பாண்டிச்சேரி ‘மதர்’ ஶ்ரீ அன்னை – 1 மலர் மருத்துவம் (Post No.13,948)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.948

Date uploaded in London – –29 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஞானமயம் 24-22-2024 ஒளிபரப்பில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாகத் தரப்படுகிறது.

ஶ்ரீ அன்னை – 1 

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே, சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.

சென்ற வாரத்தின் தொடர்ச்சியாக இன்று நாம் பாண்டிச்சேரி மதர் – அன்னையின் திவ்ய சரிதத்தையும், அவரது அருள் மொழிகளையும் தொடர்ந்து பார்ப்போம். 

            ஸ்ரீஅன்னையின் சரிதை

            ———————————-

    ஸ்ரீஅன்னையின் திவ்விய சரித்திரம் அதி அற்புதமானது. அனுதினமும் நூற்றுக்கணக்கான தெய்வீக சம்பவங்களால் கோர்க்கப்பட்ட நறுமணம் வீசும் மலர்களைக் கொண்டுள்ள தெய்வீக மாலை என அவர் திகழ்ந்தார்.

      1878 பிப்ரவரி மாதம் 21ம் தேதி பாரிசில் அன்னை பிறந்தார். அவரது இயற் பெயர் மிரா அல்ஃபஸா. இளவயதிலேயே படிப்பில் சிறந்து விளங்கிய அவருக்கு யோக சாதனையில் நல்ல நாட்டம் இருந்தது. பல ஆன்மீக அனுபவங்களைத் தொடர்ந்து பெற்றார். சமயம், மெய்ஞானம், கலை, கவிதை, இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்த உலக நூல்களை அவர் கற்றுத் தெளிந்தார்.

      1914ல் முதல் முறையாக பாண்டிச்சேரி வந்த அவர், அரவிந்தரைத் தரிசித்தார். உடனேயே தான் காட்சிகளில் கண்ட ஸ்ரீ கிருஷ்ணர் அவரே என உணர்ந்தார். ஜப்பானுக்குச் சிறிது காலம் சென்ற அவர் மீண்டும் இரண்டாவது முறையாக பாண்டிச்சேரிக்கு 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி வந்தார். இந்த முறை அவர் உற்றார் உறவினர் அனைவரையும் விட்டு விட்டு வந்து விட்டார்,

      ஸ்ரீஅன்னை முதலில் மக்ரி ஹோட்டலில் தங்கினார். பின்னர் வாடகைக்கு எடுத்துக் கொண்ட வீடு ஒன்றுக்குச் சென்றார். பிறகு வேறு சில வீடுகளுக்கு மாறினார்.

       கடைசியாக சென்று வசித்த வீடு மிகப் பழைய வீடு. நவம்பர் 24ம் தேதி அன்று அடித்த புயல்காற்று மழையினால் வீடு பல இடங்களில் ஒழுக  ஆரம்பித்தது. எதிர்பாராமல் ஏதேனும் நடந்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணிய  ஸ்ரீஅரவிந்தர் அன்னையைத் தான் குடியிருந்த 41ம் நம்பர் பிரான்சுவா மர்த்தேன் வீதிக்கே வந்து குடி இருக்கச் சொன்னார். அது முதல் அங்கேயே அன்னை தங்கத் தொடங்கினார். அப்போது அங்கே அரவிந்தருக்கு 4 அல்லது 5 சீடர்கள் இருந்தனர். பெரும் செல்வந்தராக வாழ்ந்து வந்த அன்னை இப்போது முதல் எளிமையாக வாழத் தொடங்கினார்.

        1922ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பிரான்சுவா மர்த்தேன் வீதி வீட்டிலிருந்து மரீன் வீதி 9-ம் நம்பர் வீட்டுக்கு ஆசிரம விடுதி மாற்றப்பட்டது.அது முதல் அன்னை வீட்டு நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

        1920ல் இருபது சாதகர்கள் சேர்ந்தனர். ஆசிரமம் மெள்ள விரிவுபடலாயிற்று. அரவிந்தரின் யோகம் உக்கிரமானது. அவர் தனித்து ஒதுக்கத்தில் இருக்க ஆரம்பித்தார்.1928ல் சாதகர் எண்ணிக்கை ஐம்பதை எட்டியது.

        சாதகர்கள் அன்னையை நேரில் கண்டு தியானம் செய்வர். அப்போது அரவிந்தர் தரிசனத்தை மூன்று நாட்களில் மட்டுமே பெற முடிந்தது. பிப்ரவரி 21- ஸ்ரீஅன்னை பிறந்த நாள், ஆகஸ்ட் 15- ஸ்ரீஅரவிந்தர் பிறந்த நாள், நவம்பர் 24 -ஸ்ரீஅரவிந்தர் தம் அத்யாத்ம வாழ்வில் பேரனுபவம் பெற்ற நாள் ஆகியவனவே இந்த மூன்று நாட்கள்!

