Post No. 13,997
Date uploaded in London – 11 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
காக்கைச் சிறகினிலே நந்தலாலா! பாரதியும் பரமஹம்சரும்!! (Post No.13,997)
பாரதியார் பற்றி பல நூறு நூல்கள் வெளியாகிவிட்டன . பல்லாயிரம் கட்டுரைகள் அச்சிடப்பட்டுவிட்டன ; இன்னும் ஏதாவது எழுத இருக்கிறதா?
நிறைய இருக்கிறது; அவருடைய பாடல்களைப் படிக்கப் படிக்க தொட்டனைத்தூறும் மணற்கேணி போல புதிய கருத்துக்கள் சுரந்து கொண்டே இருக்கும்; அவரது பாடல்கள் அமுத சுரபி; அக்ஷய பாத்திரம்; அள்ள அள்ளக் குறையாதது; இந்தச் சின்னக் கட்டுரையில் ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் உபதேச மொழிகளை ஒப்பிட்டு, பாரதியார் ஒரு பெரிய அத்வைத வேதாந்தி என்பதையும் வணங்கத் தக்க யோகி, மஹான் என்பதையும் காண்போம்.
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு—குறள் 396
****
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார் :
“பக்தியைக் கண்களில் தீட்டும் மைக்கு ஒப்பிட்டிருக்கின்றனர்.
ராதை ஒரு சமயம், தோழிகளே நான் எனது கிருஷ்ணனை எல்லாவிடங்களிலும் காண்கின்றேன் என்றாள். அதற்கு கோபி ஸ்த்ரீகள் ராதா, நீ பக்தியாகிய அஞ்சனத்தைக் கண்ணில் இட்டுக்கொண்டிருக்கிறாய் . அதனால்தான் அப்படித் தோன்றுகிறது என்றார்கள் “.
(இதிலுள்ள சிலேடை நயத்தைக் கவனிக்க வேண்டும்
அஞ்சனம்= மை =கருப்பு= கிருஷ்ணன் = கண்ணன்)
இதை பாரதியாரின் காக்கைச் சிறகினிலே பாடலில் காண்கிறோம். பெரிய யோகிகளுக்கு, எந்த நிறத்தைக் கண்டாலும் அது இறைவனின் ஒரு அம்சத்தையே நினைவுபடுத்தும்
ஸ்ரீ கிருஷ்ண பாமாத்வை அணுகும்போதெல்லாம் ராதைக்கு அவருடைய திவ்ய மங்கள சரீரத்தினின்று மனோஹரமான வாசனை வந்தது; ஈஸ்வரனிடம் ஒருவன் நெருங்கும்போது அருகில் செல்லச் செல்ல அவனிடமுள்ள பக்தி, பிரேமை அதிகரிக்கும், சமுத்திரத்தை அணுக அணுக நதியானது மென்மேலும் பொங்கி வழியும்; அதுபோன்றதே இந்த பிரேமை.
*****
பாரதியாரின் வேதாந்தப் பாடல்
நந்தலாலா
[ ராகம் — யதுகுல காம்போதி ] [ தாளம் — ஆதி ]
காக்கைச் சிறகினிலே
நந்தலாலா — நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா; 1
பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா — நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா;
2
கேட்கு மொலியிலெல்லாம்
நந்தலாலா — நின்றன்
கீத மிசைக்குதடா
நந்தலாலா; 3
தீக்குள் விரலைவைத்தால்
நந்தலாலா — நின்னைத்
தீண்டுமின்பந் தோன்றுதடா
நந்தலாலா.– பாரதியார்
தீயும் கூட அவனுடைய ஒரு அம்சமே . இதனால்தான் யோகிகள் தீயில் புகுந்து இறைவனுடன் கலந்தார்கள்; சங்கப் புலவர் கபிலர், குமாரில பட்டர், சம்பந்தர், ஆண்டாள் , வள்ளலார் முதலிய பலர் ஜோதியில் கலந்தனர்.
(நந்த லாலா = பால கிருஷ்ணன் = குழந்தை வடிவ கண்ணன்)
*****
பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா — நின்றன்
பச்சைநிறந் தோன்றுதையே
நந்தலாலா;
பசுமையான மரங்களைப் பார்த்தாலும் அவன் நினைவே வருகிறது. பரமஹம்சர் ஒருநாள் வங்காளத்தில் கண்ணைப் பறிக்கும் பசுமை மிகுந்த வயல் வழியாக நடந்து சென்றார் ; அப்போது வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து நின்றன. அந்தப் பின்னணியில் வெள்ளை நிறக் கொக்குகள் பறந்து சென்றன; அதைப் பார்த்தவுடன் பரமஹம்ஸருக்குப் பேரானந்தம் பொங்கியது; அப்படியே இறைவனை எண்ணி சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். பின்னர் நண்பர்களும் உறவினர்களும் அவரைத் தூக்கி வந்து வீட்டில் படுக்கவைத்தனர். சமாதி கலைய சில நாட்கள் ஆயிற்று.
