மஹரிஷி அரவிந்தரிடமிருந்து 4000 கடிதங்களைப் பெற்றவர்! (Post No.13,979)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.979

Date uploaded in London – 7 DECEMBER 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

டிசம்பர் 5 : அரவிந்தர் சமாதி தினம்!

 மஹரிஷி அரவிந்தர் ஜனனம் : 15-8-1872

                         சமாதி   : 5-12-1950

அரவிந்தரின் நகைச்சுவை

மஹரிஷி அரவிந்தரிடமிருந்து 4000 கடிதங்களைப் பெற்றவர்!

ச. நாகராஜன்

நிரோத்பரன்

மகத்தான யோக சாதனையைப் புரிந்து உயரிய ஆற்றலை புவிக்குக் கொண்டு வரும் தீவிர சாதனையில் மஹரிஷி அரவிந்தர் புதுவையில் ஈடுபட்டிருந்தார். அதனால் அவரைப் பார்ப்பது வருடத்தில் நிர்ணயிக்கப்பட்ட சில நாட்களில் மட்டுமே முடியும்.

ஆசிரமத்திற்கு வந்து நீண்டகாலம் வசித்த அணுக்கத் தொண்டர் நிரோத்பரன் என்பவர் ஆவார்.

எடின்பரோவில் மருத்துவக் கல்வி கற்ற நிரோத்பரன் பிரபல இசை விற்பன்னரான திலிப் குமார் ராய் மூலமாக (பாரிஸில் இருந்த போது) அரவிந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.1930ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் வந்து அன்னையை தரிசித்தார். பின்னர் பர்மா சென்று  சுமார் இரு ஆண்டுகள் மருத்துவராகத் தொழில் புரிந்தார். பின்னர் யோகத்தில் ஆர்வம் ஏற்படஅரவிந்த ஆசிரமத்திற்குத் திரும்பினார். ஆசிரம டாக்டராகப் பணியாற்றத் துவங்கிய நிரோத் அரவிந்தரை நேரில் பார்க்க முடியாத நிலையில் தன் சந்தேகங்களைக் கடிதம் மூலம் அனுப்பிப் பதிலைப் பெறலானார்.

இப்படியாக சுமார் 4000 அரிய கடிதங்களை அவர் அரவிந்தரிடமிருந்து பெற்றார். சாதாரண அன்றாட வாழ்க்கைக்கான குறிப்பிலிருந்து மிக உயரிய யோக சாதனை ரகசியங்கள் வரை இந்தக் கடிதங்களில் அடங்கியுள்ளதைப் பார்க்கலாம்.

1938ஆம் ஆண்டு அரவிந்தரின் கால் உடையவே நிரோத்பரன் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க அழைக்கப்பட்டார். அதிலிருந்து அவருக்கு அரவிந்தருடனான நெருக்கம் அதிகரித்தது.

நிரோத்பரன் 1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் தேதி பிறந்தார். 103 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்து 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி மறைந்தார்.

அரவிந்தரின் யோக முறையின் படி வாழப் புகுந்த நிரோத்பரன் பெரும் உயரிய நிலையை அடைந்ததும் ஆச்சரியம் இல்லை; 103 ஆண்டுகள் அவர் வாழ்ந்ததும் ஆச்சரியம் இல்லை.

 12 வருட கால அனுபவங்களை அவர் நினைவு மஞ்சரியாக ‘12 இயர்ஸ் வித் ஸ்ரீ அரவிந்தோ’ (12 years wth sri Aurobindoஎன்ற நூலில் தொகுத்துத் தந்துள்ளார். மஹரிஷியுடன் அவர் பேசிய பேச்சுக்கள் (Talks with Sri Aurobindo) 3 தொகுதிகளாக வெளியாகி உள்ளன. அவரது கடிதப் பொக்கிஷங்களும் கூட (Correspondence with Sri Aurobindo) வெளியாகி உள்ளன.

அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான பணி – அரவிந்தர் போதித்த ஆன்மீக ரகசியங்களை வெளியிட்டது தான்!

இந்தக் கடித பொக்கிஷத்தில் அரவிந்தரின் உயரிய நகைச்சுவை உணர்வைக் காணாலம். மாதிரிக்காக ஒரு சில நகைச்சுவைப் பகுதிகள் இதோ:

1  

நிரோத்பரன் : இந்த யோகா செய்வதற்கு ஒருவருக்கு சிங்கத்தின் இதயமும், அரவிந்தரின் மனமும், நெப்போலியனின் ஆற்றலும் வேண்டும்,

அரவிந்தர்: அட கடவுளே! அப்படியானால் அந்த லிஸ்டிலிருந்து என்னை எடுத்து விடு. ஏனெனில் எனக்கு சிங்கத்தின் இதயமும். கிடையாது, நெப்போலியனின் ஆற்றலும் கிடையாது.

2

நிரோத்பரன் : ஒரு நம்பகமான இடத்திலிருந்து சுப்ரமெண்டல் இறங்கப்போவது மிக சமீபத்தில் நடக்கும் என்று கேள்விப்படுகிறேன். அது உண்மையா, சார்?

