கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)

Written by London Swaminathan

Post No. 13,931

Date uploaded in London – 25 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)

கிருஷ்ண என்பது சம்ஸ்க்ருதத்தில் உள்ள பெயர். இது எப்படி, எப்போது  கண்ணன் ஆக மாறியது என்பது மொழியியல் வல்லுனர்களுக்குப் புரியாத புதிராக உள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுந்த சங்கத் தமிழ் பாடல்களில் இந்து தெய்வங்களைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை. மஹாவீரர், புத்தர் போன்ற பெரிய மஹான்கள் பெயர்கள் கூட இல்லை. ஐந்தாம் நூற்றாண்டு அல்லது ஆறாம் நூற்றாண்டில் எழுந்த சிலப்பதிகாரம், மணிமேகலையில்தான் சமண, புத்த மத பெரியோர்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஏறத்தாழ அதே காலத்தில் எழுந்த தமிழ் வேதமான திருக்குறளில் வாமனாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியவற்றை வெளிப்படையாகவே விளம்பி இருக்கிறார். இவ்வளவுக்கும் சங்கத் தமிழ் நூல்கள் அனைத்தும் சமய சார்பற்ற இக லோக வாழ்வினைப் பற்றியவை; அதாவது குடும்ப வாழ்வு, காதல், வீரம் ஆகியவற்றைப் புலவர்கள் பாடினார்கள். ஆறாம் நூற்றாண்டு முதல் பக்தி இலக்கியங்கள் எழுந்த பின்னர் இகலோக வாழ்வு மறைந்து, பரலோக வாழ்வு பற்றிய கருத்துக்களே பெரும்பாலும் கிடைக்கின்றன.

வெள்ளைக்கார மண்டூகங்களும் அவர்களை அடியொற்றிச் செல்லும் இந்து சமய அரை வேக்காடுகளும் கிருஷ்ண என்பவரின் புகழ் பாடும் பாகவத புராணம், ஹரி வம்சம், விஷ்ணு  புராணம் எல்லா வற்றையும் நாலாவது நூற்றாண்டுக்குப் பின்னர் வைக்கின்றன; அதாவது அதில் கடைசியில் ஏதேனும் சேர்ர்க்கப்பட்டிருந்தால் அதுதான் அதன் காலம் என்று வாதாடும் கும்பல் அது.

அதை ஏற்றுக்கொண்டால் தமிழர்தான் கிருஷ்ணரைப் பற்றிய எல்லாவற்றையும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாடினார்கள் என்று  ஆகிவிடும். ஏனெனில் கிருஷ்ணரின் கோபி ஸ்த்ரீ விளையாட்டு அகநானூறு (59) பாடலிலே உள்ளது இவ்வளவுக்கும் அகநானூறு சமய நூல் அல்ல. போகிறபோக்கில் ராமாவதார நிகழ்ச்சிகளையும் மஹாபாரத நிகழ்ச்சிகளையுள் பாடிவிட்டுச் சென்றனர் சங்கப் புலவர்கள்.

சங்க நூல்கள் பதினெட்டில் பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை ஆகியவற்றில் அதிக சமயச் செய்திகளைக் காண்கிறோம். கோபி- கிருஷ்ண லீலைகளை சொல்லும் அகநானூறு (59) பாடலில் யமுனை நதியைத் தொழுனை நதி  என்று காண்கிறோம் ; பிற்கால நூல்களும் அவ்வாறே குறிப்பிடுகின்றன. கங்கை நதியைக் குறிப்பிடும் சங்க நூல்கள் கங்கை என்றே பாடுகின்றன. யமுனை மட்டும் தொழுனை ஆனது எப்படி என்பது முதல் மர்மம்முதல் புதிர்.

