WRITTEN BY Brhannayaki Sathyanarayanan
Post No. 13.899
Date uploaded in London – –18 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன் ஆற்றிய உரை.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்
ஆளும் நம் வினைகள் அல்கி அழிந்திடச்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி!
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் ஒன்றாக அமையும் திருக்கழுக்குன்றத் திருத்தலமாகும்.
சென்னை விழுப்புரம் இரயில் பாதையில் 56 கிலோமீட்டர் தொலைவில் செங்கற்பட்டு நிலையம் உள்ளது. நிலையத்திற்குத் தென்கிழக்கில் மகாபலிபுரம் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.
இறைவர் வேதகிரீஸ்வரர் மலைமேல் இருப்பவர்)
பக்தவத்ஸலர் (கீழ்க்கோயிலில் இருப்பவர்)
இறைவி :சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்:
திரிபுர சுந்தரி (கீழ்க்கோயிலில் இருப்பவர்)
அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.
தீர்த்தம் : சங்க தீர்த்தம் (சங்கு பிறந்த குளம்), பட்சி தீர்த்தம்.
இன்னும் இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம்,, வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம், அகலிகை, நந்தி, வருணம், சம்பாதி தீர்த்தம் என 12 தீர்த்தங்கள் உண்டு.
சந்நிதிக்கு எதிரில் உள்ள ‘சங்கு தீர்த்த’த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘சங்கு’ பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு, அதிசயச் செய்திகளும் உண்டு.
வேதமே மலையாய் இருத்தலின் வேதகிரி என்ற பெயரை இது பெற்றது. 500 அடி உயரம் உள்ளது இந்த மலை.
தினந்தோறும் காலையில் இங்கு எழுந்தருளும் கழுகுகள் பக்தர்களைத் திரளாகக் கூட வைக்கின்றன.
கலியுகத்தில் பூடா, விருந்தா ஆகிய இருமுனிவர்கள் சிவபிரானை நோக்கி நெடுங்காலம் தவம் புரிந்தனர். மனம் மகிழ்ந்த சிவபிரான் அவர்களிடம் ஒரு கற்ப காலம் தன் மேனியருளில் இருந்து பின்னர் முக்தி அடையலாம் என்று கூறி அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு உடனே முக்தி வேண்டும் என்று முறையிட்டனர்.
இதனால் சிவபிரான், நம் திருவருளை மறுத்த நீங்கள் கழுகுகளாக மாறுங்கள் என சாபமிட்டார். வருந்திய முனிவர்கள் சாப விமோசனம் கேட்க,, “நீங்கள் காசியப முனிவரிடத்தில் கழுகுகளாகப் பிறந்து உங்களுடைய மூக்குகளால் இந்த மலையினைக் கீறினால் இங்கு ஆகாய கங்கை அலை வீச உண்டாகும். அந்த தீர்த்தத்தில் மூழ்கி எம்மை பூஜை செய்யுங்கள். கலியுக முடிவில் முக்தி அடையுங்கள்” என்று கூறி அருளினார்.
அதே போல கழுகுகளாகப் பிறந்த அவர்கள் இந்த மூக்கினால் மலையைக் கீற, ஒரு தடாகம் உண்டாகியது.
அன்றிலிருந்து அவர்கள் இந்த மலையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் இந்தத் திருப்பதிக்குத் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் ஏற்பட்டது.
இந்தக் கழுகுகள் ஆதி நாள் தொட்டு இன்றும் இங்கு வந்து அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கலாம். இந்தக் கழுகுகளின் பார்வையில் பட்டவர்கள் செய்த அனைத்துப் பாவங்களும் நசியும் என்பது ஐதீகம்.
இதற்கென உள்ள தனிப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் கூடி, காத்திருந்து கழுகளை தரிசனம் செய்கின்றனர்.
இங்கு திலோத்தமை, மாயீகன், சுரகுரு மன்னன்,கங்கபதி ஆகியோர் தங்கள் சாபம் நீங்கப் பெற்றது பற்றிப் பெரும் வரலாறுகள் உண்டு.
மலையின் கண் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்தியாகிய மலை மருந்தைப் பற்றி ஒரு பதிகமே எழுந்துள்ளது.
கள்ளம் வல்லார் என்பது இந்த மூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று. அதாவது திருட்டில் வல்லவர் என்று பொருள். இதே அர்த்தத்தைத் தரும் தஸ்கரபதயே நம: என்ற நாமம் 25 திருநாம அர்ச்சனையில் ஒன்றாக அமைகிறது.
“கள்ளம் வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே’ என்பது திருஞான சம்பந்தரின் தேவாரம்.
வடமொழியில் கூறப்படும் கலியுக பதயே என்பதை கலியுகத்து மெய்யன் என்றும் மாசிலாமணி என்னும் திருநாமத்தைத் தமிழில் பொய்யாத மெய்யன் என்றும் கழுகாசல சதகம் என்ற நூல் கூறுகிறது.
அகளங்கமண்யே என்ற திருநாமத்திற்குப் பொருள் இறைவனுடைய மேனி வெண்மை நிறமானது என்பதாகும்.
இத்தலத்தில் இறைவன் ஒரு காலத்தில் பக்தர்களுக்கு மிகுதியாக பொன் கட்டிகளை அள்ளிக் கொடுத்ததாகவும் அதற்கு அறிகுறியாக சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்தில் பொன் கட்டி ஒன்று இப்போதும் உள்ளது என்றும் பெரியோர் கூறுகின்றனர்.
இங்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகம், அப்பர் ஒரு பதிகம் சுந்தரர் ஒரு பதிகம் என ஆளுக்கு ஒரு பதிகம் தந்து அருளியுள்ளனர். மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், பட்டினத்தார், வள்ளலார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்கள் இந்தத் தலத்தைச் சிறப்பித்து பாடல்களை அருளியுள்ளனர்.
பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசியில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்சதீபம் ஏற்றப்படும். இத்திருவிழாவிற்குப் புஷ்கரமேளா என்று பெயர். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரளுகின்றனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறவிப் பிணியை நீக்கி ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் பக்தவத்ஸலரும் திரிபுரசுந்தரியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!