Post No. 13,907
Date uploaded in London – 20 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கபிலேஸ்வரம் சிவன் கோவில் Part- 44 (Post No.13,907)
ஆந்திரப் பிரதேசத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்- Part 44
திருப்பதி செல்வோர் திருமலைக்கு ஏறிச்சென்று வெங்கடாசலபதியை மட்டும் தரிசித்துவிட்டு லட்டு வாங்கிக்கொண்டு மலையிலிருந்து இறங்கி சொந்த ஊருக்குத் திரும்பி விடுவார்கள் மலை மேல் அருவிகள், மலைக்குகைகள், வினோத வடிவ பாறைகள் இருப்பது தெரியாது. அமெரிக்கா போன்ற நாடுகளில் அத்தகைய பாறைகளை இயற்கை அதிசயங்களாக அறிவித்து சுற்றுலாப் பயணிகளை இழுக்கிறார்கள்; ஒரு வகையில் பார்த்தால் இத்தகைய இடங்கள் புகழ் பெறாமல் இருப்பது நல்லதே; ஏனெனில் ஏற்கனவே கூட்டம் குவியும் திருமலையின் புனிதத்தை சுற்றுலாப்பயணிகள் கெடுத்து விடுவார்கள். நிற்க.
சிவன் கோவில்
மலை அடிவாரத்திலேயே ஒரு சிவன் கோவில் இருப்பதும் அழகான அருவி இருப்பதும் பலருக்கும் தெரியாது. கபிலேஸ்வரம் என்ற புகழ்பெற்ற சிவன் கோவில் ஒன்றுதான் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் ஒரே சிவன் கோவில்
திருமலை அடிவாரத்தில் கபில தீர்த்தம் உள்ளது. அருகிலுள்ள மலையிலிருந்து வரும் அருவி நீரால் அது நிறைகிறது. அங்கு குகையில் தான்தோன்றி- அதாவது ஸ்வயம்பு லிங்கம் உள்ளது
அங்கு கபில முனிவர் பூஜித்த சிவன் காட்சி தருகிறார். அதனால் கபிலேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
சிவ பக்தர்கள் சிவராத்திரி , கார்த்திகை தீப விழா, ஏனைய சைவ சம்பந்தமான விழா நாட்களில் இங்கு அதிக அளவு வருகிறார்கள்
கபிலேஸ்வரம் -ஒரு சிவன் கோவிலாக இருந்தாலும் இதுவும் திருப்பதி பாலாஜி கோவிலின் நிர்வாகத்திலேயே இருக்கிறது .
கோவிலில் காமாட்சி அம்மன், விநாயகர் சுப்பிரமணியன், அகத்தீசுவரர், ருக்மிணி சத்தியபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோரின் விக்கிரகங்களும் இருக்கின்றன.
முக்கிய விழா பிப்ரவரி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகும். அப்போது ஒன்பது நாட்களுக்கு பலவகை வாகனங்களில் இறைவன் பவனி வருகிறார்.
சிவன் சந்நிதியின் முன்னால் நந்தியும் உளது.
இந்தக் கோவிலின் வரலாறு எழுநூறு ஆண்டுகள் பழமையானது விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்கள் இதை வணங்கி வழிபட்டது தெரிகிறது அவர்களில் குறிப்பாக சாளுவ நரசிம்மதேவ ராயர் கிருஷ்ண தேவ ராயர், அவருக்குப் பின்னால் வந்த மன்னர்களும் வழிபட்டனர்.
மலை மீதிருந்து விழும் அருவியிலும் கபில தீர்த்த குளத்திலும் பகதர்கள் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
மலை அடிவாரத்தில் சக்கரத்தாழ்வார் பெயரில் உள்ள ஆழ்வார் தீர்த்தம் அருகில் இருக்கிறது. இயற்கை அழகு மிக்க இடம். ஆழ்வார் தீர்த்தம் ராமானுஜர் காலத்திலிருந்தே பெயர் பெற்றதால் குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்த இடம் வழிபடப்பட்டிருக்கிறது ஆனால் கபிலேஸ்வரர் பற்றிய முதல் குறிப்பு 1563 கல்வெட்டில் உள்ளது.
ஒருகாலத்தில் இந்த இடம் சோழர் ஆட்சிக்குட்பட்டு இருந்தது ; கோவிலில் சோழர் கால செல்வாக்கினைக் காணலாம். ஐந்து கல்வெட்டுகள் கோவில் வளாகத்தில் உள்ளன. ஒன்று முக மண்டப கதவிலும், ஏனைய நான்கு, குளத்தைச் சுற்றிலும் காணப்படுகின்றன. விஜயநகர மன்னன் அச்சுத ராயன், குளத்துக்கான படிகளையும் சந்தியா வந்தன மண்டபத்தையும் கட்டினான் என்று கல்வெட்டு சொல்கிறது. கருவறைப்பகுதி சோழர் காலத்தைச் சேர்ந்தது. மற்ற பகுதிகள் விஜய நகர அரசர் காலத்தில் எழுப்பப்பட்டன.
எப்படிச் செல்வது ?
திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து பஸ்கள் செல்கின்றன. தனியார் கார்களிலும் செல்லலாம். ஆனால் கார்களை நிறுத்த வசதிகள் குறைவு. மலையடிவாரத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவு. அலிப்பிரி வாசலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவு.
திருப்பதி நகரிலிருந்து ஆட்டோ, டாக்சிக்கள் மூலமும் செல்லலாம்
–subham—
Tags- கபிலேஸ்வரம், சிவன் கோவில், Part- 44, ஆந்திரம், 108 புகழ்பெற்ற, கோவில்கள்