கண்ணனிடம் கோபியர் பெண்களை எங்களது ஆடைகளைக் கொடுத்து விடப்ப என்று கெஞ்சிக்கூத்தாடி தொழுததால் இப்படிப் பெயர் வைத்திருக்கலாம் அல்லது கண்ணனைத் தொழுத, பிருந்தாவனம் அமைந்த இடம் என்பதால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். தமிழில் பழமையான நூலான தொல்காப்பியத்திலேயே எல்லா இந்தக் கடவுளரையும் காண்கிறோம் .புறநானூற்றில் நக்கீரரே எல்லோருடைய வாகனங்கள் கொடிகளையும் குறிப்பிட்டுப் பாடுகிறார். ஆக இந்து மதம் கொடிகட்டிப் பறந்ததும்— இந்து மதம் மட்டுமே பின்பற்றப்பட்டதும் —சங்க இலக்கியத்தில் உறுதியாகிறது.

இப்போது கண்ணன் மர்மத்துக்கு வருவோம்;

தமிழில் திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக நிற்பவர் பாரதி. இருபதுக்கும் மேலான பாடல்களில் அவர் கண்ணன் பற்றிப் பாடியதோடு வேறு ஒரு புதுமையையும் செய்தார் ; கண்ணம்மா என்ற பெண் கதாபாத்திரத்தையும் உருவாக்கினார்.

கிருஷ்ணனை யார் இப்படி கண்ணன் ஆக்கினார்கள்? ஏன்?

தொல்காப்பியத்தில் வரும் மாயோன் என்பதற்கும் கிருஷ்ணன் என்பதற்கும் பொருள் ஒன்றே ; கருப்பன்; கறுப்புத் தெய்வம்

ஆரியர்கள் வெள்ளைத் தோலினர் திராவிடர்கள் கறுப்புத் தோலினர் என்ற வெள்ளைக்கார கும்பல் வாதங்களை வியாசர், கிருஷ்ணர், விஷ்ணு , திரவுபதி ஆகியோர் தவிடு பொடியாக்குகிறார்கள் ஏனெனில் இவர்கள் அனைவரும் காக்கா கருப்பு!!

பாகவத காலத்தை வெள்ளைக்கார நோக்கில் பார்த்தால் தமிழில் தான் கிருஷ்ணர் – கோபியர் பற்றிய முதல் குறிப்பு கிடைக்கிறது சம்ஸ்க்ருதத்தில் கோபியர்- ராதா பற்றிய குறிப்புகள் பின்னரே கிடைக்கின்றன. மேலும் மிகப்பிரிய அறிஞரான ராகவ அய்யங்கார் தொல்காப்பியம் சொல்லும் மாயோன் கிருஷ்ணன்தான் என்கிறார். எல்லாம் கருப்பு என்றே பொருள்.பின்னர் மாயவன் என்றும் குறிப்புகள் கிடைக்கின்றன. இது மாயம் செய்யும் அவதாரம் என்ற பொருள்தரும்; கிருஷ்ணன் செய்த மாயங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல.

இங்கு ஒரு மொழியியல் அதிசயமும் கிடைக்கிறது. மால, மேல, மல MELA (MELANESIA= LAND OF BLACK PEOPLE) என்றால் கருப்பு என்று கிரேக்க மொழியில் பொருள் ; கிரேக்கச் சொல் தொல்காப்பியத்தில் புகுந்தது எப்படி?

உண்மையில் சொல்லப்போனால் வெள்ளைக்காரன் மொழியியல் LINGUISTICS எல்லாம் மோசடி வேலை. ஆரிய மொழி, திராவிட மொழி என்று சொல்லிப் பொய்யுரை பரப்பின. கிரேக்க மொழியில் நூற்றுக்கணக்கான தமிழ்ச் சொற்களும் ஆங்கில மொழியில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்களும் இருப்பதை எழுபது கட்டுரைகள் மூலம் காட்டியுயுள்ளேன்.

ஆக மால், மாலன், மாயோன், என்பதெல்லாம் கருப்பு வண்ண கண்ணனை அல்லது விஷ்ணுவைக் குறிப்பதே.

