WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.911
Date uploaded in London – –21 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (20)
ராமாயணத்தில் வரங்கள் (20) ப்ரம்மா விராதனுக்கு வழங்கிய வரம்!
ச. நாகராஜன்
இனி ஆரண்ய காண்டத்தில் வரும் வரங்களைப் பார்ப்போம்.
ஆரண்ய காண்டத்தில் மூன்றாவது ஸர்க்கமாக அமைவது ‘ விராதனை அடிப்பது” என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணனோடு ஆரண்யத்தில் புகுந்த போது பெரிய முகம் உடையவனும், பயங்கரமானவனும், மேடு பள்ளமான வயிறை உடையவனும், பார்க்கவே முடியாதவனும், வக்கிரனும், நீண்டவனும், விகாரமானவனும், கொடிய தோற்றமும் உடையவனும் புலித்தோலை உடுத்தவனும், ரத்தத்தினால் பூசப்பட்டவனும் வாயை யமன் போன்று பிளந்தவனுமான ஒருவன் பெரும் கூச்சலிட்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான்.
சீதையை அவன் இடுப்பில் எடுத்து வைத்துக் கொண்டான்.
“விராதன் என்னும் அரக்கனான நான் ரிஷிகளின் மாமிசங்களையே புசிப்பவன். அழகு வாய்ந்த இந்தப் பெண் எனக்கு மனைவியாகட்டும். உங்கள் இருவரின் ரத்தத்தையும் குடிப்பேன்” என்றான்.
“நீங்கள் யார்” என்று விராதன் கேட்க இக்ஷ்வாகு வசமத்தைச் சேர்ந்த க்ஷத்ரியர்கள் நாங்கள். நீ யார்? என்று ராமர் கேட்டார்.
அதற்கு விராதன் இவ்வாறு பதில் கூறினான்:
“புத்ர: கில ஜயஸ்மாஹம் மம மாதா சதஹ்ரதா |
விராத இதி மாமாஹு: ப்ருதிவியாம் சர்வராக்ஷஸா: ||
அஹம் – நான்
ஜயஸ்ய – ஜயன் என்பவனுடைய
புத்ர: – புதல்வன் என்று
கில – வதந்தி
மம – எனது
மாதா – தாய்
சதஹ்ரதா – சதஹ்ரதை என்பவள்.
ப்ருதிவியாம் – உலகில்
சர்வ ராக்ஷஸா: – அரக்கர்கள் அனைவரும்
மாம் – என்னை
விராத: இதி – விராதன் என்று
ஆஹு: – அழைப்பார்கள்
தபஸா சாபி மே ப்ராப்தா ப்ரஹ்மணோ ஹி ப்ரஸாதஜா |
சஸ்த்ரேணாவத்யதா \லோகேஸ்ஸேத்யா மேதத்வமேவ ச |\
மே – எனக்கு
தபஸா அபி – தவத்தால்
லோகே – உலகில்
சஸ்த்ரேண – ஆயுதத்தால்
அவத்யதா – சாவின்மை
ப்ரஹ்மண: – பிரம்மாவினது
ப்ரஸாதஜா ஹி – அனுக்ரஹத்தின் பயனாய்
ப்ராப்தா – கிடைத்திருக்கிறது
அச்சேதாம வரத்வம் ச – வெட்டமுடியாமையும் பிளக்கமுடியாமையும்
ஏவ ச – அங்ஙனமே கிடைத்திருக்கிறது.
ஆரண்ய காண்டம் மூன்றாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 5 & 6
என்று இவ்வாறு விராதன் பதில் உரைக்கிறான்.
பிரம்மாவினால் ஆயுதங்களால் தனக்கு மரணம் கிடையாது என்று தனக்குக் கிடைத்த வரத்தைப் பற்றி இப்படிக் கூறுகிறான் விராதன்.
“ஓடி விடுங்கள்” என்று விராதன் கூற சினத்துடன் அவனை பாணத்தால் அடிக்கிறார் ஶ்ரீ ராமர். அவன் கை துண்டிக்கப்பட்டது. பிறகு அவன் ராம லக்ஷ்மணரை தூக்கிக் கொண்டு ஓடுகிறான்.
ராமர், “தவ வலிமையால் இவன் போரில் ஆயுதத்தால் கொல்லப்படாதவனாக இருக்கிறான். ஆகவே இவனைப் பள்ளம் வெட்டிப் புதைத்து விடுவோம்” என்கிறார்.
உடனே விராதன் அவரை வணங்கி தனக்கு குபேரன் இட்ட சாபத்தைக் கூறுகிறான்.
ராமரால் அவன் உடலை நீத்து ஸ்வர்க்கம் அடைகிறான்.
இங்கு ப்ரம்மா தனக்கு தந்த வரத்தை விராதன் கூறுவதைப் பார்க்கிறோம்.