ஆலயம் அறிவோம்! ஶ்ரீ வைகுண்டம் தலம் (Post No.13,961)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 13,961

Date uploaded in London – –2 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1-12-2024 அன்று ஒளிபரப்பாகிய ஞானமயம் நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட உரை

ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கையிருந்து

    வைகுந்தத்துள் நின்று

தெளிந்த என் சிந்தையகங் கழியாதே

   என்னை ஆள்வாய்! எனக்கருளி

நளிர்ந்த சீருலகம் மூன்றுடன் வியப்ப

   நாங்கள் கூத்தாடி நின்றார்ப்ப

பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்

   கனிவாய் சிவப்ப நீ காண வாராயே

–    நம்மாழ்வார் திருவடி போற்றி

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றான ஶ்ரீ வைகுண்டம் தலமாகும். நவதிருப்பதிகளுள் முதல் திருப்பதியாக அமைவதும் இதுவே,

இத்திருத்தலம் தமிழ்நாட்டில் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூருக்குப் போகும் வழியில் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

விண்ணுலகில் இருக்கும் ஶ்ரீ வைகுண்டம் என்ற பெயரைத் தாங்கி பூலோகத்தில் இருக்கும் திருத்தலம் இது.

மூலவர் திருநாமம் : ஶ்ரீ வைகுண்ட நாதர் (நின்ற திருக்கோலம்)_

உற்சவர் : ஶ்ரீ கள்ளப்பிரான்

தாயார்: வைகுந்தவல்லி, சோரநாத நாயகி

தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், ப்ருகு தீர்த்தம்  மற்றும் கலச தீர்த்தம்

இத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. பிரம்மாண்ட புராணத்தில் சொல்லப்படும் வரலாறு இது. பிரம்மா எழுந்தருளியுள்ள சத்திய லோகத்தில் ஒரு சமயம் பிரளயம் ஏற்பட்டு எங்கும் நீர் சூழ்ந்திருந்த நேரத்தில் சோமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் அவரிடமிருந்து வேதங்களைத் திருடிச் சென்று விடுகிறான்.

பிரம்மா இங்குள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுந்தத்தில் உள்ள நாராயணனை நோக்கித் தவம் புரிய நாராயணன் வேதங்களை அவரிடம் மீட்டுத் தருகிறார்.

வைகுண்டநாதராய் அவர் இங்கு எழுந்தருளியிருக்கிறார்.

இன்னொரு வரலாறு இது. வைகுண்டநாதரின் பக்தனான காலதூஷகன் என்னும் திருடன் வைகுண்டநாதரைத் தொழுத பின் தனது திருட்டில் பாதியை தர்மத்திற்குச் செலவிட்டு வந்தான். ஒரு சமயம் அவன் அரண்மனையில் திருட முயன்ற போது அவனுடன் சென்றவர்கள் சிக்கிக் கொள்ள, காலதூஷகனை அரண்மனை சேவகர்கள் தேடலாயினர்.இதை அறிந்த காலதூஷகன் வைகுந்தநாதரைப் பணிய அவன் வேஷத்தில் வைகுந்தநாதரே அரண்மனையில் அரசன் முன் சென்று நின்றார். மன்னன் காலதூஷகனிடம் திருடியதைப் பற்றிக் கேட்க அரசனின் குற்றங்களை வரிசையாக அடுக்கினார் வைகுண்டநாதர். செல்வத்திற்கு சத்ருக்கள் நால்வர். தர்மம், அக்னி, சோரன், ராஜா ஆகிய நால்வரே அவர்கள். நீ கொஞ்சமேனும் தர்மத்தைச் செய்யவில்லை. ஆகவே தான் இந்த நாடகத்தை நாம் ஆடினோம்” என்றார் வைகுந்தநாதர். திடுக்கிட்ட அரசன் இப்படிச் சொல்வது யார் என்று யோசிக்க அரசனுக்கும் காலதூஷகனுக்கும் தரிசனம் தந்து மறைந்தார் வைகுண்டநாதர். திருடன் வடிவில் வந்ததாலும் பக்தர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதாலும் அவர் கள்ளபிரான் என்று அழைக்கப்படலானார்.

