Post No. 13.922
Date uploaded in London – –23 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஶ்ரீ சத்யசாயி பாபா அவதார தினம் : நவம்பர் 23, 1926
சமாதி : 24-4-2011
ஶ்ரீ சத்யசாயிபாபா அருள் மொழிகள்
ச.நாகராஜன்
ஶ்ரீ சத்யசாயிபாபாவின் ஜயந்தி தினமான இன்று (நவம்பர் 23ம் நாளன்று) அவரது அருள் மொழிகளில் சிலவற்றைப் பார்ப்போம்.
1) தியானத்தில் வெற்றி
மனம் துணி போன்றது. அதற்கு எவ்வித சாயம் ஏற்றினாலும் அச்சாயத்தைத் துணி பெற்றிருக்கும். சாத்வீக மனம் வெள்ளை நிறம் கொண்டதாகும். ராஜஸீக குணத்தால் மனம் சிவப்பாகவும் தாமஸீக குணத்தால் கருப்பாகவும் மாறும். மனமென்பது வாசனைகள் நிறைந்த இடமே. அதனால் வாசனைகள் எந்த வகையில் உள்ளனவோ அதே விதத்தில் மனதும் அமையும்.
சிலர் பல வருடக் கணக்கில் தியான சாதனையைக் கடைப்பிடித்திருந்தாலும் தியான பலன் கிடைக்கவில்லை என்று எண்ணக் கூடும். அதற்கு பதில் அவர்கள் வாசனைகளை சரிவர விரட்டவில்லை என்பது தான்.
தியானத்தில் வெற்றி அடைய வேண்டுமானால் மன உறுதியுடன் இருக்க வேண்டும். மலின வாசனைகள் தலை தூக்கும்போது, சாதகன் இன்னும் தீவிரமாக ஜப தியானத்தில் இறங்கி தன் மனோ பலத்தினால் அதை வென்று விடவேண்டும்.
தியான வாஹினி பத்தாம் பாகம்
2. வீடு பேற்றை அடைய தேவையான இரண்டு
ஆகாயத்தில் உயரப் பறக்கும் பறவைக்கு இரு இறகுகள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள பூவுலகில் நடந்து முன்னேறும் மனிதனுக்கு இரு கால்கள் தேவைப்படுகின்றன. மோட்ச மாளிகையை அதாவது வீடு பேற்றை அடைய ஆவலுறும் சாதகனுக்கு பற்றின்மையும் விவேகவும் அதாவது உலக ஆசைகளை விடுவதற்குப் பற்றின்மையும் ஆத்மாவை அறிவதற்கு விவேகமும் தேவைப்படுகின்றன. ஒருகால் உள்ள பறவையால் ஆகாயத்தில் உயர எழும்ப இயலாது. இயலுமா? அதைப் போலவே பற்றின்மை அல்லது விவேகத்தை மட்டும் பெற்ற மனிதனால் பிரம்மம் என்னும் பரமாத்மாவை அடைய இயலாது. ‘எனது’ என்னும் உணர்வு மோகத்தால் ஏற்படும் பற்றுக்குள் தளைப்படுத்துகிறது. ஒருவன் ஒன்றை தனது என்று எத்தனை நாளைக்கு உரிமை கொண்டாட இயலும்? ஒரு நாள் தன்னிடம் இருக்கும் அனைத்தையும் விட்டு விட்டு தனிமையில் வெறு கையுடன் அவன் வெளியேறத்தான் வேண்டும். தப்பிக்கவே முடியாத தலைவிதி இது.
சூத்ர வாஹினி – அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா
3. பார்ப்பதும், உணர்வதும் அடிப்படை உண்மையும்
நாம் ஒரு சுவரைப் பார்க்கிறோம். எவ்வாறு அதனை நாம் சுவர் என்று அழைக்கிறோம்? அது ஒரு தடுப்பாக இருப்பதனாலும், அதனூடே நாம் பார்க்கவும் போகவும் இயலாதிருப்பதனாலும் அதனை நாம் சுவர் என்று அழைக்கிறோம். அதாவது, அது ஒரு தடுப்பாகையால் அதைச் சுவர் என்று அழைக்கிறோம்.
ஆனால் அதனை நாம் ஒரு விஞ்ஞானியின் கண் கொண்டு பார்க்கும் போது அந்தச் சுவரை ஆக்கக்கூடிய அணுக்களுக்கிடையே ஏராளமான இடைவெளி இருப்பதைக் காணலாம். நம் வெற்றுக் கண்களால் பார்க்கும் போது அதனை நாம் சுவர் என்று அழைப்பினும், ஒரு விஞ்ஞானி அதனைப் பார்க்கும் போது – நாம் விண்வெளியில் பார்க்கும் விண்மீன்களுக்கிடையே மிகுந்த இடைவெளியிருப்பது போலவே – அங்கும், அந்தச் சுவரிலும் ஏராளமான இடம் இருப்பதாகக் கூறுகிறான். இவ்வாறாக, விஞ்ஞானத்தின் உதவியைக் கொண்டு பல பொருள்களைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்வதற்கு நாம் முற்படுகிறோம். நாம் பார்ப்பது ஒன்றும், உணர்வது மற்றொன்றும், அடிப்படை உண்மை வேறொன்றுமாக உள்ளன. அடிப்படை உண்மையைக் கண்டு கொள்ள வேண்டி நாம் தீவிர முயற்சி செய்ய வேண்டும். அப்படிப்பட்ட அடிப்படை உண்மைகளைப் பறைசாற்றுவதற்காக நாம் மூன்று வழிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.
அவை உலக வழி, ஆன்மீக வழி, தார்மீக வழி முதலியன ஆகும். இன்று உலகத்திலுள்ள அனைத்து அநீதியையும் போக்குவதற்குப் பலர் முயற்சி செய்கின்றனர். ஆனால் அவர்கள் வெற்றி அடைவதில்லை. உண்மையைப் பரவச் செய்து, இந்த அநீதியை ஒழிக்கும்படியாக நீங்கள் ஓர் உறுதியான முயற்சி செய்ய வேண்டும். நம் கண்களால் முற்போக்காகக் காணும் அனைத்தையும் நாம் அடிப்படை உண்மை என்று நினைக்கிறோம். ஆனால், அது அப்படியன்று; நாம் பார்ப்பதன் பின்னால் உண்மை மறைந்து இருக்கிறது.
நீலகிரியில் நிமல கருத்துரைகள், கருத்துரை 16
(1976ம் வருடம் மே மாதம் நீலகிரியில் கோடை வகுப்புகளில் பாபா ஆற்றிய உரை)
***