வேதநாதர் அருள் புரியும் திருவாதவூர் (Post No.13,933)


WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 13.933

Date uploaded in London – –25 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-11-2024 ஞானமயம் ஒளிபரப்பில் ஒளிபரப்பான உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

பெருகும் வையைதனை அழைப்பிக்குமே

    பிரம்படிக்குப் பிரான் மேனி கன்றுமே

நரியெலாம் பரியாக நடத்துமே

    நாடி மூகைதனைப் பேசுவிக்குமே

பரிவிற் பிட்டுக்கு மண் சுமப்பிக்குமே

    பரமன் ஏடு எழுதக் கோவை பாடுமே

வருகும் புத்தரை வாதினில் வெல்லுமே

    வாதவூரர் வழங்கிய பாடலே

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது வேதநாதர் அருள் புரியும் திருவாதவூர் திருத்தலமாகும். திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் அவதரித்த திருத்தலமும் இதுவே.இத்திருத்தலம் மதுரை மாநகரின் வடகிழக்கே, 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இறைவன் திருநாமம் : வேதநாதர் அல்லது திருமறைநாதர்

இறைவி : வேதநாயகி அல்லது ஆரணவல்லியம்மை

தல விருக்ஷம் : மகிழ மரம்

தீர்த்தம் : பைரவ தீர்த்தம் மற்றும் கபில தீர்த்தம்

இத்திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.

சிவபிரான் மஹாவிஷ்ணுவிற்கு ‘வேதம் நானே’ என்று உபதேசித்த தலம் இது.

சிவபிரான் ஸ்வயம்பு லிங்கமாக எழுந்தருளி அருள் பாலிக்கிறார். சிவபிரானின் வலப்பாகத்தில் தனிக்கோயில் கொண்டுள்ள அம்மன் சந்நிதி மிகப் பழமையானது. பிரம்மா செய்த ஆரண கேதக வேள்வியில் தீப்பிழம்பில் உதித்தவளே இங்கு அருள் புரியும் ஆரணவல்லியம்மை.

மாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமாகி விட்ட சனி பகவான் தன் முடம் நீங்கி மீண்டும் நடக்கத் துவங்கியது இவ்வூரில் தொழுது துதித்த பின்னரே ஆகும். சனி பகவானின் வாதம் தீர்ந்தபடியால் இது வாதவூர் என்று வழங்கப்பெறுகிறது.

இங்கு வழிபட்டால் கை, கால் முடம் பக்கவாதம் ஆகியவை தீரும் என்பது அனைவரது நம்பிக்கையுமாகும்.

இங்கு சிவபூஜையில் ஆழ்ந்திருக்கும் புருஷாமிருக தேவர் பாண்டவரின் அச்வமேத யாகத்துக்கு உதவி செய்யும் பொருட்டு பீமனோடு தென் திசை வந்த பின்னர் ஹரிஹரன் விருப்பப்படி நிரந்தரமாய் இத்திருத்தலத்திலேயே தங்கி விட்ட தலம் இது.

இத்தெய்வத்தை கோயிலின் வடபுறத்தில் ஏரியின் கீழ்ப்பகுதியில் காணலாம். மழை குறைவான காலத்தில் மக்கள் இத்தெய்வத்தை வழிபட உடனே மழை பெய்து பஞ்சம் நீங்குவது இன்றும் நடக்கும் அதிசயமாகும்.

படிகளோடு அமைந்துள்ள பயிரவ தீர்த்தத்தையும் மகிழ மரத்தையும் இங்கு காணலாம்.

இக்கோவிலில் உள்ள கொடுங்கை தனிச் சிறப்பு வாய்ந்தது. திருவாரூர்த் தேரும் திருவாதவூர் கொடுங்கையும் என்பது உலக வழக்கு. ஆலயத்தின் வடகீழ் மூலையில் பண்டைக் கொடுங்கைகளைக் காணலாம். மண்டபங்களின் மேல் பகுதியிலிருந்து வரும் மழை நீரும் காற்று வாக்கில் அடிக்கும் சாரலும் சூரிய வெப்பமும் உட்புறத்தில் புகாமல் தடுக்கின்ற அமைப்பே கொடுங்கை எனப்படும். இங்கு மாணிக்கவாசகர் எழுப்புவித்த மண்டபங்களில் உள்ள 10 – 12 கொடுங்கைகள் பொறியியல் அதிசயமாகும்.

கபில முனிவர் இத்தலத்திலேயே பிறந்துள்ளார். வீரஹத்தி தோஷம் நீங்க அவர் துதித்த பழம்பெரும் திருத்தலம் இதுவே. இங்குள்ள கபில தீர்த்தமே இன்றும் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்து நிலைகள் உள்ள இராஜகோபுரம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. வேதநாயகர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.

சிவபிரான் கயிலையில் பைரவரின் வாகனமான நாயை மறைக்கச் செய்தார். ஆகவே  ஈசனிடம் நாய் வாகனம் வேண்டினார் பைரவர். திருவாதவூர் சென்று வழிபட அங்கு தொலைந்த வாகனம் கிடைக்கும்  என்று சிவபிரான் அருளவே திருவாதவூர் வந்த பைரவர் இங்கு ஒரு திருக்குளத்தை அமைத்து வழிபட்டார். அதுவே பைரவ தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பைரவரின் வழிபாட்டினால் மகிழ்ந்த சிவபிரான் அவருக்கு நாய் வாகனத்தைத் தந்தருளினார். ஆகவே இங்கு பைரவர் கனிவுடனும் மகிழ்ச்சியுடனும் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்கு எட்டு அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் தொலைந்த பொருட்களும் வாகனங்களும் திரும்பக் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவிலில் சிந்தாமணி விநாயகர், காளீஸ்வரர், விஸ்வநாதர், நடராஜர், வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.

மாணிக்கவாசகருக்கு சிலம்பொலி காட்டிய தலம் இது. கோயிலுக்கு வரும் வழியில் சாலை அருகில் மாணிக்கவாசகர் பிறந்த இடம் உள்ளது. இப்போது அங்கு சிறிய கோயில் ஒன்று உள்ளது.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் 51 அதிகாரங்களில் 650 பாடல்கள் உள்ளன. திருவாசகத்தால் மகிழ்ந்த சிவபிரான் ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக’ என்று மாணிக்கவாசகரிடம் கூறவே திருக்கோவையார் 400 பாடல்களாக மலர்ந்தது.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை அனுபவித்து ஓதி அதன் பொருளை உணர்ந்து ஆனந்தம் அடைந்த வள்ளலார் கூறுவது இது:

வான் கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை

நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே

தேன் கலந்து பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்

ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

திருஞானசம்பந்தர் இந்தத் தலத்தை திருக்ஷேத்திரக் கோவையில் ‘மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி’ என்று வைப்புத் தலமாகப் பாடி அருளியுள்ளார்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் வேதநாதரும் ஆரணவல்லியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

 –subham—

.வேதநாதர், அருள் புரியும், திருவாதவூர்,

Leave a comment

Leave a comment