ராமாயணத்தில் வரங்கள் (21) சரபங்ரை ப்ரம்ம லோகம் அழைத்துச் செல்ல இந்திரன் வந்தது!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.939

Date uploaded in London – –27 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் வரங்கள் (21) 

ராமாயணத்தில் வரங்கள் (21) சரபங்க மஹரிஷியை இந்திரன் சந்தித்து அவரை ப்ரம்ம லோகம் அழைத்துச் செல்ல வந்தது!

ச. நாகராஜன்

.

ஆரண்ய காண்டத்தில் ஐந்தாவது ஸர்க்கமாக அமைவது ‘ சரபங்கர் அக்னிப் பிரவேசம் செய்வது” என்ற ஸர்க்கம்.

விராதனை வதம் செய்த ஶ்ரீ ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணருடன் நேராக சரபங்க மஹரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்.

அங்கே சரபங்கரின் அருகில் சூரியனையும் அக்னியையும் நிகர்த்து அழகுடன் மிகவும் ஒளிபெற்று விளங்கும் அத்புதன் என்ற பெயரை உடைய இந்திரனைக் கண்டார்.

இந்திரன் தேர்த்தடத்திலிருந்து பூமியை மிதிக்காமல் இருப்பதையும் தேவர்களால் அவன் சூழப்பட்டிருப்பதையும் அவர் பார்த்தார்.

சரபங்கருடன் இந்திரன் பேசிக் கொண்டிருக்கும் போது லக்ஷ்மணருக்கு ராமர் இந்திரனின் ரதத்தைக் காண்பித்தார்.

“இந்திரன் அருகில் நிற்பவர்கள் அனைவரும் நித்ய யுவாக்கள். சிவப்பு ஆடை உடுத்தவர்கள். புலிகள் போல நெருங்க முடியாதவர்கள். எல்லோருடைய மார்புகளிலும் அக்னியை நிகர்த்த ஹாரங்கள் விளங்குகின்றன. இருபத்தைந்து வயதிற்குரிய வடிவை இவர்கள் பெற்றிருக்கிறார்கள். இது தான் இவர்களுக்கு எப்போதுமே ஏற்பட்டிருக்கிறது.” என்று விவரித்த ராமர் லக்ஷ்மணரிடம், ‘இங்கேயே காத்திரு இதோ வருகிறேன்’ என்று கூறி விட்டு சரபங்கரை நோக்கிச் செல்கிறார்.

இந்திரன் உடனே சரபங்கரிடம் அனுமதி பெற்று செல்ல விழைகிறான்.

“ஏனெனில் அவதார காரியத்தை முடித்த பின்னரே அவரை வெற்றி பெற்றவராக நான் பார்க்கப் போகிறேன்” என்று இந்திரன் கூறி சரபங்கரிடமிருந்து விடை பெற்றுக் கிளம்புகிறான்.

இந்திரன் சென்ற பிறகு சரபங்கரை ராமர் காண்கிறார். அப்போது இந்திரன் வந்ததைப் பற்றி அவர் சரபங்கரிடம் கேட்கிறார்.

அதற்கு சரபங்கரும் விவரமாக இந்திரன் வந்ததைப் பற்றி எடுத்துரைக்கிறார்.

மாமேவ வரதோ ராம ப்ரஹ்மலோகம் நிநீஷதி |

ஜிதமுக்ரேண தபஸா துஷ்ப்ராபமக்ருதாத்மபி: ||

ராம – ஶ்ரீ ராம!

வரத: – தண்ணளியுடைய வரம் அளிக்கும்

ஏஷ: – இவன்

அக்ருதாத்மபி: – ஆத்மஞானமில்லாதவர்களால்

துஷ்ப்ராபம் – அடைய முடியாததும்

உக்ரேண – கடும்

தபஸா – தவத்தால்

ஜிதம் – சம்பாதிக்கப்பட்டதுமான

ப்ரஹ்மலோகம் – பிரம்மலோகத்திற்கு

மாம் – என்னை

நிநீஷதி – அழைத்துப் போக எண்ணுகிறான்

 ஆரண்ய காண்டம் ஐந்தாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 26

இவ்வாறு கூறிய சரபங்கர் ராமர் வந்ததை ஒட்டி அவரை தரிசிக்காமல் பிரம்மலோகத்திற்குப் போகவில்லை என்று கூறுகிறார்.

பின்னர், ‘தன்னால் சம்பாதிக்கப்பட்ட அனைத்தையும் ஏற்றுக் கொள்க’ என்று கூறி அனைத்தையும் ராமருக்கு அர்ப்பணிக்கிறார்.

ராமர் அவரிடம் காட்டில் செல்ல இருக்கும் ஓரிடத்தைக் காண்பிக்குமாறு அவரை வேண்ட சரபங்கர் அவரை சுதீக்ஷ்ண ரிஷியைச் சென்று காணுமாறு கூறுகிறார்.

பின்னர் அக்னியை வளர்த்து அதில் புகுந்து தன் உடலை நீத்து தேஜோ மயமாக விளங்கி பிரம்மலோகத்தை அடைகிறார்.

இங்கு வரதோ ராம என்று கூறும் சரபங்கர் தான் பெற்ற வரதானத்தைப் பற்றி விவரமாக எதுவும் கூறவில்லை.

சரபங்கர் வரதானம் அடைந்ததை இங்கு தெரிந்து கொள்கிறோம்.

**

Leave a comment

Leave a comment