WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.898
Date uploaded in London – –18 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு 2 பகுதிகளாகத் தரப்படுகிறது.
அன்னை முதற்றே உலகு -1
ஸ்ரீஅன்னையின் வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான அபூர்வமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவரே கூறிய சம்பவங்கள் பல. அவற்றில் இரண்டு சம்பவங்களைக் கீழே காணலாம். இவை இளம் வயதிலேயே அவர் அபூர்வ சித்திகளைக் கொண்டிருந்தவர் என்பதற்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன!
ஸ்ரீஅன்னையும் விஷப்பாம்பும்
————————————-
இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் (1901 முதல் 2000 முடிய உள்ள நூற்றாண்டு) நான் வட ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா பிரதேசத்திலுள்ள ‘க்ளெம்ஸெல்’ என்ற பட்டணத்திற்குச் சென்றிருந்தேன். இந்த பட்டணத்திற்கு வடக்கே அல்ஜீரியாவும் தெற்கே சஹாரா பாலைவனமும் உள்ளன. மேற்கில் மொரோகோவும், கிழக்கில் டியூனிஸியாவும் அமைந்துள்ளன. கோடைக்காலத்தில் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அங்கே வெப்பம் இருக்கும்.
குப்த (Occult) முறை இரகசியங்களை கற்றறியும் பொருட்டு நான் அங்கே வசித்து வந்த சித்தர் ஒருவரிடம் சென்றிருந்தேன்.அம்மகானின் பெயர் ஸ்ரீமான் தேயோன். அவர் போலந்து நாட்டு யூதராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
தினந்தோறும் வெப்பம் மிகுந்த நடுப்பகலில் நான் ஓர் ஆலிவ் மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டேன்.அந்த அதிவெப்பத்தின் கொடுமையையும் என்னால் சகிக்க முடிந்தது.ஒரு நாள் நான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது திடீரென அமைதி நீங்கி சஞ்சலமடையவே, கண்களைத் திறந்தேன். என் எதிரில் 3 அல்லது 4 முழ தூரத்தில், ஓர் பெரிய விஷப் பாம்பு நிமிர்ந்து நின்று சீறி, படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. இத்தகைய ஸர்ப்பத்திற்கு அப்பிராந்தியத்தில் நாகம் என்றே பெயர்; அதன் விஷம் மனிதனை உடனே மாய்க்கும் தன்மையது.
அது ஏன் அவ்வாறு என் மேல் சினமுண்டு இருந்தது என்பது எனக்கு முதலில் விளங்கவில்லை; நான் அதன் வீடாகிய பொந்தை மறைத்து உட்கார்ந்திருக்கக் கூடும் என்பது பிறகே எனக்குப் புலனாயிற்று. எனக்கு பின்னால் ஒரு பொந்து இருந்தது உண்மை தான்.இப்பொழுது நான் என்ன செய்வது?
சிறிது நகர்ந்தாலும் அது என்னைத் தீண்டி விடுமே; நான் சிறிதும் நகரவில்லை. அஞ்சவுமில்லை. நான் அதன் கண்களை உற்று நோக்கி என்னுடைய இச்சாசக்தியை முழுமையாக உபயோகித்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது சீறுவதை நிறுத்தி சிறிது சாந்தமடைந்தது.இப்பொழுது நான் உற்று நோக்குவதையும் இச்சா சக்தியை உபயோகிப்பதையும் சிறிதும் குறைக்காமலேயே மெதுவாக எனது கால்களை ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துக் கொண்டேன்; இறுதியாக அந்த விஷப்பாம்பு தன் தலையைத் தாழ்த்தி வேகமாகத் திரும்பி அருகே இருந்த குளத்தில் குதித்து மூழ்கியது.