       ஆசிரமம் நாடு, மொழி, இனம்,பால், அந்தஸ்து, அரசியல் என்ற வேறுபாடுகளைக் கடந்து விளங்கியது.பிரம்மாண்டமானது.

        1950ல் -ஸ்ரீஅரவிந்தர் மஹா சமாதி அடைந்தார். விஞ்ஞான சக்தியை (சூப்ராமெண்டல்) கீழிறங்கச் செய்து அது தன் உருமாறுதல் வேலையைச் செய்யச் செய்வதே தனது வழி என்றார் அவர்.

        உலக சமுதாயத்தில் புதிய சகாப்தம் தொடங்க ஆரம்பித்தது. இதுவரை இருந்து வந்த பூரண யோகம் “விஞ்ஞான” (சூப்ராமெண்டல்) பூரண யோகமாக உருமாறுதல் எய்தியது.

       ஸ்ரீஅரவிந்தரின் பணியை அன்னை தொடரலானார். 1952ல் ஸ்ரீஅன்னை பன்னாட்டு கல்வி மையத்தைத் தொடங்கினார். 1968ல் உலகிற்கே புதுமையாக விளங்கிய அரோவில்லியைத் தொடங்கினார். 1973ல் நவம்பர் 17ம் தேதி ஸ்ரீஅன்னை மஹா சமாதி அடைந்தார்.

          ஸ்ரீஅன்னையின் பணி மகத்தானது. புவியை புதிய ஏற்றத்திற்குக் கொண்டு செல்லும் பணி அது. சாதகர்களை உயர உயர ஏற்றிச் செல்லும் மகத்தான பணி அது.

          என்னை நினைத்தவர்களுடன் நான் எப்போது இருக்கிறேன் என்று அவர் அருளி இருக்கிறார். அதை நிரூபிக்கும் வகையில் சாதகர்கள் இன்றும் அவரது வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறுகின்றனர்.

          அவரை ஸ்மரிப்போம்; உயர்வோம்!

தன் வாழ்வில் நடந்த பல அதிசய நிகழ்வுகளை அவரே கூறியுள்ளார். அவற்றில் ஒன்று இது:

ஸ்ரீஅன்னையும் தவளையும்

————————————

        க்ளெம்ஸலில் நான் ஸ்ரீமான் தேயோன் அவர்கள் வீட்டில் தான் வசித்து வந்தேன். அங்கே ஒரு பியானோ இருந்தது. இதை முன்பே அறிந்திருந்த நான், குறிப்புகளடங்கிய எனது பாட்டுப் புத்தகங்களையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். அடிக்கடி நான் அங்கே பியானோ வாசித்து வந்தேன்.

      ஒரு நாள், ஒரு முழு கானத்தை, நீண்ட நேரமாக பியானோவில் வாசித்து நான் நிறுத்தியவுடன், திடீரென “க்வேக்,க்வேக்” என்று ஒரு விசித்திர தொனி என் செவிகளில் பட்டது; இந்த தொனி எங்கிருந்து கிளம்புகிறது என்று ஆராயலுற்றேன். பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்த போது, வாயிற்படி அருகில் புதிய விருந்தாளி ஒருவர் வீற்றிருப்பதையும், அவர் விழிகள் பிதுங்க என்னையே உற்று நோக்கியவாறு இருப்பதையும் கண்டேன். அவர் தான் திருவாளர் தவளையார்.

     நான் அவரைப் பார்த்த போது அவர் “க்வேக்” என்றார். அவர் என்ன சொன்னார் என்பது எனக்கு நன்கு புரிந்து விட்டது. அவர் கூறியதாவது:-“மேற்கொண்டு இன்னொரு முறை பாடு” என்பதே. ஆதலால் இன்னும் சிறிது நேரம் நான் பியானோ வாசித்தேன். நான் நிறுத்தும் வரை அவர் அங்கேயே வீற்றிருந்து, மெய்மறந்து கவனத்துடன் இசை கேட்டனுபவித்தார்; அதன் பிறகு நான் எப்போது பியானோ வாசித்தாலும் அந்த தவளை எங்கிருந்தோ தோன்றி பிதுங்கிய விழிகளுடன் என் பாட்டை மிகக் கவனமாகக் கேட்டனுபவித்து வந்தது. நான் நிறுத்தியவுடன் அது ‘க்வேக்’ என்று சொல்லும்.

