Post No. 13.934
Date uploaded in London – –26 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
20-11-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனை – சாலி ரைட்! – 2
ச.நாகராஜன்
விசாரணைக் கமிஷனில் பங்கேற்பு
2003-,ம் ஆண்டு பிப்ரவரி முதல் தேதியன்று விண்ணில் ஏவப்பட்ட கொலம்பியா விண்கலம் சுக்குநூறாகச் சிதறியது. இதனால் அனைவரும் திகைத்துப் போயினர்.
விபத்து ஏன், எதனால் நடந்து என்பதை ஆராய்வதற்காக நாஸா விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைத்தது. நாஸா அமைத்த இந்த விசாரணைக் கமிஷனில் இடம் பெற்ற ஒரே விண்வெளி வீராங்கனை சாலி தான். சேலஞ்சர் கலத்தில் குளிர்ந்த உஷ்ணநிலையில் ராக்கெட் பூஸ்டரில் இருந்த ஓ-ரிங் செயல்படாமல் போனதால் தான் அந்த விபத்து ஏற்பட்டது என்பதை விசாரணைக் கமிஷன் கண்டறிந்தது. ஆனால் வெளியுலகிற்கு இதைச் சொல்லாமல் மறைத்தது. ஆனால் சாலியோ இந்த விஷயத்தை இன்னொரு கமிஷன் மெம்பரிடம் சொல்ல அவர் விஞ்ஞானி பெய்ன்மேனிடம் சொல்ல, பெய்ன்மென் உலகிற்கு பகிரங்கமாக அறிவித்து விட்டார். கொலம்பியா விண்கலம் ஏராளமான இயக்கக் கோளாறுகளுடன் இருப்பதை அறிந்தும் கூட அது விண்ணில் செலுத்தப்பட்டது. அதனால் தான் புறப்பட்ட சில கணங்களிலேயே வெடித்தது. இந்த வெளிவராத இரகசியத்தையும் பொது நலன் கருதி சாலி கூறி விட்டார்.
சாலி ரைடின் அந்தரங்க வாழ்க்கை ரகசியம்
“ஒவ்வொருவருக்கும் மூன்று வாழ்க்கைகள் உண்டு. ஒரு பொது வாழ்க்கை, ஒரு அந்தரங்க வாழ்க்கை, ஒரு இரகசிய வாழ்க்கை!”
– –பிரபல நாவலாசிரியர் காப்ரியல் கார்சியா மர்கெஸ் சாலி ரைட் பற்றிக் கூறியது இது!
இது உண்மை என்பதை சாலி ரைட் வாழ்க்கை வரலாற்றை ஏ.பி.சி நியூஸ் நிருபரான லின் ஷெர் என்பவர் எழுதி வெளியிட்ட போது தெரிய வந்தது.
முதல் ரகசியம் அவர் கான்ஸர் நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக வைத்திருந்தார். 2011-ல் அவர் ஒரு சொற்பொழிவை நிகழ்த்திய போது அவர் இயல்பு நிலையில் இல்லாததைக் கண்ட அவர் தோழி ஓஷானெஸி அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தார். அடிவயிற்றில் கோல்ப் பந்து அளவு ஒரு பெரிய கட்டி இருப்பது தெரியவந்தது.
இதை அவர் யாருக்கும் சொல்லவில்லை.
இரண்டாவது ரகசியம் தனது தோழியான டாம் ஓஷானெஸியுடன் அவர் ஒரு இரகசிய தொடர்பை நீண்ட காலம் கொண்டிருந்தது. இந்த இரகசியம் அவர் இறந்த பின் அவரது மறைவுக் குறிப்பில் இடம் பெற்ற போது தான் உலகம் அறிந்தது.
