Post No. 13,878
Date uploaded in London – 12 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கனவில் எதைக் கண்டால் சுபச் செய்திகள் வரும்? புத்தர் பிறப்பதற்கு முன்னர் மாயாதேவி கனவில் இந்திரனின் வெள்ளை யானை வந்தது ; சித்தார்த்தன் பிறந்து கெளதம புத்தன் ஆனான் . அவருக்கு முன்னால் பிறந்தவர் மஹாவீரர்.; அவ்வையார் வாக்கின் படி புலன் ஐந்தையும் வென்ற மாவீரன் ; உலகில் இரண்டு பேருக்கு மட்டுமே மாவீரன் பட்டம்; ஒன்று வர்த்தமான மஹாவீரர்; அவருக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஆஞ்சனேயன்; ஏனென்றால் இவர்கள் இருவரும் ஐம்புலன்களை வென்றவர்கள்.
மஹாவீரர் பிறப்பதற்கு முன்னர், அவரது தாயாருக்கு 14 சுப சகுனங்கள் கனவில் வந்தன ; அவையாவன:– மகாவீரரின் அன்னையின் பெயர் த்ரிசலா தேவி ; அவருடைய கனவில் யானை, காளை மாடு, சிங்கம் ,மகா லெட்சுமி, மாலைகள் , சந்திரன், சூரியன், பறக்கும் கொடி, தங்கக்குடம் , தாமரைத் தடாகம், அலைகடல், விண்ணில் பறக்கும் விமானம் ,இரத்தின நகைகள் , புகையற்ற தீ ஆகியன தோன்றின.
காளிதாசன் ரகுவம்ச காவியத்தில் தசரதன் மனைவியர் மூவரும் கண்ட கனவில் தோன்றிய சுப சகுனங்களை வருணிக்கிறான் :
गुप्तम् ददृशुरात्मानम् सर्वाः स्वप्नेषु वामनैः।
जलजासिकदाशार्ङ्गचक्रलाञ्छितमूर्तिभिः॥ 10-60
சங்கு , சக்கரம் , கத்தி , கதை , வில் ஆகியவற்றை ஏந்திய ஒரு குள்ளமான மனிதர் தங்களைப் பாதுகாப்பதாகக் கனவு கண்டனர்- 10-60 ரகுவம்சம்
இதற்கு உரை எழுதியோர் இவை விஷ்ணுவின் பஞ்ச ஆயுதங்கள் என்று கூறுகின்றனர் அவை பாஞ்சஜன்யம், நந்தகம், கெளமோதகி, சார்ங்கம், சுதர்சனம் எனப்படும். விஷ்ணு பெரிய உருவத்தில் தோன்றினால் கர்ப்பிணிகள் பயந்து விடுவார்கள் என்பதால் குள்ள வடிவு என்று காளிதாசன் எழுதியதாகவும் வியாக்கியானம் போகிறது!
हेमपक्षप्रभाजालम् गगने च वितन्वता।
उह्यन्ते स्म सुपर्णेन वेगाकृष्टपयोमुचा॥ 10-61
விஷ்ணுவின் வாகனமாகிய கருடன் பொன்மயமான மேகத் திரளிடையே தங்களை அழைத்துச் செல்வதாகவும் கனவு கண்டனர்.
बिभ्रत्या कौस्तुभन्यासम् स्तनान्तरविलम्बितम्।
पर्युपास्यन्त लक्ष्म्या च पद्मव्यजनहस्तया॥ 10-62
அடுத்த கனவில் விஷ்ணுவின் கவுஸ்துப மணியை அணிந்த லெட்சுமி தாமரை மலர் என்னும் விசிறியால் வீசி, தங்களை உபசரிப்பதையும் பார்த்தனர் .
कृताभिषेकैर्दिव्यायाम् त्रिस्रोतसि च सप्तभिः।
ब्रह्मर्षिभिः परम् ब्रह्म गृणद्भिरुपतस्थिरे॥ 10-63
இன்னும் ஒரு கனவில் ஏழு ரிஷிகளும் ஆகாச கங்கையில் குளித்துவிட்டு வந்து தங்களை உபசரிப்பதாகவும் பார்த்தனர்.
विभक्त आत्मा विभुस्तासामेकः कुक्षिष्वनेकधा।
उवास प्रतिमाचन्द्रः प्रसन्नानामपामिव॥ 10-65
சந்திரன் எப்படி 3 நீர்நிலைகளில் பிரதிபலிக்கிறானோ அப்படி கடவுள் 3 வடிவங்களில் வந்தார் என்றும் கவி பாடுகிறார் .
இவையெல்லாம் பத்தாம் சர்க்கத்தில் வரும் பாடல்கள்
****
இதற்கு முன்னர் எட்டாவது சர்க்கத்தில் அஜன் கண்ட கனவு வருகிறது அவன் தசரதனுக்கு முந்திய சூர்ய வம்ச அரசன் .