Pictures from trip advisor; thanks.

காலகிரமத்தில் கோவில் இடிபாடு அடைந்தது. ஒரு சமயம் பாண்டிய மன்னனின் அரண்மனைப் பசு ஒன்று ஓரிடத்தில் தினமும் பால் சொரிந்து வர அங்கு சென்ற பாண்டியன் அந்த இடத்தில் இருந்த விக்ரஹத்தைக் கண்டு அதை மீண்டும் கோவில் எழுப்பி நிறுவினான்.

இங்குள்ள கள்ளபிரானின் சிலையை வடிவமைத்த சிற்பி அதன் அழகில் சொக்கி கன்னத்தைக் கிள்ளி விட்டான். ஆத்மார்த்தமாக செய்யப்பட்ட அந்தக் கிள்ளலை கள்ளபிரான் ஏற்றுக் கொண்டார். அந்தக் கிள்ளலின் வடுவை இன்றும் சிலையில் காணலாம்.

நவத்திருப்பதிகளுள் முதலாவதாக அமையும் இதை முதலில் அடைந்து வழிபட்டு பின்னர் இதர தலங்களான  வரகுணமங்கை எனப்படும் நத்தம், திருப்புளியங்குடி, இரட்டை திருப்பதி (தேவர்பிரான்) இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனார்) பெருங்குளம், தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய தலங்களை ஒரே நாளில் தரிசிப்பது மரபாகும்.

இங்குள்ள முகப்பு கோபுரத்தின் அடி 136 அடியாகும். கோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நாம் காண்பது பெரிய மண்டபமும் அதன் நடுவே ஒரு காட்சி மண்டபத்தையும் நாம் காணலாம்.

மூலவர் வைகுண்டநாதர் சந்திர விமானத்தின் கீழ் ஆதி சேஷன் குடைபிடிக்க  நான்கு கரங்களுடன் மார்பில் மஹாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளி காட்சி தருகிறார். ஆதிசேஷன் நின்றவாறே கொடைபிடிக்கும் காட்சி இந்தத் திருத்தலத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. வைகுண்டநாதருக்கு இங்கு தினமும் ஆறு கால பூஜைகள் நடத்தப்படுகின்றன.

கோவிலின் உள்ளே உற்சவர் கண்ணபிரான் ஶ்ரீ தேவி மற்றும் பூதேவியுடன் காட்சியளிக்கிறார். வைகுந்தநாயகியும் சோரநாத நாயகியும் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர்..

பழமை வாய்ந்த இந்தக் கோவிலில் அற்புதமான சிற்பங்கள் உள்ளன. சித்திரை  மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆறாம் நாள் சூரியனின் ஒளிக் கிரணங்கள் ஶ்ரீ வைகுண்டநாதர் மீது விழுகின்றது. அதற்கு ஏற்றாற் போலக் கொடிமரம் சற்றே விலகி உள்ளது.

ஆண்டு தோறும் கருடசேவை திருவிழா உள்ளிட்ட ஏராளமான திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இவற்றில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

இத்தலம் பற்றி ‘புளிங்குடி கிடந்து வரகுணமங்கை இருந்து வைகுந்தத்தில் நின்று’ என்று நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். இதற்கு விளக்கம் அளித்துள்ள  வைணவ ஆச்சாரியரான அழகிய மணவாளப் பெருமாள், புளியங்குடியில் படுத்த கோலமாகக் கிடந்தும், வரகுணமங்கையில் அமர்ந்தும், வைகுண்டம் தலத்தில் நின்றும் காட்சி தருகிறார் எனக் கூறுகிறார்.

சோரநாதர் மீது இயற்றப்பட்ட சோரநாத சுப்ரபாதம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்.

பிரிட்டிஷாரை எதிர்த்துப் போர் புரிந்த வீரபாண்டிய கட்டபொம்மன் இத்தலத்தைத் தனது கோட்டையாகப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வைகுண்டநாதரும் வைகுந்த நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

 –subham—

 tags- ஆலயம் அறிவோம்,  ஶ்ரீ வைகுண்டம் தலம் 

Leave a comment

Leave a comment