தனது அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறது. ஒளிமயமாகப் பிரகாசிக்கும் இவர்களின் முகத்திலும், உடலிலும் ஒரு சாந்தி தவழ்வதைப் பார்க்க முடியும்.

“புவிஈர்ப்பு விசை போல பிரார்த்தனையும் ஒரு வலிமை வாய்ந்த சக்தி. மருத்துவன் என்ற முறையில் மற்ற எல்லா வழிகளும் தோல்வியால் அடைபட்டு மூடிக்கிடக்கும் போது, உண்மையான பிரார்த்தனை

 மூலம் தங்கள் நோய் நீங்கி நலம் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். ‘இயற்கையின் நியதிகள்’ என்று சொல்லப்படுபவற்றை உலகில் மீறக் கூடிய ஒரே சக்தி பிரார்த்தனை தான்! பிரார்த்தனை அதிசயிக்கத்தக்க முறையில் செயல்பட்டு நல்லவை நடக்கும்போது அவற்றை “அற்புதங்கள்” என்கிறோம். ஆனால் பிரார்த்தனை மூலம் தினசரி வாழ்விற்கு வற்றிடாத ஜீவசக்தி கிடைக்கிறது. இதை உணர்ந்த ஆண்களும், பெண்களும் நிலையான அமைதியான அற்புதத்தை ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள்.

“பிரார்த்தனையை எப்படி விளக்குவது? கடவுளை அடைய மனிதனின் முயற்சி அது. கண்ணுக்குப் புலனாகாத, அனைத்தையும் படைத்த, உயரிய அறிவு, உண்மை, அழகு வலிமையாய் இருப்பதோடு தந்தையாகவும், நம்மை மீட்பவராகவும் இருப்பவரை அடையும் முயற்சி அது. பிரார்த்தனையின் லட்சியம் அறிவுக்குப் புலப்படாமல் மறைந்தே இருக்கும். ஏனெனில் மொழியும், சிந்தனையும் கடவுளைப் பற்றி விவரிக்க முற்படும்போது தோல்வியை அடைகிறது.” 

போர்வீரர்களுக்கு சிகிச்சை

1914ல் முதல் உலகப் போர் ஆரம்பிக்கவே பிரான்ஸில் காயம் பட்ட போர்வீரர்களுக்கான சிகிச்சையில் காரெலின் மருத்துவ உத்திகள் கை கொடுத்தன. போர் முடிந்தவுடன் அவர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.

ஒரு கோழியின் இதயத்தை விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கரைசல் ஒன்றில் அவர் வைத்திருக்க, அது முப்பது வருட காலம் துடித்து இயங்கிக் கொண்டிருந்தது!

 1935-ம் ஆண்டு பிரபல விமான பைலட்டான சார்லஸ் லிண்ட்பெர்க் தனது உறவுப் பெண்மெணி இதய நோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டு வருந்தி காரெலைத் தொடர்பு கொண்டார்.  இதயத்தைத் துடிக்க வைக்க ஒரு பம்ப்- ஐ காரெல் உருவாக்கினார். இதன் மூலம் இதய நோய்க்கான சிகிச்சையில் ஒரு புது சிகிச்சை முறை உருவானது. 

மேன் தி அன்க்னோன் (MAN THE UNKNOWN) 

1935-ம் ஆண்டு காரெல் எழுதி வெளியிட்ட மேன் – தி அன்க்னோன் என்ற புத்தகம் உலகளாவிய விதத்தில் பிரபலமானது. மனித வாழ்க்கையில் மனித உடல் பற்றிய தனது எண்ணங்களை உடலியல், இயற்பியல் மற்றும் மருத்துவ இயல் ஆகியவற்றில் உள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இதில் அவர் விவரித்துள்ளார்.

தரமில்லாத மனிதர்கள் வாழும் உலகை விட தரமான மனிதர்கள் வாழும் புதிய இனத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரது எண்ணம், இந்த புதிய அறிவு சார்ந்த நல்லியல் மனிதர்கள் நிறைந்த ஒரு இயலுக்கு  ‘யூஜெனிக்ஸ்’ என்று பெயர். ஆனால் இது கடுமையான விவாதத்திற்கு உட்பட்ட கொள்கையாக ஆனது

 ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லரின் கனவும் கூட இதே போல, தன் வழியிலான ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது தான். சார்லஸ் லிண்ட்பெர்க் ஹிட்லர் உருவாக்கிய கமிட்டியில் உறுப்பினராக இருந்தார்.  அவரது நெருங்கிய நண்பராக இருந்த காரெலுக்கு நல்லியல் மனிதரை உருவாக்கும் கொள்கை பிடித்திருந்தது.

இரண்டாம் உலகப் போர் துவங்கவே 1939-ல் காரல் பிரான்ஸுக்குத் திரும்பினார்.

தன்னால் ஒரு நல்லியல் மனித உலகை உருவாக்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிய காரெல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் போர் முடிவுக்கு வந்த பின்னர் இவர் மீது நாஜி ஆதரவாளர் என்ற குற்றம் சாட்டப்பட்டு வழக்கு போடப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரேயே இவர் மரணமடைந்தார்.

 ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் காரெல் பெற்றார்.

 மறைவு

காரெல் தனது 71-ம் வயதில் 1944-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதியன்று பாரிஸில் மரணமடைந்தார்.

காரெலின் பொன்மொழிகள்

காரெலின் பொன்மொழிகளில் சில:

உளமார்ந்த பிரார்த்தனையைச் செய்யும் வழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால் உங்களது வாழ்க்கை வியக்கத்தக்க வகையில் பிரமாதமான மாறுதலைப் பெறும்.

பிராத்தனையே ஒருவர் உருவாக்கக் கூடிய அதிக சக்தி வாய்ந்த ஆற்றலாகும். அது நமது அன்றாட வாழ்வில் நீடித்து இருக்கும் ஒரு ஆற்றலைத் தருகிறது.

 வாழ்க்கையை நல்லவிதமாக திறம்பட வாழ்வதற்கான வழி, ஒவ்வொரு நாள் காலையிலும் அன்று செய்ய வேண்டியவை பற்றிய திட்டத்தை தீட்டி நாளின் முடிவில் இரவில் என்ன விளைவுகளைப் பெற்றிருக்கிறோம் என்பதை அலசிப் பார்ப்பது தான்.

 கவலைகளை நீக்கப் போரிடத் தெரியாதவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்.

 அற்புத மனிதர்

உடல் ஆரோக்கியம் மேம்பட புதிய சிகிச்சை முறைகளைத் தந்ததோடு, உள்ளம் மேம்பட பிரார்த்தனையின் மகிமையையும் உலகிற்கு விளக்கிய அலெக்ஸிஸ் காரெல் ஒரு அற்புதமான மனிதர் என்பதில் ஐயமில்லை.

  ***

Leave a comment

Leave a comment