இதுதான் யோகிகளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு. நாம் இயறகையை ரசித்துவிட்டு வந்துவிடுவோம்; மஹான்களுக்கு அது கடவுளை அறிந்து கொள்ளும் பாதையாக அமைகிறது.
பாரதியார் வாழ்விலும் இதைக் காண்கிறோம். வீட்டில் சோறு சமைக்க அரிசி இல்லையே என்று அவருடைய மனையில் பக்கத்து வீட்டில் கடன் வாங்கி வந்த நெல்லையும் அரிசியையும் அவர் குருவிகளுக்குப் போட்டுவிட்டு பேரானந்தம் அடைந்தார்.
காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் என்று பாடி சொந்தம் கொண்டாடிய மஹாபுருஷன் பாரதி.
****
பாரதியார் ஒரு சித்தர் என்பதை அவரே பாட்டில் பாடியும் இருக்கிறார் பிரம்மத்தைக் கண்டுவிட்டால் அவர்கள் 21 நாட்கள் மட்டுமே உயிர் வாழ முடியும். ஒரு சில யோகிகள் மட்டும் மற்றவர்களையும் அழைத்துச் செல்வதற்காக பிரம்மானந்த கடலில் மூழ்காமல் திரும்பிவந்து சேரவாறும் ஜெகத்தீரே என்று கூவி அழைக்கிறார்கள் என்று பரமஹம்சர் பேசியிருக்கிறார். பாரதியாரும் ஒரு மாதம் நோய்வாய்ப்பட்டு இருந்த போது மருந்து சாப்பிட மறுத்துவிட்டு இறைவனுடன் கலந்தார்
****
சைதன்யர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தையும் பரம ஹம்சர் கூறுகிறார்; சைதன்ய மஹாப் பிரபு ஒரு கிராமத்தின் வழியே, கிருஷ்ணனின் பெருமையைப் பாடிக்கொண்டு, செல்கையில் அவர்கள் பஜனைகளில் வாசிக்கும் தோல் கருவிகளை, மத்தளங்களை இந்தக் கிராமத்து மக்களே தயாரித்து அனுப்புகிறார்கள் என்று அடியார்கள் கூறியதைக் கேட்டவுடன் ஆனந்தக் கடலில் முழ்கி சமாதி நிலையை அடைந்துவிட்டார்.
****
பரமஹம்சர் தன்னைப்பற்றியும் இப்படிக் கூறுகிறார் :
“நான் எவ்விதம் காண்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா ? இந்த மரங்கள், செடிகள், மனிதர்கள், புல், பூண்டுகள் முதலிய எல்லா வஸ்துக்களும் தலையணை உறைகள் போல எனக்குத் தோன்றுகின்றன.. சில தலையணைகள் மிருதுவாகவும் இன்னும் சில கடினமாகவும், பல வடிவங்களிலும் இருக்கின்றன; என்றாலும் அவைகள் அனைத்தின் உள்ளேயும் ஒரே பஞ்சுதான் இருக்கிறது அது போல உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாவற்றின் உள்ளேயும் அகண்ட சச்சிதானந்தப் பொருளே இருக்கிறது. ஜகதாம்பிகையே பல போர்வைகளால் தன்னை மூடிக்கொண்டு அதற்குள்ளிருந்து எட்டிப்பார்ப்பது போல எனக்குத் தோன்றுகிறது”
*****
இதையெல்லாம் படித்துவிட்டு பாரதியின் காக்கைச் சிறகினிலே
நந்தலாலா — நின்றன்
கரியநிறந் தோன்றுதையே
நந்தலாலா — பாடலைப் படித்தால் பாரதி எவ்வளவு பெரிய வேதாந்தி ,அத்வைத அறிஞர் என்பது தெள்ளிதின் விளங்கும். துதிப் பாடல்களைப் படிப்பது போல அவரது தத்துவப் பாடல்களைப் படிக்கப் படிக்க நமக்கும் ஞானம் பெருகும்.
வாழ்க பாரதி! வளர்க பாரதீயம்!!
–SUBHAM—
TAGS- காக்கைச் சிறகினிலே நந்தலாலா!, பாரதியும் பரமஹம்சரும், பாரதி,அத்வைத வேதாந்தி