பிற்பாடு நான் தேயோன் அவர்களிடம் இந்தச் சம்பவத்தைக் கூறிய போது அவர் பின்வருமாறு விளக்கினார்: “அந்த அரவம் அந்தப் பொந்தில் வசித்து வந்தது எல்லோரும் அறிந்ததே.நீராடின பிறகு தன்னுடைய வீட்டிற்குப் போக விரும்பியது. ஆனால் நீ அதன் வழியை மறித்து உட்கார்ந்திருந்தாய் அதனாலேயே அது மிக சினமுற்றது. நீ அதற்கு பால் அளிப்பாயாகில் அது உனக்கு சிநேகிதமாகி விடும்.”
அன்று தொட்டு எனக்கு பாம்புகளிடமிருந்த அச்சம் அறவே நீங்கிற்று. முன்பெல்லாம் பாம்பைக் கண்டால் அச்சம் கொண்டு பின்னடைவேன்; அடக்கமுடியாத அளவு அதனிடம் ஒரு வெறுப்பு உணர்ச்சி தோன்றும். இச்சம்பவத்திற்குப் பிறகு அவை என்னை விட்டு அடியோடு நீங்கின.
ஸ்ரீஅன்னை நிறுத்திய புயல்
————————————-
க்ளெம்ஸலிலிருந்து நான் இரண்டாவது முறையாக திரும்பி வரும் போது, தேயோன் அவர்களும் ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்யும் பொருட்டு என்னுடன் வந்தார். நடுக்கடலில் ஒரு புயல்காற்று எங்களைத் தாக்கிற்று. கடல் கொந்தளித்து மலை போன்ற அலைகள் எங்கள் கப்பலை மேலும் கீழுமாகத் தூக்கியடித்தன. விபரீதமான விபத்து ஒன்று நெருங்கி விட்டது என்றெண்ணி கப்பலிலுள்ள பலரும் பயந்து விட்டனர்.சிலர் அழவும் ஆரம்பித்து விட்டனர். கப்பல் தலைவனான மீகாமன் (Captain) கூட கவலை கொண்டு பிரயாணிகளுக்கு ஆபத்து உண்டு என்று கூறிவிட்டார்.
தேயோன் அவர்கள் என்னை நோக்கி, “நீ போய் அதை நிறுத்தி விட்டு வா” என்றார். கேப்டன் அதை செவியுற்று மிக ஆச்சர்யமடைந்தார். அவருக்கு தேயோன் கூறியதின் பொருள் விளங்கவேயில்லை; ஆனால் எனக்குப் புரிந்து விட்டது.
நான் என்னுடைய அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தேன். பிறகு என்னுடைய உடலை விட்டு வெளி வந்து பரந்த சமுத்திர வெளியில் தடையேதுமின்றி செல்லலானேன். அங்கே நான் கண்டது என்ன? உருவற்ற பல ஜீவராசிகள் உன்மத்தம் கொண்டு குதித்து கொம்மாளமடித்துக் கடலைக் கலக்கி வந்ததைக் கண்ணுற்றேன். நான் அவைகளையணுகி மிக அடக்கத்துடனும், இனிமையுடனும், இந்த குறும்பு விளையாட்டைக் கைவிடுமாறு வேண்டினேன்.
“அந்த அப்பாவி மனிதர்களை துன்புறுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்? தயவுசெய்து அமைதியடைந்து அந்த மனிதர்களின் உயிரை காப்பாற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். அவ்வாறு நான் அவர்களை வேண்டுவதும், அவர்கள் செய்வதை ஆ§க்ஷபிப்பதுமாக அரை மணி காலம் கடந்தது. அதன் பிறகே அவை தங்கள் குறும்புச் சேஷ்டைகளைக் கைவிட்டன. கொந்தளித்த கடல் அமைதி அடைந்தது.
பிறகு நான் என் உடலுக்குத் திரும்பிப் போய் என்னுடைய அறையை விட்டு வெளி வந்தேன். நான் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்ற போது, அங்கே அனைவரும் சந்தோஷமாக சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன்.
***