Post No. 13,882
Date uploaded in London – 13 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சங்க இலக்கியத்திலும் பழந்தமிழ் நூலான தொல்காப்பியத்திலும் நாற்பதுக்கும் மேலான கனவுகள் பற்றிய குறிப்புகள் உள. உலகில் கனவுகள் பற்றி இந்துக்கள் சொன்ன அளவுக்கு வேறு யாரும் சொன்னதில்லை. காளிதாசன் சுபசகுனங்கள் பற்றி கனவில் கண்டதை எழுதியுள்ளான். பிராமணர்கள் தினமும் மூன்று வேளைகளிலும் செய்யும் சந்தியாவந்தனத்தில் கெட்ட கனவுகள் வரக்கூடாது என்று மந்திரம் சொல்கின்றனர் ஒருகாலத்தில் மதுரை ஆதீனகர்த்தராக இருந்தவர் பெரிய அறிஞர். அவர் எழுதிய இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும் என்ற நூலில் கனவுகளில் முன்னோர்கள் தோன்றி எச்சரித்தது அப்படியே நடந்தது என்று தக்க உதாரணங்களுடன் எடுத்துக்காட்டியுள்ளார்.
மேலை நாட்டினர் கனவுகள் என்பது நம் வாழ்வில் ஏற்பட்ட அவியல் காட்சிகள் , குழம்பிப் போன காட்சிகள் என்று மட்டும் சொல்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது விலங்குகளும் கனவு காண்கின்றன என்று நாம் சொன்னதை ஒப்புக்கொள்கிறார்கள்; இன்னும் கொஞ்ச காலம் கழித்து நாம் சொல்லும் அனைத்தையும் சொல்லி ஏதோ அவர்கள் கண்டுபிடித்ததாகவும் எழுதப்போகிறார்கள். சில அறிஞர்கள் மட்டும் கணித மேதை ராமானுஜம் போல கனவுகளை ஒப்புக்கொண்டு, கதை, கட்டுரைகள், அறிவியல் உண்மைகள் கூட கனவில் கண்டதாக எழுதி இருக்கிறார்கள்
மனிதர்கள் கனவு காணாமல் தூங்கவே முடியாது என்பதை முதலில் கண்டுபிடித்தவர்களும் இந்துக்களே. இப்பொழுது நம்முடைய பெயரைச் சொல்லாமல் அதை எல்லா என்சைக்ளோபீடியாக்களிலும் காணலாம். ஆனால் மேலை நாட்டினருக்கு கிரேக்கர்கப் பற்றி மட்டுமே தெரியும் ஏனெனில் அது அண்டை நாடு. வேறு உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது ஆகையால் கிரேக்கர் என்ன புலம்பினார்களோ அது பற்றி மட்டுமே எழுதி இருக்கிறார்கள் ;நிற்க.
****
காளிதாசன் சொன்னதை தொல்காப்பியரும் சொன்னதை முதலில் காண்போம்
காதல் நோய் வயப்பட்டவர்கள் கனவில் புலம்புபவதையும் தூக்கம் வராமல் தவிப்பதையும் தொல்காப்பியரும் அவருக்கு முன்னால் வாழ்ந்த காளிதாசனும் பாடி இருக்கிறார்கள். தொல்காப்பிய பொருள் அதிகாரத்திலும் காளிதாசனின் மேக தூதம், ரகுவம்ச காவியத்திலும் இதைக் காண்கிறோம்.
ராமபிரான் தோன்றிய ரகுவம்சத்தில் காம வெறிபிடித்த சில மன்னர்களும் பிற்காலத்தில் தோன்றினர்; அவர்களில் ஒருவன் இரவில் காமக்கிழத்திகள் பற்றி அவர்களின் பெயர்களைக் கூப்பிட்டுப் புலம்பியதையும் அவனது மனைவியர் அதைக் கண்டித்ததையும் ரகு வம்சத்தில் காளிதாசன் பாடியுள்ளான். அதே போல கனவில் மனைவி அல்லது கணவரைக் காண்பது அல்லது தூக்கம் வராமல் தவிப்பது ஆகியவற்றை மேக தூதத்தில் காண்கிறோம்.
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் — தொல்.1216
காதல் கைம்மிகக் கனவில் அரற்றலும் – தொல்.1061
स्वप्नकीर्तितविपक्षमङ्गनाः
प्रत्यभैत्सुरवदन्त्य एव तम्।
प्रच्छदान्तगलिताश्रुबिन्दुभिः
क्रोधभिन्नवलयैर्विवर्तनैः॥ 19-22
svapnakīrtitavipakṣamaṅganāḥ
pratyabhaitsuravadantya eva tam |
pracchadāntagalitāśrubindubhiḥ
krodhabhinnavalayairvivartanaiḥ || 19-22
****
இன்னும் ஒரு குறிப்பு
கனவும் உரித்தால் அவ்விடத்தானே- — தொல்.1143
***
சங்கத் தமிழ் நூல்களில் கனவுகள் இடம்பெறும் நூல்களும் பாடல்களின் எண்களும்
குறுந் தொகை – 148, 30
நற்றிணை – 87, 175
ஐங் குறுநூறு – 234
அகநானுறு – 141; 303; 353; 379; 132; 170
பதிற்றுப்பத்து – 19; 20; 44; 79; 89; 98; 11
புறநானுறு – 377; 387; 390
பரிபாடல் – 8-77; 8-103
கலித் தொகை – 90-22; 144-5; 147-57;
பொருநர் ஆற்றுப்படை – line 98
****
இவைகளில் சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.
