Putrakameshti Yagam performed by Dasaratha
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.884
Date uploaded in London – –14 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (17)
ராமாயணத்தில் வரங்கள் (17) ஒரு சாது கேகய ராஜனுக்குக் கொடுத்த வரம்!
ச. நாகராஜன்
அயோத்யா காண்டத்தில் முப்பத்தைந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ ஸுமந்திரர் கைகேயியை நிந்திப்பது’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமரை வனம் அனுப்பச் சொல்லிய கைகேயியை சுமந்திரர் பார்த்து பெருமூச்சு விட்டு இரு கண்களும் கோபத்தால் சிவக்க பின்வரும் சொற்களைக் கூறலானார்:
“தேவியே! உங்களை உங்களின் கணவரின் உயிரை அழிக்கின்றவராக எண்ணுகிறேன். தங்களின் குமாரர் பரதன் சக்கரவர்த்தியாக ஆகட்டும். நாங்கள் ராமர் எவ்விடத்திற்குச் செல்கிறாரோ அங்கே கூடச் சென்று விடுகின்றோம். மாமரம் ஒன்றை வெட்டி விட்டு அதற்கு பதிலாக வேப்பமரத்தை ஒருவன் வளர்த்தால் அதற்கு மதுர ரஸம் உண்டாகமாட்டாது. ஒரு வேப்ப மரத்திலிருந்து தேன் ஒழுகாது என்பது தான் உலகில் வழங்கி வரும் பழமொழி.
உங்கள் தந்தையாருக்கு ஒரு புண்யாத்மா ஒப்புயர்வில்லாத ஒரு வரத்தை அளித்திருந்தார். அதனால் உங்கள் தந்தையார் சகல பிராணிகள் சொல்லிக் கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை நன்கு அறிவார். அதனால் ஈ, எறும்பு முதலிய உயிர்களின் தொனிகளின் அர்த்தமும் அவருக்கு விளங்கிற்று.” – இவ்வாறு ஸுமந்திரர் கைகேயிடம் கூறுகிறார்.
பிதுஸ்தே வரத: கச்சித்ததௌ வரமனுத்தமம் |
ஸர்வபூதருதம் தஸ்மாத் சஞ்ஞஞே வஸுதாதிப: ||
தேன திர்யக்கதானாம் ச பூதானாம் விதிதம் வச: |
அயோத்யா காண்டம், 35ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 18 & 19
தே – தேவரீரது
பிது: – தந்தைக்கு
கச்சித் – ஒரு
வரத: – புண்யாத்மா
அனுத்தமம் – ஒப்புயர்வில்லாத
வரம் – ஒரு வரத்தை
ததௌ – அளித்திருந்தனர்.
தஸ்மாத் – அதனால்
வஸுதாதிப: – பூபாலகர்
சர்வ பூதருதம் – சகல பிராணிகள் சொல்லிக் கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை
சஞ்ஞஞே – நன்கு அறிவார்
தேன – அதனால்
திர்யக்கதானாம் – ஈ, எறும்பு முதலிய
பூதானாம் – உயிர்களின்
வச: ச – தொனியின் அர்த்தமும்
விதிதம் – (அவருக்கு) விளங்கிற்று
இவ்வாறாக ஒரு புண்யாத்மா தந்த வரத்தால் அபூர்வமான அனைத்து பிராணிகள் பேசிக்கொள்ளும் த்வனியின் அர்த்தத்தை உணர்பவராக கேகய ராஜன் ஆனார்.
ஒரு சமயம் ‘ஜிரும்பம்’ என்னும் ஒரு எறும்பினது ஒலியைக் கேட்டு அதன் உட்கருத்தை அறிந்து அவர் நகைத்தார்.
உடனடியாக அவர் மனைவி, “ஏன் சிரித்தீர்” என்று கேட்க, “அதை உனக்குச் சொன்னால் எனக்கு மரணம் சம்பவிக்கும்” என்று கேகயராஜன் கூறினார்.
அதற்கு கேகயராஜனின் மனைவி, “நீர் உயிருடன் தான் இரும். அல்லது இல்லாமல் தான் போம். எனக்கு நீர் இதை விளங்கச் சொல்ல வேண்டும்” என்றாள்.
இதைக் கேட்ட கேகயராஜன் தனக்கு வரம் அளித்தவரிடம் சென்று அனைத்தையும் கூறி என்ன செய்வது என்று கேட்டார். உடனே அவர், “இவள் விஷபானம் அருந்தி மாண்டாலும் மாளட்டும்; அல்லது குத்திக் கொண்டு இறந்தாலும் சரி; அதை வெளியிடாதே” என்றார்.
அதன் படி கேகயராஜன் தனது மனைவியை தக்ஷணமே ஒதுக்கி விட்டு குபேரன் போல வாழலானார்.
இதைக் கூறிய ஸுமந்திரர், கைகேயியிடம், “உமது தாயைப் போலவே விளையும் தீங்கை எண்ணாமல் தசரதரிடம் தீங்கைக் காட்டுகின்றீர்”
என்கிறார்.
இந்த ஸர்க்கத்தில் ஒரு தபஸ்வி மூலம் கேகயராஜன் பெற்ற வரத்தை அறிவதோடு கைகேயின் தாயாரின் துர் ஆசையையும் அதனால் விளையும் தீங்கையும் எண்ணாமல் அவள் இருந்ததையும் உணர்கிறோம்.
***