ஓம் சல்ய தந்திர விசாரதாய நமஹ! (Post No.13,925)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.925

Date uploaded in London – –24 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை

ஓம் சல்ய தந்திர விசாரதாய நமஹ! 

ச. நாகராஜன் 

பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்று விட்டால் மட்டும் போதாது; வாழ்கின்ற நாட்களில் ஆரோக்கியமாக வாழ வேண்டும். 

இதற்கான வழிகளைப் பழம் பெரும் வேதமான ஆயுர்வேதம் கூறுகிறது. 

இந்து புராணங்களின் படி மருத்துவத்தின் கடவுளாகப் போற்றப்படுபவர் தன்வந்தரி பகவான். இவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல, தேவர்களுக்கும் மருத்துவராகக் கருதப்படுகிறார்.

 மஹாவிஷ்ணுவின் அவதாரமாகத் தோன்றியவர் தன்வந்தரி.

ஆயுர்வேதத்தை அருளியவர் தன்வந்தரி. ஆகவே இவரை ஆயுர்வேதத்தின் தந்தை என்று குறிப்பிடுகிறோம்.

தன்வந்தரியின் தோற்றம்

புராண வரலாற்றின் படி மரணம் அற்ற அம்ருத நிலையை அடைய தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்தை எடுப்பதற்காகப் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஐப்பசி  மாத தேய்பிறையின் 13வது நாளில் பாற்கடலிலிருந்து தோன்றியவரே தன்வந்தரி. இந்த தினமே தந்தேராஸ் என்று வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக உள்ள ஐப்பசி திரயோதசி நாளான தன்வந்தரி ஜெயந்தி தினத்தை ஆயுர்வேத தினமாகவும் கொண்டாடுகிறோம். 

பாகவதத்தில் கூறப்படும் 22 அவதாரங்களில் 12வது அவதாரமாகக் கூறப்படுவது தன்வந்தரியின் அவதாரமாகும்.

வால்மீகி ராமாயணத்தில் பால காண்டத்தில் தன்வந்தரியின் தோற்றம் பற்றி விரிவாகக் கூறப்படுகிறது.

நான்கு கரங்களுடன் தோன்றும் தன்வந்தரி,வலது கை ஒன்றில் சங்கையும் மற்றொரு கையில் அமிர்த கலசத்தையும் இடது கை ஒன்றில் சக்கரமும்  மற்றொன்றில் அட்டைப்புழுவும் கொண்டிருப்பதாக நூல்கள் விவரிக்கின்றன.  சில நூல்கள் அவர் ஒரு கரத்தில் ஓலைச்சுவடியைக் கொண்டிருப்பதாகக் கூறுகின்றன.

பாற்கடலிலிருந்து தோன்றியதால் நீரிலிருந்து பிறந்தவர் என்று பொருள்படும் அப்ஜு என்ற சொல்லால் அவர் அழைக்கப்பட்டார்.

 காசியை ஆண்ட காசி மன்னனுக்கு திவோதாஸர் என்பவர் பிறந்தார். இவர் தன்வந்தரியின் அவதாரமாக கருதப்படுகிறார்.

 தன்வந்தரி அஷ்டோத்திரம்

 தன்வந்தரியைக் குறித்த அஷ்டோத்தரத்தை தினமும் ஓதித் துதிப்பது தொன்று தொட்டு இருந்து வரும் ஒரு மரபாகும்.

108 திருநாமங்களில் தன்வந்தரியைப் பற்றிய அரிய விசேஷ குணங்கள் தரப்படுகிறது.

சல்யதந்திர விசாரதன்

தன்வந்தரி அஷ்டோத்திரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நாமம் ஓம் சல்யதந்த்ர விசாரதாய நமஹ என்பதாகும்.

சல்ய தந்திரத்தில் வல்லோன் என்று இதற்குப் பொருள்.

சல்ய தந்திரம் என்பது அறுவை சிகிச்சையாகும். பண்டைய காலத்தில் அறுவை சிகிச்சை பாரதத்தில் இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. சுஸ்ருதரின் சம்ஹிதையில் இது பற்றிய விவரங்களைக் காண்கிறோம். மூலிகைகளாலும் மருந்துகளாகும் குணப்படுத்த முடியாதபடி வியாதி இருக்கும் போது சல்ய தந்திரமே அதாவது அறுவை சிகிச்சையே சரியான வழி என்கிறார் சுஸ்ருதர்.

சரகரும் இது பற்றி விரிவாகக் கூறுகிறார். 

ஆயுர் வேத நூல்கள்

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கு சரஸ்வதி பண்டார் என, முன்பு பெயர் வழங்கப்பட்டது. கடந்த 1918ல் மன்னர் சரபோஜி பெயரில் ஆய்வு மையமாக இது செயல்பட துவங்கியது. இங்கு, 49,000 சுவடிகளும், 45,000 நூல்களும் உள்ளன.

நோயில்லா நெறி என்பது உள்ளிட்ட பல மருத்துவ நூல்களை சரஸ்வதி மகால் வெளியிட்டுள்ளது.

