Post No. 13,962
Date uploaded in London – 2 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1.நாம தேவர் யார், எங்கே எப்போது பிறந்தார் ?
அவர் மகாராஷ்டிரத்தில் 1269-ஆம் ஆண்டு பிறந்தார் . பெரிய ஞானி; இறைவன் மீது பக்திப்பாடல்களைப் பாடிய பெரியவர் . அவர் நர்சி என்னும் கிராமத்தில் பிறந்தார் . ஹிங்கோலி , றிசாத் என்னும் இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ளது
****
2.நாமதேவருடைய குடும்பம் என்ன தொழில் செய்தது ?
அவருடைய குடும்பம். தையல்கார குடும்பம். அவர்கள் தையல் தொழிலைச் செய்தனர். வருமானத்தைப் பெருக்குவதற்காக விட்டோபா கோவில் கொண்டுள்ள பண்டரீபுரத்துக்குக் குடியேறினர்.
****
3.நாமதேவர் கற்றது என்ன ?
இரண்டு வயதில் அவர் சொன்ன பிழையற்ற முதல் சொல் விட்டல. ஏழு வயதில் அவர் பஜனை செய்வதற்கான தாளக் கருவிகளை செய்து பஜனை செய்யத் துவங்கினார் . பள்ளிப்படிப்பைப் புறக்கணித்தார். பிரஹலாதன் போல சிறு வயதிலிருந்தே விட்டல நாமத்தைச் சொல்வதில் இன்பம் கண்டார்.
*****
4.நாமதேவருடைய மஹிமையை தாயார் அறிந்தது எப்படி ?
விட்டோபா கோவிலுக்கு நாமதேவரை அவரது தாயார் தினமும் அழைத்துச் சென்று நைவேத்தியங்களைப் படைப்பார். ஒரு நாள், வேலை மிகவும் இருந்ததால் நாமதேவரிடம் நைவேத்தியத்தைக் கொடுத்து அனுப்பினார். அவரும் இறைவன் முன்னால் அதை வைத்துவிட்டுக் காத்திருந்தார். விடோபா வரவில்லை; விம்மி விம்மி அழுதார் ; அப்போது இறைவனே வந்து அதைச் சாப்பிட்டார் . இதைத் தாயாரிடம் சொன்னபோது அவர் நம்பவில்லை மறுதினமும் சிறுவனிடம் நைவேத்தியத்தைக் கொடுத்தனுப்பி, மறைவாக பின்னே தொடர்ந்து சென்று பார்த்தார். இறைவனே வந்து அதை உண்டதைக் கண்டு அதிசயித்தார்.
****
5.தந்தையார் அவருக்கு கொடுத்த வேலை என்ன ? அவர் என்ன செய்தார் ?
திருமணமாகியும் குடும்பத்தில் பற்று இல்லாமல் விட்டல நாமம் ஜெபிப்பதிலும் பஜனை செய்வதிலும் நாமதேவர், காலத்தைக் கழித்தார். இவருக்கு வேலை கொடுத்து வெளியே அனுப்புவதற்காக புதிய துணிகளைக் கொடுத்து கடைத்தெருவுக்கு அனுப்பினார்; அவர் துணியை விற்காமல் ஒரு கல்லினை இறைவன் என்று சொல்லிக் காவலுக்கு வைத்து விட்டு பஜனை செய்தார். துணிகள் அப்படியே இருந்தன . மராத்திய மொழியில் கல்லுக்குத் தொண்டியா என்ற சொல்லும், ஒரு ஆள் என்றும் பொருள். இரவில் வீட்டுக்குத் திரும்பிய போது தந்தை கேட்ட கேள்விக்கு தொண்டியாவை நிறுத்திவிட்டு வந்ததாகச் சொன்னார். மறு நாள் போனபோது அந்த இடத்தில் துணிகள் இல்லை. உடனே தொண்டியாவைக் (கல்லைக் ) கொண்டுவந்து ஒரு அறையில் பூட்டினார். தந்தை மீண்டும் கேட்டபோது துணிகள் மாயமாய் மறைந்துவிட்டதால் தொண்டியாவைக் அறையில் பூட்டி வைத்ததாகச் சொன்னார். கதவைத் திற அவனைப் பார்க்கிறேன் என்று சொன்னவுடன், தந்தை திட்டப்போகிறார் என்று பயந்து கொண்டே கதவைத்Nதிறந்தார். உள்ளே இருந்த கல் தங்கக் கட்டியாக மாறியிருந்தது. இந்த அற்புதம், அவர் பெரிய யோகி என்பதைக் காட்டியது.
****
6.நாமதேவரின் புகழ்பெற்ற தோழர் – சகா யார் ?