அரவிந்தர்: நம்பகமான இடத்திலிருந்து வந்தது என்பதைக் கேட்க நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். எனக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது.

3

நிரோத்பரன்: நேற்று இரவு ஒரு கவிதையை இயற்ற முயற்சி செய்தேன். அது தோல்வியில் தான் முடிந்தது. முதல் இரண்டு அடிகளிலேயே நான் தூங்கி விட்டேன்.

அரவிந்தர்: நீ அதைத் தோல்வி என்று எப்படிச் சொல்லலாம்? (உடனே தூங்கச் செய்யும்) ஒரு புதிய தூக்கமூட்டியை அல்லவா கண்டுபிடித்திருக்கிறாய்!

4

ஜோதிடத்தைப் பற்றி பேசுகையில் டாக்டர் மணிலால் கூறினார் இப்படி: “நான் ஒரு பணத்தைப் பறிக்கும் ஜோதிடரைச் சந்தித்தேன். ஆனால் அவருக்கு நான் சமாளிக்க முடியாத ஒரு முரட்டுப் பேர்வழி என்பது தெரியாது.

உடனே அரவிந்தர் கூறினார்: அவர் உன்னிடம் வருவதற்கு முன்னர் சனி பகவானைக் கும்பிட்டு வந்திருக்க வேண்டும்.

மணிலால் தொடர்ந்தார்: ஆனால் இன்னொரு ஜோதிடர் இருந்தார். நல்ல மனிதர், ஆனால் இறந்து விட்டார்.

அரவிந்தர்: ஆக இப்போது உயிரோடிருப்பவர் கெட்ட மனிதராக்கும்!

5

நிரோத்பரன் : இந்தப் பெண்களையே அழாமல் இருக்கும்படி தொடமுடியவில்லை. இரக்கமற்ற ராக்ஷஸர்கள் என்று டாக்டர்களை அவர்கள் நினைக்கிறார்கள்.

அரவிந்தர்: நல்லது தானே, எப்பேர்ப்பட்ட டார்லிங், ஏஞ்சல் என்று நினைக்காமல் விடுகிறார்களே!

6

நிரோத்பரன்  ஒரு பெண்மணிக்கு கவிதையால் மன அழுத்தம் ஏற்பட்டு அவளது மாதவிடாய் போக்கில் ஒழுங்கற்ற போக்கு ஏற்பட்டு விட்டது என்று அரவிந்தருக்கு எழுதினார்.

அரவிந்தர்: அட கடவுளே! கவிதையாலா இப்படி சீரற்ற மென்ஸஸ் ஏற்படுகிறது?

நிரோத்பரன்: இல்லை, இல்லை. உடல் சோர்வாலும் மன அழுத்தத்தாலும் தான் ஏற்படுகிறது. அந்தக் கவிதையை உங்களிடம் அனுப்ப வேண்டியிருக்கிறது, இங்கிருந்து அங்குபோக வேண்டியிருக்கிறது. இது போதாதா என்ன மன அழுத்தம் உண்டாக?

அரவிந்தர். நல்ல வேளை என் கவலையைப் போக்கினாய்! கவிதை தான் இந்த சீரற்ற மென்ஸஸுக்குக் காரணம் என்றால் நீயும் திலிப்பும் நிஷ்காந்தாவும் என்ன பாடுபடுவீர்கள் என்று நினைத்தேன்.

(இதில் உள்ள ஆழ்ந்த நகைச்சுவையை நினைத்து நினைத்துச் சிரிக்கலாம்இந்த மூன்று ஆண்களுக்கும் ஒழுங்கற்ற மென்ஸஸ் வந்தால் அவர்கள் கதி என்ன ஆகும்!)

7

சம்பக்லால் கூறினார்: எனது கண்களில் எப்போதும் நீர் வடிகிறது.

அரவிந்தர்; வர்ஜிலுக்கும் இதே போலக் கண்களில் எப்போதும் நீர் வடியும். ஹொரேஸுக்கு எப்போதும் மூச்சு விடக் கஷ்டமாய் இருக்கும். பெருமூச்சு விடுவார். அகஸ்டஸ் சீசர் அரசாட்சியில் இந்த இருவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த இலக்கிய ஜாம்பவானான மிசெனஸ், “நான் கண்ணீருக்கும் பெருமூச்சுக்கும் நடுவில் அமர்ந்திருக்கிறேன்” என்று சொன்னார்.

8

அரவிந்தர் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்தார். அவர் அருகே இருந்த பலரும் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தனர். திடீரென்று சிரிப்பை அடக்க முடியாமல் சம்பக்லால் எழுந்து அறையை விட்டு வெளியே ஓடினார்.

இதைப் பார்த்த அரவிந்தர், “என்ன தெய்வீக சக்தி இங்கு வந்து இறங்கி விட்டதோ?

என்றார்.

நிரோத்பரன், “சம்பக்லாலுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்து விட்டது” என்றார்.

அரவிந்தர்: ஓஹோ! ஆக விஷ்ணுவின் ஆனந்தம் இங்கு இறங்கி விட்டது!

***

Leave a comment

Leave a comment