இது மட்டுமல்ல உலகெங்கும் உள்ள நான்கு கோடி சம்ஸ்கிருத சுவடிகளிலும் மருத்துவ நூல்கள் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காசியப சம்ஹிதை என்ற நூலின் சுவடிகளை நேபாளத்தின் ராஜகுருவான பண்டிட் ஹேமராஜ சர்மா என்பவர் அரண்மனை நூலகத்தில் கண்டுபிடிக்க, அதை யாதவ்ஜி த்ரிகம்ஜி என்பவர் பம்பாய் நிர்ணய ஸாகர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.

 ஆயுர்வேதக் கல்லூரிகள்

ஆயுர்வேதத்தின் சிறப்பை உணர்ந்த ஆர்வலர்கள் இதை நன்கு பரப்ப வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டனர். இதன் விளைவாக இன்று நாடெங்கும் ஆயுர்வேதக் கல்வி நிலையங்கள் உள்ளன. மங்களூரில் உள்ள சாரதா ஆயுர்வேதக் கல்லூரி 2019-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. பாரம்பரிய இந்திய முறையிலான மருத்துவப் படிப்பை இது வழங்குகிறது. 1100 படுக்கை வசதி கொண்ட மருத்துவ மனையும் இங்கு உள்ளது.

 இங்குள்ள மூலிகை வனத்தில் 212 வகை விசேஷ தாவரங்களும் 1108 மருத்துவ மூலிகைகளும் உள்ளன. 30 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ள டெமான்ஸ்ட்ரேஷன் அறையும் உள்ளது.

இதே போல ஜபல்பூர், ,காசி, புனே, சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லூரிகளில் ஆயுர்வேத மருத்துவம் கற்பிக்கப்படுகிறது.

இது வரவேற்கத் தக்க ஒரு முன்னேற்றமாகும்.

தன்வந்தரி ஆலயங்களும் சிற்பங்களும் 

பாரதமெங்கும் தன்வந்தரிக்கு ஆலயங்கள் உள்ளன; ஏராளமான இடங்களில் வெவ்வேறு சிற்பங்களும் உள்ளன.

வைத்திஸ்வரன் கோவில் ஜீவ சமாதி 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் தன்வந்தரி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது.

பிரதான பிரகாரத்தில் தன்வந்தரி பகவானின் விக்ரஹம் அமைந்துள்ளது.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம் 

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் தன்வந்தரி பகவானின் சந்நிதி அமைந்துள்ளது. பெரும் ஆயுர்வேத வைத்தியரான கருட வாஹன பட்டர் இங்கு தன்வந்தரியின் சிலா விக்ரஹத்தை ஸ்தாபித்ததாக வரலாறு கூறுகிறது.

கேரளத்தில் தோட்டுவா

கேரளத்தில் தோட்டுவா என்னும் இடத்தில் தன்வந்தரி கோவில் அமைந்துள்ளது.

வேலூர் வாலாஜாபேட்டை 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் டாக்டர் ஶ்ரீ முரளிதர ஸ்வாமிகள்  ஸ்ரீ தன்வந்திரி பீடத்தை ஸ்தாபித்துள்ளார்.

 கோவை அருகில் ராமநாதபுரத்தில் உள்ள தன்வந்தரி ஆலயம் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.

உடுப்பி ஆலயத்தில் உள்ள தன்வந்திரியை கடந்த 750 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர்.

 பல ஆலயங்கள்

இன்னும் திரிசூர் அருகில் நெல்லுவாய்,தெவலக்காடு ஶ்ரீ தன்வந்தரி ஆலயம். திரிசூர் அருகில் ஆனக்கல் தன்வந்தரி ஆலயம்,  கீரங்குளங்கரா ஆலயம், , கேரளாவில்  சேர்த்தலா அருகில் மருத்தோர் வட்டம் ஆலயம், எலந்தூர் ஆலயம், பூத்தகுளம் ஆலயம் மற்றும் மாவேலிகராவில் உள்ள ப்ரயிகரா ஆலயம், உள்ளிட்ட பல கோவில்கள் தன்வந்தரிக்காக அமைக்கப்பட்டுள்ளவையாகும்.

சிற்பங்கள்

திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலயத்தில் தன்வந்தரியின் உலோகச் சிலை உள்ளது.

சிவகங்கை கோவிலில் தன்வந்தரியின் சிற்பம் இருக்கிறது.

 இப்படி ஆயுர்வேதத்தின் அடிப்படையிலான ஆரோக்கிய வாழ்வைக் கொண்டதோடு தன்வந்தரியை வழிபட்டு ஆன்மீகச் சிறப்பையும் நம் முன்னோர்கள் பெற்றதை நமது அறநூல்கள் உணர்த்துகின்றன.

 தன்வந்தரியை வழிபடுவோம்; ஆயுர்வேதத்தைப் போற்றி அதை வாழ்வியல் மருத்துவத்தில் கொள்வோம்.

**

Leave a comment

Leave a comment