Post No. 13,968
Date uploaded in London – 4 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செங்கோட்டை ஆவடையக்காள் செய்த அற்புதங்கள்? (Post No.13,968)
தமிழர்கள் கூட அதிகம் கேள்விப் பட்டிராத செங்கோட்டை ஆவடையக்காள் பற்றி ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா ஞானியர் வரலாறு என்ற நூலில் அதிசயமான தகவல்களை நமக்கு அளிக்கிறார்
ஆவடையக்காள் யார் ?
பிராமண வடமா இனப்பெற்றோர்களுக்கு செங்கோட்டையில் பிறந்தார் சொன்னதைச் செய்வாள் ; கொடுத்ததை உண்பாள் ; சிறு வயதிலேயே ஒரு ஞானி போல நடந்து கொண்டாள் . அக்கால வழக்கப்படி பெற்றோர்கள், ஒரு பிராமண இளைஞனுக்கு அவளை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுத்தனர்
சாந்தி முகூர்த்த நாள் வந்தது ; தோழிகள் அனைவரும் ஆடிப்பாடி அவளை மணவறையைத் திறந்து உள்ளே நிறுத்திவிட்டுக் கதவை மூடினார்கள் ; ஆர்வத்தோடு காத்திருந்த மாப்பிளையை மாலைக் கூடையில் இருந்த ஒரு அரவம் தீண்டியது அவன் அங்கேயே இறந்தான் . மறுநாள் காலையில் தோழிகள் அனைவரும் கதவைத் திறந்தபோது அவள் அதே இடத்தில் அசையாமல் நின்றாள் ; இறந்து கிடந்த மணமகனைப் பார்த்து எல்லோரும் அலறினர் . அவளை வெளியே அழைத்து வந்து விதவைக்கான சடங்குகளை செய்தனர்.
1
முதல் அற்புதம்
அக்காலத்தில் விதவைகள், பொது மக்களின் கண்களில் படுவதைத் தவிர்ப்பதற்காக அதிகாலை இருட்டிலேயே நதிக்குச் சென்று நீராடிவிட்டு வருவது வழக்கம். ஆவடையக்காளும் அவ்வாறே சென்று கீழே கிடந்த மாவிலையால் பல் துலக்கி விட்டு குளித்தாள்; அவள் உடலில் ஆன்மீக எழுச்சி ஏற்பட்டது. ஏனெனில் அவள் உபயோகித்த , மாவிலை சதாசிவ பிரம்மேந்திராளின் குருவான ஐயாவாள் என்னும் யோகி பயன்படுத்திய எச்சில் இலை; அதிலுள்ள எச்சில் ஆவடையக்காளின் நாக்கில் பட்டவுடன் புத்துணர்வு பெற்றாள்; அங்கு மரத்தடியில் ஜபம் செய்துகொண்டிருந்த ஐயாவாள் காலில் விழுந்தாள்.
அவரும் அவளை ஆசீர்வதித்து பிரம்ம சத்யம் ஜகன் மித்ய என்ற உபதேசத்தை அளித்தார். இறைவனே உண்மைப்பொருள்; நாம் காணும் உலகே மாயம் என்பது அதன் பொருள். அதைக் கேட்டவுடன் அவளின் அஞ்ஞான இருள் திரை விலகியது; பேரானந்த ஒளி அவளைச் சூழ்ந்தது. அவர் ஒரு லிங்கத்தையும் பூஜைக்காகக் கொடுத்தார்
****
2
திருவனந்தபுரத்துக்கு ஆவடையக்காள் யாத்திரை சென்றாள். அங்கே நதிக்கரையில் அமர்ந்து சிவலிங்கத்துக்கு வில்வ இலைகளால் அர்ச்சித்தாள் இவளது புகழ் பரவவே அரசன் ஒரு கூடையில் தங்க இலைகளை அனுப்பினான் . அவளும் பூஜை செய்துவிட்டு வழக்கம்போல ஆற்றில் எறிந்துவிட்டாள்.
பகவத் கீதையில் சமலோஷ்ட காஞ்சன என்று பகவான் கிருஷணர் சொன்னதை சேக்கிழார் போன்ற ஞானிகள் ஓடும் பொன்னும் ஒக்கவே நோக்குவர் — அதாவது அவர்களுக்கு ஓட்டாஞ்சல்லியும் தங்கத் தகடும் ஒன்றே — என்று தமிழாக்கினார்கள் .
****
3
வேறு ஒரு வட்டார அரசனுக்கு இவளுடைய பெருமை விளங்கியது. தன்னை மணம் செய்துகொள்ளலாம் என்று ஆசை காட்டினார்; அவளும் நேசிப்பது போல நடித்து ஆன்மீக அறிவு ஊட்டவே அரசனும் அவளது சீடன் ஆனார்.
*****
4
பின்னர் திரும்பி வந்து அய்யாவாளின் காலடியில் அமர்ந்தார்; இவளுக்கு அவர் முக்கிய இடம் கொடுத்தது பழைய சீடர்களுக்குப் பொறாமையை உண்டாக்கியது
அவர் இருந்த ஆஸ்ரமம் காவிரிக்கரையில் இருந்தது; சீடர்கள் அனைவரும் நதியின் நடுவிலுள்ள ஒரு திட்டில் ஜபம் செய்து கொண்டிருந்தனர். திடீரென நதியின் நீர்மட்டம் உயரத் துவங்கியவுடன் அனைவரும் ஓடிக் கரைக்கு வந்துவிட்டனர்; ஆவடையாக்களை வேண்டுமென்றே விட்டுவிட்டு வந்தனர்; அவளது உடலில் தண்ணீர் பட்டவுடன் அவளும் புறப்பட்டடாள் ; ஐயாவாள் கையை உயர்த்தி அங்கேயே நில் என்று சைகை காட்டினார். அவளும் அப்படியே நின்றாள்; மூன்று நாட்களுக்குப் பின்னர் வெள்ளம் வடிந்தது; அவள் ஒரு பாதிப்பும் இல்லாமல் வழக்கம்போலத் திரும்பிவந்தாள் . அவளுடைய பெருமையை சீடர்களும் அறிந்து குருவைப் போலவே மதிப்பு கொடுத்தார்கள்
*****
5
ஆவடையக்காளின் பெருமையை ஐயாவாள் சொன்னவுடன் அவளைக் காண பக்தர்கள் திரண்டுவந்தனர். அவர் பாடிக்கொண்டே வாழ்ந்தார்; உபநிஷத்துக்களின் கருத்துக்கள் அவரது பாடல்களில் இழையோடிக் சென்றன. அவரைக் கேலி செய்தவர்களும் வாயடைத்துப் போயினர்..
( ஆவடையக்காளது சமாதி அல்லது மரணம் பற்றிய தகவலெதையும் சுவாமி சிவானந்தா அளிக்கவில்லை
ஐயாவாள் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் காவிரி நதிக்கரையில் இருக்கும் திருவிசை நல்லுரில் பிறந்தவர் ; அவரது காலத்தைக் கொண்டு ஆவடையாக்கள் காலத்தை நாம் அறியலாம் செங்கோட்டைக்கு அவர் சென்றாரா அல்லது காவிரி தீரத்துக்கு ஆவடையக்காள் வந்து அவரை முதலில் சந்த்தித்தாரா என்பதும் நூலில் இல்லை.)
—SUBHAM—
TAGS- செங்கோட்டை, ஆவடையக்காள், அற்புதங்கள்