மகன் தசரதன் சிறுவனாக இருந்ததால் மனைவி இந்துமதி இறந்த பின்னரும் அஜன் எட்டு வருடங்கள் உயிர் வாழ்ந்தான் எப்படியென்றால் அவளது படத்தைப் பார்த்தும் கனவில் அவளை சந்தித்து ஆனந்தம் அடைந்தும் உயிரைத் தக்கவைத்துக் கொண்டான். .
तेनाष्टौ परिगमिताः समाः कथंचिद्बालत्वादवितथसूनृतेन सूनोः|
सादृश्यप्रतिकृतिदर्शनैः प्रियायाः स्वप्नेषु क्षणिकसमागमोत्सवैश्च॥ 8-92
****
சில நேரங்களில் நமக்கு கெட்ட கனவுகள் வரும்; விழித்தவுடன் அப்பாடா , இது சொப்பனம்தானே என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவோம். இந்த மனித அனுபவத்தையும் காளிதாசன் பயன்படுத்துகிறான்.
ராம-ராவண யுத்தத்தில் இந்திரஜித் நாக பாசங்களால் ராம லெட்சுமணர்களைக் கட்டினான் ; ஆனால் கருடன் வந்தவுடன் அவை அவிழ்ந்தன; அதாவது கனவில் தோன்றிய கஷ்டம்போல சிறிது நேரமே நாகபாசம் இருந்தது
गरुडापातविश्लिष्टमेघनादास्त्रबन्धनः।
दाशरथ्योः क्षणक्लेशः स्वप्नवृत्त इवाभवत्॥ 12-76
****
ஏண்டி, ராத்திரி தூக்கத்தில் அழுகிறாய்? சிரித்தாய் ?
மேகதூத காவியத்தில் உள்ள எல்லாப் பாடல்களின் கருத்தும் உவமையும் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன.
காளிதாசன் ஒரு சுவையான செய்தியை (பாடல் 111) அதில் கூறுகிறான்
கணவன் மனைவி இருவரும் சுகமாகத் தூங்கிக் கொண்டு இருந்தனர்; அவள் கணவனின் கழுத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்கினாள் ; திடீரென்று மனைவி தூக்கத்தில் அழுகிறாள் ; கணவன் அவளை எழுப்பி என்ன ஆயிற்று? ஏன் இப்படி அழகிறாய்? என்று கேட்டவுடன் அவள் சிரிக்கிறாள் ; கணவன் என்னடீ? ஏன் இப்படிச் சிரிக்கிறாய்? என்று கேட்கிறான் .
அவள் சிரித்துக்கொண்டே “கள்ளப்பயலே! நீ இன்னொரு பெண்ணுடன் விளையாடுவதாகக் கனவு கண்டேன்” என்னு சொல்லி சிரிக்கிறாள் .
பெண்களுக்குத் தங்கள் கணவன் மீது எப்போதும் சந்தேகம் ஏற்படும். இதைத் திருவள்ளுவர் கணவன் தும்மல் போட்டால் கூட மனைவி சந்தேகப்படுவதாகக் காட்டுகிறார். இந்த உள்ளவியல் (Psychological) உண்மையை அழகாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டான் காளிதாசன்.
****
இன்னும் ஒரு பாடலில் நிலவு ஒளியில் அவள் தூங்க முடியாமல் விரக தாபத்தில் தவிப்பதைச் சொல்லிவிட்டு, கனவில் கூட என் கணவனைக் காண முடியவில்லையே என்று வருந்துவதைப் பாடுகிறான். தூக்கம் வந்தால்தானே கனவுகள் வரும்!
****
இன்னும் ஒரு பாடலில் ஏ மேகமே ! நீ உன் இடியை அடக்கி வாசி ; அவள் ஒருவேளை என்னை அணைத்துக் கொண்டு தூங்குவதாக கனவு கண்டு கொண்டிருப்பாள் நீ இடி, இடித்தால் அவள் எழுந்துவிடுவாள் என்று மேகத்தை எச்சரிக்கிறான் காளிதாசன்
****
இதே போல அவளது அணைப்புக்காக கனவில் கைகளை அகல விரித்து ஆகாயத்தை நோக்கி நிற்பதாகவும் , அப்போது முத்துக்களைப் போன்ற பெரிய கண்ணீர் துளிகள் வழிந்து ஓடுவதையும் பாடுகிறான் —subham —
Tags — கனவு , மேக தூதம் ரகுவம்சம் , மனைவி , கணவன் அஜன், தசரதன் ஏன் சிரிக்கிறாய், ஏன் அழுகிறாய் மனைவி பதில், சுப சகுனங்கள் , panchayudha