Post No. 13,940
Date uploaded in London – 27 November 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
வங்காளத்திலும் வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் வைஷ்ணவ பக்தி மார்க்கத்தைப் பரப்பிய சைதன்ய மஹாப்பிரபு பற்றிய பத்து கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் .
1.சைதன்யர் எந்த ஊரில், எப்போது பிறந்தார் ?
சைதன்யர், மேற்கு வங்காள மாநிலத்தில் நாடியா நகரில் 1486- ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி பெளர்ணமி தினத்தில் பிறந்தார் .
****
2.அவருடைய உண்மையான பெயர் என்ன?
விஸ்வாம்பர்; அவர் பத்தாவது குழந்தை. அவருக்கு முன்னால் பிறந்த எட்டு பெண் குழந்தைகளும் இறந்துவிட்டனர் . சைதன்யரின் அண்ணன் பெயர் விஸ்வரூபன். தனது சகோதரிகள் அனைவரும் இறந்ததால் அவர் துறவறம் ஏற்று தென்னிந்தியாவில் ஒரு மடத்தில் சேர்ந்தார்
****
3.அவருடைய வேறு பெயர்கள் என்ன ?
தாய் தந்தையர் விச்வாம்பர் என்று பெயர் சூட்டினாலும் பல குமந்தைகளைப் பறிகொடுத்ததால் இவர் மீதும் எம தருமன் பாயக்கூடாது என்று கசப்பு — நிமாய் என்று அழைத்தனர் . இதற்கு கசப்பான நீம் மரம் – வேப்ப மரம்– என்று பெயர் . அருகிலுள்ள எல்லோரும் அவரது அழகைக்கண்டு கெளரங்கர் என்று அழைத் தார்கள் ; கெளர் என்றால் அழகு ; குழந்தை அழும்போது ஹரி என்று சொன்னால் அழுகையை நிறுத்தி விடுவான்; இதனால் எல்லோரும் கெளர்–ஹரி என்றும் சொன்னார்கள்; அது கெளரங்கர் என்று மருவியது.
****
4.சைதன்யரின் தாய், தந்தையர், மனைவி, மக்கள் யார் ?
ஜகந்நாத மிஸ்ரர் என்ற அந்தணர் அவருடைய தந்தை; தாயின் பெயர் சசி தேவி . மாணவராக இருந்தபோதே தந்தை இறந்தார். பின்னர் வல்லபாச்சாரியாரின் புதல்வியான லெட்சுமியை கல்யாணம் செய்து கொண்டார் . அவர் பாம்பு கடித்து இறந்தவுடன் விஷ்ணுப்ரியா என்ற பெண்ணை மணந்தார்.
****
5.அவர் எழுதிய ஆராய்ச்சி நூலை ஆற்றில் எறிந்தது ஏன் ?
சைதன்யர் / கெளரங்கர் மாணவனாக இருந்தபோது , ரகுநாதர் என்ற ஆசிரியரிடம் தர்க்கம் பயின்றார். ஆசிரியர் திதீதி என்ற நியாய சாஸ்திர நூலை எழுதி உலகப் புகழ் பெற விரும்பினார் சைதன்யர் / கெளரங்கரும் ஒரு ஆராய்ச்சி நூல் எழுதினார்; இருவரும் படகில் செல்கையில் உன் ஆராய்ச்சி நூலைக் காட்டு என்று சொன்னவுடன் சைதன்யர் தயக்கமின்றி அதைக் கொடுத்தார். படித்த மாத்திரத்திலேயே வாத்தியார் ஓ என்று கதறி அழுதார். காரணம் என்னவென்று கேட்டபோது, நான் எனது நூல் மூலம் உலகப் புகழ்பெற எண்ணினேன்; அது கெட்டுப்போச்சே! என்று கதறி அழுதார். சைதன்யரும் அழுதுகொண்டே தனது ஆராய்ச்சிச் சுவடிகளை ஆற்றில் எறிந்தார். இன்றுவரை அவரது ஆசிரியர் எழுதிய நூலே முதலிடம் வகிக்கிறது.
*****
6.அவர் சைதன்யராக மாறியது எப்படி?
அவருக்கு 24-ஆம் வயதில் கேசவ பாரதி சுவாமிகள் என்பவர் கிருஷ்ண சைதன்யர் என்ற புதிய நாமத்தைச் சூட்டி சந்நியாசியாக மாற்றினார்
****
7.சைதன்ய மஹாப் பிரபுவின் குரு யார் ?
