பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர் இளம் வயதில் மறைந்தது ஏன் ? (Post No.13,923)

Written by London Swaminathan

Post No. 13,923

Date uploaded in London – 23 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பெரியோர்கள் பலர் நாற்பது வயதுக்குள் உலகத்தைத் துறந்து சொர்க்கத்துக்குச் சென்று விடுகிறார்கள், சமாதி அடைகிறார்கள். இதற்கு என்ன காரணம்?  இதை ராமகிருஷ்ண பரமஹம்சர் விளக்கியிருக்கிறார் . ஆதி சங்கரர் , சுவாமி விவேகானந்தர்,  ஆண்டாள் , திருஞான சம்பந்தர், தமிழில் புகழ்பெற்ற புலவர் பாரதியார் ஆகிய அனைவரும் நாற்பது வயதுக்குள் உலகத்தினைத் துறந்துவிட்டனர் . ஆனால் மகத்தான காரியங்களை செய்துவிட்டு மறைந்தனர்; இன்றுவரை அவர்களை நாம் நினைவில் வைத்திருப்பதால் அவர்கள் என்றும் வாழ்கின்றனர். அதாவது சாகாவரம் பெற்றுவிட்டனர். 

பிரம்மத்தை அதாவது கடவுளை உணர்ந்தபின்னர், கடவுளைக் கண்ட பின்னர் ஞானிகள் கொஞ்சம் மாயை உடலில் ஒட்டிக்கொண்டிருப்பதால் உலகில் வாழ்கிறார்கள் . மாயையை முற்றிலும் துறந்து விட்டால் அவர்கள் இருபத்தோரு நாட்களுக்கு மட்டுமே உயிர்வாழ முடியும் என்கிறார் ஸ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்சர் (ரா.கி.ப).

இதை அவர் உபதேச மஞ்சரியில் விளக்கமாகக் காணலாம். ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் இதை விளக்கமாக விளம்பி இருக்கிறார் .

பாரதியார் தன்னை சித்தர் என்று அறிவித்ததோடு சாகாமல் இருப்பேன் என்று பாடினார். அது உண்மையாகி விட்டது; தமிழ் மொழி வாழும் வரை அவரது பெயர் பூமியில் இருக்கும் . நமது தாய் மொழியான தமிழோ கன்னித் தமிழ் ; என்றும் இளமையுடன் வாழும் மொழி . ஆகையால் பாரதியார் சாகாமல் வாழ்வார். இதே போல ஏனையோர் வாழ்வினையும் காண்கையில் அவர்கள் தமது பணிகளை பூர்த்தி செய்த திருப்தியோடு சென்றனர். 

ரா கி ப தான் நிர்விகல்ப சமாதியில் ஆறு மாதம் இருந்த போதும் திரும்பி வந்தது எப்படி என்று விளக்கியிருக்கிறார். நிர்விகல்ப சமாதியில் சென்றோர் உயிருடன் திரும்பி வரமுடியாது. ஆனால் ஆசையை சிறிது வைத்துக் கொண்டால் திரும்பி வரலாம். இதற்கு ரா கி ப ஒரு கதையையும் சொல்கிறார்.

கடவுளைக் கண்டவர்கள் பேசுவதில்லை; இதனால்தான் கண்டவர் விண்டிலர் ;விண்டவர் கண்டிலர் என்று நாம் சொல்கிறோம் ஆயினும் ஒரு சிலர் பிரம் மானந்தக்  கடலைக் கண்டவுடன் அதில் குதிக்காமல் திரும்பி ஓடிவந்து கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியான கண்டோம் தொண்டீர் எல்லோரும் வாரீர் என்றும், சேர வாரும்  ஜெகத்தீரே என்றும் சொல்லி ஆடிப்பாடி அனைவரையும் அழைப்பார்கள். சிலர் பிரம்மானந்தக் கடலின் ஆழத்தைக் காண அதில் குதிப்பார்கள்; உப்பு பொம்மை கடலுக்குள் குதித்தது போல சில மீட்டர் உள்ளே போவதற்குள் கடலில் கரைந்து விடுவார்கள் .

மத்தைக்க்கு நானதைக்

பாரதி-அறுபத்தாறு

கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி

எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!
யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;

…………………………….

அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ?
முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்
முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார்

சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்,
பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;
பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்!
மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன்யான்,
மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே,
நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!

*****

நான்கு பேர் தோட்டத்தினைப் பார்த்த கதை 

ஓர் இடத்தைச் சுற்றி உயர்ந்த சுவர் எழுப்பப்பட்டிருந்தது . வெளியிலிருந்து ஜனங்களுக்கு அது எப்படிப்பட்ட இடமென்று தெரிந்துகொள்ள  வழியில்லை

ஒரு சமயம் ஏணியை வைத்து ஏறி உள்ளே என்ன இருக்கிறதென்பதைக் காண நான்கு பேர் முடிவு செய்தனர்

முதல் மனிதன் சுவரின் மேல் ஏறி நின்றதும் ஹா ஹா என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் உள்ளே குதித்தான். இரண்டாவது , மூன்றாவது மனிதர்களுடன் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே உள்ளே குதித்தார்கள். நாலாவது மனிதன் கடைசியில் ஏறினான்; சுவரின் மேல் ஏறி நின்றதும் அவன் அற்புதமான பழங்கள் நிறைந்த தோட்டத்தினைக் கண்டான் .உள்ளே விழுந்து தோட்டத்திலுள்ள பழங்களை ருசி பார்க்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கும் பலமாக இருந்தது . அதை அடக்கிக்கொண்டு வேகமாக ஏணியின் வழியாகக் கீழே இறங்கி வந்து அந்த தோட்டத்தின் மஹிமை பற்றி எல்லோருக்கும் சொல்லி வாருங்கள் என்று அழைத்தான்.

இதில் பிரம்மம் என்பது அந்த பழம் நிறைந்த தோட்டத்தினைப் போன்றது  பிரம்மத்தைக் கண்டவன் தலை, கால் புரியாமல் அதில் விழுந்து மூழ்கிவிடுகிறான் இத்தகையோர் பரிசுத்தமான மஹான்கள் ஆவர். ஆனால் லோக சம்ரட்சகர்கள் யார் எனில் ஈஸ்வரனைக் கண்ட பின்னரும் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லிக்கொண்டு தான் மட்டும் மோட்சம் அடையாது மற்றவர்களுக்கும் உபதேசம் செகிறார்கள்; பிறவித்துன்பங்களை மீண்டும் மீண்டும் பிறந்து அனுபவிக்கிறார்கள்.

பிரம்மத்தைக் கண்டவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை ஆதி சங்கரரும் விவேக சூடாமணியில் பாடியிருக்கிறார்; விவேக சூடாமணி பற்றிய எனது ஆங்கிலக்கட்டுரையில் விவரங்கள் உள்ளன.

–subham—

Tags– பாரதியார் , சங்கரர் , விவேகானந்தர், இளம் வயதில், மறைந்தது ஏன், நிர்விகல்ப சமாதி, 21 நாள், ராமகிருஷ்ண பரமஹம்சர், நாலு பேர் , தோட்டம் , பல மரங்கள் , பிரம்மம்

Leave a comment

Leave a comment