சக விண்வெளி வீர்ரான ஸ்டீவ் ஹாலியை அவர் மணந்தார். ஆனால் அதே சமயம் டாம் ஓஷானெஸியுடனான லெஸ்பியன் தொடர்பும் அவருக்கு இருந்தது. டாம் ஓஷானெஸி அவரது இளம் வயதுத் தோழி. இருவரும் இணைந்து டென்னிஸ் விளையாடுவது வழக்கம். இது அந்தரங்க ஓரினச் சேர்க்கை தொடர்பாக பின்னால் மாறி விட்டது. சாலி இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னால், ‘நம் தொடர்பைப் பற்றி பகிரங்கமாகச் சொல்லலாமா’ என்று டாம் ஓஷானெஸி கேட்ட போது, சாலி, ‘அது உன் விருப்பம். நீயே முடிவு எடு’ என்று சொல்லி விட்டார். ஆகவே மரணக் குறிப்பை டாம் ஓஷானெஸி வெளியிடுகையில் “பதினேழு வருடகால டாம் ஓஷானெஸியுடனான அவரது தொடர்பு” என்று பத்தே பத்து ஆங்கில வார்த்தைகளில் அதை வெளியுலகிற்குப் பகிரங்கப்படுத்தி விட்டார் அவர்.
மறைவு
கீமோதெராபி, ரேடியேஷன் தெராபி ஆகிய சிகிச்சைகள் அவருக்கு அளிக்கப்பட்ட போதிலும் கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் அவர் லா ஜொல்லா என்ற இடத்தில் உள்ள தனது இல்லத்தில் 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதி மரணமடைந்தார். உடல் எரியூட்டப்பட்ட பின்னர், அவரது அஸ்தி சாண்டா மோனிகாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவரது தந்தையாரின் கல்லறைக்குப் பக்கத்தில் புதைக்கப்பட்டது.
விருதுகள்
வாழ்நாள் முழுவதும் ஏராளமான விருதுகளை சாலி ரைட் பெற்றார். நாஸா ஸ்பேஸ் ஃப்ளைட் மெடல் விருதை இரு முறை அவர் பெற்றார். 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அவரது சிலை ஏவியேஷன் மியூசியம் மற்றும் ரோனால்ட் ரீகன் பொது நூலகம் ஆகிய இடங்களில் திறந்து வைக்கப்பட்டது. 2018-ல் அவரது உருவம் பொறிக்கப்பட்ட தபால்தலையை வெளியிட்டு அமெரிக்கா அவரை கௌரவித்தது.
பெண்களுக்கு உத்வேகமூட்டும் விதத்தில் அவர் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். பெண்களுக்குப் பயிற்சியையும் தந்து வந்தார்.
61 வயது வாழ்ந்த சாலியின் வாழ்க்கை வரலாறு ஒரு பெரிய உண்மையை அறிவிக்கிறது. விஞ்ஞானிகள் என்றால் மனித குலத்தின் அபூர்வப் பிறவிகள் என்ற ஒரு தவறான எண்ணம் உலகெங்கும் நிலவி வருகிறது.அவர்களுக்கும் அபிலாஷைகள், பலஹீனங்கள் உண்டு என்பது யாருக்கும் பொதுவாகத் தெரிவதில்லை. சாலியின் வாழ்க்கை வரலாறோ அற்புதமான துணிச்சல் மிக்க அறிவியல் பெண்மணியாக அவரைச் சித்தரிப்பதோடு மனிதர்களுக்கே உரித்தான பலஹீனமும் அவருக்கு இருந்தது என்பதையும் சேர்த்துச் சித்தரிக்கிறது!
உத்வேகமூட்டும் அவரது பொன்மொழிகளில் சில:
அவர் கூறியவற்றில் சில:
தான் செய்ய நினைத்ததைப் பயப்படாமல் செய்தவள் என்றும் அந்த இலட்சியத்தை அடையும் போது எதிர்வரும் அபாயங்களை ஏற்று வென்றவள் என்றும் என்னை அனைவரும் நினவில் வைத்திருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
எதிர்காலத்தில் அறிவியல் விஞ்ஞானிகளும் பொறியியலாளரும் வேண்டுமென விரும்பினால் நாம் பையன்களைப் பண்படுத்திப் பயிற்றுவிப்பது போலப் இளம் பெண்களையும் பயிற்றுவிக்க வேண்டும்.
வெற்றிக்கான இரகசியங்கள் மூன்று : 1) புதிய விஷயங்களை அறிய ஆவல் கொள்வது 2) புதிய செய்திகளை நன்கு அறிந்து அதை ஜீரணித்துக் கொள்வது 3) மற்றவர்களுடனும் தன்னை இணைத்துக் கொண்டு வேலையில் முன்னேறுவது!
***