கெளரங்கரின் / சைதன்யரின் வாழ்வில் ஒரு வியத்தகு மாற்றம் 1509- ஆம் ஆண்டில் நடந்தது அவர் தமது தோழர்களுடன் கயை நகருக்குத் தல யாத்திரை செய்தார். அங்கு மத்வாச்சாரியாரின் சம்பிரதாயத்தைச் சேர்ந்த ஈஸ்வர பூரி என்ற துறவியைச் சந்தித்து அவரை குருவாக ஏற்றுக்கொண்டார். அவருக்கு கிருஷ்ண பகவானுடைய பத்து எழுத்து மந்திரத்தையும் ஈஸ்வர பூரி உபதேசித்தார் அதிலிருந்து கிருஷ்ணா ஹரி என்று சொல்வீர் என்று உபதேசித்து ஆனந்தக் கூத்தாடினார்; புழுதியில் புரண்டார்; அப்படிச் செய்யும் போதெல்லாம் உணவையும் பானங்களையும் மறந்தார்
****
8.அவருடைய நெருங்கிய நண்பர் யார்
நித்தியானந்தர் என்ற அந்தணர் துறவியாக மாறி கிருஷ்ணனை காண , பிருந்தாவன த்திலேயே தங்கி பெரும் முயற்சி செய்தார் ; வெற்றி பெறவில்லை; அவரை சைதன்யர் சந்தித்து, வீட்டுக்கு அழைத்துச் சென்று, அம்மா செத்துப்போன என் அண்ணன் திரும்பி வந்துவிட்டான்; இதோ பார்! என்று அம்மாவுக்கு அறிமுகப்படு த்தினார். அவர்கள் இருவரும் நவத்வீபம் பகுதியில் ஆனந்தக் கூத்தாடிக்கொண்டு தெருக்களில் சென்றபோது பக்தர்கள் கூட்டம் பெருகியது; சென்ற இடமெல்லாம் ஹரியின் நாமம் விண்ணைப் பிளந்தது. பிற்காலத்தில் சனாதனர், ஹரிதாஸர், முராரி, கதாதரர் ஆகியோரும் சேர்ந்து ஹரி நாமத்தைப் பரப்பினார்கள்.
****
9.கொலைகார ஜாகை , மாதை ஆகிய இருவரையும் மாற்றியது எப்படி?
ஜாகை , மாதை என்ற இரண்டு அந்தணர்கள் கொலை, கொள்ளை , கற்பழிப்பு ஆகிய எல்லா குற்றங்களையும் செய்து மஹா பாவிகள் என்ற பெயர் எடுத்தனர் அவர்களுக்கும் ஹரி நாமம் சொல்லி மாற்றிவிட வேண்டும் என்று சைதன்யர் சொன்னதால் நித்தியானந்தர் தலைமையில் பக்தர் கூட்டம் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் பாவிகளின் இல்லத்திற்குப் படை எடுத்தது. ஹரி நாமம் சொல்க என்று நித்தியானந்தர் சொன்னவுடன், மாதை உடைந்த ஜாடியின் ஒரு பகுதியை அவர் மீது வீசினான். நெற்றியில் அது அடித்து ரத்தப் பெருக்கை உண்டாக்கிற்று. இன்னொரு பகுதியை தலை மீது எறிய எடுத்தபோது ஜாகை ஓடிவந்து துறவியை அடிப்பது பாவம் என்று தடுத்தான். பின்னால் நின்றிருந்த சைதன்யர் ஓடிவந்து தாக்குதலைத் தடுப்பதற்காக ஜாகையைக் கட்டிக்கொண்டார் ; அவன் மூர்ச்சையாகி விழுந்தான்; அதே நேரத்தில் மாதையும் பேசும் சக்தியை இழந்தான்; மன்னிப்புக் கேட்கும்படி நித்தியானந்தர் சொன்னவுடன் அப்படியே செய்தவுடன் இருவரும் நல்ல நிலைமைக்குத் திரும்பினார்கள் சைதன்யரின் பெரிய பக்தர்களும் ஆனார்கள்.
****
10.சைதன்யர் ம ட ம், ஆஸ்ரமம் ஏதேனும் ஸ்தாபித்தாரா ?
அவருடைய முக்கியக் கொள்கைகள் என்ன ?
இல்லை; ஆனால் அவரது பக்தர்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்பினார்கள்; ஹரி போல் என்ற நாமம் எங்கும் ஒலித்தது அவரது வாழ்வில் பல அற்புதங்கள் நடந்தன ஒரு வண்ணானனைத் தொட்டவுடன் அவன் ஹரி நாமம் சொல்லிக் கூத்தாடவே அவனது மனைவி, பேய் பிடித்துவிட்டதாகச் சொல்லி ஏனையோரையும் அழைத்தாள்; அவர்கள் அந்த ஆடும் வண்ணானைக் கட்டிப்பிடித்து பேயை விரட்டச் சென்றபோது அவர்களுக்கும் ஹரி நாம் என்னும் எலெக்ட்ரிக் ஷாக் அடித்து ஹரி போல் என்று ஆடத் துவங்கினார்கள்; ஒரு முறை சைதன்யர் கடலில் குதித்து சமாதியாகவே மீனவர்கள் கனமான மீன் கிடைத்துவிட்டது என்று எண்ணி கரைக்கு கொண்டு வந்து அவரைத் தொட்ட மாத்திரத்தில் ஹரி பக்தர்கள் ஆனார்கள்.
தனது இறுதிக் காலம் முழுவதையும் புரி நகரில் செலவிட்ட சைதன்யர் 1533 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார்
அவரது பக்தர்கள் அவரை ஆறு கைகள் கொண்ட தெய்வம் என்று வருணிக்கிறார்கள். அவர் பல பிரிவுகளை பின்பற்றிய பெரியோர்களையும் கிருஷ்ண பக்தி இயக்கத்துக்கு மாற்றினார் .
—subham—
Tags-சைதன்யர், நித்தியானந்தர், மஹாப்பிரபு, நிமாய், கெளரங்கர், திதீதி, ஈஸ்வர பூரி