மஹாராஷ்டிர பஜனைகளில் ஒலிக்கும் போற்றி நிவ்ருத்தி ஞானதேவ் சோபான முக்தாபாய் ஏகநாத நாமதேவ் துகாராம் என்பதாகும். இதன் பின்னர் சமர்த்த ராமதாசுக்கு போற்றி சொல்லுவார்கள் அப்படிப் புகழ் வாய்ந்த ஞானேஸ்வர், மற்றும் அவருடைய அண்ணனான நிவ்ருத்தியின் நட்பினால் பெரும் நன்மை அடைந்தவர் நாமதேவ். ஞானேஸ்வருடன் இறுதிவரை தல யாத்திரை செய்தார்.
****
7.நாமதேவரின் குரு யார்?
நாமதேவர் வாழ்ந்த காலத்தில் கோரா என்ற ஞானியும் வாழ்ந்தார்; அவர் தொழிலால் குயவர். ஒரு முறை பக்குவப்படாத பக்தர்கள் யார் என்று சிலர் கேட்டனர். அந்தக் கூட்டத்தில் நாமதேவரும் இருந்தார் . பிரம்மத்தை உணர்ந்து கொள்ளாத பாத்திரங்கள் (மட்கலங்கள்) யார் என்று கண்டுபிடிக்க அவர் ஒவ்வொருவர் தலையிலும் சந்தன கட்டையால் தட்டினார். நாம தேவர் தலையைத் தட்டியபோது அவர் அலறினார்; அவர் ஒருவர்தான் பக்குவப்படாத மட்கலம் என்று எல்லோரும் நகைத்தனர். பின்னர் அவர் தனக்கும் ஒரு குரு தேவை என்பதை உணர்ந்தார் . விட்டோபாவிடம்/ இறைவனிடம் முறையிட்டார். இறைவனே அவருக்கு விசாபகேச்சர் என்ற ஞாநியைக் காட்டினார் அவரிடம் நாமதேவர் சரணடைந்து உபதேசம் பெற்றார்.
****
8.நாமதேவர் எங்கே சமாதி அடைந்தார் ?
ஞானதேவர், தான் ஆலந்தி என்னும் இடத்தில் சமாதி அடையப்போவதாக அறிவித்தவுடன் அவருடன் நாமதேவரும் சென்றார். நிவ்ருத்தி, ஞானதேவர், சோபானர், அவர்களின் தங்கை முக்தாபாய் ஒவ்வொருவரும் உலகை விட்டு நீங்கும்போதும் நாமதேவர் அருகில் இருந்தார்; அவர்களின் பிரிவினையும் பாடிவைத்தார் இவையாவும் ஓராண்டுக் காலத்துக்குள் அடுத்தடுத்து நடந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.; நாமதேவரும் இருபத்தாறாவது வயதில் (1295-ஆம் ஆண்டு) பண்டரீபுரத்தில் சமாதி அடைந்தார். சிலர் 1350-ஆம் ஆண்டு என்றும் சொல்கிறார்கள்.
****
9.அவர் பாடல்களின் எண்ணிக்கை எவ்வளவு ? அவர் பாடல்களில் ஜனாபாயை பாராட்டியது ஏன்?
நாமதேவர் புஸ்தகம் எதுவும் எழுதவில்லை. ஆயினும் அவர் பாடிய நாலாயிரம் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அவர் நீண்ட காலம் பஞ்சாபில் தங்கி யாத்திரையும் தியானமும் செய்தார்; அவருடைய பாடல்கள் சீக்கியர்களின் புனித நூலான ஆதிக்கிரந்தத்திலும் இடம்பெற்று இருக்கிறது.
நாமதேவரின் குடும்பத்தில் அவருக்குப் பணிவிடை செய்த ஜனாபாய் என்ற பெண்ணும் அடக்கம் அவர் பல பாடல்களில் ஜனி என்ற பெயரில் அவருடைய பக்தியைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
ஜனாபாயும் பாடல்களைப் பாடினார்; எந்த விலங்காகப் பிறந்தாலும் பண்டரீபுரத்தைத் தரிசிக்கவேண்டும்; நாமதேவருக்குப் பணிவிடை செய்யவேண்டும் என்று ஜனாபாய் பாடினார்.
****
10.நாமதேவரின் போதனைகள் என்ன ?
நாமதேவரின் மார்க்கத்தை வர்கரி சம்பிரதாயம் என்று சொல்லு வார்கள்; அதாவது பக்தி மார்க்கம்; கீர்த்தனையும் யாத்திரையும் இறைவனை அடைவதற்கான சிறந்த வழிகள் என்கிறார். இன்றும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பண்டரீபுரத்துக்குச்
சென்று விடோபாபாவை /இறைவனைத் தரிசிப்பதை பக்தர்கள் ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றனர்.
—subham—–
Tags—விடோபாபா,வர்கரி சம்பிரதாயம், ஜனாபாய், . தையல்கார குடும்பம், பண்டரீபுரம், ஆதிக்கிரந்தம்