  

        ஸ்ரீஅன்னை அருளிய மலர்களின் சக்தி 

         ——————————————————-  

மலர்களுக்கு உலகில் உள்ள எல்லா நாகரிகங்களிலும் தனிப்பட்ட இடம் உண்டு. ஆனால்  ஸ்ரீஅன்னை அவற்றின் அபார சக்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இரகசியத்தை அறிந்து அதைக் கடைப்பிடித்தால் அரிய ஸித்திகளைப் பெறுவோம். சில முக்கிய மலர்களின் சக்தி பற்றி  ஸ்ரீஅன்னையின் அருளுரையைக் கீழே காணலாம்:-

எண் ஆங்கிலப் பெயர் அல்லது தாவரப் பெயர்   ஸ்ரீஅன்னை

இட்ட பெயர்    தமிழ்ப் பெயர்

01    Water Lily       செல்வம்  அல்லி

02    Cannon-ball tree         லக்ஷ்மி கடாக்ஷம்    நாகலிங்கப் பூ

03    Portia Tree      உடல் நலம்    பூவரசம் பூ

04    Guava  நிதானம்   கொய்யாப் பூ

05    Pumpkin          அபரிமிதம்      பூசணிப் பூ

06    Florist’s Chrysanthemum                   சக்தி           சாமந்தி

07    Globe Amarnath         மரணமிலா வாழ்வு        வாடாமல்லி

08    Vinca Roses                முன்னேற்றம்        பட்டிப்பூ, நித்திய கல்யாணி

09    Coral Vine; Queen’s Wreath  சுமுகம்    கொடி ரோஸ்

10    Croton தவறான எண்ணங்களை மறுக்கும் திறன்   குரோட்டன்ஸ்

11    Climbing Yiang- Yiang          தெளிவான மனம்    மனோரஞ்சிதம்

12    White Oleander           தூய்மையான மனம்  நந்தியாவட்டை

13    Yellow Oleander         மனம்     குவளை, மணி அரளி

14    Sunflower       ஒளியை நோக்கி வரும் சித்தம்  சூரிய காந்தி

15    Mango தெய்வ ஞானம் மாம்பழம்

16    Spanish Cherry (fruit) பூர்த்தி     மகிழம் பூ

17    Night Jasmine  பக்தி (ஆர்வம்)  பவழமல்லி பாரிஜாதம்

18    Sacred (White) Lotus தெய்வசித்தம்   வெண்தாமரை

19    Sacred (Pink) Lotus    அவதாரம் செந்தாமரை

20    Bougainvilla    பாதுகாப்பு காகிதப்பூ

21    Neem Tree       ஆன்மீகச் சூழல் வேப்பம் பூ

22    Spanish Cherry           பொறுமை மகிழம் பூ

23    Mudar தைரியம்  எருக்கம் பூ

24    Pomegranate   தெய்வீக அன்பு மாதுளம் பழம்

25    Water Lily       மஹாலெக்ஷ்மியின் பூரணச் செல்வம் அல்லி

26    Sorrowless Tree of India        சோகமின்மை   அசோகப் பூ

27    Glory Lily or Flame Lily        சச்சரவின்மை   செங்காந்தள்

28    African Marigold        மனத்தின் தெம்பு     துலுக்க சாமந்தி (மஞ்சள்)

29    Hibiscus          பொங்கி வரும் சக்தி செம்பருத்தி சிவப்பு

30    Jasmine            தூய்மை   மல்லிகை

31    Tulsi    பக்தி துளசி

32    Butterfly Pea   ராதையின் உணர்வு  சங்குப் பூ (நீலம்)

33    Barleria            விழிப்பு    டிஸம்பர் பூ

        ஸ்ரீஅன்னை சிறுவர்க்குக் கூறிய கதைகள்

               ——————————————————–            

ஸ்ரீஅன்னை குழந்தைகள் பால் கொண்ட அக்கறையும் பரிவும் எல்லையற்றது. அவர்களின் கல்வியில் அவர் விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டார். அவர்களுக்காக அவர் அருளிய கதைகள் மிக்க சுவையானவை. எடுத்துக்காட்டாக ஒழுங்கு பற்றியும் மலர்ச்சி பற்றியும் அவர் கூறிய இரு கதைகளை இங்கே காணலாம்.

எதிலும் ஒழுங்கு!

———————–      

           ஒரு கிராமத்து  பண்ணை வீடு ஒன்றில் தாத்தா காலத்து பழைய கடிகாரம் ஒன்று இருந்தது. அது 150 ஆண்டுகள் இடைவிடாது ஓடி சரியான நேரத்தைக் காட்டி வந்தது.