கனவிற் காணும் இவளே
நனவிற் காணாள் நின் மார்பே
ஐங் குறு நூற்றில் (234) வரும் இந்தப் பாடலில் ஒரு கனவுக்காட்சி வருகிறது ;பெண் ஒருத்தி காதலை எண்ணி எண்ணி தூங்குவதே இல்லையாம்; அப்படித் தூங்கினாலும் கொஞ்ச நேரம் மட்டும் தூங்குகிறாளாம் ; அதிலும் கணவன் வருகிறான்; ஆயினும் அவன் மார்பைத் தழுவும் நேரம் குறைவு ;உடனே விழித்தெழுந்து மேலும் கஷ்டப்படுகிறான்; உடல் மெலிந்து வளையல் கழன்று விடுகிறது .
*****
புறநானூறு Purananuru 377
தமிழ் மன்னர்கள் மகத்தான இந்துத்வா ஆர்வலர்கள்; முதுகுடுமி பெருவழுதி செய்த யாகங்களைக் காளிதாசனும் ரகு வம்சத்தில் பாடுகிறான். அவர்கள் யாகத்திற்காக செய்த அவப்ருத ஸ்நானத்தால் எப்போதும் நனைந்த ஆடைகளுடன் காட்சி தருவதாக பாண்டிய மன்னர்களையும் அகஸ்திய முனிவரையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறான் காளிதாசன்; சோழ மன்னர்களும் அதில் சளைக்கவில்லை. அவன் ராஜ சூய யாகம் செய்து பாண்டிய , சேர மன்னர்களையும் அழைத்து அவ்வையாரையும் அழைக்கிறான் என்கிறது புறநானூறு.
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளி வழங்கிய கொடை
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்;
கனவில் மட்டுமே ஏழைகள் காணும் தங்க இரத்தின நகைகளை அவன் வாரி வழங்கினானாம்
****
புறநானூறு Purananuru 387
சேர் மன்னன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனும் கொடை யில் சிறந்து விளங்கினான் ; அவனும் கனவில் மட்டுமே காணக்கூடிய செல்வத்தை அள்ளிதந்தான் என்கிறார் புலவர் ;
யானை குதிரை பசுமாடுகள் பெருமளவு தானியக் குவியல்களை அவன் தருகிறான்
என் சிறுமையின், இழித்து நோக்கான், 20
தன் பெருமையின் தகவு நோக்கி,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
மனைக் களமரொடு களம் என்கோ? 25
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்
நல்கியோனே, நசைசால் தோன்றல்,
****
புறநானூறு Purananuru 390
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னனின் அரண்மனையின் பாதுகாப்பு அரணை எண்ணி வியக்கிறார் புகழ்பெற்ற சங்க கால அவ்வையார் ; அவனைப் போற்றுவோர் மட்டுமே உள்ளே வரமுடியுமாம் ; எதிரிகளோ அந்தக் கோட்டைக்குள் நுழைவதை கனவிலும் எண்ண முடியாதாம்
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் 5
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
****
தமிழில் ஒரு பழமொழி உண்டு – திருடனுக்குத் தேள் கொட்டியது போல என்று
அவன் கத்தவும் முடியாது உதவிக்கு யாரையும் அழைக்கவும் முடியாது இது போல கனவில் பேயைக் கண்டவன் அது பற்றி சொல்லவும் முடியாது அதை மறக்கவும் முடியாது சொன்னால் பயம் அதிகரிக்கும் ; மற்றவர்கள் நகைப்பார்கள் இதோ அந்தப்பாடல்
பேய் கண்ட கனவில்- அகம் 303
****
செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை பற்றிப் பாடாத தமிழ்ப் புலவர் இல்லை; கனவு போல செல்வம் வ ந்து போகிறது என்பது புலவரின் துணிபு
நனவில் இயன்றதாயினும் கங்குல்
கனவின் அற்று அதன் கழிவே – அகம் 379
****
கனவுகள் நனனாவாவது இல்லையே என்று புலம்புகிறார் இன்னுமொரு புலவர்
கனவு அழிந்தனையவாகி நனவின்
நாளது செலவும் மூப்பின் வரவும் – அகம்353
இவ்வாறு நிறைய சுவையான விஷயங்களைக் காணலாம்
சங்க காலத்துக்குப் பின்னர் எழுந்த திருக்குறளிலும் காலம் சொல்ல இயலாத தமிழ்ப் பழமொழிகளிலும் கனவு பற்றி நிறையவே உள்ளன; அவைகளையும் காண்போம்
To be continued………………………………………
TAGS- தொல்காப்பிம்,கனவுகள், சங்க இலக்கியம், பெண்கள் , புலம்பல், காதல் நோய் , கொடை , அவ்வையார்