அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 1 (Post No.13,930)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.930

Date uploaded in London – –25 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-11-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 1

ச.நாகராஜன்

அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனையாகப் புகழ் பெற்றதோடு அனைத்துப் பெண்களுக்கும் விண்வெளி ஆர்வத்தை ஊட்டி, பல்வேறு மேம்பாட்டுப் பயிற்சிகளையும் அளித்தவர் விண்வெளிப் பெண்மணியான சாலி க்ரிஸ்டென் ரைட் ஆவார்.

பிறப்பும் இளமையும்

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1951-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி பிறந்தார் சாலி ரைட். தாயார் கரோல் நார்வேஜிய வமிசாவளியினர். பெண்களின் சீர்திருத்தத்தில் அவர் ஈடுபட்டவர். தந்தை டேல் பர்டெல் ரைட் அமெரிக்க ராணுவத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பணியாற்றியவர். போர் முடிந்த பிறகு அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் சாண்டா மோனிகா கல்லூரியில் பேராசிரியர் ஆனார்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்த சாலி ரைட் ஒன்பது வயதாகும் போது ஸ்பெயினுக்குக் குடும்பத்துடன் பயணப்பட்டார். அங்கு அவர் டென்னிஸ் விளையாட்டில் வெகுவாக ஈர்க்கப்பட்டார்.  12 வயதாகும் போது தென் கலிபோர்னியாவில் டென்னிஸ் விளையாட்டில் தர வரிசையில் 20 என்ற இடத்திற்கு முன்னணியில் வந்தார்.

வான் இயற்பியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட சாலி இயற்பியலில் தேர்ச்சி பெற்றார்.

 ‘‘கலிபோர்னியா கேர்ல்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவர் டென்னிஸ் விளையாடுவதில் சிறந்து விளங்கியதோடு. அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி என்றால் போதும் அடங்காத ஆர்வத்துடன் அனைத்துச் செய்திகளையும் கவனிப்பார்

நாஸாவின் அழைப்பு

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா 1977ல் விண்வெளி செல்ல விரும்புவோருக்கு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பைப் பார்த்த சாலி இதில் பெண்களுக்கு இடம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தார். ஏனெனில் அது வரை பெண்களுக்கு விண்வெளித் திட்டத்தில் இடம் தரப்படவில்லை.

நாஸா பெண்களை விண்வெளிக்கு அனுப்ப இருக்கும் இந்தச் செய்தியைப் பார்த்தவுடன், சாலி ரைட் விண்வெளி செல்ல ஒரு வீராங்கனைக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று பார்த்தார். “ஆஹா, இது என்னால் முடியும்” என்ற முடிவுக்கு உடனே வந்த அவர் நாஸாவிற்கு விண்ணப்பத்தை அனுப்பி விட்டார்.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் பிஹெச்டி படிப்பை அவர் முடித்த தருணம் அது. பல்கலைக் கழகத்திலேயே அனைவரும் அவர் தான் முதல் விண்வெளி வீராங்கனை என்று முடிவு கட்டி விட்டார்கள் என்றால் எப்படிப்பட்ட துணிச்சலும் விண்வெளி ஆர்வமும் அவருக்கு இருந்திருக்க வேண்டும்!

1977, ஜூன் மாத இறுதியில் நாஸா 8079 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் 208 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கடுமையான மருத்துவ பரிசோதனைகள், நேர்முகத் தேர்வுகள். எதையும் சமாளிக்கும் திறன் இருக்கிறதா, குழுவாக இணைந்து செயல் ஆற்றும் திறன் உள்ளதா என்பதற்கான சோதனைகள் உள்ளிட்ட அனைத்திலும் அவர் தேர்வு பெற்றார். இறுதித் தேர்வில் 35 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விண்வெளிக்கான பயிற்சிகள் தொடங்கின. 1979, ஆகஸ்ட் மாதம் இவர்களுக்கான பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்து விட்டதாக நாஸா அறிவித்தது.

முதலில் அவர் தரை நிலையத்தில் தகவல் தொடர்புக்கான வேலையைத் திறம்படச் செய்தார்.