          ஒவ்வொரு நாள் காலையும் அந்த வீட்டில் இருந்த விவசாயி காலை எழுந்தவுடன் அந்தக் கடிகாரம் அருகே சென்று அதை முதலில் பார்ப்பதோடு அது சரியாக ஓடுகிறதா என்றும் பார்ப்பார்.

          ஒரு நாள் காலை இப்படி வழக்கம் போல அவர் கடிகாரத்தைப் பார்த்த போது அது திடீரென்று பேசத் தொடங்கியது.

          “150 ஆண்டுகளாக நான் வேலை செய்து வருகிறேன். நிற்காமல் ஓடி சரியான நேரத்தைக் காட்டி வருகிறேன். எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. எனக்கு ஓய்வு வேண்டாமா?”

         “உன்னுடைய புகார் சரியானதில்லை, எனது அருமை கடிகாரமே” என்று பதில் அளிக்கத் தொடங்கிய விவசாயி தொடர்ந்தார் :-

“ஒவ்வொரு டிக்கிலும் உனக்கு ஒரு விநாடி ஓய்வு இருப்பதை நீ மறந்து விட்டாயே!”

          கடிகாரம் ஒரு விநாடி யோசித்தது. பிறகு மீண்டும் வழக்கம் போலத் தன் பணியைத் தொடர்ந்தது.

          குழந்தைகளே, இந்தக் கதை கூறும் நீதி என்ன? ஒரு ஒழுங்கு முறையிலான வேலையில் களைப்பும் ஓய்வும் சரியானபடி ஒன்றுக்கொன்று ஈடு கொடுத்து அமைக்கப்பட்டால் அந்த ஒழுங்கு முறையே அதிக பளுவையும் அதனால் உண்டாகும் வலியையும் நீக்கி விடும் என்பது தான்!

எப்போதும் மலர்ச்சி!

————————————

           பெர்ஷியாவில் தேனை விற்கும் பெண்மணி ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் எப்போதும் மலர்ந்த முகத்தையும் இனிய சுபாவத்தையும் கொண்டிருந்தாள். அவளுடைய கடைக்கு எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வாங்குவது வழக்கமாகி விட்டது.

          இந்தக் கதையைச் சொல்லும் கவிஞர் அந்தப் பெண்மணி விஷத்தை விற்றாலும் கூட அதை எல்லோரும் தேன் என்று எண்ணி வாங்கி விடுவார்கள் என்கிறார்!

         இதைப் பார்த்து எரிச்சலடைந்த ஒரு மனிதன் அவள் எவ்வளவு லாபத்தை அடைகிறாள் என்று எண்ணி அதே வியாபாரத்தைத் தானும் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான்.

          ஆகவே அவன் தானும் ஒரு கடையை அமைத்தான். அதில் வரிசையாக தேன் குடங்களைக் கொண்டு வந்து அடுக்கினான். அங்கே வந்தவர்களை எல்லாம் அவன் அலட்சியமாக நடத்தினான். ஆகவே ஒவ்வொருவராக எல்லோரும் அங்கிருந்து நழுவினார்கள்.

        ஒரு ஈ கூட அவன் தேன் குடத்தின் பக்கம் போகவில்லை என்கிறார் கவிஞர்!

       அன்று மாலை ஆனது. கடையில் ஒரு விற்பனை கூட இல்லை.

       ஒரு பெண்மணி இதைக் கவனித்தாள். அவள் தன் கணவனிடம் கூறினாள்,

“ஒரு கடுமையான முகம் புளித்த தேனைத் தான் கொண்டிருக்கும்”

      சிரித்தவாறே மலர்ச்சியுடன் இருந்த பெண்மணி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இழுக்க மட்டும் தானா அப்படி மலர்ச்சியுடன் இருந்தாள்? அவளுடைய இயல்பான இயற்கையே அப்படித்தான்; அதிலிருந்தே அந்த மலர்ச்சி ஊற்றெடுக்கிறது என்றே நாம் நம்பலாம்.

      நாம் இந்த உலகில் விற்கவோ வாங்கவோ மட்டும் வரவில்லை. ஒருவர் இன்னொருவருடன் தோழமையுடன் இருக்க வேண்டும். அந்த இனிய பெண்மணி வாடிக்கையாளர்களுக்குத் தேனை மட்டும் விற்கும் பெண்மணியாகத் தெரியவில்லை;அதற்கும் மேலானவளாகத் தெரிந்தாள். அவள் மலர்ச்சியுள்ள உலகின் குடிமகள் என்ற அந்தஸ்தில் இருந்தாள்.

      அப்படி ஒரு மலர்ச்சியை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருந்து பணியைச் செய்ய வேண்டும்!

***

tags-         ஸ்ரீஅன்னை ,மலர்களின் சக்தி , Flower medicines

Leave a comment

Leave a comment