WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.944
Date uploaded in London – –28 November 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Kalkionline ல் தீபம் இதழில் 18-11-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை
மஹரிஷி அரவிந்தர் ஜனனம் : 15-8-1872
சமாதி : 5-12-1950
அன்னை ஜனனம் : 21-2-1878
சமாதி : 17-11-1973
போற்றுவோம் புனிதர்களை!
மனமே தான் எல்லாம்; மன அழுத்தம் மரணத்திலும் கொண்டு விடும்! Relax மக்களே!
ச.நாகராஜன்
அன்னையின் உபதேசம்
அரவிந்த அன்னை மிகத் தெளிவாக மனதின் மாண்பைக் கூறுகிறார் இப்படி: “சில மனிதர்கள் இருக்கிறார்கள் – ஒரு சின்ன விஷயம் அவர்கள் உடலுக்கு நேர்ந்தால் கூட அவர்களின் மனம் உடைந்து போய் விடுகிறது. இன்னும் சிலரோ உடலில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் கூட மனதைத் தெளிவுடன் வைத்திருக்கிறார்கள். மனம் மிகவும் மோசமாக இருந்து உடலை நல்ல விதமாக வைத்திருப்பவரைப் பார்ப்பது மிகவும் அரிது. அது முடியாதது என்பதில்லை; அப்படி நடப்பது என்பது மிக மிக அரிதான ஒரு விஷயம்! ஏனெனில் உடலின் நலம் மனதின் நலத்தையே பொறுத்திருக்கிறது. மனமே உடலின் மாஸ்டர். உடல் எளிதில் வசப்படுத்தக்கூடிய ஒன்று என்பதோடு மனம் கீழ்ப்படியும் நல்ல வேலைக்காரன் தான்!”
இப்படிக் கூறிய அவர் மேலும் விளக்குகிறார்: “சாதாரணமாக ஒருவர் மனதை மோசமாகவே பயன்படுத்துகிறார். மனதை அழிவு வேலையைச் செய்ய விட்டு விடுகிறார். ஆனால் அதையே தனக்கு நல்லதைச் செய்யப் பயன்படுத்தவும் ஒருவரால் முடியும். அதை எப்படிச் செய்வது என்று ஒருவர் தெரிந்து கொண்டால் சில விநாடிகளிலேயே அற்புதமான நல்ல விளைவுகளை ஒருவர் பெறுவார்.”
இதைக் கூறி விட்டு அன்னை தாரக மந்திரமாக மூன்று மந்திர மொழிகளை நமக்கு அறிவுறுத்திக் கூறுகிறார்.
மனதை ஒழுங்கு படுத்து. (Organize the Mind)
மனதைத் தூய்மைப் படுத்து. (Purify the Mind)
மனதை அமைதிப்படுத்து. (Quiet the mind)
அனைத்து உபநிடதங்கள் கூறுவதை சாரமாக இப்படி அன்னை எடுத்துரைக்கிறார்.
மனமே எல்லாம் – உபநிடதம்
அம்ருத பிந்து உபநிடதம் கூறுவது இது:
மன ஏவ மனுஷ்யானாம் ; காரணம் பந்த மோக்ஷயோ:
பொருள் :
மனதைப் பொறுத்தே மனிதர்கள் அமைகின்றனர் காரணம் மனமே பந்தப்படுத்துகிறது; மனமே மோக்ஷத்திற்கு வழி வகுக்கிறது!
மனதின் சரித்திரத்தை எழுதிய டெய்லர் !
மனதிற்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு நுட்பமானது. மனதை வைத்துக் கொண்டு ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ளலாம் அல்லது தாழ்த்திக் கொள்ளலாம்.
ஒரு உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம்.
இதைப் பதிவு செய்திருப்பவர் ஆகப் பெரும் எழுத்தாளரான கார்டன் ராட்ரே டெய்லர் என்பவர். மனதின் இயற்கையான சரித்திரத்தைப் புத்தக வடிவில் தந்திருப்பவர் இவர் ( The Natural History of the Mind by Gordon Rattray Taylor). இவர் பிபிசிக்கு அறிவியல் ஆலோசகராக இருந்தவர்.
இவர் கூறும் சம்பவம்:
“இரண்டாம் உலகப்போர் சமயம் க்ளிப்போர்ட் ட்ரோக் என்பவர் டெய்லருக்கு நண்பராக ஆனார். ட்ரோக் லண்டனில் நான்கு வருடங்கள் வான்வழித் தாக்குதலில் பாதுகாப்பு வார்டனாகப் பணி புரிந்தார். எப்போது தாக்குதல் நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?
ஆகவே அவருக்கு தூக்கம் என்பதே கிடையாது. கிடைத்த சிறு இடைவேளையில் தூங்க வேண்டியது தான்! இதனால் எப்போதும் அவரை மன அழுத்தம் பாதித்துக் கொண்டே இருந்தது. ஒரு நாள் பெரிய வான் வழித்தாக்குதல் நடந்தது. ஏராளமான பேர்கள் இறந்தனர். இறந்தவர்களைப் புதைக்க வேண்டுமே! ட்ரோக் பணியாற்றிய பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு அனைத்து உடல்களும் கொண்டு செல்லப்பட்டன. அன்றைய இரவு இன்னொரு பெரிய குண்டு பள்ளிக்கூடத்திற்கு அருகே போடப்பட்டது. ஆனால் அது வெடிக்கவில்லை; எப்போது வெடிக்குமோ என்ற பயம் அனைவருக்கும் ஏற்பட்டது. மருத்துவ அதிகாரிகள் இறந்த உடல்களை பள்ளியில் வைத்திருப்பது அபாயகரமாகும்; உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்; ஒரு வேளை குண்டு வெடித்தால் என்ன செய்வது? என்று கூறி தன்னார்வத் தொண்டர்களை உடனே உதவிக்கு வருமாறு கூறினர்.
இன்னொரு நாள் இதே போன்ற ஆபத்து அறிவிப்பு வந்தது. ட்ரோக் அனைத்து குண்டுகளும் ஹிட்லர் தன்னையே குறி வைத்துப் போடுவதாக மனதில் எண்ணலானார். தான் இறக்கும் வரை அனைத்து குண்டுகளும் தன்னையே இலக்காக வைத்து ஜெர்மானிய விமானப்படை தாக்குதலை நடத்தும் என்று எண்ணிய அவர் நடைபாதையில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து ஓவென்று அழ ஆரம்பித்தார்.
அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது இரத்த அழுத்தத்தைப் பார்த்த டாக்டர் ஓவென்று அலறினார். ட்ரோக்கை நோக்கி அவர், “இதோ பாருங்கள்! விஷயத்தை லேசானதாக எடுத்துக் கொள்ள வேண்டும். போட்டு தொடர்ந்து அலட்டிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிச் செய்தால் உங்கள் உடல் தானே வெடித்து விடும்” என்று எச்சரித்தார்.
சில வருடங்கள் அவர் உயிர் வாழ்ந்தார்; ஒரு நாள் மாரடைப்பால் இளமையிலேயே அவர் மரணமடைந்தார்.
மன அழுத்தம் எப்படி மரணத்தில் கொண்டு விடும் என்பதற்கு ட்ரோக் சிறந்த உதாரணம் என்று கூறி மனதின் சரித்திரத்தைக் கூற ஆரம்பிக்கிறார் டெய்லர்.
***