விண்கலத்தின் ரொபாட்டின் கரத்தை இயக்குவதில் அவர் நிபுணராகத் திகழ்ந்தார். இதற்கான காரணம் அவரது டென்னிஸ் விளையாட்டு தான். கண்ணுக்கும் கைகளுக்கும் இடையே உள்ள இசைவு டென்னிஸ் விளையாட்டில் மிக அதிகம் தேவைப்படும். அதுவே ரொபாட்டை இயக்க அவருக்குப் பெரிதும் உதவியாக ஆனது,

  நாஸா எப்போதுமே தனிப்பட்ட நபருக்குள்ள திறனை அதிகமாகப் பாராட்டாது.  குழு மனப்பான்மை கொண்டு குழுவாக இசைந்து செயல்படுபவரின் செயல் திறத்தையே நாஸா எப்போதும் பாராட்டும். சாலி இதிலும் நல்ல பெயரைப் பெற்றார்.

விண்வெளிக்குச் செல்லும் தகுதியான பெண்மணி என்று அவரைத் தேர்ந்தெடுத்த நாஸா அதை அறிவித்தது.

அவ்வளவு தான், உடனடியாக 500 பேர்கள் அவரைப் பேட்டி காண வந்து விட்டனர். அவர் அதற்கு இணங்கவில்லை. நாஸாவே ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.

சங்கடமான கேள்விகள் உட்பட கேள்விக் கணைகள் பறந்து வந்தன சாலி ரைடை நோக்கி.

“பயணத்தில் ஏதேனும் தவறாகப் போய்விட்டால் நீங்கள் அழுவீர்களா? உங்கள் ஜனன உறுப்பு விண்வெளிப் பயணத்தினால் பாதிக்கப்படுமா என்பன போன்ற கேள்விகளுக்கு, தான் தன்னை ஒரு விண்வெளி வீராங்கனையாக மட்டுமே பார்ப்பதாக அவர் பதில் அளித்தார்.. ஒரு பெண்மணிக்கு விண்வெளியில் மேக்-அப் செட் வேண்டாமா,அதை வடிவமைக்க உதவி செய்யுங்களேன் என்று நாஸா பொறியாளர்கள் வேறு அவரைக் கேட்க ஆரம்பித்தனர்.

விண்வெளிப் பயணம்

1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி சாலஞ்சர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட போது அதில் பயணப்பட்ட சாலி ரைட் உலகில் விண்ணில் பறந்த முதல் அமெரிக்கப் பெண்மணி ஆனார். அவரே விண்ணில் பறந்த மிகக் குறைந்த வயதினர் என்ற பெருமையையும் பெற்றார்.

அவர் விண்ணில் பறந்த தினத்தன்று ஏராளமானோர் குதூகலத்துடன் “ரைட் சாலி ரைட்” (Ride Sally Ride) என்ற ஆங்கில வார்த்தைகளுடன் கூடிய ‘டி’ ஷர்ட்டுகளை அணிந்து அவரை வழியனுப்பி வைத்தனர். ஆறு நாட்கள், இரண்டு மணி 23 நிமிடங்கள் 59 விநாடிகள் இந்தப் பயணம் நீடித்தது.

உலகமே கொண்டாடும் சிறந்த விண்வெளி வீராங்கனை ஆகி விட்டார் சாலி ரைட்!

மீண்டும் 1984-ல் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அவர் சேலஞ்சர் விண்கலத்தில் எட்டு நாட்கள் பறந்தார். 197.5 மணி நேரத்தில் சேலஞ்சர் 132 முறை பூமியை ஓடுபாதையில் சுற்றி வலம் வந்தது.

இந்த இரு பயணங்களிலும் சுமார் 343 மணி நேரங்கள் அவர் விண்வெளியில் பறந்திருந்தார்.

28-1-1986ல் விண்ணில் ஏவப்பட்ட சேலஞ்சர் விண்கலம் கிளம்பிய சில வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. இதில் ஏழு விண்வெளிவீரர்கள் இறந்தனர். இந்த விபத்து ஏற்பட்டதையொட்டி  அவரது மூன்றாவது பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லை.

1987-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி நாஸாவிலிருந்து ஓய்வு பெற்று ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேரப்போவதாக அவர் அறிவித்தார். 1989ல் அவர் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியை ஆனார்.

***

Tags-அமெரிக்கா , விண்வெளி, வீராங்கனை – சாலி ரைட்

Leave a comment

Leave a comment