****

சங்க இலக்கியத்தில் கண்ணன் !

பரிபாடலில் தாமரைக் கண்ணன் என்ற பெயர் வருகிறது. அப்போது தாமரை வடிவிலுள்ள கண்   உடையவன்  என்று பொருள் கொண்டார்கள் ஆனால் சங்க புலவர் பட்டியலில் பல புலவர்கள் கண்ணன்  என்ற பெயருடன் உள்ளனர். உருத்திரன் கண்ணனார் அதிகமான வரிகளை பாடிய  புலவர். அவரை ருத்ர கிருஷ்ணன் என்று மொழிபெயர்த்தால் கோபக் கண்ணன் என்று பொருள் கொள்ளலாம். ஆனால் நான் அதை மறுக்கிறேன் ; உண்மையில் ருத்ரன் மகனான கண்ணன் /கிருஷ்ணன் என்பதே பொருள்.

இதற்கு என்ன ஆதாரம்? என்று வினவலாம்.

ஒரு புலவரின் பெயர் குமட்டூர் கண்ணனானர். வெள்ளைக்காரன் போல பொருள் கொண்டால் அவரது கண்கள் குமட்டூர் போன்றது என்று அபத்தமாகப் பொருள் கொள்ள வேண்டிவரும். உண்மையில் அவர் பெயர் கண்ணன் அவர் குமட்டூரைச் சேர்ந்தவர் என்பதே பொருள்.

மருதன் கண்ணனார் , காரிக்கண்ணனார் என்ற புலவர் பெயர்களும் உள்ளன. காரிக்கண்ணன் பெயரையாவது கறுப்புக் கண்ணன் என்று சொல்லிவிடலாம்; மருதன் கண்ணனாரை மருத நிலம் போன்ற கண் உடையவர் என்று பொருள் சொல்ல முடியாதே! ஆகவே எல்லா கண்ணன்களையும் “கண்” பற்றி எழுந்த சொற்கள் அல்ல கிருஷ்ணன் பெயரால் வந்த சொற்களே என்று அறிகிறோம்; இதற்கு மேலும் பல சான்றுகள் சங்க இலக்கியத்திலே கிடைக்கின்றன. கோவர்த்தனார்தாமோதரனார், கேசவனார் போன்ற புலவர்களும் சங்கத் தமிழ் பட்டியலில் இடம்பெறுகின்றன இவை அனைத்தும் கிருஷ்ண பரமாத்மாவின் லீலி,,,,,,களால் உண்டான பெயர்கள்; ஆக சங்க இலக்கியத்தில் வரும் கன்னங்கள் கண் அழகினால் பெயர் பெறவில்லை கிருஷ்ண பரமாத்மாவின் பெயரையே தாய் தந்தையர் சூட்டியதால் மருதன் மகன் கண்ணன் , உருத்ரன் மகன் கண்ணன் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அகம் 59, பரிபாடல் 2, 15;

கிருஷ்ணன், பலராமன் – புறநாநூறு  56;

மதுரைக் காஞ்சியில் பகவத் கீதை நடந்தது/ உபதிசித்தது பற்றிய மறைமுகக் குறிப்பும் உளது

மால் என்ற பெயரை பரிபாடலில் காண்கிறோம்

புறம் 58-ல் ‘காரி’க் கண்ணனார் நீல் நிற நேமியோன் என்ற கண்ணனைக் குறிப்பிடுவதால் அவர் பெயரும் கூட கிருஷ்ண/ கண்ணன் என்பது உறுதியாகிறது.

அது சரி வடக்கில் கிருஷ்ணன் எப்படி கண்ணா ஆகியது ? அதற்கும் பதில் உண்டு. சம்ஸ்க்ருதத்திலுள்ள தூய உச்சரிப்புகளை  கிராமத்து மக்களும் வீட்டிலுள்ள பெண்களும் கொச்சையாகப் பேசுவர்; அதை பிராகிருதம் என்பர். திருவிளையாடல் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் இலக்கியத் தமிழையும் விற கு வெட்டியானபோது கொச்சை தமிழையும் பேசுவதைக் காண்கிறோம்; இது சம்ஸ்க்ருதம்- பிராகிருதம் போன்றது.

“க்ரு” ஒலி தமிழில் கிடையாது; ஆகையால் சங்கதம் , பாகதம் என்ற சொற்களைத் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தினர். இதே முறையில் “க்ரு”  “க”  ஆக மாறியது. பின்னர்    “கண்ண” என்று மாறியது; இதனால் வடக்கிலும் கன்னையா லால் , கன்னா என்ற பெயர்களைக் காண்கிறோம். இன்றும் வடக்கில் கன்னையா பெயர்கள் உள்ளன. ஆண்களாக இருந்தால் தமிழ் பெயர்கள் பெரும்பாலும் ‘ன்’ அல்லது ‘ம்’ என்பதில் முடியும். சுவாமிநாத: என்று சம்ஸ்க்ருதத்தில் எழுதும் என் பெயர் தமிழில் சுவாமிநாத+ன் ஆகிவிடும்; ஸ்கந்த: என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர் கந்த+ன் ஆகிவிடும் இதே முறையில் கண்ண +ன் சேர்ந்து கண்ணன் ஆகியது .

பழங்காலத்தில் கொச்சைத் தமிழ் இலக்கியம் கிடையாது. எல்லா மொழிகளிலும் கொச்சைத் தமிழில் இலக்கியம் படைப்பது பிற்காலத்தில்தான். இதை முதலில் காண்பது பிராகிருத மொழி இலக்கியத்தில்; சம்ஸ்க்ருத   இலக்கியம் எழுந்த பின்னரே பிராகிருத இலக்கியம் எழுந்தது. தமிழிலும் பல்லாயிரக்கணக்கான கொச்சைத் தமிழ் இலக்கியங்கள் கடந்த இரு நூறு ஆண்டுகளாகவே வருகின்றன. அவற்றை நாம் பத்திரிகைகளில் வரும் கதை, நாவல்களில் காண்கிறோம். இலக்கிய மொழியும் , கொச்சை மொழியும் சம காலத்தில் புழங்கி இருந்தாலும் அதை எழுத்தில் வடிக்கும் துணிவு மிகவும் பிற்காலத்திலேயே எழுந்தது

இதனால் கிருஷ்ண என்பதற்குப் பதிலாக கண்ண/ கன்னா என்பதை பிற்காலத்திலே காண்கிறோம்.

இதற்கு இன்னும் ஒரு விளக்கத்தையும் சில அறிஞர்கள் முன்வைக்கின்றனர்; ஆனால் அது புத்த மத ஜாதகக் கதைகளில் வருவதால் சரியானதா என்று சொல்ல  முடியாது ; கட ஜாதகக் கதையிலும் மஹா வக்க ஜாதகக் கதையிலும் கா ன்ஹாயன என்ற கோத்ரம் இருந்ததாகவும் வாசுதேவன் அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன் என்றும் கதை போகிறது. ஆயினும் அப்படிப்பட்ட கோத்ரம் கோத்ரப் பட்டியலில் இன்று இல்லை.

ஆக மொழியியல் கொள்கைகள் அபத்தம் என்பதையும், திராவிட மொழி என்று தனி பிரிவு கிடையாது என்பதையும் கிருஷ்ண= கண்ணா காட்டுகிறது; மால் = மேலனேஷியா தீவுகள் காட்டுகிறது.

–subham—

Tags-கண்ணன் கிருஷ்ணன், பாகதம் சங்கதம் மால் திருமால் மாயோன் , கருப்பு,  கண்ணன் பெயரில் உள்ள மர்மம் ! (Post No.13,931)

Leave a comment

Leave a comment